(திரைப்படத்தினை, வெறும் திரைப்படமாக மட்டும் பார்ப்பது பெண்ணை வெறும் உடலாகப் பார்ப்பதை ஒத்த அநீதியே)

ஒரு திரைப்படத்தின் அழகியல் தன்மையை மட்டும் கவனத்தில் கொண்ட விமர்சனங்கள் நிறைய இருக்கும். ஆனால், இதைச் சமூகத்தோடு எவ்விதம் வினையாற்றுகிறது எனும் சமூக விமர்சனமே முக்கியமானது ஆகும். அவ்வகையில், கோடிகள் கொட்டி எடுக்கப்பட்ட பருத்தீவீரன் திரைப்படம் பற்றிய விமர்சனம் அல்ல இது. முப்பது ரூபாய் கொடுத்து ‘பருத்தி வீரன்' படம் பார்த்தவனின் பார்வையிலான விமர்சனம் இது.

‘பருத்தி வீரன்' திரைப்படம் மிகவும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் ‘எதார்த்தம்' என்பதாகும். இந்தக் கட்டுரை, அந்த எதார்த்தம் உண்மை அல்ல, போலியானது என்பதை உங்களின் பார்வைக்கு வைக்கின்றது.

குழந்தைகளைக் கொண்டாடாத தன்மை காட்டுமிராண்டு சமூகத்திற்குக் கூட கிடையாது. ஆனால், ‘நாகரீகம்' உள்ளதாகக் கூறிக் கொள்ளும் நாம் குழந்தைகளை மதிக்கத் தெரியாதவர்கள். பருத்தி வீரன் படத்தின் துவக்கத்தில் ஒரு காட்சி வரும். ஊரின் திருவிழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். கதாநாயகன் வாளினால் ஒருவனின் பின்புறம் குத்துவதோடு, காட்சி நிறுத்தப்பட்டு, இயக்கம்: அமீர் என திரையில் வரும். சிறுவர்களுக்கும் வன்முறைக்குமான தொடர்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், அந்தக் காட்சியை நோக்க வேண்டும். கதாநாயகனுக்கு அந்த இரண்டரை அடி வாளினை எடுத்துக் கொடுப்பது, 3 அடி உயரமுள்ள சிறுவன் ஆகும். இதில் இருந்து எதார்த்தம் துவங்குகிறது.

அவ்வாறே, இந்தப் படத்தில் வரும் பெண்களில் மூன்று பேர் மட்டும் மிக அதிக நேரம் வருபவர். ஒருவர் கதாநாயகி. மற்ற இருவர் கதாநாயகியின் அம்மாவும், கதாநாயகனின் பாட்டியும் ஆவர். இந்த மூன்று பேரும், படத்தில் சில நிமிடங்கள் வந்து போகும் குறவர் சாதிப் பெண்ணும், கதாநாயகியின் பாட்டியும் அடிக்க, உதைக்க மிதி வாங்கவே படம் முழுவதும் வருபவர்கள். பெண்கள் மீதான வன்முறையின் மிக முக்கியமான அம்சம் என்பது குடும்ப வன்முறையே ஆகும். குடும்பத்தின் இயக்கத்திற்குச் சம காணமான "பெண்' மீது நிகழ்த்தப்படும் வன்முறை நாம் அறிந்த அவலம் ஆகும். பெண் உதை வாங்குதல் தமிழ்நாட்டின் குடும்பங்களில் நிகழும் எதார்த்தம் என்கிறது படம். நாமும் மறுக்கவில்லை. ஆனால், படம் நெடுகிலும் அடியும், உதையும் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கும் பெண்களை நாம் எந்த ஊரிலும் பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன், மனைவியையும், தாயையும் மகளையும் அடிப்பதாகக் கொள்வோம். அவனது குடிக்காத நேரமோ அல்லது மனைவியை / மகளை கொஞ்சும் நேரம் சிறிதளவேனும் உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பருத்திவீரன் திட்டமிட்டே தவிர்த்த இடங்களில் இதுவும் உண்டு.

படத்தின் கதாநாயகி பரிதாபத்துக்கு உரியவர். எட்டு வயது சிறுமியாக இருந்தபோது துவங்கி, இறுதிக்காட்சி வரை வன்முறையை மட்டுமே பார்த்தவள். சிறுமியாக இருந்தபோதும் பருவம் அடைந்ததும் காதல் கொண்டபோதும், எப்பொழுதும் பரிதாபத்துக்கு உரியவள் அவர். எட்டுவயதில் தன்னைக் கிணற்றிலிருந்து காப்பாற்றியதால் அவனையே காதலிப்பவள். என்ன அருமையான எதார்த்தம். காப்பாற்றியது கிழவராக அல்லது தீயணைப்புப் படை வீரராக இருந்தால் என்ன செய்திருப்பாள். பாவம் படத்தில் அவருக்கும் அவள் தந்தைக்குமான உறவும்கூட அப்படித்தான். மிக மோசமான நடத்தை உடைய, கோபக்கார தந்தை கூட, தன் மகளிடம் வைத்திருக்கும் பாசம் சிறிதேனும் இருக்கும். இந்தப் படத்தில் அதுக்கு வாய்ப்பே கிடையாது. இது என்னவகை எதார்த்தம் என்பதை இயக்குனர்தான் சொல்ல வேண்டும்.

இறுதிக்காட்சி நாம் பேச வேண்டாம். அதனை விரிவாக நுட்பமாக பேசத்துவங்கினால், இயக்குநர் செய்த தவறை நாமும் செய்ததாகி விடும். அதனால், அந்தக் காட்சியின் தேவை மற்றும் நோக்கம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம். இதற்கு ஒரு பேட்டியில் இயக்குநரே விளக்கம் அறித்துள்ளார் (குமுதம் 14-07-07) "மக்கள் படத்தைப் பார்த்துவிட்டு, "கிளைமேக்ஸ் ரொம்ப "வலி' ஆக இருக்கிறது. மூன்று நாட்களாகத் தூங்க முடியவில்லை என்கிறார்கள். படைப்பாளியாக இது எனக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் அமீர்.

ஐயா என்ன நியாயம்? என்ன எதார்த்தம்? படைப்பாளியாக உங்களின் பொறுப்பு பற்றிய உணர்வு கிடையாதா?

படத்தில் மிக மோசமாகக் காயடிக்கப்பட்டு இருப்பது ‘காதல்'. விரும்பிய ஆணும், பெண்ணும் நேசத்தினைப் பகிர்ந்து கொள்ளவும், தொழவும் விரும்புவதும் இயற்கை. ஆனால், இந்தப் படம் இதனைப் பகடி செய்கிறது. விருப்பம் என்பது தானாக வரவேண்டியது. வற்புறுத்தித் திணிக்கப்பட்டால் அது வன்முறை. இங்கு, விருப்பம் இல்லாத காதலனை விரட்டி விரட்டிக் காதலிக்கச் சொல்லும் கதாநாயகி. எம்.ஜி.ஆர். சலாம் தொட்டு, தமிழ்த் திரைப்படம் உருவாக்கிய கதாநாயகி இவர். கதாநாயகியின் பின்னால் தொடர்ந்து அலைவதும், பெரியார் சொல்வது போல், அவனுடன் படுத்து பிள்ளைபெறும் இயந்திரமாக மட்டும் தன்னை உணர்வுவதுமான படைப்பு. அந்தப் பெண்ணுக்கும் எதார்த்தமாகக் கூட, இப்படி நிலை ஏற்படக் கூடாது? சரி, இவ்வளவு பெரிய தியாகத்திற்கான எதிர்வினை என்ன தெரியுமா? பெண் கேட்டு செல்லும் கதாநாயகின், பிரச்னை ஆனதும் அவளிடம் சொல்லும் செய்தி முக்கியமானது. இம்புட்டு ஆனதுக்கு அப்புறம், விட்டு விட்டால் ‘வெட்டிக் கொன்னுடுவேன்' எனும் வசனம். இறுதியில் அதையும் செய்வான்.

பெண்ணுக்குத் தனது காதலில் ஒரு நிலைப்பாடு எடுப்பதற்கு தந்தை மட்டுமல்ல காதலனும் தடையாகவே இருப்பாள். நாம், தினசரி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். காதலிக்க மறுத்த பெண்ணின் மீது ஆசிட் வீச்சு. காதலில் மனம் மாறியதால், காதலனால் வெட்டிக் கொலை என்பன செய்திகளின் பின்னணியில் இந்தப் படத்தைப் உணர்ந்திருக்கும் வன்மம் புரியும் "இறுதியில் கதாநாயகி பாலியல் வல்லுறவாலும், முதலில் ஏற்பட்ட தலைக்காயத்தாலும் இரத்தச் சகதியில் சிதைந்து கிடப்பாள். கதாநாயகன் அழுகின்ற இடம். "அட பார்ரா இவனுக்கென்றும் பாசம்' என நாம் யோசிக்கத் துவங்கியது சில வினாடிகளிலேயே உடைந்து போகும். ஏனெனில் அவனது அழுகை, அவளுக்கானதாக இல்லாமல், உடைந்து போன கள்ளித்தன்மையானதாக மாறியிருக்கும்.

பார்வையாளர்களின் மனநிலையும் கவனிக்கப்பட வேண்டியதே. படம் முடிந்து வெளிவருகையில், பெண் ஒடுக்குமுறையினை விரும்பும் ஆண் தன் மன வக்கரங்களை எல்லாம் தீர்த்துக் கொண்ட பெருமிதத்தில் விடுவான். பெண்ணை சக உயிரினமாக பார்க்கத் தெரிந்த எவரும், இதயத்தில் ஊசி சொருகிய வலியுடன் வருவார். அவ்வாறே வீரப்பரம்பரை எனும் போது கேட்டுகம் காதைப் பிளக்கும் கைதட்டல்களும். மேலும், உணர்வு ரீதியான நேரடியாக மற்றும் மறைமுகமாக வழங்கிடும் என்பது நமக்குப் புரிய வருகிறது. எல்லாற்றிற்கும் ஒற்றைப் பதிலாக நடக்காததையா நான் காட்டி விட்டேன்? என்ற கேள்விக்கு நமது பதில் படத்தின் துவக்கத்தில் திருவிழாவில் ஆடுகள் தொங்கிக் கொண்டு இருக்கும். எதார்த்தமான ஆடுகளை வெட்டுவதை உங்களால்தான் எடுக்க முடியவில்லை? படம் மிருகவதைத் தடுப்பச் சட்டப்படி தணிக்கையில் சிக்கிக் கொள்ளும். ஆடுகளின் மீதான கரிசனம் கூட தமிழ்ச் சமூகத்தில் மனிதர்களுக்கு இல்லையா?
Pin It