தமிழில் பேசினால்
தண்டனை தரும் பள்ளி
தினமும் தொடங்குகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி

*
‘சார்''
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.
‘சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.

*

கரும்பலகை அழிப்பதற்கு
காகிதம் கேட்டேன்.
கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..
இப்படித்தான்
வீணாய்ப் போகிறது.
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்...

*

சறுக்கல் விளையாட
ஆசைப்பட்டான்.
‘சார்
ஏறி, ஏறி
சறுக்கப் போகிறேன்''
‘மாற்றிச் சொல் குழந்தாய்
சறுக்கச் சறுக்க
ஏறப் போகிறேன்.''
சறுக்கல் இயற்கை
ஏறுதலே முயற்சி.

*
பிள்ளைகளே
பாடமாகிறார்கள் சிலபோது.
பக்கம் இருப்பவன் மேல்
வெறுப்பு மேலிட்டால்
வேரறுப்பதில்லை.
காய் விடுதலோடு
நின்று விடுகிறார்கள்
பழம் விடுவதற்கு வசதியாய்!

*

இருளின் எதிர்ச்சொல் வெளிச்சம்
என்றெழுதியிருந்தான்.
தவறென்று அடித்தார்
விடைத்தாள் திருத்திய ஆசிரியர்.
வினவியபோது சொன்னார்,
‘ஒளி' என்றுதான் சொல்லிக் கொடுத்தேன்
இவன் மட்டும்
‘வெளிச்சம்' என்று எழுதியிருந்தான்.
நகல் இயந்திரங்களில்
தயாரிப்புக் கூடத்தில்
மதிப்பு இருப்பதில்லை
அச்சுக் கோர்ப்பவர்களுக்கு.

*

ஸ்கேலுக்கு
என்ன ஐயா தமிழில்?
‘அடிக்கோல்' என்றேன்.
‘அடிக்கின்ற காரணத்தால்
அடிக்கோலா?' என்றான்
என்ன செய்ய
அப்படித்தான் பதியும்
அவனுக்கு.

*

குற்ற உணர்ச்சியில்
குறுகிப் போகிறது மனசு
மாணவர்களின்
விடைபெறு விழாவில்.
யாரோ சமைத்ததைத்தான்
பரிமாறினோம்
சமைக்கச் சொல்லித் தரவேயில்லை
இறுதிவரை.

*

விடை சொல்லவே
பழக்குகிறோம்.
பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க.
Pin It