அன்பிற்குரிய வாசகர்களே,

வணக்கம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களால் இதுவரை விழிப்புணர்வு என்னும் பெயரில் தனிச்சுற்றாக, இருமாத இதழாக மதுரையிலிருந்து வெளிவந்த இதழானது, தற்பொழுது "சமூக விழிப்புணர்வு' என்னும் பெயரில் இளம் வழக்குரைஞர்களால் முன்னெடுத்துச் செல்லும் மாத இதழாக வெளிவருகிறது.

"உண்மையான' முற்போக்கு இதழ் நடத்துவது என்பது தற்பொழுதைய சூழ்நிலையில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் நிலையில், இரண்டரை வருடங்களாக இதழ் பல்வேறு சிரமங்களைக் கடந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவரை வெளியான இதழ்கள் அனைத்தும் நன்கு விற்பனையான நிலையிலும் இதழ் தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்ற போதிலும், இதழுக்கான தயாரிப்புச் செலவில் மிகக் குறைந்த அளவே இதழ் விற்பனை நிதியாகக் கிடைக்கிறது. அவ்வாறு கிடைக்கப் பெற்ற நிதியிலும், போக்குவரத்து மற்றும் அஞ்சல் செலவுக்கு மிகப் பெரும் தொகை சென்று விடுகிறது.

இதழை ஆர்வமாக எதிர்பார்க்கும் வாசகர்கள்கூட, இதழுக்கு சந்தா செலுத்த முன்வருவது இல்லை. இதழ் தொடர்ந்து வெளிவருவதில் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் (!) அடைபவர்கள் அதிலுள்ள சிரமங்களைப் பகிர்ந்து கொள்ள உரிய பங்களிப்பைச் செய்வதில்லை.

ஆனாலும், இதழ் சிரமங்களுக்கிடையே வெளிவருகிறது.

ஆகவே சமூக விழிப்புணர்வு இதழின் வாசகர்களும், இதழ் மீதான அக்கறை கொண்டவர்களும் தாங்கள் முதலில் சந்தாதாரராகவோ, ஆயுள் சந்தாதாரராகவோ சேர்வதும், தங்களது நண்பர்களை இதழுக்கு சந்தாதாரராக அறிமுகப்படுத்தி வைப்பதும், நன்கொடை தர விருப்பம் உள்ளவர்களிடம் நன்கொடை பெற்றுத் தருவதும், வணிக நிறுவனங்களில் இருந்து விளம்பரங்கள் பெற்றுத் தருவதும், மட்டுமே இதழ் தொடர்ந்து தொய்வின்றி வெளிவர உதவியாக இருக்கும்.

ஆம், நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பு கூட இதழுக்கு வலிமை சேர்க்கும்.

கடந்த 20 ஆண்டுகளில் ஆர்வத்துடனும், உறுதியுடனும் ஆரம்பிக்கப்பட்டு எண்ணற்ற வாசகர்கள் இருந்தும், இதழுக்கான அவர்களின் உரிய பங்களிப்பு இல்லாததால் தங்களது பயணத்தைத் தொடர முடியாமல் இடையிலேயே நிறுத்தப்பட்ட பல நூற்றுக்கணக்கான இதழ்களைப் போல் அல்லாமல், சமூக விழிப்புணர்வு தங்களைப் போன்ற மதிப்பு மிக்க வாசகர்களின் பங்களிப்புடன் தொடர்ந்து வலிமையுடன் வெளிவரும்.
Pin It