கடந்த இதழில்  அழிந்து வரும் தமிழர் பயன்பாட்டுப் பொருட்களும் அதன் பெயரும் அமைப்பு முறைகளும் பயன்பாடுகளும் பற்றி அறிவோம் எனும் தொடரை எழுதத் தொடங்கி அதன்படி 10 பொருட்களைப் பற்றி எழுதினேன். அதை அனைவரும் படித்திருப்பீர்கள். அதில் குறைகளேது மிருந்தால் தாங்கள் களைந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இம்மாதத்திற்கான 10 பொருட் களைப் பற்றி எழுத முனையும் போது என் நினைவுக்கு வந்தது உயிர் வாழ்வதற்கான உணவுத் தயாரிப்பதற் கான தானியங்களைப் பிரித்தெடுக்கவும், செம்மைப் படுத்தவும், அறைத்து ஒருங்கிணைக்கவும், தீமூட்டவும் போன்ற பல வேலைகளைச் செய்ய பயன்படுத்திய தற்போது சற்றறேக் குறையப் பயன்பாடு வழக்கற்று வரும் பொருட்கள் நினைவுக்கு வந்தது.

 இதில் வரும் சில பொருட்கள் இன்றும் கிராமப் பகுதிகளில் வழக்கில் இருக்கலாம். ஆகவே இதுதான் வழக்கில் பயன்பாட்டில் உள்ளதே இதை ஏன் எழுதினாய் என்று சில தோழர்கள் நினைக்கலாம். ஆனால் அவ்வாறு பயன்பாட்டில் இருக்கும். சில பொருட்களும் நம் பிள்ளைகள் தலைமுறையில் மறைந்து விடும் என்பது திண்ணம். அதன் பெயரை நினைவுக் கூற முடியாமல் நான் சில மணித் துளிகள் தவித்து விட்டேன். பிறகு என் வீட்டிற்கு வந்து பெரியவர்களைக் கேட்டு எழுதினேன்.

ஆகவே நமக்கே இந்நிலைமை யென்றால் நம் பிள்ளைகளுக்கு கூறவே வேண்டாம். கண்டிப்பாகத் தெரியாது. அதனால்தான் சற்றுப் பயன்பாட்டி லிருக்கும் இவற்றைப் பற்றி எழுதுகிறேன். சரி பொருட்களையும் அதன் பயன்பாட்டையும் பெயரையும், அமைப்பு முறையையும் காணுவோம்.

1. உரல்

அமைப்பு: தோராயமாக 2 அடி உயரமுள்ளக் கல்லின் மத்தியில் ஒரு குழி குடையப்பட்டிருக்கும். அக்குழி புதுக் கல்லின் உயரத்தில் 1/4 பங்கு அளவு இருக்கும்.

பயன்பாடு: நம் தாத்தாக் காலங்களில் ஏழைக் குடிகள் காலையில் கதிரவன் எழும் முன் வேலைக்குச் சென்று மாலையில் கதிரவன் மயங்கியப் பின்பே வீட்டிற்கு வந்து ஏற்கனவே அவிச்சி காயப்போட்டு வைத்திருக்கும் புழுங்கல், குதிரைவேலி, அல்லது நனைய வைத்திருக்கும் குடுப்பை (அ) கேழ்வரகு, கம்மம்புல் போன்ற தானியங்களை இவ்வுரலில் போட்டு குத்தி உமி தானியங்களைத் தனியாகப் பிரித்தோ (அ) மாவாக்கியோ சோறோ, கூழோ தயாரித்துள்ளனர். மேலும் பண்டங்கள் செய்வதற்கு ஊர வைத்த பச்சரிசி (அ) புழுங்கலரிசி, மற்றும் தானியங்களை மாவாக்குவதற்கும், மசாலா இடிப்பதற்கும் (இன்றும் கிராமங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு அனைத்துக் காய்கறிகளும் சேர்த்து வைக்கப்படும் பொங்கல் கறிக்கும், ஆட்டுக் கறிக்கும், இவ்வுரலில் இடித்தே மசாலா போடுகிறார்கள் என்பது சிறப்பு) இவ்வுரல் பயன்படுகிறது.

2. ஒலக்கை (அ) உலக்கை

அமைப்பு: 4.5 முதல் 5 அடி உயரத்தில் நல்ல வைரம் பாஞ்ச அல்லது மிக நாள்பட்ட பனை மரத்தின் அடிப் பகுதியிலுள்ள நல்லக் கறுப்பேறியிருக்கும் கட்டையில் கையில் பிடிக்குமளவுக்கு தோராயமாக 1.5 கைப்பிடி அளவு சுற்றளவுக்கு வழு வழுப்பாக தேய்க்கப்பட்டிருக்கும். (ஏனெனில் சொறசொறப் பாயிருந்தால் பனஞ் சிறா கையில் ஏறிவிடும்) அதன் இரு முனையிலும் இரும்பாலான பூன் அல்லது இரும்பாலான மூடியால் ஒரு விரல் நீளத்திற்கு கட்டை மூடப்பட்டிருக்கும்.

மேலும் பனங்கம்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அது உலுக்காது (அ) இத்துப் போகாது. அதேநேரம் எடையுள்ளதாக இருக்கும். இதனால் தானோ என்னவோ முன்பெல்லாம் உலக்கையால் தாக்கப் பட்டார், அடித்துக் கொல்லப்பட்டார் எனுமளவிற்கு இது கொலைகாரக் கருவியாகவும், நல்லதொரு தற்காப்பு ஆயுதமாகவும், இருந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பயன்பாடு: உரலிலிட்ட தானியங்களை இடித்து உமி வேறு தானியம் வேறாகப் பிரிப்பதற்கும், மாவு இடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதை நட்டம் நின்று இரு கைகளாலும் மாற்றி மாற்றி தூக்கி இடிப்பர்ந உட்கார்ந்து இடித்தால் பலம் கொள்ளாது. அதனால் தானியம் இடிக்க முடியாது. இதற்குக் காரணம் அதன் உயரம், எடை ஆகும்.

மேலும் இதை இடிக்கும்போது அவர்கள் வாயிலிருந்து வரும் சு, சு என்ற ஒரு வித ஒலி வரும். இவ்வொலி அவ்வேலையின் கடினத் தன்மையின்றி இருப்பதற்கு எழுப்பப்படுவதாகும். ஆக இவ்வொலி யின் மூலம் தமிழர்கள் ஒவ்வொரு வேலைக்கேற்ப களைப்புத் தெரியாமலிருக்க பல்வேறு பாடல் இசையைப் பயன்படுத்தியுள்ளனர். இது தமிழர்களின் கலை புலமையை வெளிப்படுத்துகிறது.

3. கழுந்து

அமைப்பு: இது எடைக் குறைவான அதே சமயம் வலுவான மரக் கம்புகளில் தோராயமாக 2.5 அடி முதல் 3 அடி வரை உயரம் உள்ளக் கட்டையால் உருட்டி இரு முனைகளும் மத்துப் போன்று உருட்டி தேய்க்கப் பட்டிருக்கும். இதை குத்த வைத்துக் கொண்டு கையாலேயே இடிப்பர்.

பயன்பாடு: இது ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி, மற்றும் பொங்கக் கறி வைப்பதற்கு மசாலா இடிப்பதற்கும் மற்றும் பாட்டி வைத்திய மருந்துகளான (உம்) இஞ்சி, சுக்கு, வேப்பம்பட்டை, மாவிலங்கைப் பட்டை, முருங்கைப் பட்டை, வாசமடக்கிப் பட்டை, தூதுவளை, குப்பமேனி, செந்தட்டி, துளசி, சரண வேர், குறுந்தட்டி வேர், மொசுமொசுக்கை, புனங்குளம் நண்டு (மழை நீரால் நிரம்பும் குளம்) போன்ற பல மருந்துப் பொருட்கள் சாறு எடுப்பதற்கும், கோழி குஞ்சுப் பொறித்தால் உடனே அதற்கு உணவு வழங்குவதற்கும் பச்ச நெல்லை (சிறிதளவு) குத்துவதற்கும் பயன்பட்டுள்ளது.

4. ஆட்டு உரல்

அமைப்பு: தோராயமாக 1லீ(அ) 2 அடி உயரமும் 2 அடி அகலமுள்ள கல்லால் மேல் பகுதி அகலத்தைக் குறைக்காமலும், கீழ் நோக்கி சாய்வாக அகலத்தைக் குறைத்தும் சிறுத்தப் பகுதி தரையிலும், விரிந்த மேல் பகுதி சுற்று வளையம் உருவாங்கி (தானியங்கள் சிந்தாமலிருப்பதற்கு) அதிலிருந்து 1 அங்குலம் பள்ளத்தில் 2வது விரிந்த சுற்றுப் பகுதியும், அதன் நடுவில் ஓர் 1/2 அடி அகலம் போன்ற அமைப்பில் குழியும் அடிக்கப்பட்டிருக்கும்.

அக் குழியில் லிங்கம் போன்ற அமைப்பில் ஒருகல் அதன் மேல் முனையில் கக்கல் கனத்தை சற்றுக் குறைத்து கைப்பிடி உருவாக்கப்பட்டிருக்கும். இக்கல் குழவிக் கல் எனப்படும். குழவிக் கல்லும் உரலின் குழிப் பகுதியும் உளியால் சிறு சிறுப் புள்ளிகளாக கொத்தப் பட்டிருக்கும். இது தமிழர்களின் அறிவியலுக்கு நல்லதொரு உதாரணம்.

பயன்பாடு: இது பண்டங்கள் செய்வதற்கான நனைய (உம்: இட்லி, வடை) வைத்த (அ) ஊற வைத்த தானியங்களை மாவாக்குவதற்கும் மேலும் பசுமாடு கன்று ஈன்ற போது நவதானியங்கள் அரைத்து ஊற்றவும், தானியங்களை இதில் இட்டு இதன் குழியில் குழவிக் கல்லை இட்டு குழவிக் கல்லின் கைப்பிடியை ஒரு கையால் பிடித்துக் கொண்டும் மறுக் கையால் தானியங்களை குழிக்குள் தள்ளிக் கொண்டும் குழவிக் கல்லைச் சுற்றி அரைத்து மாவாக்கினர்.

குறிப்பு: இது இன்று உடற் பயிற்சி நிலையத்தில் கருலாக் கட்டை சுற்றுவதற்குச் சமம். இதனால்தான் தமிழச்சி புலியை சொறவால் அடித்து விரட்டினாளோ?

(இக் குழவிக் கல் இப்போது எங்கேனும் கைப்பிடி மண்ணில் புதைந்து கீழ்ப்பகுதி மேல் நோக்கியிருந்தால் இந்துத்துவாவாதிகள், அதற்கு ஏதோவது சிவபெரு மான் தரிசனம் என்று கூறி தமிழர்களிடமிருந்து பணத்தையும் அறிவையும் பிடுங்கி விடுவார்கள்.)

5. அம்மி:

அமைப்பு: தோராயமாக 2 அடி நீளமும் 1 (அ) 1.5 அடி அகலமுள்ள 1 அடி உயரமுள்ள கல்லில் மேல் பகுதி தட்டையாகவும் ஆக்கப்பட்டிருக்கும். பக்க வாட்டுப் பகுதிகள் மேலிருந்து கீழ் நோக்கி சாய்வாக அடித்துச் செதுக்கப்பட்டிருக்கும். தட்டையான மேல் பகுதியில் உளிக் கொண்டு சிறு சிறு புள்ளிகளாகக் கொத்தப்பட்டிருக்கும்.

மேலும் ஒரு ஆட்டு உரல் குழவிக் கல்லைப் போன்ற உருண்டையான கல்லின் இரு பக்கமும் கைப்பிடி உருவாக்கப்பட்டிருக்கும். இதற்கும் குழவிக் கல் என்றே பெயர். இதிலும் உளி கொண்டு சிறு சிறு புள்ளிகள் செதுக்கப்பட்டிருக்கும். இது ஏனெனில் அம்மியில் வைக்கப்படும் பொருட்கள் நழுவி ஓடாமல் இருப்பதற்கும், உராய்வினால் அரைப்பதற்குமான அறிவியல்.

பயன்பாடு: இது காய்கறி கறி வைப்பதற்கான மசாலா அரைப்பதற்கும் துவையல் அரைப்பதற்கும், பேறுகால (குழந்தைப் பெற்றப் பெண்களுக்கு அப்போது 40 நாட்களுக்கு பல பொருட்கள் சேர்த்து தயாரித்து கொடுக்கப்பட்ட மருந்து) மருந்து அரைப்பதற்குமாகப் பயன்பட்டது.

6. குண்டிப் பலகை

அமைப்பு: தோராயமாக 3/4 அடி நீளம் 1/2 அடி அகலமுள்ள பலகையின் இரு ஓரங்களிலும் இரு பலகை கால்களாக ஆணியால் அடிக்கப்பட்டிருக்கும்.

பயன்பாடு: இத அம்மியில் மசாலா அரைக்கும் போது நின்றுக் கொண்டோ, உட்கார்ந்தோ, அரைக்க முடியாது. ஏனெனில் பலம் கொள்ளாது. அதனால் அம்மிக்கருகில் போட்டு இதில் உட்கார்ந்து கொண்டு அரைக்கும்போது குழவியை முன்னும் பின்னும் இழுக்கும்போது இலகுவாக இருக்கும்.

மேலும் அப்போதெல்லாம் அடுப்பெரிக்க சுள்ளி விறகுகள் காட்டில் பொறுக்கி வந்து எரிப்பதாலும், மேலும் நெல் அவிக்கும்போது பயன்படுத்தும் விறக பெரும்பாலும் வைக்கோல், மரச் சறுகு, வாழைச் செத்தல் (அ) காய்ந்த வாழை மடல். ஆகவே தொடர்ந்து எரிய எரிய அடுத்தடுத்து வைத்து தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும். இவ்வடுப்பு வெட்ட வெளியில்  தற்காலிகமாக கல் கொண்டோ, பொங்கக் கட்டி கொண்டோ, அடுப்பு உயரமாக இருக்கும். இதற்கு மேல் சட்டி இருக்கும்போது தீ பரந்து விரிந்து வரும். இதனால் கீழே இருந்தால் தீ தள்ளுவதற்கு வசதியாயிராது. ஆகவே இதுபோன்று தீ தள்ளும்போது உட்காருவதற்கும், மேலும் இதில் உட்கார்ந்தால் உடைகளில் மண் ஒட்டாது.

காலை முதல் மாலை வரை வேலை செய்து வந்த தொழிலாளர்கள், பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நெல் அவிப்பர். இதனால் தரையில் உட்காரும்போது குறுக்கு வலிக்கும். இதுபோன்று பலகையில் உட்காரும்போது தண்டுவடம் நிமிர்ந்து இருக்கும். இதனால் குறுக்கு வலி தெரியாது.

7. ஒரப்பெட்டி (அ) ஓரப்பெட்டி:

அமைப்பு: மேல் பகுதி 1 .5 அடி அகலத்திலும், கீழ் பகுதி உரலில் மேல் பகுதியில் குழியைச் சுற்றியுள்ள வட்டப் பகுதியில் இருக்கும் அளவுகளில் மேலிருந்து கீழ் நோக்கி சாய்வாகவும், மேல் கீழ் இரண்டுப் பக்கமும் அடைப்பின்றி திறந்திருக்கும்.

பயன்பாடு: இது உரலில் தானியமோ, மாவோ குத்தும்போது கீழே சிந்தாமலிருப்பதற்காக இதன் சுருங்கியப் பகுதியை உரலில் தாங்க வைத்து மேல் விரிந்த ஓட்டை வழியாக ஒலக்கைக் கொண்டு தானியங்கள் குத்தப்படும். இதனால் தரையில் சிந்தி வீணாகும் தானியங்களை தவிர்க்க முடியும். இது தமிழர்களின் சிக்கனக் குறியீடு.

8. சொளவு (அ) முறம்

அமைப்பு: இது பனை ஓலையால் பின்னப் பட்டிருக்கும். பின் பகுதி விரிந்தும், முன் பகுதி மிகவும் குறுகியும் இருக்கும். அதன் ஓரப் பகுதி பனை மட்டையால் சுற்றி வளைத்து கட்டப்பட்டிருக்கும்.

பயன்பாடு: வீட்டில் சோறு பொங்கும்போது அரிசி (அ) தானியங்களில் கல் நவுவதற்கும், உரலில் குத்தப்படும் தானியங்களை அதிலுள்ள உமியிட மிருந்து பிரித்தெடுப்பதற்கும் களத்து மேட்டில் நெல் தூற்ற அம்பாரம் எடுத்து விடவும், அதிலுள்ள பதர்களை (சாவிகளை) பிரிக்க, காற்று வீசவும், தானியங்களைக் குமிக்கவும் (குவிக்கவும்) பயன்படு கிறது.

மேலும் இதிலும் வீட்டில் அரிசி புடைக்க, கல் நாவ, தவிடு புடைக்க தனி ஓலையாலும் களத்து மேட்டில் பயன்படுத்த பனை ஈக்கோடு இணைந்த ஓலையாலும், திருமணத்தின் போது மணமகள் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் வாழும் சொளவு தனிக் குறுத்தோலையிலும் வண்ணங்கள் தீட்டப்பட்டு முடையப்பட்டிருக்கும். இது தமிழர்களின் தகுதி பிரித்தறியவும், திறன் வெளிப்படுகிறது.

9. அரிப்பு

அமைப்பு முறை விளக்கத் தெரியவில்லை.

பயன்பாடு: அரிப்பு பபல அரிப்புகளில் உள்ளன. 1 மாவு அரிப்பு, 2. தவிட்டரிப்பு, 3. கல்லரிப்பு, 4. மண்ணரிப்பு. இதில் மண் அரிப்பைத் தவிர ஏனைய அரிப்புகள் பயன்பாட்டில் இல்லை.

1. மாவு அரிப்பு என்பது உரலில் இடிக்கப்படும் தானியங்களிலிருந்து குருணையுடன் உள்ள மாவைப் பிரித்தெடுத்து மீண்டும் கருணையை இடித்து அதில் கிடைக்கும் மாவையும் குருணையையும் பிரித் தெடுத்து இவ்வாறு தானியம் முழுவதையும் மாவாக பிரித்தெடுப்பதற்கும், தவிட்டரிப்பு உரலில் குத்தப்படும் தானியங்களிலிருந்து வரும் உமியிலுள்ள தவிட்டை மாடுகளுக்கும் சம்பா நெல்லிலுள்ள தவிட்டை துவையல் செய்வதற்கும் பிரித்தெடுக்கவும், கல் அரிப்பு களத்து மேட்டில் தானியங்களுடன் கலந்துள்ள கல், கரம்பை (சிறு சிறு மண் கட்டி) பிரித்தெடுப்பதற்கும் பயன்பட்டன.

மண் அரிப்பு பற்றி உங்களுக்குத் தெரியும்.

குறிப்பு: இதன் பயன்பாடு நவீன அறிவியலினால் தற்போது களத்து மேடும் இல்லை, உரலும் இடித்தலும் இல்லை. இவ்விடத்தில் நெல் அரவை நிலையங் களும், அறுவடை இயந்திரங்களும் வந்துவிட்டன.

10. தீமூட்டிக் குழாய்:

அமைப்பு: ஒரு குழாயில் 1.5 அடி நீளம் துண்டாகவும் இருமுனையிலும், உள்ளேயும் எவ்வித அடைப்புமின்றி இருக்கும். இது முன்பு மூங்கில் குழாயிலும், பின்பு பித்தளை, இரும்பு நிலைவெள்ளி யிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு: அடுப்பில் சுள்ளிகளால் தீ எரிக்கும் போது, அடிக்கடி அணைந்து விடும். ஆகவே அடிக்கடி மண்ணெண்ணெய் கொண்டோ, தீக்குச்சி கொண்டோ தீமூட்ட முடியாது. ஆகவே எரிந்த சுள்ளியிலுள்ள தீக் கங்கின் நேராக இக்குழாயின் ஒரு முனையை வைத்து மறு முனையின் வழியாக வாயினால் ஊதும் போது ஆக்சிசன் வாயு சென்று எரியச் செய்யும்.

குறிப்பு: மூங்கில், பித்தளை, இரும்பு குழாயில் எளிதில் சூடேறுவது இல்லை. இதனால் கங்கில் வைத்து ஊதும்போது கை சுடுவதுமில்லை. என்னே தமிழர்களின் அறிவியல் அறிவு.

(தமிழர்களின் அறிவியல் அறிவுப் பயன்பாடு தொடரும் )

Pin It