நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாடாகச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாடுகளுடனும் இந்தியாவைச் சூறையாட ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்.

நரேந்திர மோடி திடீர், திடீர் என்று இரவு நேரங் களில் கண் விழித்து ஏதாவதொரு திட்டத்தை கண்டு பிடித்து அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.

nokia chennai

"குரு உத்சவ்', "தூய்மை இந்தியா' என்ற பட்டியலில் தற்போது "மேக் இன் இந்தியா' (Make in India) புதிதாகச் சேர்த்திருக்கிறார். அதாவது "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்'.

"மேட் இன் இண்டியா' (Made in India) கேள்விப் பட்டிருக்கிறோம். அது என்ன "மேக் இன் இந்தியா?'

வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைக்கிறார். இங்கு வந்து தொழிற்சாலைகளை தொடங்குங்கள். உங்கள் உற்பத்தியை இங்கு வந்து செய்யுங்கள். எங்கள் மூலப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு மலிவு விலையில் மின்சாரம் தருகிறோம், விவசாயிகளிடமிருந்து நிலங்களை பறித்துத் தருகிறோம், எந்த வரியும் உங்களுக்குப் போட மாட்டோம், குறைந்த கூலி கொடுத்து எங்கள் மக்களின் உழைப்புச் சக்தியை உறிஞ்சிக் கொள்ளுங்கள், சட்டங்களைக் கொண்டு பயமுறுத்த மாட்டோம்' என்று உத்திரவாதம் கொடுத்து வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு அழைப்பதற்குப் பெயர்தான் "மேக் இன் இந்தியா'.

மோடியின் வாயிலிருந்து உதிரும் முத்து சொத்தையாக இருக்க முடியுமா? நூறு கோடி ரூபாய் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் விளம்பரம் செய்கிறார்கள்.

"அடடே! அடடே! என்ன திட்டம். இனி இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகும் பசி, பட்டினி நீங்கும், தரமான பொருட்களுக்கான போட்டி நடக்கும், இந்தியா இனி வல்லரசாகும். பொருளாதார வளர்ச்சி 10, 20, 30 சதவீதம் என்று கூடிக் கொண்டே போகும்' என்று எல்லா நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரண சஞ்சீவி மாத்திரை கிடைத்து விட்டதாக சாலையோரம் கூடாரம் போட்டுக் குருவி லேகியம் விற்கும் வைத்தியர்களாக மாறிவிட்டார்கள் நரேந்திர மோடியின் அமைச்சரவை சகாக்கள்.

உண்மையில் அது என்ன? அந்நிய முதலீட்டைத் தான் "மேக் இன் இந்தியா' என்று பெயர் மாற்றி அறிவித்திருக்கிறார் மோடி. இலவசம் என்ற பெயரில் கலைஞர் பொருட்கள் வழங்கி விட்டதால் "விலை யில்லா பொருட்கள்' என்ற பெயரில் செயலலிதா இலவச பொருட்களை வழங்குவது போலத்தான் இதுவும்.

நாம் அந்நிய முதலீடு பற்றியும் அது செய்யும் விளைவுகளையும் பார்ப்போம்.

அந்நிய முதலீடு குறிப்பாக இரண்டு வகைகளில் நுழைகிறது. 1. நேரடி மூலதன முதலீடு. 2. பங்குச் சந்தை முதலீடு. இவையிரண்டில் நாம் நேரடி மூலதன முதலீடு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வெளிநாடுகளின் நிதி முதலீடு அல்லது அந்நிய முதலீடு என்பது வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்குள் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கவோ அல்லது உள்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளை வாங்குவதற்கோ அல்லது கூட்டு சேர்வதற்கோ நுழையும் பணம் ஆகும். இதைத்தான் மோடி வரவேற்றுக் கொண்டிருக்கிறார்.

வெளிநாட்டு முதலாளிகள் புதிதாக இங்கு நேரடியாக தொழில் தொடங்குவதை விட இங்குள்ள தொழிற்சாலைகளை வாங்குவதுதான் அதிகம். வெளிநாட்டு முதலாளிகள் 70 விழுக்காடு இங்குள்ள தொழிற்சாலைகளை வாங்குவதாகத்தான் புள்ளி விவரம் கூறுகிறது.

புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களும் தொழிற்சாலைகளை வாங்கும் நிறுவனங்களும் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்ப்போம்.

நேரடியாகத் தொடங்கப்பட்ட தொழிற்சாலை ஏற்படுத்தும் விளைவுகளைக் கண்டறிய நாம் உதாரணங்களை எங்கேயும் போய் தேட வேண்டாம். நம் கண் முன்பாகவே நோக்கியா நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது.

சென்னை திருப்பெரும்புதூரில் 2006 இல் 1.5 கோடி செல்பேசிகளை மாதந்தோறும் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை நிறுவப்பட்ட போது "தமிழகம் ஒளிர்கிறது' என்று ஆட்சியாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தை ஒளிர (?) வைத்த, வேலைவாய்ப்பை அள்ளிக் (?) கொடுத்த நோக்கியாவின் இன்றைய நிலை என்ன?

8000 நிரந்தரப் பணியாளர்களையும், 6000 ஒப்பந்தப் பணியாளர்களையும் இந்த நிறுவனத்தின் சார்பு நிறுவனமான பாக்ஸ்கானில் 7000 தொழிலாளர்களையும் கொண்டு தொடங்கப்பட்டது.

மலிவு விலை நிலம், உற்பத்தி வரி விலக்கு உள்ளிட்ட நிறைய வரிச் சலுகைகள், தடையில்லா மின்சாரம், தொழிற்சங்க சட்ட நெருக்கடியில்லாமல் பாதுகாப்பு என எல்லா சலுகைகளும் அதற்கு "வளர்ச்சி' என்ற பெயரில் வழங்கப்பட்டது. ஆனால் நோக்கியோ நிறுவனமோ இந்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி 21 ஆயிரம் கோடி வரியையும், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 2400 கோடி விற்பனை வரியையும் செலுத்தாமல் நவம்பர் 1லிருந்து நிறுவனத்தை மூடப் போவதாக அறிவித்துள்ளது.

அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களில் 7000 பேரை ஏற்கனவே விருப்ப ஓய்வுத் திட்டத்தின் அடிப்படையில், மிகக் குறைந்த தொகையில் கட்டாயமாக வெளியேற்றி விட்டனர். தற்போது எஞ்சியவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குரியாக உள்ளது.

உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர்களுக்கு வறுமையை வழங்கி விட்டு, வரியும் செலுத்தாமல் எட்டு ஆண்டுகளாய் வந்த லாபத்தை எடுத்துக் கொண்டு ஓடப் போகிறது நோக்கியா.

இந்தியாவில் எங்கு தொழில் தொடங்கினாலும் அந்தத் தொழிற்சாலைக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு வரை வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அந்த வரி விலக்கு அளிக்கும் காலம் வரை தொழிற்சாலைகளை நடத்தி விட்டு முடியப் போகும் தறுவாயில் அந்தத் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகிறார்கள். அதற்கு நோக்கியோ மட்டும் விதி விலக்கா என்ன?

நோக்கியா தொழிற்சாலையைப் போல பல நிறுவனங்கள் தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் தொடர்ந்து மூடப்பட்டதின் காரணமாக சுமார் 1 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கவலைப்படுமளவுக்கு தமிழகத்தின் நிலை உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வருவதால் வேலைவாய்ப்பு பெருகுகிறது என்பதெல்லாம் வெறும் மாயை.

வெளிநாட்டு நிறுவனங்களை மோடி அழைத் தாலும் அழைக்கா விட்டாலும் அவை இந்தியாவிற் குள் நுழைய ஆவலாகவே உள்ளன. 1. தங்கள் நாட்டில் கொடுக்கும் கூலியை விட இங்குப் பல மடங்கு குறைவாகக் கொடுக்கலாம். இதனால் தன்னுடைய இலாபம் பன்மடங்காக பெருகுகிறது. 2. இயற்கை கனிம வளங்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றது. அது மலிவு விலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. 3. தொழிலாளர் சட்டங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கெதிராகப் பயன்படுத்த முடியாத வகையில் சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. 4. உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் உள்ளிட்ட வரிவிலக்கு அளிக்கப்படுகிறது இப்படியான காரணங்களால் இந்தியாவுக்குக் குறிப்பாகத் தமிழகத் திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன.

புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் இப்படி இலாபத்தைக் கொள்ளையடித்து வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்றால் தொழிற் சாலையை வாங்குபவர் கள், தான் வாங்கிய நிறுவ னத்தின் பழைய இயந் திரங்களுக்குப் பதிலாக புதிய தொழில் நுட்பத் தானி யங்கி இயந்திரங் களைப் பயன்படுத்தி அங் குப் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு விருப்ப ஓய்வு, கட்டாய ஓய்வு வழங்கி வெளியேற்றி விட்டு அந்த இடத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் களைப் பணிக்கு அமர்த்தி குறைந்த கூலி கொடுத்து கடுமையான வேலை வாங்கிக் கொண்டு தங்கள் நாட்டில் கிடைக்கும் லாபத்தை விட பல மடங்கு இலாபத்தைப் பெற்று விடுகின்றனர். இப்படி எந்த வகையிலும் வேலை வாய்ப்பைப் பெருக்காத அந்நிய முதலீட்டைத்தான் "மேக் இன் இந்தியா' என்கிற பெயரில் மோடி அழைக்கிறார்.

துன்பப்படுகிறவர்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு அழைப்பதைப் போல, வெளிநாட்டு நிறுவனங்களே எங்களிடம் வாருங்கள், எந்தத் தொல்லையும் இல்லாமல் நீங்கள் கொள்ளையடிக்க நான் வழியேற்படுத்தித் தருகிறேன் என்று அழைக்கிறார் மோடி மசுதான். அதற்கேற்ப இங்குள்ள சட்டங்களைத் திருத்துகிறார்.

மோடி அமைச்சரவைச் சட்டங்களைத் திருத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. தொழிற்சாலைகள் சட்டம் 1948, பயிற்சி பணியாளர்கள் சட்டம் 1961, தொழிலாளர் சட்டம் 1988 தற்போதைக்குத் திருத்தப்படுகிறது.

தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 66 (1), (பி) எந்தப் பெண்களும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது. அதன் துணைப் பிரிவு இரவு 10 மணி வரை மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறது. இதைத் திருத்தி எந்நேரம் வேண்டுமானாலும் வேலைக்குப் பெண்களை அனுமதிக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்கிற பெயரில் இது வழங்கப்பட்டாலும், ஆண் தொழிலாளர்களை விடப் பெண் தொழி லாளர்களுக்குக் குறைவான கூலி கொடுத்து அதிக வேலை வாங்கும் முதலாளிகளின் ஆசைக்காகவே இந்தத் திருத்தம்.

அடுத்து பயிற்சி யாளர் சட்டம். அவர்கள் படித்த படிப்புக்கேற்ற வகையிலேயே பயிற்சி வழங்க வேண்டும் என்பதை "யாருக்கு வேண்டு மானாலும் பயிற்சி கொடுக்கலாம்' என்றும் தொழில் பழகுநர்கள் தொழிற் பயிற்சி கட்டாயம் பெற்று இருக்க வேண்டிய தில்லை என்றும் திருத்துகின்றனர். எனவே படிப்புக் கேற்ற, தகுதிக்கேற்ற வேலை என்பதை இல்லாமல் ஒழிக்கின்றனர். 19 தொழிலாளர்கள் இருந்தாலே தொழிலாளர் சட்டம் செல்லுபடியாகும் என்பதை 40 தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று திருத்தம் செய்யப்படுகிறது.

இது ஒரு தொடக்கமே. ஏற்கனவே தேசிய தொழிலாளர் ஆணையம் இந்திய அரசுக்குச் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் குறிப்பாக 8 மணி வேலை நேரம் என்பதைக் குறைந்த பட்சம் 9 மணி நேரத்திற்கு மேல் இருக்க வேண்டும், தேசிய விடுமுறைகள் 5 ஆகக் குறைக்க வேண்டும் (மே தினத்திற்கு விடுமுறை கிடையாது) என்றும் 300 தொழிலாளர்களுக்குக் கீழ் பணியாற்றும் தொழிற் சாலைகளை மூடுவதற்கு நிர்வாகம் அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், தொழிற்சங்கம் எந்த நடவடிக்கையில் இறங்கினாலும் குறிப்பாக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் இறங்குவதற்கு தொழிலாளர்களிடம் இரகசிய வாக்கெடுப்பு நடத்திப் பெரும்பான்மை பெற்றால் தான் போராட வேண்டும் என்றெல்லாம் அறிக்கை வழங்கியுள்ளது. இவையெல்லாம் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்படும் என்பது உறுதி.

இவற்றையெல்லாம் குசராத்தில் நடைமுறைப் படுத்திய முதல்வராக மோடி இருந்ததால்தான் இந்தியாவிலுள்ள முதலாளிகளும் வெளிநாட்டு முதலாளிகளும் பணத்தை இறைத்து, மோடி பொம்மையை விளம்பரப்படுத்தி, விற்று (ஓட்டாக்கி) இந்தியாவின் பிரதமராக்கியிருக்கின்றனர்.

இந்த மோடியின் தொழிலாளர் விரோதக் கொள் கைக்கு அதிகம் பலியாகப் போவது தமிழகம்தான்.

தமிழகம் எல்லா வகையான இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கொண்ட தேசம். இங்கு மலிவு விலையில் உழைப்புச் சுரண்டலை நடத்துவதற்கான வாய்ப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மேல்படிப்பு, தொழிற் படிப்பு, பட்டப் படிப்பு முடித்து சராசரியாக 10 இலட்சம் பேர் உருவாகிறார்கள். இதுவரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி விட்டது. இன்னும் பத்தாண்டுகளில் 2 கோடிக்கும் மேலாக இருக்கப் போகிறது.

தன்னுடைய படிப்புக்கேற்ற வேலையோ, வேலைக்கேற்ற கூலியோ அதுவும் நிரந்தரமாகக் கிடைக்காவிட்டால் கூட பணியாற்றத் தயாராகவே இருக்கிறது இளைஞர் கூட்டம். இப்படி மலிவு விலையில் உழைப்பாளர்கள் கிடைக்கும் போது வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வராமல் இருப்பார்களா? நம் வளங்களைச் சூறையாடாமல் இருப்பார்களா?

"பவண்டோ' என்கிற உள்நாட்டுக் குளிர் குடிப்பை ஒழிக்க மட்டும் கோகோ கோலா செய்யும் சூழ்ச்சிகளை நாமறிந்தால் முதலாளித்துவத்தின் கோரத் தாண்டவம் நமக்குப் புரியும்.

பவண்டோ விற்கும் கடைகளுக்கு இலவசமாக குளிர்சாதனப் பெட்டி வழங்கி கோகோ கோலாவை மட்டும் விற்க வேண்டும், பவண்டோ விற்கக் கூடாது என்று கட்டாயப்படுத்துவது, கிராமப்புறங்களில் கோகோ கோலாவை மலிவு விலையில் விற்பது, பவண்டோ பாட்டில்களை மொத்தமாக வாங்கி உடைப்பது, பவண்டோவைப் பற்றி மோசமான வதந்தி பரப்புவது, பவண்டோ நிறுவனத்தை மிரட்டிப் பேரம் பேசுவது எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

"10 விழுக்காடு இலாபம் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பாயும்,

20 விழுக்காடு இலாபம் என்றால் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடும்,

50 விழுக்காடு இலாபம் என்றால் எல்லாக் கெடுதலையும் செய்யத் துணியும்,

100 விழுக்காடு இலாபம் என்றால் அனைத்துச் சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கும்,

300 விழுக்காடு இலாபம் என்றால் எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும். தூக்கிலிடப் படுவோம் என்றால் கூட துணிந்து எதையும் செய்யும்' என்று பேராசான் காரல் மார்க்சு எச்சரித்த இந்த மூலதனத்தைத்தான் கூவி அழைக்கிறார் மோடி. இந்த மூலதனம் தமிழகத்தை ஏற்கனவே சூறையாடத் தொடங்கி விட்டது. இதோடு இந்திய அரசும் இணைந்து தமிழகத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுத் தொழில் இழப்பு, பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்கள் பறிக்கப்பட்டு விவசாயப் பாதிப்பு, சில்லறை வணிகத்தில் நுழைந்து வணிகம் நசிவு, கனிமக் கொள்ளைக்காகப் பழங்குடிகள் வெளியேற்றம், பன்னாட்டு நிறுனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அணுஉலை எனப் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியத் தரகு முதலாளிகளும் இந்திய அரசின் துணையோடு தமிழகத்தைச் சூறையாடுவதை இனியும் அனுமதிக்கலாமா?

தமிழகத்தைச் சுரண்ட வழியேற்படுத்திக் கொடுக்கும் இந்தியத்தை எதிர்க்காமல் இருக்க முடியுமா?

வேலை தேடும் இளைஞர்களும், கூலி அடிமை களாய்ப் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், உழவர்களும், வணிகர்களும் என எல்லா வகை யினரும் அணி சேருவோம், நம்மைச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராகவும், பாய் விரிக்கும் இந்திய அரசையும் எதிர்ப்போம், வெளி நாட்டுக் கொள்ளையர்களை வெளியேற்றுவோம் என்கிற நெஞ்சுரத்தோடு போராடுவோம், தமிழகத் தொழிலாளர் உழவர் வாழ்வில் ஒளியேற்றுவோம். தமிழக விடுதலையை வென்றெடுப்போம்.

Pin It