அந்தோனியோ கிராம்ஷி தமிழகத்திற்கு குறைந்தளவே அறியப்பட்டவர். அதுவும் நாடாளுமன்ற சீர்திருத்தவாதியாக, பண்பாட்டு மார்க்சியராக, விளிம்பு நிலை மக்களின் ஆதரவாளராக, இன்னும் மோசமாக வெட்டிக் குறுக்கி பின் நவீனத்துவத்தின் தந்தையாகவுமே அறியப்பட்டார். அல்லது அறிமுகப்படுத்தப்பட்டார்.

அண்மையில் வெளிவந்துள்ள "கிராம்ஷியின் புரட்சியின் இலக்கணம்' இவர் மீதான அவதூறுகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. உயிரோட்டமுள்ள மார்க்சியவாதியாக, போராளியாக, சிந்தனையாளராக அவரின் உண்மை முகம் வெளிப்பட்டிருக்கிறது. லெனின், ஸ்டாலின், த்ரோத்ஸ்கி, புகாரின், ஜினோவீவ், காமனோவர் போன்ற போல்சுவீக் தலைவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் மட்டுமல்ல, இக்காலத்தில் நிலவிய அகிலத்தின் அதிகார அரசியல் போக்கையும், இலெனினுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி மோதல்களையும் கடும் திறானய்வுக் கொண்டவருமாவார்.

மேலும் மார்க்சியத் தத்துவத்தை நடைமுறையுடன் இணைப்பதற்கான முயற்சிகளில் அதிகம் சிந்தித்தவர். பொருளுற்பத்தி, அரசியல், பண்பாடு ஆகிய அனைத்து நிலைகளிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ "தொழிற்சாலை கவுன்சில்கள் இயக்கம்' தேவைக் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் இயங்கு முறைகள், உண்மையான பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தை எப்படி நடைமுறைகளுக்கு பயனுள்ளதாக மாற்றுவது, கருத்து நிலை மேலாண்மை, குடிமைச் சமூகம் பற்றியும், தொழிலாளர் உழவர் நேச அணிகள் பற்றியும் புதிய சிந்தனைகளைக் கொண்டிருந்தார்.

மற்றும் மார்க்சியத்தை சொந்த நாட்டு அனுபவத்துடன் பொறுத்திக் கொள்வதில் அதிகம் கவனம் செலுத்தினார். குறிப்பாக அரசியல், பொருளாதாரம், வரலாறு, பண்பாடு ஆகிய ஆய்வு முறைகளை தனது சேதமான இத்தாலியின் சிறப்புக் களோடு எப்படிப் பொறுத்திக் கொள்வது இதனடிப் படையில் இத்தாலிக்கான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவது, இதன் சூழலுக்கேற்ப புரட்சியை வழி நடத்துவது தொடர்பான இவரின் சிந்தனைகள் இக்காலச் சூழலுக்கு நிறையவே பொருத்த முடையதாக இருக்கிறது.

ஐந்தடிக்கும் குறைவான கூனரான கிராம்ஷியை எப்போதும் கொடிய நோய்கள் சூழ்ந்தே இருந்தன. இந்நிலையில் முசோலினியின் பாசிச அரசு இவருக்கு 20 ஆண்டுகள், 4 மாதங்கள் 5 நாட்கள் சிறை தண்டனை வழங்கியது. மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தால் இவரின் விடுதலைக்கு வாய்ப்பிருக்கின்ற சூழலில் மன்னிப்புக் கடிதம் தற்கொலைக்கு சமம் என்று கூறி அதை மறுத்தார். ஐந்தாண்டுகளுக்கு மேலான பாசிச சிறையும், கொடிய நோயும் இவரின் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கத் தொடங்கி விட்டன. 46 வயது வயதிலேயே மரணம் அவருக்கு ஓய்வைக் கொடுத்து விட்டது. இந்த இளம் வயதின் மரணம் உயிரோட்டமுள்ள அவரின் புரட்சிச் சிந்தனைக்கு முழுமைப் பெரும் வாய்ப்பை வழங்கவில்லை. இருந்த போதிலும் சிறைக் குறிப்புகளாக இருக்கம் அவரின் சிந்தனையின் சிறதல்கள் "புரட்சியின் இலக்கணம்தான்'.

("கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்' கோவை "விடியல் பதிப்பகம்', வெளியிட்டுள்ளது. எஸ்.வி. இராசதுரை, வ.கீதா இவர்களின் தமிழாக்கத்தில் சிறப்புற வெளிவந்துள்ளன. இந்த நூலை படித்து பயன்பெறுங்கள்)

தொழிற்சங்க கவுன்சில்கள் குறித்து... கிராம்ஷி

"பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்' என்பது புரட்சிக் கனல் நெறிக்கும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற் கான சூத்திரமாக இருக்கும் நிலை மாறி, உண்மை யிலேயே அதை நிறுவுவதற்கான முதல் முயற்சியாக, பாட்டாளி வர்க்க அரசின் அடிப்படை அதிகார அமைப்புகளாக தொழிற்சாலைக் கவுன்சில்கள் இருக்க வேண்டும் என கிராம்ஷி விரும்பினார். இத்தாலிய வேலைக் கூடங்களில் இருந்த உள் கமிட்டிகளை தொழிலாளர் அதிகார அமைப்புகளாக மாற்ற முடியும் என்று மேற்சொன்ன கட்டுரை கூறியது. ""உள் கமிட்டிகள் தொழிலாளர் ஜனநாயகத்தின் அமைப்புகள் ஆகும். ஆனால் முதலாளிகள் திணித்துள்ள வரம்புகளிலிருந்து அவற்றை விடுவித்து, அவற்றுக்குப் புதிய வாழ்வையும் புதிய சக்தியையம் ஊட்ட வேண்டும். இன்று உள் கமிட்டிகள், தொழிற்சாலையில் முதலாளியின் அதிகாரத்திற்கு வரம்பிட்டு தொழிலாளருக்கும் நிர்வாகத்திற்கு முன்னர் தகராறுகளை தீர்த்து வைத்தல், தொழிற்சாலையில் உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்கின்றன. நாளை, வளர்த் தெடுக்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்ட நிலையில் அவை பாட்டாளி வர்க்க அதிகார அமைப்புகளாக இருக்க வேண்டும். மேற்பார்வை, நிர்வாகம் ஆகிய அனைத்துப் பயனுள்ள செயல்பாடுகளை முதலாளிக் குப் பதிலாக இந்த உள் கமிட்டிகளே மேற்கொள்ள வேண்டும். "வேலைக் கூடத்திலுள்ள அனைத்து அதிகாரங்களும் வேலைக்கூடக் கமிட்டிகளுக்கே' என்னும் முழக்கத்துடனும் "அனைத்து அரசு அதிகாரங்களும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கவுன்சில்களுக்கே' என்னும் துணை முழக்கத்துடனும் தங்களது மிகச் சிறந்த, உணர்வுமிக்க தோழர்களிட மிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட விரிந்த அவைகளை உருவாக்கத் தொழிலாளர்கள் உடனடியாகப் புறப்பட வேண்டும்'' (SPW 1:6567)

இத்தாலியப் பாட்டாளி வர்க்கம் எதிர் கொண்டிருந்த வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு அதனை ஆயத்தப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும் ஆர்வம் கொண்டிருந்த கிராம்ஷி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளி லிருந்த பாட்டாளி வர்க்க அமைப்புகள், ரஷியாவில் உருவாகியிருந்த சோவியத் துகள் ஆகியவற்றின் அனுப வங்களைக் கற்றுணர்ந்தார். அந்த அனுபவங்களின் அடிப்படையிலும் இத்தாலியில் தன்னெழுச்சி யாகத் தோன்றிய பாட்டாளி வர்க்கப் போராட்டங்களுக்கு அரசியல் வடிவமும் வழி காட்டுதலும் தர வேண்டிய தேவையின் அடிப்படையிலும் தொழிற்சாலைக் கவுன்சில்களை உருவாக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தார். முதலாம் உலகப் போருக்குப் பின் இத்தாலியில் புரட்சிகர நிலைமை இருப்பதாகவும், பூர்ஷ்வா அரசு பலகீனப்பட்டிருப்பதாகவும் கணித்தார். இத்தாலியப் பொருளாதாரத்தில் நிதி மூலதனத்தின் கரம் மேலோங்கியிருந்தது. பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதன் மூலமே உற்பத்திச் சக்திகளை வளர்க்கக் கூடிய நிலையில் இருந்தது பூர்ஷ்வா வர்க்கம். எனவே பொருளாதாரத் துறைக்கும் அரசியல் துறைக்குமிடையே புதிய உறவுகள் தோன்றியிருந்தன. அந்தச் சூழ்நிலைமையில் தொழிற்சாலைகளுக்குள் ஏற்கனவே இயங்கி வந்த உள் கமிட்டிகளை தொழிற்சாலைக் கவுன்சில்களாக மாற்றுவதன் மூலம் பாட்டாளி வர்க்கம் தனது வரலாற்றுக் கடமைகளை உணர்ந்து கொள்ளுமாறு செய்ய முடியும். தொழிற்சாலைக் கவுன்சில் எதிர்காலத்தில் உருவாகக் கூடிய பாட்டாளி வர்க்க அரசின் முன் மாதிரியாக இருக்கும். அன்றுபாட்டாளி வர்க்கம், விவசாயிகள் ஆகியவற்றின் போராட்டக் குணம் தன்னெழுச்சியாக வளர்ந்து கொண்டிருந்தன. மரபான தொழிலாளி வர்க்க அமைப்புகளால் அப்போராட்டங்களில் தலையிட்டு அவற்றுக்குச் சரியான திசை மார்க்கம் வழங்க முடியவில்லை. எனவே தொழிலாளர் கவுன்சில் என்னும் புதிய பாட்டாளி வர்க்க அமைப்பு தேவை. அதேபோல கிராமப்புறங்களில் விவசாயிகள் கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும்.

ஏகபோக முதலாளியம் தோன்றும் வரை பூர்ஷ்வா தாராளவாத அரசின் கீழ் அரசியலும் பொருளாதாரம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகக் கருதப்பட்டன. தொழிலாளிக்கு, சமூக, பொருளாதாரத் துறையில் எந்தவிதமான அதிகாரமும், கட்டுப்பாடு செலுத்தும் உரிமையும் இருக்கவில்லை. ஆனால் அரசியல் துறையில் குடிமகன் என்ற தகுதியும் வாக்குரிமையும் அவனுக் குத் தரப்பட்டிருந்தன. அரசியல் வேறு, பொருளா தாரம் வேறு என்று கருதிய தாராளவாத பூர்ஷ்வா சிந்தனைக்கேற்பவே இத்தாலிய சோசலிஷ்ட் கட்சியும் அதன் தலைமையின் கீழிருந்த தொழிற்சங்கப் பேரவையும் இயங்கின. கட்சி அரசியலில் ஈடுபட்டு வந்தது. தொழிற்சங்கம் தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சனை போன்ற பொருளாதாரப் பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் முதலாளியம் ஏகபோக முதலாளியமாக மாறிய பிறகு (அதுவும் குறிப்பாக போருக்குப் பிந்திய இத்தாலியில்) பொருளாதாரத் துறையில் அரசின் தலையீடு மென்மேலும் அதிகரிப்பதன் மூலமே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சாத்தியமாயிற்று. அதாவது அரசியலும் பொருளா தாரமும் ஒன்றிணைந்தன. உற்பத்திக் களத்தில் பூர்ஷ்வா வர்க்கத்தின் பொருளாதார ஆதிக்கத்துடன் அரசியல் ஆதிக்கமும் சேர்ந்து கொண்டது. எனவே உற்பத்திக் களத்திலேயே பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டும். அதற்கான ஆற்றல் அதனிடம் உள்ளுறைந்து கிடக்கிறது. அதனை வெளிக் கொணர்வதற்கான அமைப்புதான் தொழிற்சாலைக் கவுன்சில். பொருளாதாரம், அரசியல் ஆகிய இரண்டையும் இணைத்த அந்த அமைப்பு, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உற்பத்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கையாள்வதன் மூலம் எதிர்காலப் பாட்டாளி வர்க்க அரசின் அங்கமாகச் செயல்படும்.

முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்குமிடையே யான முரண்பாட்டில் தலையிட்டு, தொழிலாளி களுக்குச் சாதகமாக ஊதிய உயர்வு, வேலை நேரக் குறைப்பு, வேலைப்பளுச் சீரமைப்பு போன்றவற்றைப் பெற்றுத் தரும் வகையில் இயங்கி வந்தன தொழிற்சங்கங்கள். தொழிலாளர் உழைப்புச் சக்தி என்னும் சரக்குக்குப் பூர்ஷ்வாப் பொருளாதாரச் சந்தையில் அதிக விலை பெற்றுத் தருவதற்காகச் செயல்படும் தொழிற்சங்கங்கள் மிகப் பெரும் அமைப்புகளாக, தமக்கே உரிய அதிகார மையங்கள் கொண்ட அமைப்புகளாக வளர்ந்து விட்டன. தொழிற்சங்கத்தின் நடைமுறையை அதற்கேவுரிய "விதிகள்'தான் கட்டுப்படுத்துகின்றன. அது தொழிலாளியின் சித்தத்திற்கும் செயலுக்கும் அப்பாற்பட்டதாய் விளங்குகிறது. நமது "வரலாற்றுக் கடமை'யைப் பற்றி உணர்வுடைய தொழிலாளிகளோ நமது அதிகாரத்தைச் சமூகத்திலும் உற்பத்திக் களத்திலும் நிறுவத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொழிற்சங்கத் தலைவர்களும் அதிகாரிகளும் இந்த வேட்கையையும் விருப்பத்தையும் கருத்தில் கொள்வதில்லை. மாறாக "சட்டம்' பேசியோ, பேரம் பேசியோ தொழிலாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்கின்றனர். தொழிற் சங்கங்களை நடத்திச் செல்வோர் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை அமைப்புக்குட்படுத்தி உழைப்புச் சந்தையை ஆற்றுப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரி வர்க்கத்தி னராவர். ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் திறமைசாலிகள். ஆனால் தொழிற்சங்க அதிகாரி வர்க்கம் பாட்டாளி வர்க்க அதிகாரத்திற்கான அடிப்படையாக இருக்க முடியாது. அந்த அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளும் கருத்துகளும் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்விற்கும் உணர்விற்கும் அந்நியமானவை. நாடாளுமன்றத்திற்கும் அரசாங் கத்தின் அதிகார வர்க்கத்திற்கும் (ஆதணூஞுச்தஞிணூச்ஞிதூ) இடையே நிலவும் உறவு போன்றதுதான் உழைக்கும் மக்களுக்கும் தொழிற்சங்க அதிகாரிகளுக்குமிடையே (தலைவர்கள், அலுவலர்கள்) உள்ள உறவும், அரசாங்கத்திலும் தொழிற்சங்கங்களிலும் அதிகாரி களே ஆட்சி புரிகின்றனர். சாதாரண மக்கள் அல்ல.

(அவை) யாவும் மூலதனத்தின் ஆதிக்கத்திற்குட் பட்ட வரலாற்றுக் காலகட்டத்திற்கு மட்டுமே உரிய பாட்டாளி வர்க்க அமைப்புகளாகும். இந்த் கால கட்டத்தில் தனி நபர்கள் எந்த அளவுக்கு சரக்குகளின் உடைமையாளர்களாக இருக்கிறார்களோ, எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் சொத்தை வர்த்தகம் செய்கிறார்களோ, அந்த அளவுக்கே அவர்கள் மதிப்புப் பெறுகிறார்கள். தொழிலாளிகளும் கூட, அவர்களிடமுள்ள ஒரே சொத்தான அவர்களது உழைப்புச் சக்தியை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களாகியுள்ளனர். அவர்கள் தங்கள் உயிருள்ள உழைப்பை ஒன்று குவிப்பதற்கான இந்தப் பெரும் அமைப்புகளை (தொழிற்சங்கங்களை நூலாசிரி யர்கள்) உருவாக்கி, விலைகளையும் வேலை நேரங் களையும் நிர்ணயித்து சந்தையைக் கட்டுப்படுத்தி யுள்ளனர். தொழிற்சங்கங்கள், அடிப்படையில் போட்டி போடும் தன்மையைக் கொண்டுள்ளவையே தவிர, பொதுவுடைமைப் பண்பை அல்ல. அவை சமுதாயத்தை வேரடியிலிருந்து புதுப்பிப்பதற்கான கருவியாக இருக்க முடியாது. (SPW 1,99)

தொழிற்சங்க அலுவலர்கள், பத்திரகையாளர்கள் ஆகியோர் அடங்கிய தனியொரு சாதியே உருவாகி யுள்ளது. அவர்களது குழு மனப்பான்மை, தொழிலா ளர்களின் குழு மனப்பான்மைக்கு முற்றிலும் முரணானதாக உள்ளது. (SPW 1,105)

தொழிற்சங்கங்கள் சட்ட வரம்புகளுக்குள் செயல் படுவன. தொழிலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களது உரிமைகளுக்காகவும் தொழிற்சங்கங்கள் சட்டத் திருத்தங்களைக் கோரி அவற்றில் சில திருத்தங்களைக் கொண்டு வருவதிலும் போராட்டங்களை நடத்தியுள்ளன. இவற்றில் சில வெற்றி கண்டிருந்த போதிலும் உழைக்கும் மக்களுக்கு அவ்வெற்றி போதுமானதாக இருக்க முடியாது. ஏனெனில் தொழிலாளிக்கு உணவையும் உறையுளை யும் உத்திரவாதம் செய்துள்ள தொழிற்சங்கங்கள், வர்க்கப் போராட்டத்தை வருங்காலத்தில் ஏதோவொரு தேதிக்கு ஒத்தி வைத்து விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால், தொழிற்சங்கங்களின் வளர்ச்சி, எப்போதுமே பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வின் வளர்ச்சியைக் குறிப்பதாக இருப்பதில்லை.

உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயுர உயர அவர்களது இன்றியமையாத அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. அவர்களது போராட்டக் குணம் மழுங்கடிக்கப்படுகிறது. அவர்களிடம் குட்டி பூர்ஷ்வா மனப்பான்மை குடிகொள்ளத் தொடங்கு கிறது. மற்றொரு புறமோ தொழிற்சங்கங்களின் மீது தொழிலாளர்களின் அதிருப்தியும் வளர்கிறது. போராட்டக் குணமேறிய உழைக்கும் மக்களின் முன்னணிப் பிரிவு தனது புரட்சிகர உணர்வையும், புரிதலையும் வெளிப்படுத்தக் கூடிய தகுந்த வடிகால் களைத் தேடிக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்கங்கள் அத்தகைய வடிகால்கள் அல்ல. புரட்சிகரத் தொழிற்சங்க வாதம்  ஏதும் இருக்க முடியாது. அது முரணான சொற்றொடர். புரட்சி என்பது உற்பத்திக்களத்தில் வெடிக்க வேண்டியதேயன்றி தொழிற்சங்க வாதப் போக்கில் உருவாகக் கூடியதல்ல. பூர்ஷ்வா உற்பத்தி முறையை நேரடியாக எதிர் கொண்டு உற்பத்திக் களத்தில் அதாவது உற்பத்தி இயக்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் தொழிலாளர்களின் அதிகாரத்தை வளர்த்தெடுக்கக் கூடிய அமைப்பாகத் தொழிற்சங்கம் தற்சமயம் செயல்படவில்லை.

தொழிற்சாலைக் கவுன்சில்கள், உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் அனைத்துத் தொழிலாளிகளையும் (தொழிற்சங்கத்தில உறுப்பினராக இருப்பவர்கள், இல்லாதவர்கள், சோசஷலிஸ்டுகள், அராஜகவாதிகள், கத்தோலிக்கர்கள் ஆகிய அனைவரையும்) உள்ளடக் கிய அமைப்பாக இருக்கும். அவை தொழிற்சங்கங் களைப் போலப் பேரம் பேசிச் செயல்படா. மாறாக தமக்கேவுரிய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற் கொள்ளும். அக்கவுன்சில்களைத் தொழிற்சாலைகளில் உள்ள பணிக் குழுக்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பணிக் குழுக்கள் தொழிற்சாலையின் பல்வேறு தளங்களிலும், பிரிவு களிலும் பணிபுரியும் தொழிலாளர்களால் அதாவது தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர் களால் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் களைக் கொண்டவை. ஆனால் தொழிற்சாலைக் கவுன்சிலர்களுக்கான பிரதிநிதிகளோ தொழிற்சாலை யின் எல்லாத் தொழிலாளர்களாலும் (எழுத்தர்கள், பொறியியலாளர்கள் போன்ற வெள்ளைக் காலர் ஊழியர் உட்பட) தேர்ந்தெடுக்கப்படுவர். தொழிற் சாலையில் உள்ள ஒவ்வொரு வேலைக் கூடத்திலும் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப் பட்டு அவர்கள் ஜனநாயக முறையில் அத் தொழிலாளிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஒவ்வொரு தொழிற்சாலையும் பல்வேறு வேலைக் கூடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலைக் கூடமும் வெவ்வேறு திறன்களைக் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட் பகுதியை நிறைவேற்று கிறது. ஒவ்வொரு குழுவைச் சார்ந்த தொழிலாளர் களும் தங்களில் ஒருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பர். அந்தப் பிரதிநிதி திரும்ப அழைத்துக் கொள்ளப்படக் கூடியவர். இப்படிப் பல்வேறு வேலைக் கூடங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அக்குறிப்பிட்டத் தொழிற்சாலையின் கவுன்சிலாக அமைவர். இவ்வாறு உருவாக்கப்பட்ட கவுன்சிலின் உறுப்பினர்கள் அக்கவுன்சிலின் செயற் குழுவைத் தேர்ந்தெடுப்பர். ஒவ்வொரு தொழிற் சாலைக் கவுன்சிலின் செயற்குழுவிலிருந்தும் ஒருவர் அக்குழுவின் அரசியல் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு நகரம் முழுவதிலு மிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் செயலாளர் களைக் கொண்டு, கவுன்சில்களின் மத்தியக்குழு உருவாக்கப்படும். மத்தியக் குழுவின் உறுப்பினர்கள், குறிப்பிட்ட நகரத்தில் அரசியல் பிரச்சாரம் நடத்தவும், வேலைத் திட்டங்களை உருவாக்கவும், தனிப்பட்ட தொழிற்சாலைகள் அல்லது தனிப்பட்ட தொழிலாளர்கள் நிறைவேற்ற விரும்பும் திட்டங்களைப் பரிசீலிக்கவும் கல்விக் குழுவைத் தேர்ந்தெடுப்பர். இந்தக் கல்விக் குழு குறிப்பிட்ட நகரத்தில் செயல்படும் உற்பத்தி இயக்கத்தை மேற்பார்வையிட்டு நகரத்தில் செயல்படும் உற்பத்தி இயக்கத்தை மேற்பார்வையிட்டு வழிநடத்திச் செல்லக் கூடிய அமைப்பாக விளங்கும். தொழிற்சாலைக் கவுன்சிலின் சுமிசார்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சோவியத்துகளிலும் அங்கம் வகிப்பர். உற்பத்திக் களத்தில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திச் செயல்படக் கூடிய இப்பாட்டாளி வர்க்கப் பிரதிநிதிகள் சோவியத்துகளில் அங்கம் வகிப்பதன் மூலம் அரசியல் களத்திலும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தை உறுதி செய்வர்.

தொழிற்சாலைக் கவுன்சில்கள் சோசலிச சமுதாயத்தை உருவாக்கவல்ல பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு வழிகோலும் புரட்சிகரச் சமுதாயத்தை உருவாக்க இரண்டு வெவ்வேறான பரிமாணங்களைக் கொண்ட செயலாற்றல் தேவை. ஒன்று அழிக்கும் செயல்; அதாவது பூர்ஷ்வா அரசையும், பூர்ஷ்வா உற்பத்தி முறையைச் சார்ந்த அமைப்புகளையும் அழிப்பது; மற்றொன்று ஆக்கும் செயல்; திட்டவட்டமான முறையில் ஆக்கும் செயல் மேற்கொள்ளப்படாவிட்டால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பெயரளவிலேயே இயங்க வேண்டியிருக்கும். ஆக்கும் செயலின் பகுதியாகவே தொழிற்சாலைக் கவுன்சில்களின் பணிகளும் கடமைகளும் வரையறுக்கப்படும். தொழிற்சாலைக் கவுன்சிலின் பிரதிநிதிகள், வேலை ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உழைப்பு, நேரம், உழைப்பு விகிதம் ஆகியன பின்பற்றப்படுகின்றனவா, வேலையில் ஒழுங்கும் அமைதியும் நிலவுகின்றனவா என்பன போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். ஆலையிலிருந்து மூலதனம் முதலாளிகளால் கடத்திச் செல்லப்படாமல் தடுக்க வேண்டும். தொழிலாளிகளுக்கு முழுமையான, பல துறைகள் சார்ந்த கல்வியறிவைத் தர கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும். உற்பத்தி முறை, தொழில் நுட்பம் ஆகியன பற்றிய விளக்கங்கள் தந்து உதவ வேண்டும்.

தொழிற்சாலைக் கவுன்சில்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அடிப்படையாக விளங்குவது, உற்பத்திக் களத்தில் தொழிலாளிகளின் ஆதிக்கத்தை உறுதி செய்ய விழையும் புரட்சிகர அரசியல் செயல்பாடுதான். தொழிற்சாலைக் கவுன்சில்கள், பூர்ஷ்வா நாடாளுமன்ற அரசியல் மேலாண்மையை நீக்கி பாட்டாளி வர்க்க ஜனநாயக் மேலாண்மையை நிலைநிறுத்தக் கூடியவையாக அமைய வேண்டும்.

முதலாளியத்திற்கு ஆதாரமாக இருக்கும் பூர்ஷ்வா அரசிற்கு மாற்றீடாக இயங்கக் கூடிய அமைப்பு உற்பத்திக் களத்தில் வேரூன்றி இருக்க வேண்டும். ஆலை முதலாளியின் நிர்வாகப் பணிகளையும் தொழிற்சாலையை நடத்திச் செல்லக் கூடிய அதிகாரத்தையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரச் செயல்படும் தொழிற்சாலைக் கவுன்சில்தான் தொழிலாளியின் நலன்களையும் ஆற்றலையும் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய அடிப்படை அமைப்பாக இருக்க முடியும். தொழிற்சாலைக் கவுன்சில்களின் அடிப்படையில் விவசாயத் தொழில்கள், ஆலைத் தொழில்கள் ஆகியவற்றின் பல்வேறு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து சீரான வகையில் செயல்படும் தேசிய சர்வதேசப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

தொழிற்சாலைக் கவுன்சில், தொழிற்சாலையின் உற்பத்தி இயக்கம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் முதலாளியச் சுரண்ட லின் கீழும், ஒடுக்குமுறை யின் கீழும் பூஜ்யமாகி விட்ட தொழிலாளி அனைத்துமாகி, அனைத்தையும் தன் வயப் படுத்திக் கொள்ள உழைக்க உதவுகிறது. அதாவது உற்பத்திக் களத்திலிருந்தே புரட்சி இயக்கம் தொடங்க உதவுகிறது. உற்பத்தி இயக் கத்தில் தான் வகிக்கும் பாத்திரத்தைப் புரிந்து கொள்ளும் தொழிலாளி, தன்னைக் கூலி உழைப்பாளி யாக அல்லது படைப்பாளி யாகப் பார்க்கத் தொடங்குகிறார். குறிப்பிட்ட உற்பத்தி இயக்கத்தில் தான் வகிக்கும் பாத்திரம் இன்றி யமையாதது. உற்பத்தியைச் சாத்தியப்படுத்துவது என்பதை உணர்கிறார். தான் பணிபுரியும் ஆலை, ஒட்டுமொத்தமான தொழில் உற்பத்தியில் அந்த ஆலை வகிக்கும் இடம், அத்தொழில் உற்பத்திஉலகின் பிற தொழில் உற்பத்தி வகைகளுடன் கொண்டுள்ள உறவு, அவையனைத்தையும் கட்டியாளும் உலகளாவிய மூலதனம் ஆகியன பற்றிய புரிதலையும் படிப்படி யாகப் பெறுகிறார்.

நாட்டின் உற்பத்தி இயக்கங்கள் இணைந்த மாபெரும் உற்பத்தி அமைப்புதான் அரசு என்பதையும் புரிந்து கொள்கிறார். அவர் பணிபுரியும் தொழிற்சாலை இப்புரிதலை ஆழப்படுத்தி, பூர்ஷ்வா உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், சமூக அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகியன பற்றிய அறிவை அவருக்கு ஊட்டும் நிர்வாகி, மேலாளர், பொறியியலாளர், கண்காணிப்பாளர், தொழிலாளி, எழுத்தர் என்ற படிநிலை அமைப்பில் அத் தொழிற்சாலையில், பணிபுரிகிறவர்கள், ஒழுங்கமைக் கப்பட்டுள்ளனர். அத்தொழிற்சாலை சீரான இயங்கும் பொருட்டு அதன் பல்வேறு பிரிவுகளுக்கிடையே பரஸ்பரத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படிநிலை அமைப்பும் பரஸ்பரத் தொடர்பு களும், தொழிலாளி எந்த வர்க்க சமுதாயத்தில் வாழ்கின்றாரோ, அச் சமுதாயத்தின் பிரதி பிம்பங் களாக, மாதிரிகளாக விளங்கி அவரது அறிவையும் வர்க்க உணர்வையும் வளர்க்க உதவுகின்றன.

கவுன்சில்கள், தொழிலாளர்களின் ஆதிக்கத்தை உற்பத்திக் களத்திலேயே உத்திரவாதம் செய்யக் கூடியவை.தொழிற்சங்கங்கள் உற்பத்திச் சக்திகளை ஒருங்கிணைத்து ஆலைகள் அனைத்திலும் கம்யூனிசச் சிந்தனைத் திறனையும் செயல் திறனையும் வளர்க்க வேண்டும்.

இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியோ உழைக்கும் மக்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லக் கூடிய திறமையையும் அரசியல் தரிசனத்தையும் கொண்ட அமைப்பு இம்மூன்று அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடே பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தைச் சாத்தியப்படுத்தும். இம்மூன்று அமைப்பு களுக்கும் பொதுவான இலக்கு இருந்த போதிலும் இவை ஒவ்வொன்றினதும் அன்றாட நடவடிக்கைகள் சுயாதீனமான வையாகவே இருக்கும். ஒன்று மற்றொன்றின் செயல் பாட்டினை ஊடுருவி, பரஸ்பரத் தாக்கம் ஏற்படுத்து மேயொழிய கவுன்சில்கள் தொழிற்சங்கத்திற்கும், இவை இரண்டும் சோசலிசக் கட்சியின் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டிரா.

சோசலிஸ்ட் கட்சிதான் பாட்டாளி வர்க்கத்திற்குத் தலைமை தாங்கி அதனை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற கருத்தை கிராம்ஷி முழுமையாக ஏற்றுக் கொண்டார். புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவதில் கட்சிக்குத்தான் முத்னமையான பாத்திரம் இருக்க முடியும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

ஆனால் புரட்சியின் கர்த்தாக்கள், நாயகர்கள், பரந்துபட்ட உழைக்கும் மக்கள்தான் என்பதை வலியுறுத்தினார். எனவே கட்சியின் அதிகாரம், வேறுபல பாட்டாளி வர்க்க அமைப்பு களைச் சார்ந்திருக்க வேம்டும் என்றும், கவுன்சில்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் தனித் தன்மையைக் கட்சி அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Pin It