சமூக விழிப்புணர்வு

கல்லும் கரடுமாக விறுவோடி, புழுதி தூர்ந்து கிடந்த செம்மண் பாதையில் பாதங்களை அழுந்தப் புதைத்தபடி நடந்து கொண்டிருந்தான் இஞ்சி. குதிகால் மிதியதிர்வில் புளுதி கிளம்பி கால்களில் நரைத்துக் கிடந்த ரோமங்களில் படந்து அடங்கியது. முன்னும் பின்னும் நோட்டம் விட்டபடியே நெடுங்கிடையாய் நீண்டு கிடந்த விருதம்பட்டி வண்டிப் பாதையை வெறித்தபடி வேகங்கொடுத்து நடந்து கொண்டிருந்தான் இஞ்சி. பதற்றத்தில் அதிர்ந்து கொண்டிருந்த உடம்பை தணிக்க முடியவில்லை. யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்று எண்ணிக் கொண்டான். விருதம்பட்டியிலிருந்து பொன்னூருக்குக் கடைச்சரக்கு ஏற்றிவரும் தேங்காய் மண்டைச் செட்டியார் கண்ணில் பட்டுவிட்டால், ஊருக்கே தெரிந்துவிடும். விருதம்பட்டி வண்டிப் பாதையில், தினமும் இரவில் பத்திருபது சரக்கு வண்டிகள் போய் வந்தபடி இருக்கும். அதில் எந்த வண்டியில் தேங்காய் மண்டை வருவானோ என்ற கலக்கம் தான் இஞ்சிக்கு பீதியூட்டிக்கொண்டிருந்தது.

Dalitதாயில்பட்டிக் கிழவி மட்டும் சொல்லாமலிருந்தால், இஞ்சி இந்நேரத்திற்குப் பிடிபட்டிருப்பான். பொன்னூர் ஓடைப்பட்டி கள்ளுக் கடையில் காவற்கள்ளு குடித்துவிட்டு கடையடியில் துண்டை விரித்துப் படுத்துறங்கிக் கொண்டிருந்த இஞ்சியை எழுப்பி, விஷயத்தைச் சொன்னவள் தாயில்பட்டிக் கிழவிதான்.

பொழுது விழுந்த நேரமிருக்கும், “ஏ... இஞ்சி... ஏலே.... ஒன்னைத் தேடி, கச்சேரிக்காரனுக தெருவுக்குள்ள திரியிரானுகடா.

ஏலே... ஏ இஞ்சி... எந்திரிடா.''

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் இஞ்சி.

“மோளையனை இன்னக்கி காலம்பறவே புடிச்சிட்டானுகளாம். அவன் நெருஞ்சி மகன் பொம்மியையும், வெள்ளாத்தா புருசனையும் புடிச்சி, இழுத்துட்டுப் போறானுகடா. எந்திருச்சு எங்கேயாவது ஓடி தப்பிச்சுக்கடா..''

இஞ்சிக்கு விஷயம் புரிபட்டது. திடுமென மலைபோல் எழுந்து நின்று வேட்டியை உதறிக் கட்டினான். தலைமாட்டில் வைத்திருந்த காவற்கம்லி பையும், சுருக்குப் பையையும் எடுத்துக் கொண்டு, விரித்துப்படுத்த துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டான்.

“ஏக்கா... நான் விடியங்குள்யியும் மூத்த மக வீட்டுக்குப் போயிடுவேன். அனந்தம்மாகிட்டச் சொல்லிரு. என்னைப் பார்த்ததா வேறு யாருகிட்டேயும் நீ சொல்லிக்கிற வேணாம்.''

“சரி சாமி... நீ சீக்கிரம் போ''

இடைவாரில் தொங்கிய வங்கியைத் தடவிப் பார்த்துக்கொண்டே, பெருமூச்சு விட்டபடி இரண்டடி எடுத்து வைத்த இஞ்சியிடம், “என்ன இஞ்சி... கிளம்பிட்டியா. இன்னும் ஒரு செம்பு பாக்கி இருக்கே'' என்றாள் கள்ளுக்கடை பெருமா.

பதிலுக்குத் திரும்பிக்கூட பார்க்காமல் கள்ளுக்கடையிருந்த ஊரணிக் கரையில் இறங்கி, நாலாபுறமும் சூழ்ந்து மறிப்பது போல் நின்ற பனைகளைக் கடந்து நடக்கத் தொடங்கினான் இஞ்சி.

பனங்காட்டுக்கு அப்பாலுள்ள மீனாட்சிபுரம் செல்லும் வண்டிப் பாதையில் விறுவிறுவென நடந்து, மீனாட்சிபுரம் மிளகுச் செட்டியார் கடையில் காலணாவிற்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை வாங்கிவிட்டு, மறக்காமல் சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையில் சுருட்டி மடியில் கட்டிக்கொண்டு நடந்தான்.

“என்ன... இஞ்சி.. பொழுது கருக்க இந்தப்பக்கம்...'' திடுக்கிடச் செய்த அந்தக் கேள்வியைக் கேட்ட வாச நாய்க்கருக்கு, “ரெண்டு கெடேறி புடிக்கலாமுனு வந்தேன். ஒன்னும் சிக்கல.'' என்று முகங்கொடுக்காமல் பதில் சொல்லிவிட்டு நடந்தான். கொல்லை மந்தை தாண்டி சில்லோடைக்குள் இறங்கிக் கரையேறி, விருதம்பட்டி வண்டிச்சாலையில் மிதித்து, வேகங்கொடுத்து நடந்தான். முகம் மறைக்கும் அளவிற்கு இருட்டி விட்டிருந்தது. இனி பயமில்லை. பளப்பளவென விடியுமுன் மகள் வீட்டிற்கு போய்விடலாமென்று எண்ணி நிதானமானான்.

ஆனாலும், இன்னும் பத்துக்கல் தொலைவு நடக்க வேண்டும். இடையில் கிளியம்பட்டியிலும், நத்தனூரிலும் தெரிந்த ஆட்களின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்றுதான் கவலைப்பட்டான் இஞ்சி. நத்தனூர் தாண்டிவிட்டால் பிறகு கவலை இல்லை. நத்தனூர் பெரியோடை இறங்கி நடந்தால் ஒரு நாளிகைக்குள் விருதம்பட்டி பூச்சேரிக்குள் போய்விட முடியும். அங்கேதான் இஞ்சியின் மூத்த மகள் சென்னம்மா வாழ்க்கைப்பட்டு போயிருந்தாள்.

உடல் பெருத்த காலத்திலிருந்தே பொன்னூர்க் கண்மாய்களின் விளைச்சல் மொத்தத்திற்கும் காவல் காத்துப் பழகியவன் இஞ்சி. பொன்னூரிலும் சுற்றுப்பட்ட கிராமங்களிலும் வாசல் வரைக்கால் வைத்துப் பிழைக்கும் எல்லோருக்கும் இஞ்சியை தெரியும், ஆள் வாட்டசாட்டமான உடம்புக்காரன், திமுதிமுவென வளர்ந்திருந்தான், பொன்னூர் சேரியில், இஞ்சி அளவிற்கு வளர்ந்து நின்றவன் யாருமில்லை. வேண்டுமானால், தோதுக்குச் செல்லையனைச் சொல்லலாம். அவன்கூட, ஆள் சில்லாளியாக இருப்பான். இஞ்சி அளவிற்கு ஈடுதாடியாக இல்லை. பத்து மரக்கால் விதைப்பாட்டிற்கு பத்துப்படி நெல் வருடக் கூலியும், வேண்டும் என்கிற அளவிற்கு பண்ணைக் கள்ளும் தான் இஞ்சிக்கு கிடைக்கும். மூன்று போகமும் விளைந்து, களம் சேரும் வரை இஞ்சிதான் காவல்.

போதர் குளம் முதல் சீவனேரி வரை கண்மாய்க் காடு கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் இஞ்சியின் கால்படாத இடம் ஏது. அம்மாவாசை இருட்டென்றால் காவற்கம்பு துணையோடு இரவெல்லாம் காடுகரைகளிலேயே இஞ்சி சுற்றிக் கொண்டிருப்பான். இரவு மேய்ச்சலுக்கு ஒண்டிக் கொம்பு மாடுகளுடன் திரியும் மேய்ச்சல்காரப் பயல்கள், இஞ்சி காவலுக்கிருக்கும் வெள்ளாமை பக்கம் வருவதே இல்லை. கிடைகளில் ஆடுகள் திருடு போகாமலிருக்க காவல் காக்கும் கீதாரிகள் கூட, இஞ்சியின் நடமாட்டம் இருக்கிறது என்று தெரிந்தால், சற்று கண்ணயர்ந்து கொள்வார்கள். இடைவாரில் தொங்கும் சூரிக் கத்தியுடன், வெற்றிலையை மென்றபடி சாமத்திலும் ஏமத்திலும் மினுங்கும் கண்களுடன் இஞ்சி சுற்றிக் கொண்டிருப்பான் என்று ஊருக்குள் பேச்சிருந்தது.

இஞ்சி, காவலுக்கிருக்கும் வெள்ளாமைகளில் கை வைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உண்டு. எப்படியும் இஞ்சியின் கண்களில் பட்டேயாக வேண்டும். தப்பித் தவறி இஞ்சிக்குத் தெரியாமல் வெள்ளாமை அழியுமானால், ஒருமுறை இரண்டு முறைதான். மூன்றாவது தடவை கண்ணி வைத்துப் பிடிப்பான் இஞ்சி.

அப்படித்தான், மேற்கே சீவனோடைப் பாய்ச்சலில் கொண்டணீ காட்டில் ஆள் உயரத்திற்கு வளர்ந்து நின்ற மொச்சையில் பளிஞ்சி மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த முனுசாமிக் கோணாரையும், மேய்ந்த மாடுகளையும் இரவோடிரவாக இழுத்துக்கொண்டுவந்து கொண்டிக் காவலில் அடைத்தான் இஞ்சி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெருமாபாறை ஊரணிக்கரை ஓடையில் கூடிய பஞ்சாயத்தில், முனுசாமிக் கோணாரின் மூன்று கெயிடறிகளை அபராதமாக எடுத்துக்கொண்டு ஆளை விடுவித்தார்கள். மாடு, மனிதர்கள் என்றில்லை. வெள்ளாமையை அழிக்கும் முள்ளம் பன்றிகள், வெறிநாய்கள், வெறுகுகள் என எதைக் கண்டாலும் விரட்டி கொல்லாமல் விட்டதில்லை.

மார்கழியில், இரண்டு நாளுக்கொருமுறை முள்ளம் பன்றிகளுடன்தான் இஞ்சி வீடு திரும்புவான். வெறுகு, இஞ்சிக்குப் பிடித்தமான உணவு. எப்போதாகிலும் முயல்கள் கண்ணில் சிக்கும். பாசனம் செழித்திருக்கும் காலங்களில், வீட்டில் தினமும் நண்டுக் குழம்புதான். விரிந்து, சரிந்த வயல்களின் வரப்புமேடுகளில் வளையமைத்து நெல் சேமிக்கும் பெருச்சாளிகள், இஞ்சியின் மதிய நேர கள்ளுக்குத் தோதான கறியாக மாறும். பெருச்சாளிகள் கண்ணில் பட்டால் வெறுகுபோல் பாய்ந்தோடுவான் இஞ்சி. அடித்துக் கொல்ல காவற்கம்பை அவன் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. காலால் மிதித்தே கொல்வான். உரமேறித் திரண்டு பருத்த அவனது கால் மிதியில், உருண்டு திரண்ட பெருச்சாளிகள் நசுக்கிச் சாகும். சுண்டெலிகளைத் இஞ்சி தொடுவதில்லை.

பொழுது விடிந்து வெயிலேறி சனமெல்லாம் காடு கரைகளுக்குச் சென்ற பின் ஊரே வெறிச்சோடிக் கிடக்கும். மல்லி, சீரகம், பூண்டு, மிளகாய் சேர்த்து அம்மியில் அரைத்த மசாலுடன், திணையிடிக்கும் உரலில் இஞ்சிக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் அனந்தம்மாள். முந்தின இரவு காய்ச்சி வைத்த கம்மங் கஞ்சி கட்டி சேர்ந்து தவனுபோல் இருக்கும். இஞ்சி வருவது, தொலைவிலேயே தெரியும். தலைச்சுமட்டிலோ, தோளிலோ துண்டசில் மூடப்பட்ட சுமை இருக்கும். தோளில் தொங்கிக் கொண்டிருந்தால் அது பெருச்சாளி, அல்லது முயல்குட்டி. தலைச் சுமை, என்றால் அது முள்ளம் பன்றிதான் என்று கணக்கிட்டுக் கொள்வாள் அனந்தம்மா.

இஞ்சிக்கு வாழ்க்கைப்பட்டு பொன்னூருக்கு வந்த நாளிலிருந்து அனந்தம்மாவுக்கு உலகமே இஞ்சிதான் என்று ஆகிவிட்டது. ‘காவற்காரன் பொண்டாட்டி' என்ற தோரனையும் சேர்ந்து கொண்டதால், பொன்னூர் சேரியில் மதிப்பாகத்தான் இருந்து வந்தாள். இரவெல்லாம் காடுகரைகளில் திரிந்துவிட்டு, விடிந்ததும் வீட்டுக்கு வரும் இஞ்சியை, மனம் நோகாமல் கவனிக்க வேண்டும் என்பதே அவளது வாழ்க்கையென்றாகிவிட்டது. இஞ்சிக்கு கோபம் வரும்படி பேசுவதோ, நடந்து கொள்வதோ நினைத்துப் பார்க்கக்கூட முடியாததாக இருந்தது.

இஞ்சி வீடு வந்து சேர்ந்ததும் கொண்டுவரும் சுமையை இறக்கி, முடிச்சை அவிழ்த்துப் பார்த்து என்ன இருக்கிறதோ அதை நாக்கு ருசி பார்த்து மசால் சேர்த்து, அவித்துக் கொடுத்தால் கம்மங்கஞ்சியையும் ‘கடிச்சிக்கிற'தையும் வைத்து ஒரு பிடி பிடித்துவிட்டு கள்ளுக்கடைக்கு போகிறவன், இருட்டவும் காட்டிற்கு காவலுக்குக் கிளம்பும்போது வீடு வந்தாலும் வருவான், நேரமானால் அப்படியே கள்ளுக்கடையிலிருந்தே காவலுக்குப் போய்விடுவான். இரவெல்லாம் காடுகரைகளிலும், பகலெல்லாம் கள்ளுக்கடையிலும் என்று இஞ்சியின் காலம் கழிந்து கொண்டிருந்தது.

இஞ்சி பிறந்தது, வளர்ந்தது எல்லாம் நத்தனூருக்கு கிழக்கே சல்லிபட்டியில்தான். சுற்றுப்பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சல்லிபட்டி பெயர்போனதாக இருந்தது. சல்லிபட்டிச் செஞ்சோளம் அவ்வளவு சுவையாக இருக்கும் என்று பெரியாள் பெருந்தலைகள் முதல் விண்டு விடுக்குகள் வரை பேச்சில் பெருமை பொங்கும். இஞ்சியின் தாய் பரிபூரணத்திற்கு சல்லிபட்டியில் ஐந்து குறுக்கம் இருந்தது. செங்குளத்துத் தண்ணீரைப் பாய்ச்சியாவது ஒரு போகத்திற்கு அய்ம்பதறுபது கோட்டம் அறுத்து விடுவாள் பரிபூரணம். ஆறடி உயரமிருப்பாள். இரண்டு காதுகளிலும் பாம்படம் ஊஞ்சலாடியபடி பரிபூரணத்தின் பகட்டைச் சொல்லும். கல்லுப்பட்டிச் சுங்கடியைக் கட்டிக்கொண்டு, கையில் பண்ணையரிவாளும் மண்வெட்டியுமாய் செஞ்சோளக் காட்டு வரப்புகளில் அமர்ந்தபடி நோட்டம் விடுவாள். கதிர்களை அறுத்துக் கொண்டோடி வளைகளில் சேமிக்கும் காட்டெலிகள் பரிபூரணத்தைப் பார்த்து ஓடிப் பதுங்கும். எந்தச் துரத்தில் எந்த வரப்பில் எத்தனை வளை இருக்கும், எவ்வளவு சோளம் வரும், எத்தனை எலிகள் குடியிருக்கும் என்ற கணக்குகள் எல்லாம் பரிபூரணத்திற்கு அத்துப்படி.

கதிர்கள் பருத்துத் தொங்கும் காலங்களிலிருந்தே கதிர்களின் எண்ணிக்கையை எண்ணத் தொடங்கிவிடுவாள். எலிகளால் பாதி அறுபட்டு பயிர்களிலேயே தொங்கும் கதிர்களின் எண்ணிக்கைகூட பரிபூரணத்திற்குத் தெரிந்திருந்தது. பொழுது சாய, செங்குளத்தில் உடம்பலச வரும் குஞ்சுக் குமரிகள் கதிர்களைக் கசக்கித் தின்றுவிடாதபடி இருட்டுமட்டும் காவலுக்கிருந்துவிட்டுத்தான் வீடு திரும்புவாள்.

பத்திருபது சோடிகளுக்கும் மேல் வெள்ளாடுகள், நாலைந்து எருமைகள், கொஞ்சம் நாட்டுக்கோழிகள், சேவல்கள் என குட்டிப் பண்ணையே வைத்திருந்தாள் பரிபூரணம். ஒரு சோடி இறவை மாடுகளும் இருந்தன. எருமைகள் இரண்டு வேளைக்கு இரண்டு படி பால் கொடுத்துக் கொண்டிருந்தது. கட்டுத்தரையைச் சுத்தம் கெய்வது, ஆடு மாடு கோழிக்குத் தீவணமிட்டு தண்ணீர் காட்டுவது, சோளக்காட்டில் காவலுக்கிருக்கும் பரிபூரணத்திற்கு கஞ்சி கொண்டு போவது, வரப்பு வாய்க்கால்களில் எருமைகளையும் வெள்ளாடுகளையும் மேய்த்து பட்டியிலடைப்பது என வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் மாடன்தான் கவனித்துக்கொண்டான். தெற்கே வீர சோழபுரத்திற்கு பக்கம் ஊத்தூர்தான் மாடனுக்குச் சொந்த ஊர். நாடேகாடேவென அலைந்து காலம்போன கடைசியில், சல்லிபட்டி வந்து பெண் பார்த்து பரிபூரணத்தைக் கல்யாணம் செய்து கொண்டான் மாடன். ஊத்தூருக்கு வந்து குடும்பம் நடத்துவாள் என்ற மாடனின் எண்ணத்தில் கல்யாணமான அன்று இரவு, புதுப்பெண்ணாய் மாட்டு வண்டியில் சீதனத்துடன் பயணம் செய்த போதே மண்ணள்ளிப் போட்டாள் பரிபூரணம். ஒரு வாரத்திற்குமேல் ஊத்தூரில் இருக்கவில்லை அவள். சீதனமாய்க் கொண்டுபோனதைத் தலைச் சுமையாய் சுமந்து கொண்டு மாடனையும் கையில் பிடித்தபடி சல்லிபட்டிக்குத் திரும்பினாள். அன்றிலிருந்து வாய் பேச்சறியாத பிள்ளைப் பூச்சியாய் பரிபூரணத்தின் எடுபிடியாய் ஏவல் வேலை செய்து காலம் தள்ளினான் மாடன்.

கோயில் குளம் என்று பரிபூரணம் அலையாமலேயே கல்யாணமான மறு வருடமே இஞ்சி பிறந்தான். தாய்மாமனைக் கொள்ளை கொண்டு போக, கொடி சுற்றிப் பிறந்த இஞ்சியைத் தூக்கிக் கொண்டு ஊத்தூருக்குப் போய், சுடலைமாடனுக்கு முடியெடுத்துக் காதுகுத்தி, கிடாவெட்டிப் பொங்கல் வைத்து, கருமம் கழித்தாள் பரிபூரணம். தலைப்பிள்ளையாய் பிறந்த இஞ்சி பரிபூரணத்தின் மடியையும் மனதையும் பொங்க வைத்தாகி. செஞ்சோளம் இரண்டு போகம் விளைந்தது. கட்டுத்தறியிலிருந்த எருமைகளில் இரண்டும் பொட்டைகள ஈண்டு பால் கொழித்தது. சல்லிபட்டியிலிருந்து கிளியனூருக்குப் போகும் வண்டிப்பாதை மேலே வாணம் பார்த்த பூமி இரண்டு குறுக்கும் வாங்கினாள். காதுக்கு கம்மல்கள் வாங்கி மாட்டிக் கொண்டாள். குடிசையின் பழைய இத்துப்போன கூரையைப் பிரித்து மேய்ந்து, சுவற்றுக்கு செம்மண் பூசி சுத்தம் பார்த்தாள். இறவை மாடுகளுக்கு வெங்கல மணி வாங்கி பூட்டிப் பூரித்தாள். செழிப்பெல்லாம் இஞ்சி கொண்டுவந்து சேர்த்த பேறு எனப் பெருமிதம் கொண்டாள்.

இஞ்சிக்கு பத்து வயது நடக்கும் போது, பரிபூரணத்தின் காலம் அழியத் தொடங்கியிருந்தது. சோளத்திற்கு நீர் இறைக்கப் போன மாடன், இறவை மாடுகளுடன் நீர்த் தவலை இழுத்துத்தள்ள, கிணற்றுக்குள் விழுந்து, மாடுகளோடு இறந்து கிடந்தான். மாடன் இறைத்து சோளத்திற்குப் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து நின்று போனதைக் கண்டு, ஆத்திரத்தோடு இறவைக் கிணற்றுக்கு வந்த பரிபூரணம் அதிர்ந்தாள். மாடுகளும் மாடனும் செத்து மிதந்ததைப் பார்த்து அலறினாள். தூக்க ஆளில்லாமல், சேரிக்கு ஓடி நாலைந்து ஆண்களைக் கூட்டி வந்து பிணத்தைத் தூக்கிப் புதைத்தாள். செழிப்பைப் பெருக்கிய இறவை மாடுகளும், மாடனும் இறவைக் கிணற்றுக்குள் விழுந்ததை காலம் கொண்டுவந்த அழிவென எண்ணினாள் பரிபூரணம். வெள்ளாமையின் மீது கவனம் குறையத் தொடங்கியது. பரிபூரணத்திற்கு. இஞ்சியை கண்விலகாமல் கவனித்து வந்தவளுக்கு, காடுகரைகளில் சேரிப் பிள்ளைகளுடன் இஞ்சி சுற்றித் திரிவதை கண்டிக்க மனம் எழவில்லை. அந்தி நேரங்களில் இறவைக் கிணற்றின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து ஒப்பாரி வைத்தாள். மண்புழுபோல வாய்பேசாத மாடனையும், சளைக்காமல் நீர் இறைத்த மாடுகளையும் அவளால் மறக்க முடியவில்லை. இறவை மாடுகளின் வெங்கல மணிமியாலிகள் பரிபூரணத்தின் நினைவை உலுக்கத் தொடங்கின.

பார்க்க ஆளின்றி சோளப்பயிர்கள் வதங்கி வாடத் தொடங்கின. கதிர் பூத்த பயிர்கள் நீரின்றி வதங்கி மடிந்தன. இறவைக் கிணற்றில் தூர்மேவியது. சோளப் பயிர்கள் வதங்கிச் சாவதைக் கண்டு பரிபூரணம் நினைவு பேதலித்தாள். ஆடு மாடுகளை வந்த விலைக்கு விற்றாள். வீட்டையும், இறவைக் கிணற்றோடு சோளக் காட்டையும் சேர்த்து விற்று, எடுத்துக் கொண்டு, சல்லிபட்டிச் சேரியிலிருந்து வெளியேறினாள். மறக்காமல் மாடன் சமாதிக்குப் போய் பிடி மண்ணெடுத்து முந்தானையில் முடிந்து கொண்டாள்.

சொந்த சாதி சனம் இருக்கும் பூமிக்குப் போய் காலம் கழிப்பதென பரிபூரணத்திற்குப்பட்டது. இஞ்சியை கூட்டிக்கொண்டு, பொன்னூர் சேரிக்கு வந்து சேர்ந்தாள். ஒன்றுவிட்ட சின்னாத்தாள் சடைச்சிக்கு பொன்னூர்தான். பரிபூரணத்தின் சின்னத் தாத்தாவும் பொன்னூரில் இருந்ததால் பொன்னூருக்கு வந்து குடியேறினாள். இஞ்சிக்கு பதினேழு வயது நடக்கும்போது, கொண்டனூம்பட்டி தவசிக்கிழவன் பேத்தியை பேசி முடித்தாள். ஊர்காலன் கோயிலிலல் தாலிகட்டி, குடி வைத்தாள்.

கல்யாணம் முடித்து வைத்தும், இஞ்சி காடு கரைகளில் சுற்றுவதை நிறுத்தவில்லை. மற்ற ஆட்களைப் போல் வேலைக்குப் போய் குடும்பம் நடத்த இஞ்சிக்கு மனம் ஒவ்வவில்லை. சிறு வயதிலிருந்தே வேலைக்குப் போய் கூலி வாங்கும் பழக்கம் அவனுக்கு இல்லாமலிருந்தது. எல்லாவற்றையும் பரிபூரணம் கவனித்துக் கொண்டாள். கல்யாணமானபின்னும் அதே கதைதான். பொன்னூர் காடு கரைகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படியாகிப் போனது. சீவனேரி, போதர்குளம், வத்ராங்குளம் கண்மாய்ப் பாசணக் காடுகளுக்கு இரவுக் காவல் காக்கும் பொறுப்பை, பொன்னூர் கீதாரி முத்துச்சாமி வாங்கிக் கொடுத்தார். வருடக் கூலி பேசிவிட்டது கூட முத்துச்சாமிதான். கண்ணுங் கருத்துமாய் காவல் காத்ததினால், இஞ்சி காவலுக்குப் பேர் போனான்.

தவசிக் கிழவன் பேத்தியாள் அனந்தம்மாளுக்கும், பரிபூரணத்திற்கும் ஒத்துப் போகவில்லை. இஞ்சி இல்லாதபோது, வாய்த் தூக்கலாகப் பேசி, பரிபூரணத்தை விரட்டினாள் அனந்தம்மாள். மகனிடம்ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லியும், இஞ்சி தட்டிக் கொடுக்கவில்லை. அதற்குமேல் பரிபூரணம் எதையும் பேசுவதில்லை. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றபோதும், வாய் வைத்தியம் பார்த்துக் கொடுத்தாள் பரிபூரணம், மிச்சமிருக்கும் காலத்தை மகன் நிழலில் வாழ்ந்து கழிக்க எண்ணியவளாய், வாய் வம்பு செய்யாமல் காலம் தள்ளினாள்.

இஞ்சியின் தாட்டிக்கமான பேச்சும், குற்றம்குறை செய்யாத குணமும் அவனை பொன்னூர் சேரியின் நாட்டாமையாக்கியது. பொன்னூர் சேரியில் அறுபது எழுபது தலைக்கட்டுகள். சீவனேரிக் கண்மாயின் தலைக் கண்ணாறு பாயும் காடுகரைகளில் கழனி வேலைசெய்து பிழைத்து வந்தது சேரிக் குடும்பங்கள். காடுகரைகள் வைத்து வெள்ளாமை செய்து, ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு நாயக்கர்களுடன், பொன்னூர் சேரி இளவட்டப் பயல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதுண்டு. அப்போதெல்லாம், இஞ்சிதான் சமாதானம் செய்ய வேண்டும். நாயக்கர் தெரு நாட்டாமையைப் பார்த்துப் பேசிச் சரிக்கட்டவேண்டும். பேச்சு மடியவில்லையென்றால் அஞ்சோ பத்தோ அபராதம் கட்டச் சொல்லி சரி செய்து விடுவான். ஆனாலும் சண்டை சச்சரவு இருந்துகொண்டேயிருந்தது. இப்படியே காலம் கழிந்துவிட்டது. இரண்டு மகள்களையும் நல்ல சம்பந்தம் பார்த்து முடித்து வைத்தான். மூத்தவளை விருதம்பட்டியிலும், இளையவளை உள்பரிலும் கட்டி வைத்தான். இருபது இருபத்தைந்து வருடத்தில், இஞ்சியின் பெயர் சுற்றுப்பட்டிகளுக்கெல்லாம் தெரிந்தது.

போன வாரம், இஞ்சியின் காலத்தில் நடக்காத கொடுமை ஒன்று பொன்னூரில் நடந்தது. அதுதான் இப்போது இஞ்சியை விரட்டிக் கொண்டிருக்கிறது. போன வாரம், சீவனோடை ஊரணிக் கரையில், துணிமணிகளோடு கைக்கடிகாரத்தையும் கழற்றி வைத்துவிட்டு, ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த தசரத நாயுடு, குளித்து முடித்து கரைக்கு வந்து பார்த்தபோது, அவனது கடிகாரத்தைக் காணவில்லை. பொன்னூர்ச் சேரி மூடையன் கரையோரமாக நடந்து போனதைக் குளித்துக் கொண்டே பார்த்தது சதசரதனுக்கு நினைவுக்கு வந்தது. சடையனைத் தேடிகாடு கரைகளில் அலைந்தான் தசரதன். ஆள் சிக்கவில்லை. எப்படியும் பொழுது கருக்கவும் வீட்டுக்கு வர வேண்டும்தானே என்று எண்ணிய தசரதன் ஊரணிக் கரையிலேயே காத்திருந்தான். இருட்டும் மட்டும் சடையன் அந்தப் பக்கம் வரவேயில்லை.

மறுநாள், சடையனைத் தேடி, தசரதன் பொன்னூர் சேரிக்கரை வழியே நடந்து, வத்ராங்குளத்தில், கல்வெட்டாங் குழியில் சுண்ணாம்புக்கல் வெட்டியெடுத்துக் கொண்டிருந்த சடையனை பார்த்துவிட்டான். கடிகாரத்தை எடுக்கவில்லையென்று அழுது கெஞ்சினான் சடையன். ஆனாலும், தசரதன் விடவில்லை. சடையனின் புறங்கையைக் கட்டி அடித்து இழுத்துக் கொண்டே வந்தான். கல்வெட்டாங்குழியில் கால் தடுக்கி விழுந்த வண்ணம் அழுது கொண்டே வந்தான் சடையன். கடிகாரத்தை களவாடவில்லை என்று அழுது கெஞ்சுவதைத் தவிர சடையனுக்கு வழியில்லை. பொழுது உச்சிக்குப் போய்விட்டிருந்தது. வேலி முள் மரத்தில் சடையனைக் கட்டி வைத்து விசாரித்துக் கொண்டிருந்தான் தசரதன்.

போதர் குளத்தில் பருத்திமாறு பிடுங்கப் போய்விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த பொன்னூர் சேரி மாடத்தி, கல்வெட்டாங்குழியயில் அழுகைச் சத்தமும் அதட்டலும் கேட்டு வத்ராங்குளத்திற்குள் இறங்கித் தேடினாள். மலை மலையாய் சுண்ணாம்பு கல் குவிக்கப்பட்டுக் கிடந்தது. கருப்பண்ண சாமி கோயிலுக்குப் பின்புறத்திலிருந்து சத்தம் வருவதைக் கேட்ட மாடத்தி, வேகமாக நடந்து வேலிமுள் மரத் தோப்புப் பக்கம் போனாள். வேலிமுள் மரத்தில் புறங்கையோடு கட்டப்பட்டிருந்த சடையனை, உச்சி மயிரைப் பிடித்து உலுக்கிக் கொண்டே விசாரித்துக் கொண்டிருந்தான் தசரதன். சடையனை அடையாளம் கண்டதும், கொதித்துப் போனாள் மாடத்தி.

“அய்யா.. என்னத்துக்கு எங்க சின்னயனை கட்டி வச்சு அடிச்சிட்டிருக்கீங்க?''

“ஏய்...! போடி பொட்டக் கழுதை. உனக்கெல்லாம் வெளக்கனுமோ! களவானி நாயி, கடிகாரத்த களவாண்டு வித்துத் தின்னுட்டான். கேட்டா, நான் எடுக்கலையின்னு நடிக்கிறான்...''

“அதுக்கு இப்படிப் போட்டு அநாதைய அடிக்கிறாப்புல அடிச்சு சாகடிக்கப் போறீகளா? அவன்தான் எடுக்கலன்னு சொல்றானே!''

“ஏய்! போடிங்கிறேன்...''

தசரதன் வெறி பிடித்தவன் போல் கத்திக் கொண்டே, சுண்ணாம்பு கற்களை எடுத்து எறிந்து, மாடத்தியை விரட்டினான்.

“அட அநியாயமே! இப்படியா ஒரு மனுசனை அடிச்சுக் கொல்லுவ. எங்களுக்குன்னு சாதி சனம் யாரும் கெடையாதா! நாட்டாமைக்காரன் இருக்கான். அவன்கிட்ட சொன்னா வெசாரிச்சுக் குடுக்கப் போறான்.''

மாடத்தி கத்திக்கொண்டே சேரியை நோக்கி நடந்தாள். தசரதன் அவளை விரட்ட ஆரம்பித்தான். கத்திக் கொண்டே ஓடிய மாடத்தியின் குரல் மறையுமட்டும் அவளை விரட்டி விட்டு மறுபடியும் சடையனிடம் வந்தான் தசரதன்.

தசரதனை கிழி கிழியென்று கிழித்துக்கொண்டே, சேரிக்கு வந்து சேர்ந்தாள் மாடத்தி. கத்திக்கொண்டே வந்த மாடத்தியிடம் என்ன ஏது என்று சேரிக்குள்ளிருந்த நான்கைந்து ஆண்கள் விசாரித்தார்கள்.

“வர, வர வடுகப் பயக அட்டூழியம் தாங்க முடியல. ஏப்ப சாப்பையா எவனாவது சிக்குனா, கட்டிவச்சு அடிப்பானா அந்த வடுகத் தாயோழி. வாங்கடா நாட்டாமக்காரன் என்ன சொல்லுரான்னு பாப்போம்.'' என்று வன்மம் பேசினான் மோளப்பன்.

மோளையனோடு சேர்ந்து இரண்டு மூன்று பேர், இஞ்சியின் வீட்டுக்கு நடந்தார்கள். வழியில் மஞ்சனத்தி இலை பிடிங்கிக்கொண்டிருந்த அனந்தம்மாளைப் பார்த்ததும், இஞ்சி எங்கே என்று கேட்க, கள்ளுக்கடைக்குப் போய் பார்க்கச் சொன்னாள் அனந்தம்மாள். கூட வந்தவர்களை, கல்வெட்டாங்குழிக்கு போகச் சொல்லிவிட்டு, கள்ளுக்கடைக்கு நடந்தான் மோளையன்.

கள்ளுக்கடை பெருமாவோடு வாயளந்தபடி கள்ளைக் குடித்துக் கொண்டிருந்த இஞ்சி, மோளையனைப் பார்த்ததும், “என்னடா, மோளையா! வேல வெட்டிக்குப் போகலயா'' என்றான்.

“அட நீ வேற நாட்டாமை, கல்வெட்டாங்குழியில, தசரத நாய்க்கன் சடையனக் கட்டி வச்சு அடிச்சுக்கிட்டிருக்கானாம். நீ இங்கு குடிச்சிட்டு கும்மாளம் போட்டுக்கிட்டிருக்கே!'' மோளையன் பதற்றமாக பேசினான்.

“கட்டி வச்சு அடிக்கிறானா?'' இஞ்சிக்கு போதையிலும் உடல் அதிர்ந்து குலுங்கியது.

பத்து நாளைக்கு முன்னாடிதான் மாந்தோப்பில் உதிர்ந்து கிடந்த காய்ந்த குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த செந்தூரானை மட்டக் கம்பை கொண்டு அடித்து மண்டைய உடைத்து விட்டிருந்தான் இந்த தசரதன். மேற்கே பாதரங்குளம் தோப்பில் தசரதனைப் பார்த்துப் பேசிய போது, "அதுக்கு என்னடா பண்ணப் போற,' பெரிய சண்டியராக்கும் நீ! மயிரப்புடுங்கி வெசாரிக்க வந்துட்டான்' என்று மரியாதைக்குறைவாகப் பேசிய தசரதனை இஞ்சி கடுமையாக கெடு வைத்தான்.

“அய்யா! நான் இந்த மே குலம் கீழ் குலம் அப்பிடீனெல்லாம் பாக்க மாட்டேன்! தப்பு செஞ்சா யாரா இருந்தாலும் தண்டனதான். சேரிக் குடும்பத்தான் எவன் என்ன தப்பு செஞ்சாலும், நாட்டாமைக்காரன் நான் இருக்கேன்! எங்கிட்டச் சொல்லுங்க கேட்டுக் குடுக்கிறேன். என்ன அபராதமோ விசாரிச்சு வாங்கிக்கிங்க! கண்ட எடத்துலேயும் கை வக்கிறதை கடைசியா வச்சுக்குங்க! இனிமே சேரி ஆம்பள பொம்பள யாருமேலயாவது கை வச்சீங்கன்னா, நான் பேசமாட்டேன்.. என் கம்புதான் பேசும்..''

அனல் தெறிக்க இஞ்சி பேசுவதைக் கேட்ட தசரதன் பதற்றமடைந்தான். “அதுக்கு முன்னாடி... உன் நெஞ்சை என் துப்பாக்கி தொளச்சிறும்லே...'' தசரதன் வஞ்சகமாய் பேசினான்.

“பாத்துக்கலாம்...'' இஞ்சி உடல் விம்ம கத்திவிட்டு நடந்தான்.

பத்துநாள் கூட ஆகவில்லை. அதற்குள் மறுபடியும் ஒருவன் மேல் கைவைத்து விட்டானா என்று கொதித்தான் இஞ்சி. “வந்தட்டிப் பயலுக்கு இவ்வளவு திமிரா'' உடல் அதிர கத்திக் கொண்டு எழுந்தான்.

மோளையனைப் பார்த்துக் கொண்டே, கள் குடித்த ஈயச் செம்பை தரையில் ஓங்கி எறிந்தான். காவற் கம்பை வலது கையில் பிடித்துக்கொண்டே நேஞ்சியைக் கட்டினான்.

“எங்க வச்சுடா அடிக்கிறான்! காட்டுறா எடத்தை!'' கள்ளுக்கடையே நடுங்கும்படி கத்திக் கொண்டு வெளியேறினான்.

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. வத்ராங்குளத்து கரையில் காவற்கம்பை குத்தியபடி தரை நடுங்க நடந்து கொண்டிருந்தான் இஞ்சி. மோளையனும் இன்னும் இரண்டு மூன்று பேரும் இஞ்சியின் வேகமான நடைக்கு ஈடு கொடுத்து நடந்து கொண்டிருந்தார்கள்.

வத்ராங் குளத்துக் கண்மாயின் மூலக்கரைவழியே இறங்கி கல்வெட்டாங் குழிக்கு வந்தார்கள். திட்டுத் திட்டுக்களாய் குவிந்து கிடந்த சுண்ணாம்புக் கல் குவியலின் மீது ஏறி பார்த்தார்கள். வேலிமுள் மரத் தோப்பிற்குப் போய் தேடிப் பார்த்தான் மோளையன். யாரையும் காணோம். இஞ்சிக்கு ஆத்திரம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. அதற்குள் சேரி ஆண்கள் பத்துக்கும் மேலே திரண்டு விட்டார்கள். சுற்றித் தேடிப் பார்த்தார்கள். ஆள் அரவமே இல்லை. வேலி முள் தோப்பின் பின்புறத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கீதாரி மகனிடம் விசாரித்தார்கள். பலன் இல்லை. மந்தை மேட்டுக்கு இழுத்துக்கொண்டு போயிருப்பானோ என்று எண்ணிய இஞ்சி, எல்லோரையும் திரும்ப வரச் சொன்னான். சத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பியபோது சுண்ணாம்புக் கல் வழுக்கிச் சறுக்கினான். காவற் கம்பை கல் திரட்டில் குத்தி உடம்பை நிறுத்தினான். முடியவில்லை. சறுக்கிய இஞ்சியை இழுத்துக் கொண்டுவந்து கீழே தள்ளியது சுண்ôம்புக்கல். எழுந்து, நிமிர்ந்து கல் திரட்டைப் பார்த்தான். பாதி மூடிய கால் வெளியே தெரிந்தது. சடையன்தான் என்று எண்ணிக் கொண்ட இஞ்சி, “எல்லாம் இங்க வாங்கடா...'' திகிலோடு கத்தினான்.

கற்களைச் சரித்து, உடம்பை நீக்கி, புரட்டி எடுத்துப் பார்த்தார்கள். நெற்றி நசுங்கியபடி வெறித்த கண்களுடன் இறந்து கிடந்தான் சடையன். ஈர இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. இரத்தம் பட்டு சுண்ணாம்புக் கற்கள் சிவப்பாகி கலக்கத்தை கூட்டிக் கொண்டிருந்தன. தூக்கிக் கொண்டு சேரிக்கு வந்தார்கள். சேரியே அழுது புரண்டது. மறுநாள் தூக்கிக் கொண்டுபோய் ரெட்டையோடை கல்லறைக் காட்டில் புதைத்துவிட்டுத் திரும்பினார்கள். களவானிப் பயலுக்கு இது தேவைதான் என்றும், அதுக்காக அடிச்சுக் கொல்லுவானா அந்த வடுகப்பய என்றும் சேரிக்குள் பேச்சிருந்தது. மூன்றாவது நான்காவது நாளுக்கெல்லாம் சடையனை சேரி மறந்துவிட்டு காடு கரைகளில் வேலை கவனத்தில் அமிழ்ந்தது.

இஞ்சி மட்டும் கருவிக் கொண்டிருந்தான், தசரதன் புழங்கும் காடுகளில் தேடினான், பிள்ளையார் நத்தத்திற்கு ஓடிப்போயிருப்பானோ அங்குதானே வடுக நாயுடுக்கள் தாட்டிக்கமாக இருக்கிறார்கள் என்றும் யோசித்துக் கொண்டான். விசாரித்தும் பார்த்தான். சடையன் செத்து ஒரு வாரம் ஆகியும் தசரதன் எங்கிருக்கிறான் என்றுகூட இஞ்சியால் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை பாதரங்குளம் தென்னந் தோப்பிற்குப் போயிருப்பானோ. இஞ்சிக்குப் பொறி தட்டியது.

பொழுதிருக்கவே கிளம்பினார்கள். இஞ்சி தன்னோடு மோளையனையும் பொம்மியையும் வெள்ளாத்தா புருஷனையும் சேர்த்துக் கொண்டான். துப்பாக்கியால் நெஞ்சைத் துளைப்பேன் என்று தசரதன் கெக்கலிட்டது, இஞ்சிக்கு நினைவில் வந்து, வந்து போனது. இஞ்சி வேறு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. காவற்கம்பையும் இடைவாரில் வங்கியும் இருந்தால் இஞ்சிக்குப் போதும். மோளையன் கோடாரியையும், அரிவாளையம் துணியில் சுற்றி தலை சுமையாக்கிக் கொண்டு நடந்தான். பொம்மி இரவு வெளிச்சத்திற்கு சைக்கிள் டயர்களை சுமந்து வந்தான். கூப்பு மரம் வெட்டப்போவதாக சேரிக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

இருட்டுப் பாதையடி பார்த்து நடந்தார்கள். பாதரங்குளம் போய்ச் சேரவே சாமம் ஆகிவிட்டிருந்தது. தசரதன் தென்னந்தோப்பிற்கு வெளியே நின்று பார்த்தார்கள். ஆள் நடமாட்டம் எதுவுமில்லை. இருட்டு கண்ணை மூடியது, துப்பாக்கியில்லாமல் தசரதன் தோப்பிற்கு வரமாட்டான் என்று ஊருக்கே தெரியும். ஆனால், தோப்பிற்குள் தசரதன் இருக்கிறானா இல்லையா என்பதுதான் பிடிபடாத கேள்வியாக இருந்தது. இஞ்சிக்கு ஒரு யோசனை வந்தது. தோப்பிற்குள் இறங்கி, ஆள் ஓடும் சத்தம் கேட்கும்படி மோளையனை ஓடச் சொன்னான் இஞ்சி. இன்னொருவனை வேறு திசையில் ஓடச் சொன்னான். துப்பாக்கிச் சத்தம் கேட்டால் தசரதன் இங்கேதான் இருக்கிறான். இல்லையென்றால், ஆள் இங்கு இல்லை என தீர்மானமாகச் சொன்னான் துப்பாக்கி சத்தம் வரும்வரை நேர இடைவெளிவிட்டு ஓடும்படி யோசனை சொன்னான்.

மோளையன் ஒரு திசையிலும், பொம்மி வேறு திசையிலும் ஓடினார்கள். காய்ந்து விழுந்து கிடந்த தென்னஞ் சருகுகளில் மிதித்துக்கொண்டே திட்டுத்திட்டென ஓடினார்கள். கொஞ்ச நேரத்தில் ஆள் ஓடும் சத்தம் நின்றது. இஞ்சி தோப்புக்குள் நோட்டம் விட்டான். இருட்டில் எதுவும் நிதானம் ஆகவில்லை. மறுபடியும் ஆட்கள் ஓடும் சத்தம் கேட்டது. அடுத்த நொடியில் துப்பாக்கிச் சத்தம். இரண்டு முறை கேட்டது. இஞ்சிக்கு உடல் இறுகத் தொடங்கியது. வேட்டியை தார்ப்பாய்ச்சல் கட்டிக்கொண்டான். துண்டை இடுப்பில் இறுகக் கட்டிக் கொண்டு காவற்கம்பை இறுகப் பிடித்து உயர்த்தினான்.

மூன்றாவது ஆள் ஒருவன் தோப்புக்குள் ஓடும் சத்தம் கேட்டது. தடுக்கி விழுந்து எழுந்து ஓடுவதும் இஞ்சிக்குப் புரிந்தது. இஞ்சி தோப்பிற்குள் இறங்கினான். இஞ்சியின் கண்கள் மினுங்கத் தொடங்கின. கையில் நீளமான கட்டை போல ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடிய அந்த உருவத்தை துல்லியமாகப் பார்த்தான் இஞ்சி.

தோப்பிற்குள்ளிருந்த காவற்குடிசையை நோக்கி ஓடியது அந்த உருவம். இரவுச் சிறுத்தைபோல் பதுங்கி பதுங்கி, பம்மி பம்மி குடிசையை நெருங்கினான் இஞ்சி. பத்தடி தொலைவிருக்கும். குடிசையிலிருந்து அரிவாளுடன் வெளியே வந்த அந்த உருவம் தசரதன் தான் என்று புரிந்தது இஞ்சிக்கு. இஞ்சி காவற்கம்பை சுழற்றினான். இருளைக் கிழித்துக்கொண்டு சுழன்றது கம்பு. இடதும் வலதுமாய் சுழற்றி மட்டம் பிடித்தான். வீச்சரிவாளை வீசியபடி முன்னும் பின்னுமாக முன்னே வந்தான் தசரதன். இஞ்சி கம்பை இன்னும் வேகமாகச் சுழற்றி தசரதன் நெற்றிக்கும் காலுக்கும் அடி கொடுத்தான். துள்ளித் துள்ளி தப்பித்து முன்னே வந்த தசரதன் இஞ்சியின் கழுத்துக்கு வீசினான் அரிவாளை.

சுழன்று திரும்பிய இஞ்சியின் இடது கை, இருட்டில் சுழன்று இடுப்பிலிருந்த வங்கியை உருவி, தசரதனின் வயிற்றில் இறக்கியது. குத்துப்பட்டு விழுந்த தசரதன், அரிவாளை இன்னும் வேகமாக வீசினான். இளைத்து நின்றான். மூச்சு வாங்கியது. உருப்படி இனிமேல் தப்பாது என்று உறுதி செய்து கொண்டான் இஞ்சி. வங்கியை இடைவாரில் சொருகிவிட்டு, சிலம்பம் பிடித்தான் இஞ்சி. கருவக்காட்டு கருப்பண்ண சாமியின் வேகம் கம்பு வீச்சிலிருந்தது. இரண்டு சுற்றுச் சுற்றி, மூன்றாவது சுற்றை தசரதனுக்குக் கொடுத்தான் இஞ்சி. வீச்சரிவாள் கம்பு வீச்சை தடுக்குமா? மணிக்கட்டில் இறங்கியது கம்பு. அலறிக்கொண்டு எழுந்தான் தசரதன். இஞ்சியின் அடுத்த சுற்று, தசரதனின் நடு நெற்றில் இறங்க, பெரும் குரலெடுத்து அலறிக் கொண்டு சரிந்தான் தசரதன். கொஞ்ச நேரத்தில் அடங்கினான்.

அலறல் சத்தம் கேட்டு காவற் குடிசைக்கு ஓடிவந்தான் மோளையன். குப்புறக் கிடந்த உருவத்தின் தலையைத் திருப்பி முகம் பார்த்தான்.

“செத்துத் தொலைடா தாயோழி''

தலையை தரையில் அடித்து கோபம் தணித்தான். தசரதனை அப்படியே போட்டுவிட்டு, தோப்பிலிருந்து வெளியேறினார்கள். ஒரு நாளிகை கூட ஆகியிருக்காது, இருளில் கரைந்து மறைந்தார்கள்.

நத்தனூர் தாண்டி இரவு வண்டிகளுக்குப் பதுங்கி முகம் மறைத்து பூச்சேரிக்குள் நுழைந்தான் இஞ்சி. பொழுது புலர்ந்திருந்தது. மகள் வீட்டை நோக்கி ஆவலாக நடந்தான். உடல் களைத்திருந்தது. வீட்டிற்கு முன்னால் வந்து நின்ற இஞ்சியின் உடம்பு நடுங்கியது. காவற்கம்பை, கை நழுவியது! மெல்ல வியர்த்து, நனைந்தது உடம்பு!

இஞ்சி மகள் சென்னம்மாவின் வீட்டிற்குள்ளிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன் வெளியே வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் புறங்கை கட்டப்பட்ட மோளையன் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தான்.

Pin It

சென்ற இதழ் சமூக விழிப்புணர்வு இதழில் வெளிவந்த வட்டமிடும் வல்லூறுகள் கட்டுரை படித்தேன். மிகச் சிறப்பாக இருந்தது. ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் பல்வேறு துரோகங்களை அம்பலப்படுத்துவதாக இருந்தது. இலங்கை அரசை பணிய வைப்பதற்காக அந்தந்தப் போராளி அமைப்புகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி வந்ததிலிருந்து ஆரம்பித்த இந்திய அரசின் துரோகம் இன்று தங்களின் தெற்காசிய ஏகாதிபத்தியத்திற்காக அம் மக்களையே கூண்டோடு அழிப்பதற்காக இலங்கை ராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் தற்பொழுது வரை பல்வேறு வகைகளில் தொடர்கிறது. இந்திய அரசு ஆரம்ப காலத்தில் போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்தபோதும் சரி, அதன்பிறகு தமிழீழ மக்களின் உரிமைகளுக்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுவதிலும் சரி, அங்குள்ள தமிழ் மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் நடந்து கொண்டதில்லை. தன் சுயநலனுக்காகவே நடந்து கொண்டது.

Pranab Mukarjeeஇந்திரா காந்தி இலங்கை அரசை மட்டம் தட்டவும், வேறொரு வல்லரசு தெற்காசியாவில் காலூன்றுவதை தடுப்பதற்கும் ஏற்ப விடுதலைப்புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும், நிதி உதவியும் அளித்தார். ராஜீவ் காந்தி தன்னை ராஜதந்திரியாக காட்டிக்கொள்ள இலங்கை அரசுடன் தமிழர் பிரச்சினைக்காக ஒப்பந்தம் செய்து அதை ஏற்குமாறு போராளிக் குழுக்களை நிர்ப்பந்தப்படுத்தினார். இவ்வாறு இந்திய அரசின் நயவஞ்சகத்தினாலும், துரோகத்தினாலும் பல்வேறு காலகட்டங்களைக் கடந்த ஈழப் பிரச்சினை இப்பொழுது வேறொரு பரிணாமத்தை எட்டியுள்ளது. இந்தியத் தொழிலதிபர்களின் வேட்டை நிலமாக இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளை பயன்படுத்துவதற்கு இந்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. இலங்கை வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, தேயிலை உட்பட பெரும்பாலான தொழில்கள் இந்திய முதலாளிகளின் முற்றுரிமையில் இருக்கிறது என்பது கண்கூடான உண்மை.

இந்திய முதலாளிகள் தமிழரின் தாயகப் பரப்பை முற்றும் முழுவதுமாக சுரண்டுவதற்கும், தங்கள் ஏகபோக நலன்களை விரிவாக்குவதற்கும் பெரும் இடைஞ்சலாக இருப்பது அங்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மட்டுமே. ஆகவே, (அண்ணணுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு, ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு என்னும் பழமொழிக்கேற்ப) புலிகளை பழிவாங்கின மாதிரியும் ஆச்சு, நம் ஆதிக்கத்தை தெற்காசியாவில் நிலைநிறுத்துனது மாதிரியும் ஆச்சு என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளது இந்திய அரசு. அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறது. ஆகவே, அது இலங்கை அரசுக்கு பல்வேறு வகையில், தொழில்நுட்ப, ராணுவ, நிதி உதவியை அளித்து வருகிறது.

பொதுவாக, தேர்தல் களத்தில் எந்த அரசியல் கட்சியும், மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக தங்களின் மக்கள் விரோத செயல்களை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பர். அல்லது முகமூடியிட்டு யாருக்கும் தெரியாதவண்ணம் செய்வர். ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசோ, தமிழ் மக்களை மயிருக்கும்கூட மதிக்கவில்லை. துணிச்சலாக ஈழத் தமிழர் விரோதப் போக்கை மேற்கொண்டு அங்கு வாழும் தமிழ் மக்களைக் கொல்லும் சிங்கள அரசுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது. இதற்கு 2 காரணங்கள் இருக்கலாம். ஒன்று தமிழ் மக்களை மடையர்களாக கருதி இருக்கலாம். அல்லது தள்ளாத வயதிலும் தமிழினத் தலைவர் தம்முடன் இருப்பது காரணமாக இருக்கலாம். இல்லையேல் ஆட்சி என்ன ஆட்சி, ஆட்சியே போனாலும் பரவாயில்லை விடுதலைப்புலிகளை பழி வாங்க வேண்டும். அவர்களை தொடர்ந்து ஆதரிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களையும் அழிக்க வேண்டும் என்ற வன்மம் காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, கலைஞரால் உச்சிமுகர்ந்து பாராட்டப்படும் சோனியாவின் முகமூடி நாளரு மேனியும், பொழுதொழு வண்ணமுமாக கிழிந்து விட்டது.

ஆனால், ஈழப் பிரச்சினையையட்டி, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அடிக்கும் கூத்துகளைப் பார்த்தால் ராஜபக்ஷே எவ்வளவோ பரவாயில்லை போல் தெரிகிறது. ஈழப் பிரச்சினையில் காங்கிரசின் நிலை மிகவும் தெளிவாக இருக்கிறது. தமிழர்களை பூண்டோடு அழிப்பதற்கு சிங்கள ராணுவத்திற்கு பல்வேறு வகையிலும் உதவி செய்வதே அது. காங்கிரசின் இந்த நிலைபாடு பச்சிளம் குழந்தைகளுக்கும் தெரிகிறது. ஆனால், பதவிக்காக கூட்டணி சேர்ந்துள்ள தமிழினத் தலைவரோ இன்னும் காங்கிரசுக்கு ஒளிவட்டம் கட்டிக் கொண்டிருக்கிறார். அவர் காங்கிரசின் மக்கள் விரோதச் செயல் அம்பலப்பட்ட பின்பும் முட்டுக் கொடுத்து வருகிறார். ‘ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசி’யாக இருக்கிறார். முன்பெல்லாம் பிரதமருக்கு கடிதம், ஜனாதிபதிக்கு கடிதம், சோனியாவுக்கு கடிதம் என்று தினம்தினம் கடிதம் எழுதி மக்களை ஏமாற்றிய கலைஞர், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கருதியோ என்னவோ, இந்திய அரசால் என்ன செய்ய முடியும்? என்றும் ஒரு எல்லைக்குமேல் யாரையும் வற்புறுத்த முடியாது என்றும் முகாரி பாடுகிறார். அதுபோக மீத நேரத்தில் அங்கு பாதிக்கப்படும் தமிழர்களுக்கு சட்டி, பானையை தேர்வு செய்வது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதுபோக மீத நேரத்தில் ஐ.நா.சபை இலங்கை அரசுக்கு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்ததே தி.மு.க.வின் முயற்சியால்தான் என்று உடன்பிறப்புகளே கூசும் அளவு பொய் பேசுகிறார். கூடியவிரைவில் கலைஞர் கொத்துக் கொத்தாக விழும் தமிழர் பிணங்களை எரிப்பதற்கு சீமண்ணையும், வத்திபெட்டியும் கூட ஸ்பான்சர் செய்யலாம். அதையும் கூட பார்த்துக் கொண்டுதான் இருக்கும் தமிழகம்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் ‘போர் என்றால் குண்டு வீசத்தான் செய்வார்கள். குண்டு வீசினால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்று போர் தருமம் பேசிய புர்ர்ர்ரட்சித்தலைவி, இப்பொழுது தேர்தல் வந்தவுடன் ஈழத்தமிழர் பிணத்தின்மீது நின்று ஓட்டு வேட்டையாடுகிறார். அவரது அருகே கம்யூனிஸ்டுகள் வரதராஜன் உட்பட பலரும் ‘வெட்கத்துடன்’ அமர்ந்துள்ளனர்.

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று போர் தருமம் பேசிய பொழுது கண்டிக்கத் திராணியில்லாத தலைவர்கள் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும் பொழுது அ.தி.மு.க தொண்டனை மயிர்க் கூச்செறியும் அளவுக்கு வாழத்திப் பேசுகின்றனர். அருவெறுப்பாக இருக்கின்றது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் இல. கணேசனும் அப்போதைக்கப்போது ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று ‘சீரியசாக’ அறிக்கை விடுகிறார். ஈழப் பிரச்சினையில் அவர் கட்சியின் கொள்கையோ காங்கிரஸ் கட்சியின் நகலாக இருக்கிறது. அவர் இங்குள்ள மக்களை ஏமாற்ற இப்படி அறிக்கை வேஷம் போடுகிறார்.

நம்ம இரண்டு சீட்டு மார்க்சிஸ்ட்டுகள் இந்த விஷயத்தில் சொல்லொன்னாத் துரோகம் செய்துள்ளனர். சுப்ரமணி என்ற சங்கராச்சாரி கொலைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டபோது, அவர் மலம் கழிப்பதற்கு வசதியாக கீழே இலையை போலீசார் வைத்து அவரை ராஜமரியாதையுடன் நடத்தியபொழுதும், அவர் போலீஸ் காவலில் சரியாக நடத்தப்படுகிறாரா என்று, ‘இரத்த உறவுடன்’ மனித உரிமை பேசிய யெச்சூரி மார்க்சிஸ்டுகள் இன்று ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படும்போது யாரையும் புண்படுத்தாத அளவுக்கு எங்கோ ஒற்றை வரித் தீர்மானம் போட்டுக்கண்டித்ததுடன் நழுவிவிட்டனர். ஒருவேளை காஸாவில் நடக்கும் மனித அவலம் பற்றி பொலிட்பீரோவில் தீர்மானம் நிறைவேற்ற பாயிண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது டாடாவின் ஆபிஸில் தேர்தல் நிதி வாங்க காத்திருக்கலாம். அவர்களை மன்னித்து விடுவோம். ஆனால், மறக்க வேண்டாம்.

Veeramaniஇவர்கள் எல்லாம் வெளிப்படையாக நம்முன் அம்பலப்பட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், சிலர் கண்ணுக்குத் தெரிவதில்லை. சென்ற இதழில் நண்பர் தீசுமாசு எழுதிய ஒரு கருத்து மிகச்சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். ‘‘நல்ல படைப்பாளி. அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்த படைப்புகளாலும் தான் அறியப்பட வேண்டும்’’.

4 படம் எடுத்த சினிமாக்காரனுக்கே இந்த கருத்து பொருந்தும்போது சிந்தனையாளர்களுக்கு மிகவும் பொருந்தும். அந்தவகையில் பார்த்தால் மதிப்பிற்குரிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இன்றைய ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் என்ன கருத்து மனதில் வைத்திருப்பார் என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரியும். ஆனால், கடந்த ஆறு மாதத்தில் அதனை எங்கு பதிவு செய்திருக்கிறார் என்று தெரியவில்லை.

எத்தனை போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்? எதுவும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. அவருக்கு தற்போது ‘உற்ற தோழனான’ ஆசிரியர் கி. வீரமணி நடத்திய பெரியார் திடல் கருத்தரங்கில் பேசினார். அங்கு வயதானவர்கள் உட்பட 46 பேர் கலந்து கொண்டனர். அதுபோக தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அண்ணா அறிவாலயம் சுற்றி 10, 15 போஸ்டர்கள் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். கலைஞர் டி.வி.யில் மட்டும் காலையில் காணமுடிகிறது. மற்றபடி எங்கும் காணமுடியவில்லை. வாழ்க. ஒரு இனம் அழியும்போது அமைதியாக இருப்பது மிகப்பெரிய துரோகம் என்பதை அண்ணன் அறிவார்.

அவரைப் போலவே ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், வேண்டாம். அவரைப் பற்றி இப்போது பேசவேண்டாம். இப்பொழுது கல்லூரி அட்மிஷன் நேரம். பிசியாக இருப்பார். அதுபோக அறக்கட்டளையின் சென்ற வருட வருமான வரி கணக்கு முடிக்கும் நேரம். தொந்தரவு செய்ய வேண்டாம். விட்டுவிடுவோம்.

இவ்வாறு ஈழப்பிரச்சினை துரோகங்களும், ஓட்டுக்கான வேஷங்களும், பதவிக்காக காட்டிக் கொடுத்தலும், சீட்டுக்காக கழுத்தறுப்புகளும் நடைபெறுகின்றது. எல்லோரும் எதற்கும் தயாராக இருக்கின்றனர். முகமூடிகளை கழட்டிப் பார்க்க கொஞ்சம் பகுத்தறிவு தேவைப்படுகிறது.

இவர்களையெல்லாம் பற்றி எழுதிவிட்டு கடிதத்தை முடிக்கும்பொழுது நமது தங்கபாலுவும் ஆபாத்தாந்தவனாக வந்துவிட்டார். ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வசூல் செய்து வருகிறார். அவர் பின்னாலும் ஒரு கூட்டம் திரிகிறது.

இன்னும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்கள் வசூல் செய்யாததும், இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டுமென்று ஒப்புக்கு குரல் கொடுக்காதவர்களும் யாரும் இல்லை. போற போக்கை பார்த்தால் ராஜபக்ஷே கூட இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விட்டாலும், உண்ணாவிரதம் இருந்தாலும் அதை நமது தலைவர்கள் வாழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Pin It

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பாபர் மசூதி இடிப்பு, மும்பை, கோவை கலவரம் என்ற இந்துத்துவ தீவிரவாத அரசியல் உத்திகளில் அடையாளம் இழந்து தீவிரவாதிகளாய் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமும் பார்க்கப்பட்டு எதிர்வினையாற்ற வழியற்று முடங்கி இருந்த வேளையில் அச்சமூக இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும், மாற்றுத்தளத்தையும் ஏற்படுத்திய அமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம். அதன் தொடச்சியான செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்திலும் ஒட்டுமொத்த தமிழக தளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக முஸ்லிம் அடையாளத்தையும் தாண்டி ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குமாக மனித நேய மக்கள் கட்சியை துவக்கினர். அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர்.. அவருடன் சமூக விழிப்புணர்வு மாத இதழ் நேர்காணலுக்காக சந்தித்த போது நம்முடைய சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.. இன்னும் நம்மிடையே பல கேள்விகள் இருந்தாலும் நேரப்பற்றாக்குறையால் கேட்க முடியவில்லை.. இனிவரும் இதழ்களில் மீதமுள்ள அவரின் நேர்காணல் இடம் பெறும்...

Jawahirullaஏற்கனவே தமிழ்நாட்டில் பல முஸ்லீம் இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை ஏன் 1995ஆம் ஆண்டு துவக்கினீர்கள்? அதற்கான தேவை இருந்ததா?

இந்திய அரசியலிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி 1980கள் ஒரு பதற்றமான காலகட்டம். தமிழநாட்டில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒட்டு மொத்தமாக தீண்டாமைக் கொடுமையின் காரணமாக இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தை தழுவுவது காலம் காலமாக நடைபெறும் ஒன்று. ஆனால் அப்பொழுது பார்ப்பன செய்தியாளர் சுப்பிரமணியன் என்பவர் இந்தியன் எக்ஸ்பிரசில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய செய்தியில் ஒரு முழு கிராமமே இஸ்லாத்தை தழுவியது என்று எழுதி அது வால்போஸ்டர் செய்தியாக வெளிவந்தது. அது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அணி சேரா மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த இனவெறி அரசுக்கு எதிரான தீர்மானம் அங்கு நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. அப்பொழுது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நிருபர் எழுந்து, ‘நீங்கள் இனப் பாகுபாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் நாட்டில் அது கடை பிடிக்கப்படுகிறதே’ என்று கேட்டார். இந்திரா காந்தி அதை மறுத்தார். ஆனால் நிருபர் விடாப்படியாக, மீனாட்சிபுரத்தில் என்ன நடக்கிறது? என்று எதிர்க்கேள்வி கேட்டார். அந்தளவுக்கு பரபரப்பை உண்டு பண்ணிய நிகழ்ச்சி அது. அந்தக் காலகட்டங்களைத் தொடர்ந்து, காலம் காலமாக அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்று பழகி வந்த தமிழ்நாட்டில் பிரிவினை உண்டானது. அதற்கான சூழ்நிலை தமிழ்நாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. இந்து முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமகோபலன் நியமிக்கப்பட்டிருந்தார். அதன் தலைவராக தமிழ்நாட்டில் பரவலாக வாழக்கூடிய நாடார் சமுதாயத்தைச் சார்ந்த தாணுலிங்க நாடார் நியமிக்கப்பட்டார். இதற்கடுத்து தமிழ்நாட்டில் மண்டைக் காட்டு கலவரம் மூண்டது.

இந்திய அளவில் 1984ல் முதன் முதலாக அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை நோக்கி, சீதை பிறந்த இடம் உள்ள நேபாளத்திலிருந்து ரத யாத்திரை நடத்த சங் பரிவாரங்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் இந்திராகாந்தி கொல்லப்பட்டதை அடுத்து அது ஒத்திப் போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 1985&86களில் மீண்டும் ரத யாத்திரை நடைபெறுகிறது. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு லக்னோ நீதிமன்றத்தில் அப்போது நடைபெற்றது. அந்தச் சமயத்தில் உமேஷ் சங்கர் பாண்டே என்ற வழக்குரைஞர் நான் ஒரு ராம பக்தர். நான் கடவுளை வழிபடத் தடையாக கோவிலில் பூட்டுப் போடப்பட்டிருக்கிறது. எனக்கு ராமரை வழிபட அனுமதி வேண்டும் என்று மனு போட்டார். ஆனால் அதை முனிசிபல் நிராகரித்தார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து லக்னோ மாவட்ட நீதிபதியிடம் முறையிடுகிறார். இந்த வழக்கு மாவட்ட நீதிபதியால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் பொழுது, பாபர் மசூதியை நிர்வாகம் செய்யும் முத்தவல்லி, ஏற்கெனவே இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் உள்ளது. நீங்கள் விசாரித்து தீர்ப்பு சொல்லக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பூட்டப்பட்ட கதவுகள் திறக்க உத்தரவிடப்படுகின்றன.

1942 டிசம்பர் 21ம் தேதிவரை பாபர் மசூதியில் தொழுகை நடந்துள்ளது. அன்று வெள¢ளிக் கிழமை தொழுகை நடந்த பிறகு, சிலர் உள்ளே நுழைந்து பூட்டை உடைத்து, தொழுகை செய்யும் பீடத்தில் போய் ராமர், லட்சுமணன் அனுமார் சிலைகளை வலுக்கட்டாயமாக உள்ளே வைத்து பிரச்சினையை ஆரம்பிக்கின்றனர். உடனடியாக இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலில் இந்தியா முழுவதும் காட்டப்பட்டது. அத்வானி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் 1985களில் ராமர் கோவில் இயக்கத்தை மிகப்பெரிய இயக்கமாக கட்டி எழுப்பினார்கள். இதன் முடிவில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை கலவரங்கள். இதில் முஸ்லீம் சமூகத்தினர் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். கேட்கவே அஞ்சும் கொடூரம் இது.

ஆனால், அதே நேரத்தில் முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லக்கூடிய அரசியல் சக்திகள் அதை சரியான முறையில் நிறைவேற்றத் தவறிவிட்டன. உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழ்நிலையில் 1992ல் முஸ்லீம் லீக் கட்சியானது காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. கேரளாவில் கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அப்போது பதவியில் இருப்பதற்குக் காரணமே முஸ்லீம் லீக் ஆதரவு இருந்ததினால்தான். மசூதி இடிக்கப்பட்டவுடன் நரசிம்மராவ் எதுவுமே செய்யவில்லை என்பது தெரியும். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதிகளை அளிக்கிறார். அதன் பின்பு அன்று, முஸ்லீம் லீக் தலைவர்கள் இப்ராஹிம் சுலைமான் சேட் தலைமையில் பிரதமர் நரசிம்மராவைச் சந்திக்கிறார்கள். அவர் நரசிம்மராவைப் பார்த்து கோபமாக நீங்கள் எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள், எங்களுக்கு இந்தப் பிரச்சினையில் உரிய தீர்வு வேண்டும் என்று கோபமாகக் கூறுகிறார். இவ்வாறு கூறுவதற்கு காரணம் கேரளாவில் உள்ள கருணாகரன் அமைச்சரவை நம் தயவில்தான் இருக்கிறது. நாம் ஆதரவை வாபஸ் வாங்க முடியும் என்று கருதுகிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், முஸ்லீம் லீக் கட்சிக்காரர்கள் பாபர் மசூதி இடிப்பைவிட கருணாகரன் அமைச்சரவையில் பங்கு வகிப்பதே மேலானது என்று கருதி இப்ராஹிம் சுலைமான் சேட்டை தூக்கி வெளியில் எறிந்தார்கள். இதுதான் நடந்த நிகழ்வு.

இதை எதற்குச் சொல்கின்றேன் என்றால் அரசியல் கட்சிகளும் சரி, முஸ்லீம் தலைவர்களும் அந்தச் சமூகத்தின் உண்மையான கோரிக்கைகளுக்கும் தேவைப்படும் உரிமைகளுக்கும் காது கொடுத்துக் கேட்காத சூழ்நிலையில் ஒரு அமைப்பிற்கான தேவை இருந்தது. மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் ஏற்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களும், அதிக இழப்பைச் சந்தித்தவர்களும் முஸ்லீம்கள்தான். அதிக அளவில் சிறைக்கு உள்ளே தள்ளப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து தடா சட்டத்தை அமல்படுத்துகிறார்கள். ஆனால் அந்தச் சட்டம் முஸ்லீம் மக்கள் மீதும் பயன்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து தமிழ்நாட்டில் சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட அஞ்சி நடுங்கிய நிலையில்தான் ஜனநாயகப்பூர்வமான முறையில் வீதிக்கு வந்து தீர்வு காணவேண்டும் என்ற நோக்கிலும் முஸ்லீம்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினோம்.

1999ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டுவரை த.மு.மு.க. செயல்பட்டிருக்கிறது. அதன் தலைவராகவும் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் துவங்கும்போது திட்டமிட்ட பணிகளைச் செய்து முடித்திருக்கிறீர்களா?

பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு மட்டும் இந்த இயக்கத்தை துவங்கினாலும் காலப் போக்கில் பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் குரல் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. உதாரணமாக அதே வருடத்தில் கொடியங்குளம் பகுதியில் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையைக் கண்டித்து செப். 15ல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தோம். தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். குறிப்பாக இந்த 14 ஆண்டுகளில் முஸ்லீம் மக்கள் இடையே அரசியல் விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறோம். காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சி, சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட அஞ்சி நடுங்கிய சமுதாயம், காவல்துறையைப் பார்த்தாலே பயந்த சமுதாயம், சமூகச் செயல்பாட்டை அச்சம் கலந்த செயலாக நினைத்துக் கொண்டிருந்த சமுதாயம் இன்று எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்றால் எங்கேனும் ஒரு மனித உரிமை மீறல் நடக்கிறது என்று தெரியவந்தால் அந்தப் பகுதி தமுமுக பொறுப்பாளர் காவல் துறை ஆய்வாளரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் அளவிற்கு முஸ்லீம்களை அரசியல் வி¤ழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்றியிருக்கிறது. கல்வி விழிப்புணர்வையும் த.மு.மு.க. அதிக அளவிற்கு முஸ்லீம் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரணமாக முஸ்லீம்கள் உரிய வயதை அடைந்தவுடன் பாஸ்போர்ட் கிடைத்தவுடன் மலேசியா, சிங்கப்பூருக்கு தொழில் நிமித்தமாக சென்றுவிடுவார்கள். படிப்புக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காத சமுதாயம் இது. இன்றைக்கும் வெளிநாட்டிற்கு வேலை தேடிப் போகிறார்கள். ஆனால் பட்டதாரிகளாக, முதுநிலைப் பட்தாரிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அளவிற்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். மேலும் இது போக சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறோம். சுனாமி போன்ற பேரிடர் வந்தபோது பெருமளவு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ரத்த தானத்தை இயக்கமாக ஆக்கி அனைவருக்கும் இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். சுவாரஸ்யமான செய்தி ஒன்று சொல்ல வேண்டுமானால், காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்பொழுது மருத்துவர் எங்களை அணுகினார். நாங்களும் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் அவருக்கு ரத்தம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினோம். அவர் உயிர் பிழைத்தவுடன் மருத்துவர் அவரிடம், நீங்கள் யாரை இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறீர்களோ அவர்கள்தான் உங்களுக்கு ரத்தம் அளித்து காப்பாற்றினார்கள் என்று கூறினார். இது எங்களால் மறக்க முடியாத ஒன்று.

இதுவரை பணியாற்றியதில் த.மு.மு.க.வின் முக்கிய அரசியல் வெற்றியாக எதைக் கருதுகின்றீர்கள்?

1960களில் தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் அரசியல் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் மறைந்த காயிதே மில்லத். அவர் மிகப்பெரிய அரசியல் சக்தியாக இருந்த காரணத்தினால்தான் அண்ணா அவர்கள் 1967ல் ஆட்சியைப் பிடித்த போது குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அவரது வாழ்த்துக்ளைப் பெற்றார். ஆனால் அவர் விட்டுச் சென்ற பணிகளை, சமூக பொருளாதாரத்தில் முஸ்லிம்களின் நலனை வலியுறுத்தி அவர்களின் உரிமைக்காக போராடவேண்டியவர்கள், அவர்களின் பணிகளைச் செய்யவில்லை. ஆளும் கட்சியின் செல்வாக்கையும் வென்றெடுக்க முடியவில்லை. 1995ல் தமுமுக ஆரம்பித்த பிறகு இதற்கான பணிகளை திட்டமிட்டு உருவாக¢கிவருகிறோம். அதில் முக்கிய வெற்றி என்று கூறவேண்டுமானால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. நாங்கள் இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து இதை வலியுறுத்தி வந்தோம். 2006 சட்ட மன்றத் தேர்தலில் தீவிரமாக வலியுறுத்தினோம். மே மாதத்தில் கலைஞர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 2007ல் சிறுபான்மை மானியக் கோரிக்கை மசோதாவின் மீது நடைபெற்ற விவாத¢தில் பதிலளித்து பேசிய முதல்வர், ‘‘இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு அளிப்பது எங்களின் நோக்கம். ஆனால் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அது முடிந்ததும் உரிய ஆவன செய்யப்படும்’’ என்று உறுதியளித்தார். அதற்கு பதிலளித்த நாங்கள் அந்த வழக்கு 1991&ல் இருந்தே நிலுவையில் இருக்கிறது. அது முடிய காலதாமதம் ஆகும் என்று பதில் கூறினோம். 2007 டிசம்பர் 31க்குள் எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காவிட்டால் தொடர்ச்சியாக தடையை மீறும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கிறோம். அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 13ம் தேதி எங்களுக்கு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றித் தந்தார். இதன்மூலம் இருப்பதில் எதைச் சிறப்பாக செய்யமுடியுமோ அதைச் செய்துவிட்டோம் என்ற திருப்தி இருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் மிகப்பெரிய பலன் எங்களுக்குக் கிடைத்து வருகிறது. உதாரணமாக 2007&08 கல்வியாண்டில் 13 இஸ்லாமிய மாணவர்களே மருத்துவ படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இட ஒதுக்கீட்டு கிடைத்த நடப்புக் கல்வியாண்டில் 53 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அதே போல இன்ஜினீயர் படிப்புகளில் 2007&08 கல்வியாண்டில் 700 மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. ஆனால் நடப்புக் கல்வியாண்டில் 2003 மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.

இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கோரிக்கையும் நிலுவையில் இருக்கிறது. அது காலப்போக்கில் நிறைவேறும் என்று நம்புகிறோம்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில், அதில் சம்பந்தப்படாத முஸ்லீம்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் தொடர்ந்து சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் த.மு.மு.க. சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் முஸ்லிம்களிடமிருந்து எழுகிறதே?

நீங்கள் கோவை குண்டு வெடிப்பை பற்றி மட்டும் கூறுகிறீர்கள் அதற்கு முன்னால் கான்ஸ்டபிள் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய கலவரத்தைப் பற்றியும் பேச வேண்டும். 1997 நவம்பர் 20ல் கான்ஸ்டபிள் செல்வராஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மிகப்பெரிய கலவரம் திட்டமிட்டு நடைபெற்றது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, காவல்துறையினர்¢ ஆகிய மூன்று தரப்பினரும் திட்டமிட்டு இணைந்து இந்தக் கலவரத்தை நடத்தினர். அப்போது ஆட்சி இருந்ததா என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்தக் கலவரம் நடைபெற்றது. கலவரம் நடைபெற்ற பொழுது தமுமுகவின் தலைவர் என்ற முறையில் நடைபெற்ற கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவு செய்து டெல்லியில் உள்ள தேசிய சிறுபான்மையினர் ஆனையத்திற்குச் சமர்ப்பித்தோம். அதற்கு தகுந்த பரிகாரம் கிடைக்கவில்லை. நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை அரசு நியமித்தது. ஆனாலும் சொத்தை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை இந்த ஆணையம் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் யாருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நடைபெற்றது தான் கோவை குண்டுவெடிப்பு. ஆனாலும் இதை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு வன்முறை இன்னொரு வன்முறைக்குத் தீர்வாகாது. மேலும் அப்பொழுது இருந்த தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் தாகீர் அகமது அவர்களிடம் த.மு.மு.க. சார்பில் சென்று ஒரு குழுவாக வரவழைத்து கோவை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. இந்தச¢ சூழ்நிலையில்தான் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த வெடிப்பை நடத்தியவர்கள் முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல. ஆனால் ஒரு கையில் குண்டும் இன்னொரு கையில் குரானும் வைத்திருப்பதாக முஸ்லீம்கள் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டனர். அன்று மாலையே நானும் மற்ற சிலரும் கைது செய்யப்பட்டோம்.

அதற்குப் பிறகு வழக்கு நடைபெற்றது. திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஆட்சியில் இருந்தன. நீண்ட காலம் நடைபெற்றும் வழக்கு முடியவில்லை. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த பொழுது நாங்கள் வைத்த முக்கியக் கோரிக்கையே கோவை குண்டு வெடிப்பு வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு கூறவேண்டும் என்பதுதான். அந்த அடிப்படையில் ஆட்சி அமைந்தவுடன் ஆமை வேகத்தில் நடைபெற்ற வழக்கு விரைவாக நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 166 பேர் மீது வழக்கு இருந்த ந¤லையில் வழக்கு விசாரணைக்கு இடையில் ஒருவர் மரணமடைந்தது போக 40 பேரைத் தவிர மீதமுள்ள சிலர் விடுதலை செய்யப்பட்டனர். சிலரது சிறைக்காலம் தண்டனைக் காலமாக கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் பாஜக, இந்து முன்னணி கட்சியினரின் தூண்டுதலின் பேரில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். நாங்கள் வைத்த முக்கியக் கோரிக்கை வழக்கு விரைந்து முடிக்கப்படவேண்டும் என்பது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எங்களுக்கு குறையும் இருக்கிறது. சமீபத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி தமிழக அரசு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தது. சிறையில் 7 ஆண்டுகள் இருந்தவர்கள் கூட விடுதலை செய்யப்பட்டனர். கோவை குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமல்ல வேறு சில வழக்கிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருப்பவர்கள் விடுவிக்கப்படவில்லை. அதற¢கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காரணமாகச் சொல்கிறார்கள். நாங்கள் அதை பாகுபாடாகவே கருதுகிறோம். குற்றம் நடைபெற்று தண்டனை பெற்ற பின்பு கைதிகளிலே பாரபட்சம் காட்டப்படக¢கூடாது. மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் லீலாவதி கொலையில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அதே சமயம் தனிப்பட்ட காரணங்களுக்காக இல்லாமல் சமூகக் காரணங்களுக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறைவு செய்த முஸ்லீம்களை விடுவிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

நாங்கள் தி.மு.க. அ.தி.மு.க இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளோம். 1999ம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவை வைத்து முஸ்லீம்களின் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். அதில் ஜெயலலிதா சிறப்பு விருந்தினர். அந்த மாநாட்டில்தான் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்தது தவறு என்றும், இனி கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் கூறினார். நீங்கள் எனக்கு ஆதரவளித்தால் நீங்கள் விரும்பக்கூடியவற்றை நிறைவேற்றி வைப்பேன் என்றும் கூறினார். அ.தி.மு.க சார்பிலே அவரது பேச்சு புத்தகமாக கூட வெளிவந்திருக்கிறது. அதற்கு பிறகு 2001ம் ஆண்டு அவருடன் கூட்டணி வைத்தோம். ஆனால், எங்கள் கோரிக்கைகளை கடைசி வரை அவர் நிறைவேற்றவில்லை. ஆனால், கலைஞர் எங்களின் மிக முக்கியமான கோரிக்கையான இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார். மற்றபடி, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க, தி.மு.க இரண்டும் கூட்டணி வைத்துள்ளன. வித்தியாசம் ஒன்றுமில்லை. கலைஞர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.

இப்பொழுது தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க இரண்டும் பி.ஜே.பியுடன் சேராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. தி.மு.க பி.ஜே.பி. கூட்டணியில் அங்கம் வகித்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி ஒருவர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் அந்த கட்சியின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்படத்தான் வேண்டும். மீறினால் பதவி பறிபோகும். அதற்கு முதலில் அந்த கட்சியின் உறுப்பினராக வேண்டும். முஸ்லீம் லீக் கட்சி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டது. எங்களுடைய மனிதநேய மக்கள் கட்சி தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும், நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். எங்கள் கொள்கைக்கு மாறாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால், நாங்கள் அந்தக் கூட்டணியில் இருக்க மாட்டோம். பி.ஜே.பி. அரசு அமைவதற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாங்கள் உதவியாக இருக்க மாட்டோம்.

முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற இஸ்லாமியர்களுக்கான அமைப்பை நடத்தி வந்தீர்கள். இப்பொழுது மனிதநேய மக்கள் கட்சி என்ற அனைவருக்குமான அமைப்பை துவங்கியிருப்பதாகச் சொல்கிறீர்கள். இதில் மற்ற மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்னவிதமான அங்கீகாரம் கிடைக்கும்? மதச்சார்பின்மை பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு. இங்கு எல்லா மதத்தினரும் ஒவ்வொரு மதத்தை பின்பற்றுவதற்கும், அதைப் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை உண்டு. இந்த உரிமை அனைவருக்கும் அவரவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் கொடுக்கப்பட வேண்டும். இதில் எந்தவகையிலும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகவோ, அல்லது எதிராகவோ அரசியல் நடத்துவது கூடாது. இதுதான் மதச்சார்பின்மை பற்றிய எங்களது விளக்கம். மனிதநேய மக்கள் கட்சி வேறு. த.மு.மு.க. வேறு. த.மு.மு.க இஸ்லாமியர்களை விழிப்படையச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆனால் மனிதநேய மக்கள் கட்சி அனைவருக்கும் பொதுவான ஒன்று. இன்றைய அரசியல் தூய்மையற்றதாக, சுயநலம் அற்றதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவக்கியுள்ளோம். ஆனால், இப்பொழுது உள்ள அரசியலானது தேர்தலில் போட்டியிடுவதற்கு செய்யும் செலவினை முதலீடாகவும், தேர்தலுக்குப் பிறகு அதை வருமானம் ஈட்டும் துறையாகவும் மாற்றியுள்ளனர். அதை மாற்றும் எண்ணம் எங்களுக்கு உள்ளது. ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினர், தலித்துகளுக்கு உரிய பங்கும், உரிமையும் அளிக்கப்பட வேண்டும். மதச்சார்பற்ற ஆட்சி இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இந்த கட்சியில் முஸ்லீம் அல்லாதோரும் பதவியில் இருக்கிறார்கள். எந்த மக்களுக்கு நாங்கள் பிரதிநிதிகளாக இருக்கிறோமோ, அவர்களது தேவைகளை, உரிமையை சிறப்பாக நிறைவேற்றுவோம் என உறுதி கொண்டுள்ளோம்.

ஈழத்தில் சிங்கள அரசினால் தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. சிங்கள அரசுக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஈழப் பிரச்சினையில் உங்களது கருத்து என்ன? அங்கு நடைபெறக்கூடிய சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? நீங்கள் ஈழப் பிரச்சினையில் அமைதியாக இருப்பது போல் ஒரு தோற்றம் நிலவுகிறதே?

ஈழப் பிரச்சினையில் நாங்கள் தி.மு.க ஏற்படுத்தியுள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கிறோம். எங்கள் கட்சி நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக எடுத்து வைத்துள்ளோம். சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் நலப் பாதுகாப்புப் பேரவை பொதுக்கூட்டத்தில் நான் அதைப்பற்றி தெளிவாக பேசியுள்ளேன். நான் பேசியது என்னவென்றால், இலங்கைக்கு எந்த ராணுவ உதவியும் செய்யவில்லை என்று பிரணாப் முகர்ஜி கூறுகிறார். ஆனால், அவர் சொல்லி முடித்த இரண்டாவது நாளில் தாம்பரத்தில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக செய்தி வருகிறது. அதன்பின்பு முதல்வர் தலையிட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் செய்தி வருகிறது. இதுபற்றி விளக்க வேண்டும். இப்பொழுது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசு இலங்கைக்கு என்னென்ன மாதிரியான உதவிகள் செய்துள்ளது. அல்லது செய்யவில்லை என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினேன். நான் கூறியவுடன் பொதுக்கூட்டத்தின் மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட நெளிந்தார்கள்.

எங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறுகிறேன். ஈழத்தில் இப்பொழுது நடைபெறும் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. ஜப்பானோ, எங்கேயோ இருக்கும் நார்வேயோ எடுக்கிற முன்முயற்சிகளை விட இந்தியா முன்முயற்சி எடுத்தால் ராஜபக்ஷேவுக்கு இந்த அளவுக்கு துணிச்சல் இருக்காது. இது ஒரு விஷயம். இரண்டாவது, இந்த விஷயத்தை முழுமையாகப் பார்த்தோமானால், வடகிழக்கில் தமிழ் பேசும் முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவரவர்களுடைய உரிமைகளைக் காக்கக்கூடிய சமாதானத் திட்டம் காணப்பட வேண்டும். அவரவர் நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிவகைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழர்களுக்கான தனி நாடு கோரிக்கை எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை? அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கருதுகிறேன். இந்தியாவில் உள்ள கூட்டாட்சி முறையைப் போல அங்கேயும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

Jawahirullaஉலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மதம் என்ற ஒற்றை அடையாளத்திலேயே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டிலே கூட தமிழர் என்ற இன அடையாளம் தாண்டி, அவர்களின் மதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

இங்கு முஸ்லீமாகிய எனக்கு சில அடிப்படை கடமைகள் இருக்கிறது. ஒரு நாளைக்கு 5 முறை தொழ வேண்டும் என்பது கட்டாயக் கடமை. ஆண்டுக்கொருமுறை 30 நாள் நோன்பு இருக்க வேண்டும். அதை நான் விட்டுக் கொடுக்க முடியாது. தாடி வைப்பது என் வழிமுறை. அதை நான் விட்டுக் கொடுக்க முடியாது. முஸ்லீம்களுக்கு மத ரீதியாக உலகளாவிய அடையாளம் இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் எனது இன அடையாளம் தமிழ். அதையும் நான் மறுக்கவில்லை. சங்க கால இலக்கியத்திற்கு பிறகு நாம் தமிழை இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால், அதில் முஸ்லிம்களின் பங்கு மிகப்பெரிய அளவு உள்ளது.

நீங்கள் த.மு.மு.க ஆரம்பித்த போது, தலித் அமைப்புகளுடன் இருந்த இணக்கம் இப்போது இல்லை. எதனால்? மேலும் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் சாதி பார்ப்பதில்லை. ஆனால், தலித்துகளை இந்துக்களைப் போல தீண்டாமையுடன் நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

அப்பொழுது இருந்த சூழ்நிலையே இப்பொழுதும் நிலவுகிறது. எங்களுக்குள் எவ்வித இணக்கமும் குறையவில்லை. அப்பொழுது மிக உக்கிரமான அளவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்று வந்தது. அதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியுடனும், இதர தலித் அமைப்புகளுடனும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். கொடியங்குளத்தில் தலித் மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறையைக் கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்துள்ளோம். இப்பொழுதும் தலித் அமைப்புகளுடன் இணக்கமான சூழநிலையே இருந்துவருகிறது. அடுத்ததாக இஸ்லாமியர்களும், இந்துக்களைப் போல ஜாதி பார்பப்தாக நீங்கள் கூறும் குற்றச்சாட்டு தவறான ஒன்று. அந்த மாதிரியான சூழ்நிலை எங்கு இருக்கிறது என்று சொன்னால் நாங்களே நடவடிக்கை எடுப்போம். இன்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் வீடுகளுக்கு தலித் மக்கள் செல்வதும், அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பதும் அவர்களின் வீட்டில் விருந்து உண்பதும் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று. அதைப்போல தலித்துகளின் வீடுகளிலும் இஸ்லாமியர்கள் எவ்வித பாரபட்சமும் இன்றியே பழகுகிறார்கள். நீங்கள் எங்காவது தலித் மக்கள் மீது இஸ்லாமியர்கள் தீண்டாமை பார்ப்பதாக கூறினால் எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நானே நேரடியாக நடவடிக்கை எடுக்கிறேன்.

சரப்ஜித் சிங் என்ற இந்தியருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், அப்சல் குரு விஷயத்தில் அப்படி ஒரு எதிர்ப்பினை இங்கே யாரும் தெரிவிக்கவில்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் கூட மௌனம் சாதித்து வருகின்றன. அவர்கள் இந்த விஷயத்தில் பாரபட்சம் காட்டுவதாக உணர்கிறீர்களா?

அப்சல் குரு விஷயத்தில் நமது கட்சித் தலைவர்கள் முழுமையாக தெளிவுடன் இருக்கிறார்களா என்பதே கேள்விக்குறி. காரணம் என்னவென்றால், பொதுமக்களும் சரி, தலைவர்களும் சரி இந்த விஷயத்தில் மாயையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே என் கருத்து. எடுத்துக்காட்டாக அப்சல் குரு மீதான குற்றச்சாட்டு விஷயத்தில் எதுவுமே ஊர்ஜிதமாக நிரூபணம் செய்யப்படவில்லை. தாக்குதல் நடைபெற்றவுடன் இப்போதைய அறிவியல் மற்றும் விஞ்ஞானத் துறை அமைச்சர் கபில்சிபல் மற்றும் நஜ்மா ஹெப்துல்லா இருவரும் ஒரு கருத்தை கூறினார்கள். ‘நாங்கள் சி.சி. டி.வி.யில் பார்த்தோம். பாராளுமன்றத்தை தாக்குவதற்காக 7 பேர் அம்பாசிடர் காரில் வந்தார்கள். நீங்கள் 6 பேரை சுட்டு வீழ்த்தியதாகக் கூறுகிறீர்கள். அப்படியானால் அநத் ஏழாவது நபர் எங்கே?’ இது அவர்களின் கேள்வி. அந்தக் கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படப் போகிறது. பாராளுமன்ற கட்டடத்திற்கு பாதுகாப்பு இல்லை என்று வாஜ்பாய் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் அடிக்கடி பேசி இருக்கின்றார்கள். அதன் பிறகுதான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கோணத்திலும் நாம் இதை ஆராய வேண்டும். அருந்ததி ராய் பாராளுமன்றத் தாக்குதலை முன்வைத்து ஏராளமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அவரது எந்தக் கேள்விக்கும் யாரும் முறையான பதிலைக் கூறவில்லை. மேலும், அப்சல் குரு மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகி இருக்கிறதா என்று பார்த்தோமானால் அதுவும் இல்லை. அப்சல் குரு மீதான குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்படவில்லை என்றும், அவருக்கு இதில் பங்கு இருக்கிறதா? என்பதற்கு உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனாலும், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் விருப்பம் என்று கூறி தூக்கில் போடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற ஒரு அபத்தமான தீர்ப்பை நாம் எங்கும் கேட்டிருக்க முடியாது. அப்சல் குரு விஷயத்தில், அதுபற்றிய தெளிவு நம்நாட்டு மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.

இங்கு எல்லாமே திட்டமிட்டு அவதூறு பரப்புவதில்தான் இருக்கிறது. இங்கு நடைபெறும் குண்டுவெடிப்புகள், விசாரணை நடைபெறும் முன்பே இன்னார்தான் இதைச் செய்தார்கள் என்று ப்ளாஷ் நியூஸ் போடுகிறார்கள். இங்கு ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் முஸ்லீம் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் தான் சம்பந்தப்பட்டுள்ளார் என்று பெரிய அளவில் செய்தி வருகிறது. ஆனால், அதன்பின்பு அவர் விசாரிக்கப்பட்டாரா? குற்றம் நிரூபிக்கப்பட்டதா? என்று ஒரு செய்தியும் வரவில்லை. லக்னோவில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நடைபெறுகிறது. அதற்காக அப்சார் அன்சாரி என்பவரை கல்கத்தா எலெக்ட்ரிக் கடையில் வேலை செய்தவரை பிடித்து வந்து இவர்தான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினார்கள். பல மாஜிஸ்திரேட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவரை நிமிர்ந்து கூட பார்க்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு ரிமாண்டில் வைக்க உத்தரவு பிறப்பிப்பார்கள். ஆனால், லக்னோ மாவட்ட நீதிபதி முழுமையாக விசாரணை செய்து நீங்கள் சொல்லும் குற்றவாளி இவர் இல்லை என்று விடுதலை செய்தார். ஆனால், இது மிகச்சிறிய செய்தியாக வெளிவருகிறது. மக்களிடையே குண்டுவெடிப்பு போன்ற பிரச்சினைகள் முஸ்லீம்களை தொடர்புபடுத்திவரும் செய்திகளில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரிய அளவுக்கு இருக்கிறது.

இஸ்லாம் மதத்தின் மீது தஸ்லிமா நஸ்ரீன், தமிழ்நாட்டில் ஹெச்.ஜி. ரசூல் போன்றோர்கள் வைக்கும் விமர்சனத்திற்கு அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் ஊர் விலக்கல், போன்ற தாக்குதல்கள் நடைபெறுகிறதே. இஸ்லாம் தன் மீதான விமர்சனத்தை ஏன் அனுமதிக்க மறுக்கிறது? நீங்கள் அத்தகைய தாக்குதல்களை ஆதரிக்கின்றீர்களா?

தஸ்லிமா நஸ்ரீன் முஸ்லிம் பெண்களின் உண்மையான பிரதிநிதி அல்ல. அவரது கருத்துக்கள், கலாச்சார சீர்கேட்டிற்கு எடுத்துச் செல்லும். அதையொட்டியே அவர் பேசியும், எழுதியும் வருகிறார். அனைவருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கிறது. ஆனால், அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘என்னுடைய உரிமை உனது மூக்கின் நுனி வரை முடிவடையும் என்று’ அதன் அடிப்படையில்தான் இதை நாம் பார்க்க வேண்டும்.

ஹெச்.ஜி. ரசூலைப் பொறுத்தவரையில் அவருக்கும், அவரது ஜமாத்திற்கும் ஏற்பட்ட பிரச்சினையில்தான் ஊர் விலக்கம் நடைபெறுகிறது. ஹெச்.ஜி. ரசூல் தெரிவித்த கருத்து எங்கள் கருத்தல்ல. ஆனாலும், ஜமாத் அவர் விஷயத்தில் எடுத்த நடவடிக்கைகளில் நாங்கள் உடன்படவில்லை. ஆனால் அவர்கள் என்ன காரணத்திற்காக செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பதை நான் இங்கிருந்து முடிவெடுக்க முடியாது. இந்த விஷயத்தில் ரசூல் தரப்பு செய்தியே பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்தது. ஜமாத் தரப்பு செய்திகள் எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை. அதையு¢ம் கேட்டுத்தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும்.

இன்று உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் சொல் ‘ஜிகாத்’. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல், ஆப்கன், ஈராக் போன்ற நாடுகளில் நடைபெறும் சம்பவங்கள், ஜிகாத் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகின்றன. ஜிகாத் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ஜிகாத் என்ற சொல் மிகவும் மோசமாகவும், தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை, எந்தப் பாவமும் செய்யாத மக்களை கொன்று குவித்து, தங்களுடைய அரசியல் லட்சியங்களை அடைவதுதான் ஜிகாத் என்றால் அந்த ஜிகாத் எங்களுக்குத் தேவையில்லை. அதை ஆதரிக்கவும் இல்லை. உதாரணத்திற்கு தற்போது மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல். அதை நாங்கள் ஆதரிக்க முடியாது. அடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதல், அமெரிக்கா உலகில் பல்வேறு நாடுகளை சென்ற நூற்றாண்டிலிருந்தே அடிமைப்படுத்தியும், அடக்குமுறைகளை ஏவியும், சுரண்டியும் வந்தது. இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது. இனியும் செய்யும். அது வேறு விஷயம். ஆனால் அதை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு, ஒரு விமானத்தைக் கடத்தி (இந்தத் தாக்குதல் உண்மையாக இருக்குமானால்) அப்பாவி மக்களை கவசமாக்கி, இரட்டைக் கோபுரம் மீது தாக்குதல் நடத்தி அதிலுள்ள மக்களை கொல்வது மிகவும் கொடுமையான ஒன்று. அதில் உள்ள மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இதுதான் ஜிகாத் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை. ஆனால், தன் தாய்நாடு அந்நியனால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு குடிமகன் கருதுவானேயானால், அங்கு நடைபெறும் போராட்டத்தை ஆதரித்துதான் ஆகவேண்டும். உதாரணத்திற்கு, பாலஸ்தீனம் இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்றவை அமெரிக்காவால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் தங்கள் மண்ணை விடுவிப்பதற்காக நடத்தும் போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அது ஜிகாத் தான். ஆகவே ஜிகாத் பற்றிப் பேசும் போது அதன் வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

த.மு.மு.க நிறைய ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது. அதில் நிறைய முஸ்லீம் பெண்கள் பங்கேற்று இருக்கிறார்கள். ஆனால், த.மு.மு.க.விலும் சரி, புதியதாக துவங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சியிலும் சரி இஸ்லாமியப் பெண்களுக்கு எவ்வித பிரதிநிதித்துவமும் தரப்படவில்லையே? இஸ்லாமிய பெண்களுக்கு உரிய அங்கீகாரம் ஏன் வழங்கப்படவில்லை?

மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழாவில் நீங்கள் கூறியது போல மேடையில் யாரும் பெண்கள் பேசவில்லை. அது உண்மைதான். இப்பொழுதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறோம். போகப்போக பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். அதற்கான செயல்திட்டம் வைத்திருக்கிறோம். ஒரேநாளில் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. படிப்படியாக பெண்கள் அனைத்து பதவிகளிலும் அமர்த்தப்படுவார்கள். த.மு.மு.க.வில் மகளிர் அணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒபாமா அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். அவர் தலைமையில் மாற்றம் வரும் என்று ஒரு சாரார் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் திரிகிறார்கள். உண்மையில் அவர்களது கனவு நிறைவேறுமா?

ஒபாமா ஒரு முகமூடி அவ்வளவுதான். அவர் கறுப்பினத்தவர், இஸ்லாமிய பின்னணியைக் கொண்டவர் என்று நம் மக்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். அதெல்லாம் மாயை. அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் அமெரிக்காவை ஆட்சி செய்வது பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள்தான். என்னைப் பொறுத்தவரை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் வராது என்று திட்டவட்டமாக நம்புகிறேன்.

Pin It