பங்குனி மாசம். கோடை வெயில் தீயாகக் கொளுத்துகிறது. எருக்கலஞ்செடி கூட வாடுகிறது. சீமைக் கருவேல மரங்கள் வெக்கையைக் கக்குகின்றன. அனலைக் கக்குகிற வெயில்.

சுத்துப்பட்டி பத்து ஊரு ஜனமும் வந்து அந்தக் கரிசல் காட்டில் ‘ஜேஜே' என்று குமிந்திருந்தனர். ஆணும் பெண்ணும் வெள்ளையும் சொள்ளையுமாக ஜொலித்தனர். திடீர் டீக்கடைகள், குளிர்பானக் கடைகள் முளைத்திருந்தன. ஒருத்தர் இளநீர் மலையும் அரிவாளுமாக நின்றார். கொண்டாட்டமும் குதூகலமுமாக ஜனக்காடு.

ஏதோ திருவிழாவுக்கு வந்திருந்த மாதிரி ஜனங்கள் முகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள். ஓட்டமும் விளையாட்டுமாக ஆர்வப்பிரவாகமாகச் சிறுவர்கள். ரெண்டொரு வாகனங்கள். வீடியோ காமிராவில் முகம் காட்டக் கையசைக்கும் சிறுவர்களின் குதூகலக் கூப்பாடு. வெயில், உற்சாகக் குதூகலத்தின் முன் தோற்றது.

எட்டுக் குறுக்கக் கரிசல் காடும் சமதாளமாகக் கிடந்தது. கரடு பத்திக் கிடந்தது. ஆத்திச் செடிகள் வாடிப் போய் விட்டன. கொளுஞ்சிச் செடிகளும் கருகிக் கிடக்கின்றன. ஆதாளஞ்செடிகள் தாம் உயிர்ப்பச்சையோடு நின்றன, சிறு சைஸ் ஆலமரம் மாதிரி.

எட்டுக் குறுக்கக் கரிசல் காடும் பதினாறு துண்டங்களாக வரப்பிடப்பட்டிருந்தன. அரைக்குறுக்குகத்தைக்களை வெட்டணும் என்றால், ஆறு ஆள் செல்லும்.

மூன்று வேன்கள் வந்து ‘சர்ர்புர்ர்' என்று நின்றன. அதிலிருந்து பதினாறு பெண்கள் இறங்கினர். பஞ்சாபி, அரியானா, உ.பி., ம.பி., மே.வங்காளம், ஒரிசா, கர்நாடகம், ஆந்திரா என்று பல மாநிலப் பெண்கள். அதில், நம்ம தமிழச்சி பூவாத்தாளும் ஒருத்தி. இந்த ஊர்க்காரி சேரிப் பெண். சலித்துச் சலித்துக் கழித்தது போக, எஞ்சியிருந்தது இந்தப் பதினாறு பேர் தான். எல்லாருக்குமே வயசு முப்பதுக்குள் தான். அவரவர் மாநில மண்ணுக்குரிய உடைகளில், கட்டுமஸ்தானகச்சிய உடம்பு, உருண்டு திரண்ட கைகள். வெயிலடிப்பட்டுக் கன்றிப்போன கோதுமை நிறம். குத்துரல் மாதிரி தாட்டியமான திரேகம். நடந்தால் தரையதிரும் "திம் திம்' என்று கச்சிதமான முகவெட்டு. மின்னுகிற கண்கள். அளவெடுத்துச் செய்த சிற்பங்கள்!

கதர் வேட்டி இடுப்பில் கட்டி இருந்தார் கோவாலு நாயக்கர். கறுத்த மேனியைக் கபிலநிறக் கதர்த்துண்டால் மூடியிருந்தார். காலில் தோல் செருப்பு. கையில் இன்று புதிதாகக் கட்டிய ரிஸ்ட்வாட்ச்.

‘ம்..ம்.. வாங்க, பதினாறு பேரும் பதினாறு துண்டத்துல போய் நில்லுங்க. செருப்பெல்லாம் இருக்கக்கூடாது...'

பலமாகக் கத்தினார். பாஷை புரியாதவர்களுக்காகக் கைபாவனையும் செய்தார். வீடியோக்காரர்கள் சகலத்தையும் வாரிச் சுருட்டினார்கள். பூவாத்தாளும் நின்றாள், மூன்றாவது ஆளாக. நல்ல கறுப்பு, கட்டைத் திரேகம். சதைப்பற்றான கை, உருட்டுக் கன்னம், நெல் கதிரறுத்து, களைவெட்டி, நாற்று நரம்பு அறுத்துக் காப்பேறிப் போன உள்ளங்கை. அழகுச் சிற்பம். வலிமைச் சிலை.

எல்லாரும் கோவாலு நாயக்கரையே பார்த்தனர். அவர் கையைத் தூக்கிக் கடிகாரத்தையே பார்த்தார். மதிய வெயில், தீத்தகிப்பு. கழுவித் துடைத்த ஆகாயம். தடையில்லா சூரிய எரிப்பு.

நிமிட முள் பன்னிரண்டிலும் மணி முள் பதினொன்றிலும் வந்த கணத்தில் வலது கையை உயர்த்தி ஆட்டினார். காதுகள் குடைந்து கூசுகிற மாதிரி பலமாக விசிலை ஊதினார்.

பதினாறு பெண்களும் மண் மாதாவைத் தொட்டு வணங்கிவிட்டு, களை சுரண்டியைக் கையிலெடுத்தனர். குனிந்து களைவெட்டத் துவங்கினர். பந்தயக் குதிரைகள் ஓடத் துவங்கிய மாதிரி ஒரு காட்சி ரிதம். அடுக்கி வைத்த பொருட்கள் சீரான ஒற்றுமையில் நகரத் துவங்கிய மாதிரியோர் நேர்த்தி. ஒழுங்கின் அழகு.

பூவாத்தாவும், களைவெட்டினாள். அவளுக்குச் சப்பென்றிருந்தது. சாகசமற்றிருந்தது. சின்னச் சின்னப் பருத்திச் செடிகளுக்குள் முளைத்துக் கிடக்கும் கோரையையும் பசலியையும் செடி வெட்டுப்படாமல் வெட்டுகிற வேகம் இருக்கிறதே... அது ஒரு சுகம். பச்சைப் புள்ளையாகக் குலுங்கும் பருத்திச் செடித் தூரில் சுரண்டி பட்டு விடக்கூடாதே என்கிற பாசப் பதைப்புடன் வெட்டுகிறபோது, மனசுக்குள் ஓர் உணர்ச்சி வரும். ஈடுபாடு வரும். நம்ம வேலை மேலே நமக்கே ஒரு மதிப்பு வரும்.

இதென்னடா இழவு..? கரிசல் தரிசல் களைவெட்டு. வெறும் காய்ந்த கரடுகளையும் கருகிய ஆத்திச் செடிகளையும் நீர் கோத்த ஆதாளையையும் வெட்டிச் சரித்து என்ன புண்ணியம்...? எந்த வெள்ளாமையும் இல்லாமல் வெறும் புஞ்சையில் உயிர் போகிற களைவெட்டா..?

நல்ல கூத்து தான். கேணப்பய கூத்து.

பூவாத்தாவுக்குள் ஏதேதோ நினைவுகள்...

சற்றுத் தள்ளிக் கூடி ஆரவாரிக்கிற மனிதக் கூச்சல். ‘ஹேய்.. வுடாதே.. முந்திரு.. வுட்டுராதே..' என்கிற கூப்பாடு. உற்சாகப்படுத்துகிற உற்சாகக் கத்தல்.

அங்கே தன் மகளும் இருப்பாள். பள்ளிக்கூடம் போகாமல், ஊர்ப்பிள்ளைகளோடு வந்திருப்பாள். ஐஸ் வாங்கித் திங்க ரெண்டு ரூபாய் தந்திருந்தாள். என்னத்தை வாங்குனாளோ? எதுல துட்டைக் கரியாக்குனாளோ?

கரிசல் புழுதியிலே நிப்பாளே... கால் பொசுக்குமே.. செருப்பு கூட இல்லியே... என்ன செய்றாளோ..? எப்படித் துடிக்காளோ எம் புள்ளை.. பூச்செண்டு.. ஏங்கண்ணு.. ஏந்தங்கம்...

அவளுக்குள் பாவாடைச் சிறுமி மீதான பாச உணர்வு, தனது வயிற்றில் உயிர் விழித்து உருவெடுத்து வந்த உயிர்ச்சுடர். தனது கனவுகளையெல்லாம், மனசையெல்லாம், நினைக்கிற வம்சக் கொழுந்து.

நல்ல பாவாடை, சட்டை கூட இல்லை.

போன தீபாவளிக்குப் பூப்போட்ட பாலியஸ்டர் துணியெடுத்துச் சட்டையும், பாவாடையும் தைத்தது. அதற்குப் பணம் புரட்டவே ‘ஆத்தாடி.. யம்மாடி' என்று திண்டாடிப் போயிற்று.

அவள் ‘சுடிதார் தான் வேணும்' என்று ஒற்றைக் காலில் நின்றாள். ‘தங்குபுங்'கென்று குதித்து அழுதாள். தரையெல்லாம் புரண்டழுதாள். இழுத்து வைத்து, முதுகில் நாலு சாத்து அப்பின பிறகு தான், இவள் வேசடை தணிந்தது.

இப்ப இதுலே துட்டு கெடைச்சா, அவள் ஆசைப்பட்ட மாதிரி நல்ல சுடிதார் நாலு எடுக்கணும். வகைக் கொண்ணு, கலருக்கொண்ணு, கழுத்துக்கு டாலர் வெச்சு ஒரு தங்கச் செயின் வாங்கிக் கடுக்கணும். கறுத்த பிள்ளை, கம்மல், மூக்குத்தி போட்டால் எடுப்பாயிருக்கும், சடங்கான பிறகு. அதுக்கு இப்பவே வாங்கணும்.

ஒழுகுற கூரை, பிரிச்சுப் போட்டுட்டு ஓட வாங்கிப் போடணும். உள் பக்கம் சுவர்கள்ல சிமெண்ட் பூசணும். அடுப்பங்கரையைப் புதுசாக்கணும். பக்கத்துல குளிப்பு ரூம் ஒண்ணு கட்டணும்.

பூவாத்தாவுக்குள் ஓடுகிற எண்ணங்கள், அனுமார்வால் போல நீள்கிற ஆசைகள்... தேவைப்பட்டியல்...

‘அதெல்லாம்.. இது பணம் கெடைச்சாத் தானே..? பணம் நமக்குத்தான்னு என்ன நிச்சயம்...? இல்லாமப் போச்சுன்னா...?'

மைக்கெட்டில் எம்.ஜி.ஆர் பாட்டு ஒலிக்கிறது.

‘ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் குடுக்கணும்
ஆடிப்பாடிப் பிழைக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்...'

இந்தப் பாட்டை திரும்பத் திரும்பப் போடுகிறார்கள். டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் எம்.ஜி.ஆரின் உற்சாகத் துள்ளல்.

வெட்டுப்பட்ட கரிசல் புழுதி தீயாகச் சுடுகிறது. இரு கையிலும் சுரண்டி. மொங்குமொங்கென்று வெட்டுகிறாள். குனிந்த நிலையிலேயே குலுங்குகிற உடம்பு. பங்குனி மாச வெயில் முதுகை எரிக்கிறது. கழுத்தடியில் சரம்சரமா வியர்வை. நாசி நுனியில் முத்துப் புல்லாக்குப் போல வந்து நின்று குலுங்குகிற ஒற்றைத் துளி.

கட்கங்களில் வியர்வைக் கசகசப்பு. முக வியர்வையில் வந்து அப்புகிற கரிசல் தூசி. மண் புழுதி. மணிக்கட்டு வலிக்கிறது. தோள் புஜமிரண்டும் கழன்று போகிற மாதிரி ரணமெடுக்கிறது. குறுக்கெலும்புகள் குத்திக் குடைகின்றன. முதுகு முழக்க ஓடியதிர்ந்து பரவுகிற வலி.

மற்ற பெண்களும், மூர்க்க வேகத்தில் வெட்டுகின்றனர். ‘யார் முந்துவது..? யார், எப்படி, எவ்வளவு வெட்டுவது..?' என்று ஏறிட்டு ஏறிட்டுப் பார்த்து வெட்டுகின்றனர். பதைப்பும் போட்டி உணர்வுமாக வேகம் காட்டுகின்றனர். இரு பக்கமும் பார்வைத் தாவல்களோடு அலைபாய்கிற மனவேகத்தில் களை வெட்டுகள்.

பூவாத்தா யாரையும் பார்க்கவில்லை. ‘கூடப் பதினைந்து பேர் களை வெட்டுகின்றனர்' என்பதையே மறந்து விட்டாள். கரட்டுமேடு, கொளுஞ்சிச் செடிகள், ஆத்திச் செடிகள், எருக்கலஞ் செடிகளை வெட்டிச் சாய்த்தாள். காலடியிலேயே நங்கூரமிட்டுப் போன பார்வை. ஒரு நிறை முடித்து, மறு நிறை திரும்பி விட்டாள்.

வேறு எதையும் நினைக்கவில்லை. வலிகளைக் கூட உணர்ந்த கணத்திலேயே ஒரு பெருமூச்சில் கரைத்து விட்டாள். வேலை... வேலை... வேலை... கர்மமே சிரத்தையாகி, களைவெட்டே கர்மமாகி... முழுக் கவனமும் வேலையிலே குமிந்திருந்தது. உயிர் கலந்த ஆத்மார்த்தக் குவிமையம். பாட்டுச் சத்தம். மனிதர்கள் உற்சாகச் சத்தம். அவ்வப் போது கோவாலு நாயக்கரின் விசில் சத்தம். இளநீர்க்காரனின் கூப்பாடு. ‘ஐஸ்... ஐஸ்ஸ்.. கோன் ஐஸ், கப் ஐஸ்ஸ்.. ஐஸ்... ஐஸ்ஸ்... சோமியா பால் ஐஸ்ஸேய்..'ஐஸ்காரரின் தாளம் தப்பாக ராகக் கூவல்.

மூன்றாவது நிறையில் மடங்கித் திரும்பினாள். இன்னும் நாலு நிறைகள் தாம். காலடிக்குள் சொந்த நிழல் மிதிப்பட்டது. உச்சி மதியம். ‘நமக்குப் பணம் கெடைச்சுட்டா நல்லது. வேணும்... தேவைப்படுது. நெறையச் செலவுக் கெடக்குது. கடன்களை அடைக்கணும். கடைக் கடன், சீட்டுக் கடன், வட்டிக் கடன் எல்லாத் தையும் அடைச்சுக் கழிச்சிறலாம். மானமரியாதையோட வீதியிலே நடக்கலாம். வளர்ற புள்ளைக்கு நாலு செய்யணும். நகை நட்டு வாங்கணும்...

ஆ..ங்..! ரஞ்சிதம். மேல்சாதிப் பிள்ளை. ஏழைப் பிள்ளை. பிறந்த மறுவருஷமே ரெண்டு காலும் சூம்பிப் போச்சு. ஈரக்கயிறாகத் தொடங்கிய கால். இப்ப.. பதினைஞ்சு வயசு. ரெண்டு கையையும் தரையிலே ஊனி,மொழங்காலாலே நடக்குற வன்கொடுமை. பெத்த வயிறு பத்தி எரியும் பாதரவு. அதுக்கு ஏதாச்சும் செய்யணும்? என்ன செய்ய?

செலவோட செலவா ஏதாச்சும் ஒரு செலவை நிறுத்ததிக்கிட்டாச்சும் அந்தப் புள்ளைக்கு ஒரு மூணு சக்கரச் சைக்கிளு வாங்கித் தந்துரணும். கட்டாயமா வாங்கித் தரணும். சாமி சத்தியமா வாங்கித் தருவேன்....

அவளுள் நூல் பிடித்து ஓடுகிற நினைவுகள். நூலை அறுத்துக் கொண்டும் தாவுகிற நினைவுகள்.. துண்டு துக்காணி நினைவுகள்...

பூவாத்தாவுக்கு நா வறண்டது. எச்சில் கட்டியாகி விட்டது. மாங்கு மாங்கென்று வெட்டிச் சரித்தாள். அப்பப்பக் குடிச்ச பச்சைத் தண்ணீர் போன இடம் தெரியவில்லை. மூட்டுக்கு மூட்டு எடுக்கிற வலியோடு பசியும் சேர்ந்து கொண்டது. வெட்டுப்பட்ட ஆதாரளையாக வாடித் துவண்டாள். மனசு துவளவில்லை. ஆசைகளின் பலத்தில் பாச உணர்வு வலிமையில் ஆன்மத் தெம்போடு இயங்கினாள். மனவலிமையில் ஆறாவது நிறையும் களை வெட்டி முடித்து, கடைசி நிறைக்கு வந்து விட்டாள். இப்போதும் அங்கிட்டு இங்கிட்டுப் பார்க்கவில்லை. வேறு யாரையும் எதையும் கவனிக்கவில்லை. கர்மமே கண்ணாக, கண்ணெல்லாம் கர்மத்தில்....

களைவெட்டுப் புழுதி காலைச் சுடுகிறது. மெத்மெத்தென்ற சூடு. எலும்பெல்லாம் பின்னியெடுக்கற வலி. நரம்புகளையெல்லாம் உருவிச் சரிந்த்து விட்ட மாதிரியோர் அயற்சி, சோர்வு. வியர்வைக் கசகசப்பு. கண்ணுக்குள் வந்து விழுகிற வியர்வையில் நனைந்த ரோமக்கற்றை. கண்ணுக்குள் வியர்வையே விழுந்து... பரவி... கண்ணெல்லாம் திரையாகிவிடுகிறது. கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறது. நெஞ்செல்லாம் படபடப்பு. உள்ளங்கையில் மயக்க வியர்வை.

"ஆ..த்தாடி...!'

கடைசி விளிம்பிலும் களைவெட்டி முடித்துவிப் பொழியேறினாள் பூவாத்தா. நிமிர்ந்தாள். இடும்பெலும்பு மொறுமொறுத்தது. நிமிர்ந்த பிறகு தான் பார்த்தாள்.

இவள் தான் முதல் ஆள். களை வெட்டி முடித்த முதல் பெண்மணி!

******

‘தமிழ்நாடு ஃபர்ஸ்ட்..' ஜனத்தின் உற்சாகக் கூச்சல். வாழ்த்துக் குரல்கள்... ஆட்டப்பாட்டம். மைக்கில் அறிவிக்கிற ஒரு குரல். கோவாலு நாயக்கர் முகமெல்லாம் பூமலர்ச்சி. தமிழச்சி ஜெயித்த மகிழ்ச்சி.

அடுத்தடுத்து அறிவிப்புகள்... மைக் அலறுகிறது. ஜனங்களின் பேரிரைச்சல்...

‘செகண்ட் உ.பி.,!'

‘தேர்டு அரியானா..'

‘ஃபோர்த் கர்நாடாகா..'

வரிசையாக அறிவிப்புகள், மைக் சத்தம், சத்தங்கள்..

கோவாலு கையை நீட்டுகிறார்.

அங்கே உரல்கள். அதில், அரைப்படி ஒட்டுக்கம்பு.. பதினாறு உலக்கைகள்...

‘கம்பைக் குத்தி மாவாடக்குங்க... க்விக்!' என்று கைஜாடையும் குரலுமாக அவர்.

‘எங்கட வுழுந்து சாவோம்' என்று ஏங்குகிற உடம்பு. உட்காரச் சொல்லிக் கெஞ்சுகிற மூட்டுகள். ‘சித்தே நீட்டி நிமிர்ந்து படு' என்று மன்றாடுகிற எலும்புகள். பூவாத்தாவுக்குள் உயிர் கழன்ற அயற்சி.

ஆயினும் பூவாத்தாவுக்குள் மகள், சுடிதார், பிரித்த கூரை, டாலர் செயின், மூணு சக்கர சைக்கிள், அதன் ஈர்ப்பு, அது தருகிற உத்வேகம்.. உயிர்ப்பலம்... ஈரப்பலம்...

உரலை நோக்கி முதலாளாகப் பாய்ந்தாள். உலக்கையைப் பிடித்தாள். இடது கால் முன்னும் வலது கால் பின்னுமாக நின்று, உலக்கையை ஓங்கி ஓங்கிக் குத்தினாள். குலுங்கி குலுங்கிக் குதித்த கம்புமணிகள், சில்லுசில்லாக உடைந்து நொறுங்கின.

உள்ளங்கை வலித்துக் கொண்டு போகிற மாதிரியோர் பிரமை. வியர்வைத் திரையில் மங்குகிற பார்வை. சலங்கையாக வியர்வைத் துளிகள், உரலுக்குள் சிதறித் தெறித்தன.

மாவாக்கிவிட்டாள். அள்ளிக் குத்துப் பெட்டியில் போட்டாள். கடைசிக் கைமாவையும் வழித்து அள்ளிப் போட்டாள்.

மயக்கமாக வந்தது. கண்ணுக்குள் இருள். காலடித் தரை நழுவுகிற பகீரிடல். உலக்கையைத் தரையில் ஊன்றி, அதன் பலத்தில் குத்துரலில் உட்கார்ந்து விட்டாள்.

தடுமாறுகிறது... தட்டாமாலை சுற்றுகிற கிறுகிறுப்பு...

‘ஃபர்ஸ்ட் தமிழ்நாடு..' என்ற மைக்கின் அலறலைக் கேட்கிற திராணி, அவள் செவிக்கு இல்லை. ஜனங்களின் கும்மாளம், கூத்தாட்டம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

‘எக்கா..'

சிரமப்பட்டுக் கண்ணை விழித்தாள். பரட்டைத் தலைச் சிறுமி. கிழிந்த கவுன். அடிவாங்கி அழுது விசுங்குகிற சிறு பூ அரும்பு.

‘என்னம்மா..?'

பூவாத்தா கேட்டது, பூவாத்தாளுக்கே கேட்கவில்லை. தொண்டைக்குள் ஜீவனாக ஒலித்தது.

‘எக்கா.. இந்த ஊசியிலே இந்த நூலைக் கோத்துக் குடுங்கக்கா..'

இவளுக்குள் சுள்ளென்று வந்தது. உடம்பு வலிக்கும், உயிர் போகிற களைப்புக்கும் கிறு கிறுப்புக்கும் அந்தச் சிறுமியின் கேள்வி, தாங்கவில்லை... தகிக்கிற மனசு.

சனியனே, போட அங்கிட்டு. நானே சாகமாட்டாம கெடக்கேன்... என்று சீறத் துடித்தாள். நாக்குவரை வந்து விட்ட உணர்ச்சி வெக்கை. சிறுமியின் கண்ணீர்க் கோலம். தன் மகளைப் போலவே தோன்றியது. சுடிதார் கேட்டு அடிவாங்கி அழுத தன் ரத்தத்தின் அதே சாயல், அதே அச்சு, அதே.. அதே...

உள்ளுக்குள் ஒரு பிரவாகப் பீறிடல், கனிவு, குழைவு...

‘கொண்டாம்மா..'

ஊசியை வாங்கினாள். நூலின் நுனியை நாக்கில் நனைத்து, விரலால் திருகி, விறைணப்பாக்கி... துவார நுட்பத்தில் நுழைக்கிற அவளது யத்தனிப்பு...

கைநடுக்கம். குழந்தை மனதின் தெளிவு, நடுங்குகிற விரல்களை நிலைப்படுத்தியது. நிதானிக்க வைத்தது. ஜெயிக்க வைத்தது.

அவள் அந்தப் பக்கம் பார்க்க வில்லை. பார்த்திருந்தால்.. மற்ற பெண் மணிகளும் இதேபோல ஒவ்வொரு சிறுமியிடம் சிக்கி நைந்து கொண்டிருப்பதைக் கவனித்திருக்கலாம்.

‘இறுதியான வெற்றி.. தமிழ்நாடு. பூவாத்தா..'

மைக்கின் அறிவிப்பு, அவளுக்கள் சுற்றுகிற பம்பர இரைச்சலாக சங்கீத இனிமையாக இறங்கியது.

‘இந்தியப் பேரழகியாக நம்மூரு பூவாத்தா ஜெயிச்சிருக்கா. உலக அழகிப் போட்டியிலும் பூவாத்தா தான் ஜெயிப்பாள். இவளைப் பீட்டடிக்க ஒலகத்துல ஒருத்தியும் கிடையாதுடா..'

கோவாலு நாயக்கர் சிறுபிள்ளைக் குரிய குதூகலக் கும்மாளக் குரலில் கூப்பாடு போட்டார். அவருக்குள் தேசபக்த. மகிழ்ச்சி. பத்து ஊரு ஜனமும் கூத்தாடி ஆரவாரித்தது. வீடியோக் காரர்கள் வந்து மொய்த்தனர்.

கிராமத்தாட்கள் பூவாத்தாவைத் தூக்கிக் கொண்டாட.. வாழ்த்தொலிகள் கரிசல் காட்டைக் குலுக்கியது.

நாளைய உலகையும் தான்!
Pin It