தேர்தலில் வாக்குக்  கேட்டு வந்தவர்கள் வழங்கிவிட்டுப் போனவை அவை...
பளபளப்பு அட்டையில்
பளிச்சிடும் வண்ணங்களில் இளித்த வாயை மேலும் திறக்கவோ
இறுக்கி மூடவோ மாட்டாத
அட்டை முகங்கள்...

அரசியல்காரர்களின்
ஆளுமை முகங்கள்
நடிக  நடிகையர் வடிவில் முகங்கள்
நாய்கள் புலிகள்
பேய்கள் என்றே பற்பல உருவில்
சிற்பமாய் படங்கள்...

ஒட்டிய முகத்தில்
உண்மை முகம் மறையும்... ஒட்டிய முகந்தான்
ஆளுமைப் பண்போ
அணிந்து கொள்வோரின்
அடையாளமாகிவிடும்.

இன்னொரு முகமாய் அடையாளப் படுவதில் இன்னோர் ஆளாய்
மாறி நிற்பதில் உங்களை அல்லவா
இழந்து போகிறீர்...

உங்களின் உணர்வும் உலகினில் ஒன்று... உங்களின் உழைப்பும் பொருள்களைப் படைப்பது...
உங்களின் அறிவும் வளர்ச்சிக்குரியது...

ஒவ்வொரு முகமும் ஒவ்வோர் அடையாளம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகைத்திறன் ஒவ்வொருவர் முகமும் உலகின் முகங்கள்...
உங்களை மறைக்க இன்னொரு முகமா?

ஒட்டிக் கொள்ளும்
முகங்கள் ஆண்டிட
உங்களின் வாழ்வோ அடிமைப்படுவதோ?

மினுக்கிக் கொள்ளும்
முகங்களைக் காட்ட
உங்களின் முகங்களோ
அழுக்கினில் தோய்வதோ?

ஒட்டியதைக் கிழியுங்கள் ஒளிரட்டும் உங்கள் முகம்...

Pin It