ஒரு ஊர். அங்கே ஒரு மடம். மடத்தில் ஒரு ஆண்டி இருந்தான். அவனுக்கு வேலைவெட்டி கிடையாது. ஆண்டியிடம் ஒரு சங்கு இருந்தது. அவன் வீடு வீடாகப் போவான். சங்கை எடுத்து ஊதுவான். பிச்சை எடுப்பான். இப்படியே அவன் பிழைப்பு நடந்தது. கிடைத்தால் வயிறு முட்டத் தின்பான். இல்லை என்றால் பட்டினி.

ஒரு நாள். ஆண்டி மடத்தில் படுத்துக் கிடந்தான். அந்த நேரம் மூன்று திருடர்கள் வந்தார்கள். மடத்தில் உட்கார்ந்தார்கள்.

அவர்களின் கூட்டாளி ஒருவன் வரவில்லை.

திருடக் கிளம்பியாச்சு. ஆனால் ஆள் பத்தாது. என்ன செய்யலாம்? என்று மண்டையை உருட்டினார்கள். பின்பு ஆண்டியைக் கூப்பிட்டார்கள்.

“ஆண்டி ஆண்டி நாங்க திருடப் போகிறோம். நீயும் வா. களவு எடுத்ததில் உனக்கும் பங்கு.” என்றார்கள்.

“அடி சக்கை! குடுக்கிற சாமி கூப்பிட்டு குடுக்குதே” என்று ஆண்டி நினைத்தான். சரி என்று கிளம்பி விட்டான். கையில் சங்கை எடுத்துக்கிட்டான்.

“சங்கு எதுக்கு? அது இங்கேயே இருக்கட்டும்” என்று திருடர்கள் சொன்னார்கள்.

“முடியாது, முடியாது. நான் இருக்கும் இடத்தில்தான் அது இருக்கணும்.” இப்படி குரங்குபிடியாகச் சொல்லி விட்டான்.

மும்மிருட்டு. நாலுபேரும் ஒரு ஆட்டுக் கிடைக்கு போனார்கள். பம்மிப் பம்மி நடந்தார்கள். கிடையை சிலர் காவல் காத்தார்கள். அவர்களை கீதாரி என்று சொல்லுவார்கள். கீதாரி கொர்..கொர்.. என்று குறட்டை விட்டு தூங்கினார்கள். தூக்கித் தோளில் போட்டார்கள். ஆண்டி ஒரு ஆட்டைப் பிடித்தான். அது மே..ம்..மே... என்று தொண்டை கிழிய கத்தியது.

“ஏய்.. ஆண்டி ஆடு கத்துதே! சங்கைப் பிடியப்பா” எப்படி ஒரு திருடன் சொன்னான். ஆண்டிக்கு பழக்கதோசம் தன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். பூ...ப்பூ...பூ...ஊ...என்று ஊதினான்

அவ்வளவுதான். கதை கந்தல். கீதாரிகள் முழித்து விட்டனர். ஏய்..ஊய்...அந்தா இந்தா பிடி என்று துரத்தினார்கள். திருடர்களை பிடித்து விட்டார்கள். அப்புறம் என்ன. கட்டி வைத்து அடித்தார்கள். ஒரே கும்மாங்குத்து தான்.
Pin It