பொதுவாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரம் ஊழல் என்பது தனி நபர் சார்ந்ததோ, எண்ணம் சம்பந்தப்பட்டதோ இல்லை. மாறாக ஊழல் என்பது ஒரு நாட்டின் சமூக அமைப்பு. அங்கு நிலவும் அரசியல் சூழல், பொருளாதார உறவு, மற்றும் இந்தியாவைப் பொறுத்தவரை பண்பாட்டோடும் சம்பந்தப்பட்ட ஒன்று. ஊழல் வேர் பிடிப்பது இதிலிருந்துதான். எனவே வேரைப் பற்றி சிந்திக்காமல் கிளைகளைப் பற்றி கவலைப்படுவதால் ஊழல் ஒழிந்து விடாது.

இந்தியா சுதந்திரம் வாங்கியதாக சொல்லப்பட்ட ஆண்டிலிருந்துஊழலை ஒழிக்க சட்டம் போட் டார்கள்.1947 வாக்கில் நிலவி வந்த கள்ள மார்க்கெட் வணிகம், பதுக்கல், வரி ஏய்ப்பு வழியாக வந்த கருப்புப் பணம், அதிகாரி மட்டத்தில் பெருகியிருந்த ஊழல் போன்ற நடவடிக்கைகள் பெருகியிருந்தன. அதைக் கட்டுப் படுத்த அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் "ஊழல் தடுப்புச் சட்டம்' கொண்டுவரப்பட்டது.

அடுத்து 1956 இல் கே.சந்தானம் குழு அறிக்கையின் அடிப்படையில் ஊழலைக் கண்டறிய "ஊழல் கண்காணிப்புக் குழு' ஒன்று அமைக்கப்பட்டது.

1965 இல் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழு ஒரு அறிக்கையை முன்வைத்தது. அதில் சுவீடன் நாட்டில் நடக்கும் முறைகேடுகளைக் கண்காணிக்க அந்நாடு "ஆம்பட்ஸ்மன்' என்ற அமைப்பை இருப்பது போல, இந்தியாவிலும் ஊழல் குற்றச் சாட்டுகளை விசாரிக்க ஒரு கண்காணிப்புக் குழு உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

1969 இல் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இப்படி கடந்த காலங்களில் ஊழலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளும் இருந்தன. ஆனாலும் ஊழல் ஒழிந்தபாடில்லை. நேரு ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தார் என்பதற்காக நேரு குடும்பம் ஊழலே செய்யவில்லையா?

நேருவின் மகள் இந்திரா காந்தியின் மீதும், இந்திரா காந்தி யின் மகன் இராசீவ் காந்தி மீதும், இராசீவ் காந்தி மனைவி சோனியா காந்தி மீதும் ஊழல் குற்றச்சாட்டு கள் இருந்ததை, இருப் பதை மறுக்க முடியுமா? ஊழல் ஒழிப்புச் சட்டமும், மசோதாவும் ஊழலை ஒழித்து விடுமா என்ன?

ஊழல் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும், கவலைப்படாமல் ஒய்யாரமாய் ஓங்கி வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்திய ஆட்சிப் பகுதி யைப் பொறுத்த வரை தொடக்க காலத்தில் சாதிய சனாதனத்திற்கு கட்டுப்பட்டதாக இருந்தது. இப்போது அந்த ஒழுங்கை ஊழல் மீறி விட்டது என்பது உண்மைதான்.

குறிப்பாக தொடக்க காலத்தில் “பார்ப்பனியமும், சாதிய நிலவுடை மையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது'' ஊழல் செய்கின்ற தகுதியும் உரிமையும் பார்ப்பனர்களுக்கும், ஆதிக்கச் சாதிகளுக்கும் மட்டுமே இருந் தது. இதை அவர்கள் ஏறத்தாழ சட்டப்படி யான உரிமைகளாகவே பெற்றிருந்தனர்.

1947 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, தரகு முதலாளிகளின் ஆட்சி அதிகாரமும் இணைந்துக் கொண்டதால் அரசு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும், வணிகர்களும் ஊழல் செய்யும் தகுதியை அடைந்திருந்தனர். அப்போது ஊழலின் எல்லை கொஞ்சம் விரிந்திருந்தது.

1990க்குப் பிறகுதான் ஊழல் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. அதற்கு காரணம் பன்னாட்டு மூலதனங்கள் வரவு, தனியார் மயம், தாராளமயம், உலக மயம்தான் ஊழலைப் பொது தன்மைக்குக் கொண்டு வந்தது. சாதி மதம் கடந்து, யார் வேண்டு மானாலும் அவரவர் அதிகாரத்திற்கும் எல்லைக்கும் உட்பட்டு ஊழல் செய்யும் வாய்ப்பு உருவானது. இந்திய சனநாயகத்தின் ஐந்து தூண்களிலும் ஊழல் மலிந்து விட்டது. “இப்போது கண்டவன் எல்லாம் ஊழல் செய்கிறானே என்று பாரம்பரிய ஊழல்வாதிகள் வேறு புலம்புகிறார்கள்.'' ஆக ஊழல் சமூக கட்டுப் பாட்டை மீறி, எண்ணிக்கையிலும், முன்னை விட பல மடங்கு உயர்ந்து விட்டது. “2ஜி யில் ஒன்றே முக்கால் கோடி ஊழல் என்பது அதன் உச்சப்பட்ச வளர்ச்சியாகும்.

இந்த நிலையில்தான் ஊழல் எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு எதிராக அனைத்து எதிர் கட்சிகளும் ஒரே குரலில் ஊழ லுக்கு எதிராகப் போராடத் தொடங்கி விட்டனர். விழிப்படைந்த காங்கிரசு, 1969 இல் கொண்டு வரப்பட்ட லோக்பால் மசோதா வைப் பற்றி பேசத் தொடங்கியது. கடந்த ஆண்டு களில் பலமுறை லோக்பால் குறித்து நாடாளு மன்றத்தில் முன் வைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சட்டமாக்கவில்லை.இந்தமுறை எப்படியாவது சட்டமாக்கிடவேண்டும் என்று காங்கிரஸ் உட்பட அனைத்து தரப்புமே உறுதியாக இருக்கின்றனர்.

இதனடிப்படையில் 2010 இல் நாடாளு மன்றத்தில் லோக்பால் சட்ட வரைவு முன் மொழி யப்பட்டதும், இதனடிப்படையில் நடுவண் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றி விவாதிக்கப்படுவார்கள் என்றும், லோக்பால் குழுவில் மூன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடம் பெறுவார்கள் என்றும் இவர்களை தேர்வு செய்ய துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோரால் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப் பட்டது.

மேலும் லோக்பால் விசாரணைக் குழுவின் வரம்புக்குள் பாதுகாப்புத் துறை வராது. அரசு ஊழியர்கள் லோக்பாலிடம் புகார் அளிக்கக் கூடாது. தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களவைத் தலைவரின் ஒப்புதலைப் பெறாமல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஊழலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த விதிமாநிலங்கள் அவைக்கும் பொருந்தும்.

ஊழல் செய்திருப்பது உண்மை என்று லோக்பால் குழு உறுதி செய்தால் அதை அந்த உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ள மக்களவைத் தலைவருக்கோ, மாநிலங்கள் அவைத் தலைவருக்கோ அனுப்பிடல் வேண்டும்.

 அமைச்சர் ஊழல் செய்திருந்தால் பிரதமரும், உறுப்பினராக இருந்தால் அவைத் தலைவரும் புகார் மீதான நடவடிக்கைகளை முடிவு செய்து அதை லோக்பால் குழுவுக்கு அனுப்புவார்கள். இந்த வரையறைதான் அரசின் பழைய லோக்பால் சட்டவரையறையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த லோக்பால் சட்டவரைவு ஊழல் வாதிகளை தண்டிக்கப் பயன்படாது. குற்றத்திலிருந்து தப்பிக்கவே பயன்படும். எனவே லோக்பால் வரைவுச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என மராட்டியத்தைச் சேர்ந்த அன்னா அசாரே என்கின்ற சமூக ஆர்வலர், மேலும் ஜனலோக்பால் (ஊழல் தடுப்பு ஆணை மக்கள் வரைவுச் சட்டம்) என்ற மாதிரி அமைப்பையும் முன்வைத்தார்.

அரசு அன்னா அசாரேயின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் 5.04.2011 அன்று தில்லி ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவைப் பார்த்து அச்சம் கொண்ட மத்திய அரசு அசாரேவின் கோரிக்கையை ஏற்க முன்வந்தது.

அன்னா அசாரே இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார். ஒன்று ஜனலோக்பால் குழுவில் அரசு சார்பாளர்கள், மக்கள் சார்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற வேண்டும். இரண்டாவது "ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அரசு சாரா அமைப்பு உருவாக்கிய லோக்பால் வரைவுச் சட்டத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

அசாரே முன் மொழியும் சட்ட வரை யறைப்படி பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உள்ளிட்ட நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புதான் ஜனலோக்பால். மேலும் ஜனலோக்பாலின் வரைவுச் சட்டம் அரசு வரைவுச் சட்டத்திற்கு எதிராகவே உள்ளது. அதாவது, அரசு ஊழியர்கள் உள்ளிட்ட எவரும் லோக்பால் குழுவிடம் புகார் கூறலாம். லோக்பால் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கலாம்.

லோக்பால் தேர்தல் ஆணையம் போல் தனி அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்பட வேண்டும். லோக்பால் குழுவுக்கென்று ஊழல் கண்காணிப்பு மற்றும் லோக்பால் ஆணைகளை தனியாக இருக்க வேண்டும். லோக்பால் ஆணைகளை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதி மன்றமும் ஆய்வு செய்யலாம். லோக்பால் குழு உறுப்பினர் மீதான புகார்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கும். லோக்பாலின் வரவு செலவுகளை இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை ஆணையம் ஆய்வு செய்யும்.

இந்த லோக்பால் குழுவில் 11 பேர் இடம் பெறுவார்கள். லோக்பால் குழு உறுப்பினர்களை பிரதமர், எதிர்கட்சித் தலைவர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், தலைமைக் கணக்குத் தணிக்கை ஆணையர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் ஆகியோரைக் கொண்டக் குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள்.

இது ஒப்பிட் டளவில் அரசு கொண்டு வந்த லோக்பாலை விட சிறப்பான தாகவே இருந்தாலும், இதனால் என்ன பயன்? இது ஊழலை ஒழித்து விடுமா? அரசு முன் வைக்கும் லோக்பாலாகட்டும், அசாரே முன் வைக்கும் ஜன லோக்பாலாக இருக்கட்டும் இது ஊழலை ஒழிப் பதற்கான அமைப்பு இல்லை. ஊழல் செய்தவரை விசாரிப்பதற்கான அமைப்பு அவ்வளவுதான்.

அன்னா அசாரேவின் பெரும்பாலான கோரிக்கை கள் ஏற்கப்பட்டு விட்டது. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளில் மட்டும் தான் அரசு குழுவிற்கும் அசாரே குழுவிற்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

நம்மைப் பொருத்தவரை பிரதமரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வந்தாலும், கொண்டு வரவில்லை என்றாலும், நடக்கப் போவது ஒன்றுமில்லை. அசாரே புனிதருமில்லை. லோக்பால் அமைப்பு புனிதத் தன்மை கொண்டதுமில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று சொல்லும் இந்திய நீதிமன்றங்கள் நிலை என்ன?

“உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ஊழல் செய்தவர்களை விசாரித்து தண்டிக்கும் தகுதியை இழந்து விட்டது. நீதிமன்றங்களில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது.'' ஆட்சியாளர் களும், உயர் அதிகாரிகளும் நீதிமன்றத்தை தங்களின் கைப்பாவையாக மாற்றி விடுகின்றனர். எனவே நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வழியில்லை என்பது இதுநாள் வரை புனிதமாகக் காட்டப்பட்ட நீதிமன்றங்களை புறந்தள்ளி விட்டு லோக்பாலை புனிதமாக்குகின்ற முயற்சியில் அன்னா அசாரே அவரின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி அரசும், எதிர்க்கட்சிகளும் கூட இப்பணியில் தீவிரமாக இருக்கின்றனர். இதற்கான தேவையை இந்திய ஆளும் வகுப்பு வெகுவாக உணரத் தொடங்கி விட்டனர்.

ஏனென்றால் இந்திய நீதிமன்றங்களின் மீது மக்கள் மதிப்பிழந்ததைப் போல் இந்திய நாடாளு மன்றமும் ஊழலில் நாறிக் கிடக்கிறது. பிரதமரும், அமைச்சர்களும், உறுப்பினர்களும் ஊழல் வாதிகள். அரசை நிர்வகிக்கின்ற உயர் அதிகாரிகளும் ஊழல்வாதிகளாகப் பெருகி விட்டனர்.

ஆக இந்தியாவின் மைய அமைப்புகளான நாடாளு மன்றத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும், நிர்வாக அமைப்பான அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இது இந்தியக் கட்டமைப்பிற்கு நல்லதல்ல. எனவே மாற்றாக லோக்பாலை முன்நிறுத்துகின்றனர். "லோக்பால்'அது ஒரு சோளக்காட்டு பொம்மை. மக்களை ஏமாற்றும் தந்திர உத்தி.

லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர் சேர்க்கவில்லை என்றால், இரண்டாவது சுதந்திரப் போராட்டம் வெடிக்கும். ஆகஸ்ட் 16 ஆம் நாள் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். மத்திய அரசு என்னை ஏமாற்றி விட்டது. அரசு ஊழல் ஒழிப்பை எளிமைப் படுத்தி விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் அசாரே.

உண்மையில் அசாரே மக்கள் சிக்கலுக்காகப் போராடியவர். ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் பல நடத்தியிருக்கிறார். இவர் ஊழல் கரைப் படியாதவர் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், ஊழலை ஒழிக்க இவருக்கு இருக்கும் அதிகப்படியான திட்டம் ஜனலோக்பால்தான்.

தொடக்கத்தில் சொன்னது போல் இந்தியக் கட்டமைப்பு ஊழலால் உருவானதுதான். அதிகாரம், சூழ்ச்சி, வஞ்சகம், ஏமாற்று இப்படி பல பொய்களால் தான் இந்தியாவின் அடித்தளமே இருக்கிறது. இந்தியப் பண்பாடு என்று பீற்றப்படும் பார்ப்பன பண்பாட்டின் அடிப்படையே ஊழல்தான்.

காசு கொடுக்காமல் தரிசிக்க இந்து மதம் அனுமதிக்குமா? அதுவும் காசுக்கு ஏற்றாற் போல் கடவுள் நெருங்கி வருவார். திருமணம் முதல் திருவிழா வரை பார்ப்பனர் அடிக்கும் கொள்ளைக்கு என்ன பெயர்?

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் சுரண்டப்படுகிறார்கள். முதலாளிகளால் தொழிலாளிகள் சுரண்டப்படுகிறார்கள். வல்லரசியத்தின் பெயரால் தேசத்தின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாகச் சூறையாடப்படுகிறது. இந்தியாவின் பெயரால் தேசங்கள் அடக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி அசாரே என்ன நினைக்கிறார்? ஊழலின் வேர் இங்கே இருக்கிறதா இல்லையா?

எனவே சுரண்டல் அமைப்பு முறை நீடிக்கின்ற வரை ஊழலும் இருக்கவே செய்யும். அரசும் சரி, அன்னா அசாரேயும் சரி, இந்தியச் சுரண்டல் அமைப்பு முறையை மூடி மறைக்கவே லோக்பாலை முன் நிறுத்துகிறார்கள்.

ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு சன நாயகக் கோரிக்கை தானே! அந்த வகையில் ஏன் அசாரேவையும், லோக்பாலையும் ஆதரிக்கக் கூடாது என்று பல படிப் பாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது பொதுப் படி சரி என்று பட்டாலும், இந்திய ஊடகங்களும், மேட்டுக்குடிகளும், இந்திய நடுத்தர வர்க்கமும் அசாரேவைப் புரட்சி யாளராகவும், லோக்பால் நடவடிக்கை இரண் டாவது சுதந்திரப் போராட்டமாக சித்தரிப்பது ஏற்புடையது அல்ல.

மேலும் இது இந்தியத் தரகு ஆளும் வகுப்பின் மோசடி அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Pin It