தமிழ்நாட்டில் தமிழர் நல்ல தமிழில் உரையாடல் செய்வதில்லை.

தமிழர் கோயில்களில் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவருட்பா, ஓதி வழிபாடு தொழில் செய்யும் தமிழ் ஓதுவார்களுக்கு வேலை அளிக்க வில்லை.

தமிழர் கடை நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகை இல்லை. தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தமிழ் செய்தி ஊடகங்களில் நல்ல தமிழில் வெளிவருவதில்லை.

தமிழர் வாழும் தமிழ்நாட்டில் தமிழ் மொழி முழுமையாக ஆட்சி மொழியாக இல்லை. தமிழ்க் கல்வியும் தமிழ் வழிக் கல்வியும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே பள்ளி இறுதி வகுப்பு வரை நடைபெற்று வந்தன. 2011 முதல் ஆங்கில வழிக் கல்வி முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் தொடங்கியது. அன்றுமுதல் தமிழ்வழிக் கல்விக்குக் கேடு வந்து சூழ்ந்து விட்டது. இந்தப் பார்ப்பன சூழ்ச்சியை இந்திய வல்லாதிக்க எடுபிடி ஆட்சியாளர்கள் ஏகபோக தமிழ் எதிர்ப்பை முறியடிக்க தமிழ் வழிக் கல்வி பரப்புரைப் பயணம் மேற்கொண்டோம். பெற்றோர், ஆசிரியர், மாணவர், அரசியல் சீர்வாய்க்கப் பெற்றோர், பொதுமக்கள் என அனைவரையும் சந்தித்தோம்.

கல்வியைப் பற்றி ஓர் ஏழைத்தாயின் புரிதல் "எங்க ஊர்ல அஞ்சாம் வகுப்பு வரைதான் இருக்குதுங்க. அதுக்கு மேல படிக்கணும்னா 10 கிலோ மீட்டர் எட்டத்தான் போகணும். நாங்க படிச்சி என்ன பெரிய ஆபீசரா ஆகப் போறோம்? ஏதோ எழுதப் படிக்க தெரிஞ்சா போதும்னு இந்தப் பள்ளியோடு நிறுத்திடுவோம். எங்கத் தலைவர் வீட்டுப்புள்ளதான் கான்வென்ட்டுல படிக்குது. சினிமாக்காரன் மாதிரி கழுத்துல டையெல்லாம் கட்டிக்கிட்டுப் போகுது. அவுங்களைக் கேளுங்க விவரம் சொல்லுவாங்க.'

அந்தத் தாய், வேளாண் தொழில் செய்யும் தினக் கூலி. சொந்த நிலம் இல்லை. குழந்தைகள் படிக்க மேல்நிலைப் பள்ளி இல்லை. கல்லூரி எல்லாம் எட்டாக் கனி. இந்த நிலையில்தான் அந்தச் சிற்றூர் உள்ளது. இது தமிழ்நாட்டின் சிற்றூர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு.

இந்தத் தாய்க்கு எந்த வழிக் கல்வி என்பதெல்லாம் புரியாது. அரசாங்கம் எந்த வழிக் கல்வியைக் கொடுக் குதோ அதில் படிக்க வைப்பது அவ்வளவுதான்.

பிள்ளை பிடிக்கும் வண்டி

அந்தச் சிற்றூரில் பல தனியார் கல்வி நிறுவனப் பேருந்துகள் வந்து செல்கின்றன. அந்த ஏழைத் தாயின் வாக்குப்படி அவை எல்லாம் பிள்ளை பிடிக்கும் ஊர்திகள். அந்த ஊரில் நிலத்தை வாங்கிப் போட்டு வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழும் மேல் தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளை 10 கிலோ மீட்டர் வரையிலும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பும் செல்வச் சிறுவர்களைப் பெற்று இருப்பதும் இந்தத் தமிழ் நாட்டில்தான். அகவை மூன்று தொடங்கி அந்தப் பணக்காரக் குழந்தைகள் பேருந்துகளில் திணிக்கப்படுகிறார்கள்.

சொந்த ஊருக்கு உயர்நிலை, மேல்நிலை பள்ளி வேண்டுமென எவரிடமும் கோரிக்கை இல்லை. பணம் படைத்தவர்கள் பள்ளி, கல்லூரிக்கு நகர் நோக்கிப் படை எடுக்கிறார்கள். ஏழைக் கூலிகள் என்ன செய்வார்கள். ஐந்தாம் வகுப்பைத் தாண்ட முடியாதவர்கள், நகரில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் பெருகுவது கல்வி வழங்க அல்ல கட்டணக் கொள்ளை அடிக்கவே.

ஆங்கிலம் குடியேறிவிட்டது

மழலைக் கல்வியும், உயர் கல்வியும் ஏழைக் குழந்தைகளை அழைத்துக் கொள்ளப் போவதில்லை. கல்விக் கண் திறக்கும் காலம் அவர்களுக்கு எப்போ வரும் என்று நம்மால் தீர்மானிக்க முடியவில்லை.

"என்னரும் தமிழ்நாட்டின்கண் எல்லோரும் கல்வி கற்று இன்புற்றார் என்று கேட்கும் நாள் எந்நாளோ' என்று கேட்டாரே பாவேந்தர் அவர் மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பள்ளி இல்லா ஊராய் இருக்கின்றது நம் தமிழ்நாடு.

அகவை முதிர்ந்த ஆண் பெண் யாரும் கல்வி கற்றவர்களாய் இல்லை. நடுத்தர அகவையில் உள்ளவர்களும் படித்தவர்களாக இல்லை. இளைஞர்களும் மாணவர்களும் கூட படிப்பு என்பது பற்றி கல்வி என்பது பற்றி பெரிய ஆவல் கொண்டவர்களாக இல்லை. தமிழ் வழிக் கல்வி கற்றால் 20 விழுக்காடு உயர் கல்வி வேலைவாய்ப்பு களில் இடஒதுக்கீடு இருக்கின்றது என்று நாங்கள் கூறியபோது ஆசிரியர்களும் வியப்பாகக் கேட்டார்கள். இந்தச் செய்தியை ஆசிரியர்கள்கூட அறிந்திருக்க வில்லை என்பது வெட்கக் கேடானது.

ஆங்கில வழிக் கல்வி அந்தச் சிற்றூரில் இன்னும் வந்தடையவில்லை என்பது நமக்கு ஓர் ஆறுதல். அந்தச் சிற்றூர் போல் எல்லாச் சிற்றூரையும் எடுத்துக் கொண்டு விடலாம் என்று நீங்கள் எண்ண வேண்டாம். கொஞ்சம் நகரை ஒட்டியுள்ள சிற்றூரில் ஆங்கில வழிக் கல்வி அரசுப் பள்ளிகளில் வந்து குடியேறி விட்டது. முதலில் அது தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் தான் தொடர்ந்து பணம் கட்ட இயலாத பெற்றோர் ஆங்கில வழிக் கல்வியில் அரசுப் பள்ளிகள் சேர்ந்துள்ளனர்.

தமிழ் வழிக் கல்வி பயணம் சென்ற 200 சிற்றூர்களில் உள்ள எல்லா தொடக்கப் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். 100 பள்ளிகள் என்றால் 90% இரண்டு ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளாகவே இருந்தன. ஐந்து வகுப்பு மாணவச் செல்வங்களும் ஒரே வகுப்பறைக்குள்தாம் அடங்கிக் கிடக்கிறார்காள். கழிப்பறை என்றால் அது திறந்தவெளி மட்டுமே. பெயரளவில் சில பள்ளிகளில் கழிப்பறை இருப்பதும் அடையாளப்படுத்தத்தானேதவிர பயன்படுத்து வதற்கில்லை. ஆசிரியர்களும் தொலைதூரத்திலிருந்து தாம் வருகிறார்கள். அவர்களுக்கும் கழிப்பறைகள் இல்லை.

தமிழ்வழிக் கல்வி தரமற்றதா?

தமிழ்நாட்டின் முதலமைச்சர் சட்ட மன்ற நிதி நிலை அறிக்கை தொடர் கூட்டத்தில் அரசு தரும் ஆங்கில வழிக் கல்வி தரமான கல்வி எனப் பேசியுள்ளார். அப்படி என்றால் அரசு தரும் தமிழ் வழிக் கல்வி தரமற்றதா? தனியார் தரும் ஆங்கில வழிக் கல்வி தரமற்றதா? அரசே நியாயவிலைக் கடை எனப் பெயர் வைத்து குடிமை பொருள் வழங்குகிறது. அப்படி என்றால் மற்ற கடைகளெல்லாம் அநியாய விலை விற்கிறது என்று பொருள்தானே. அநியாயத்தைத் தடுக்க முடியாத அரசு எதற்கு? தரமானக் கல்வி வழங்காத தனியார் பள்ளிகளை அரசு ஏன் மூடவில்லை? தமிழ் வழிக் கல்வி தரமற்ற கல்வி என அரசே சொல்கிறதா? தமிழ்வழிக் கல்வி படித்த அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அனுப்பிய விண்கலம் மங்கள்யான் செவ்வாய்க் கோளை அடைந்து சுற்றி வருவதாக உலகே வியப்பில் ஆழ்ந்துள்ளதே; அது தாய்மொழிக் கல்விக்குக் கிடைத்த பெருமையல்லவா! அரசு ஆங்கில வழிக் கல்விப் பிரிவை அறிவித்ததினால் ஓர் இலக்கம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர் எனப் பள்ளிக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த விளக்கம் ஆங்கில வழிக் கல்வி வேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை அரசு நிறைவேற்றியதாக சொல்கிறதா? இந்த 6594 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் எல்லாம் ஆங்கில வழியில் பாடம் நடத்த தகுதி பெற்று விட்டார்களா?

ஓர் அரசாணை போட்ட உடனே ஆங்கில வழிக் கல்வியைக் கற்றுத்தர ஆசிரியர்களால் முடியும் என்றால் முதல் வகுப்பிலிருந்து ஆங்கில வழி படிக்க வேண்டிய தேவை என்ன? தனியார் பள்ளி ஆங்கில வழிக் கல்வியில் அரசு ஆசிரியர்கள் அவர்களது குழந்தைகளைச் சேர்த்து வருகிறார்களே அப்படி எனறால் அரசுப் பள்ளி தரமற்ற பள்ளியா? முதல்வர் ஏற்பாரா? ஏற்க மாட்டார். எனில் பொதுக் கல்வி, பொதுப் பள்ளிகளை மட்டுமே தமிழகத்தில் அமைக்க அரசியல் உறுதி ஏற்க வேண்டும்! இல்லை எனில் அரசுப் பள்ளி விரைந்து அழிந்து போகும்.

தனியார் பள்ளிகள் வளர்வதற்கு அரசு ஊழியராக இருக்கும் கல்வி அதிகாரிகளே முதற் காரணமாக இருக்கிறார்கள். பொதுப் பள்ளி வளர்வதற்குத் தரமான அடிப்படை வசதிகளை இந்நாள் வரை செய்து கொடுக்க அரசிடம் திட்டம் அளிப்பதில்லை. அது மட்டும் அன்று. தனியார் பள்ளிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு சான்றாக தங்களது குழந்தைகளையும் சேர்த்து தடையில்லா சான்று அரசுப் பள்ளி தலைமையாசிரியர் வழங்க கட்டளை பிறப்பிக்கிறார்கள். தனியார் பள்ளி உரிமையாளர்கள் இந்தக் கல்வி அதிகாரிகளுக்கு நன்றாக கையூட்டுக் கொடுத்துக் கவனித்துக் கொள்கிறார்கள்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சமச்சீர் பாடத்தைக் கூட நடத்துவதில்லை. பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே நடத்தத் தொடங்கி விடுகின்றனர். மதிப்பெண் பெறுவது ஒன்றே தனியார் பள்ளிகளின் குறிக்கோளாக இருக்கிறது. இந்த மதிப்பெண் நிலையிலிருந்து மாற்றி தரப்படுத்தும் (கிரேடு) நிலைக்கு மாற்றினால் தனியார் பள்ளியின் கொட்டத்தை அடக்கலாம். அரசுக் கல்வி அதிகாரிகள் கண் திறக்குமா?

பதினோராம் வகுப்புப் பாடத்தை பல தனியார் பள்ளிகள் பெயர் அளவிற்கு நடத்தி விட்டு பனிரெண்டாம் வகுப்புப் பாடத்தைப் பதினோராம் வகுப்பில் தொடங்கி இரண்டாண்டுகள் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் பிடிக்கும் போட்டிக் கல்வியை நடத்திப் பணக் கொள்ளை அடிக்கிறார்கள். அந்தப் பள்ளிகளின் பணக் கொள்ளைக்குத் தீவக் கொக்குகளாக, இந்த மாணவர்கள் பயன்படுகிறார்கள். ஆட்டை வைத்து புலியைப் பிடிப்பார்கள். எலி பிடிக்க பொறியை வைப்பார்கள். ஆனால் வள்ளுவர் சொன்னாரே "வினையால் வினையாக்கிக் கோடல்' என்று அது போல கொக்குகளை வைத்துத்தான் கொக்குகளைப் பிடிப்பார்கள். அந்தக் கொக்குப் பெயர் தான் தீவம். பணம் கறக்கும் பயிற்சியைப் பெற்று பள்ளிக் கல்வி நடத்தும் வணிகக் கொள்ளையர் மாணவர்களைத் துன்புறுத்தி மதிப்பெண் கொக்குகளாக்கும் கொடுமை நடைபெறுகிறது. இந்த கல்விக்கு அனுப்புவதே பெருமை என்று பீற்றிக் கொள்ளும் அரசு அதிகாரிகளும் உண்டு. இந்த மதிப்பெண் எடுக்கும் குருட்டுத் திட்டத்திற்குத் தடை வரவேண்டும்.

கல்வியாளர் பேராசிரியர் கல்விமணி அவர்கள் சொல்கிறார்: "பதினொன்றாம் வகுப்பும், பனிரெண்டாம் வகுப்பும் நான்கு பருவ முறைகளைக் கொண்ட தேர்வாக நடத்தப்பட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் சான்று வழங்க வேண்டும்'. இந்த முறை கொண்டு வந்தால் எல்லா பெற்றோரும் ஏற்றுக் கொள்வார்கள். மாணவர்களுக்கும் தேவையற்ற மன அழுத்தம் இருக்காது. தற்கொலைகள் நடக்காது. கல்வியும் தரமானதாக ஆக்கப்படும். மனன முறை ஒழிந்து புரிந்து படிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், ஐஐடி போன்ற உயர் கல்விக் கூடங்களில் சேரவும் மேலே கூறிய பருவ முறை மதிப்பெண் அடிப்படையாக அமையும்.

கல்வி அழியாச் செல்வம் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆக்க வழிகளை அமைத்துக் கொள்ளவே தனியார் பள்ளிகள் மாணவர்களைப் போட்டியாள ராக்கி மன அழுத்தங்களைப் பெற வைக்கிறார்கள். அதற்குத்தான் பத்தாம் வகுப்பில் தரப்படுத்தலும், பனிரெண்டாம் வகுப்பில் பருவமுறைத் தேர்வும் வந்துவிடக் கூடாது என்றே தனியார் கல்விக் கொள்ளை நிறுவனங்கள் தடுத்து வருகின்றன. ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவாக அரசும் அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதனால் தமிழ் வழிக் கல்வி இரண்டாம் தரமாக்கப்பட்டு ஏழை எளிய மக்கள் படிக்கும் கல்வியாக மாற்றம் அடைந்து பல்லா ண்டுகள் போய்விட்டன.

ஆங்கில மாய்மாலம்

ஆங்கில வழிக் கல்வியால் அடைந்த பலன் ஒன்றுமில்லை. எடுத்துக்காட்டாக தமிழ் நாட்டின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 90 இலக்கம் இளைஞர்கள் வேலை கேட்டுப் பதிவு செய்துள் ளார்கள். அதில் ஆங்கிலம் வழிப் படித்து இளம் பொறியாளர் பட்டம் பெற்றவர் 4 இலக்கம் பேர்கள். ஆங்கிலம் படித்தால் வெளிநாட்டிற்கு வேலைக்கு போகலாம் என்பதெல்லாம் எல்லோராலும் முடியாது. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் பணம் சேர்க்கும் கொள்ளைக்குத் துணை போக மட்டுமே இந்த ஆங்கில மாய்மாலம் செல்லும். எந்த வெளிநாட்டில் நாங்கள் ஆங்கில வழிப் படித்தவர்களுக்கு வேலை தருகிறோம் என்று சட்டம் இயற்றி நம் தமிழ்நாட்டிவற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்? பன்னாட்டுப் பெரும் முதலாளிகளுக்கு அடிமை வேலை செய்ய இந்தியா முழுக்க 37 இலக்கம் அடிமைகள் சிக்கி இருப்பதாக தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் அறியப்படு கிறார்கள். ஆனால் இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்கள் 12 கோடி பேருக்கு வேலை அளித்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அளித்திருக்கிற இளைஞர்கள் தாய் மொழிக் கல்வி பெற்றவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

தமிழக அரசே!

தமிழைப் பயிற்று மொழியாக்கச் சட்டம் இயற்றுக!

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்துக!

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்குக!

மழலைக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை தமிழ் வழிக் கல்வியாக இலவயக் கல்வியாக வழங்குக!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கே எல்லா வகையான வேலை வாய்ப்புகளையும் (அரசு, தனியார்) வழங்க அரசு சட்டம் இயற்றுக!

Pin It