ஆறு தமிழரில் ஒரு தமிழர் வசிக்கும் சென்னை மாநகரத்திலே, பல் விளக்காமல் விழுங்கிய ஒரு குலோப்ஜாமுனின் ஸ்வீட்டான மாலை நேரத்து மயக்கத்திலே, தமிழர் தம் பண்பாட்டுச் சிக்கல்களை நுண்ணிய அளவிலே கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல் நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது. சிந்தனையில் தோய்ந்து வெளிறிய கண்களுடன், கவலை குடிகொண்ட இதயத்துடன், பிஸியாக இருப்பதை பறைசாற்றும் செல்பேசி ரீங்காரங்களுக்கு மத்தியில் சென்னை மாநகரின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் விறுசுறுப்புடன் வந்து கொண்டிருந்தனர்.

கவிஞர் அண்ணாச்சி மட்டும் எல்லோரையும் கெட்ட வார்த்தை சொல்லி வைது கொண்டிருந்தார். அண்ணாச்சியின் அன்புப் பிடியில் சிக்காமல் எல்லோரும் எஸ்ஸாகிக் கொண்டிருக்க, தவறிச்சிக்கிய ஒரு இளைஞனிடம், பாலா படத்தில் தான் பிச்சைக்காரனாக நடித்தது குறித்து ரொம்பவும் துக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருந்தார். இளைஞன் அண்ணாச்சியின் பார்வையிலிருந்து பாக்கெட்டிலிருந்த 100 ரூபாய் நோட்டை அகற்ற அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

மேற்படி கூட்டத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பா. நி, சு. மோ இருவர் மட்டும்தான் என்பதை ஈண்டு எடுத்துரைக்கத் தேவையில்லை. ஒற்றை கடுக்கனுடன், மால்டோ வடோவா படம் போட்ட வானவில் வண்ண டீகாபி சட்டை, முக்காலி நீள பெர்முடா, தூக்கிவிடப்பட்ட ரேபான் கண்ணாடி, முக்கியமாக பக்கவாட்டில் சரியும் 50 வயதுத் தொப்பையுடன் வந்த பா. நி வேற்று கிரக ஜீவராசிகளை சந்திப்பது போல, நடந்து வந்தார். காதோரம் ஏறிய நரையுடன், முழுக்கை சட்டை, இன் செய்யப்பட்ட பேண்ட், செருப்பு என 95 தோற்றத்துடன் சு. மோ, தன்னால் மட்டுமே கண்டுபிடிக்கப்படுவதற்காக காத்திருக்கும் ஏதோ ஒரு தத்துவப் பிரச்சினையை ஆய்ந்த சலிப்புடன் அதே வேளையில் கூட்டத்தை உற்றுக் கவனித்தவாறு அதாவது தனது ஆதரவாளர்கள் எத்தனை பேர் என்று எண்ணியவாறு ஒரு சதாவதானி போல வந்து கொண்டிருந்தார். கூட்டத்திற்கு முன் இருவரும் ஒரே நேரத்தில் இப்படி எதிரெதிரே சந்திப்போம் என எதிர்பார்க்கவில்லை. சந்தித்தார்கள், கை குலுக்கினார்கள், உரையாடினார்கள்.

சு. மோ: ஹலோ பாரு எப்டி இருக்கீங்க,, பைபாஸ் சர்ஜரி முடிஞ்சு ஹெல்த் பரவாயில்லையா, உடம்மைப் பார்த்துக்கோங்க, இப்ப பாத்தீங்கன்னா உடம்பே ஆலயம்னு பண்டு சித்தர், இப்போ பல டாக்டர்ஸே ஒத்துக்கிட்ட விசயம். . . (வயதுக்கேத்த மாதிரி சட்டை போடாம அரை லூசு மாதிரி. . ஆபரேசன் பண்ணா உன் கொழுப்பையா எடுக்க முடியும்)

பா. நி: ம் ம் நல்லா இருக்கேன் (இவ்ளோ யூத்புல்லா இருப்பவனைப் பார்த்து இந்த அம்மாஞ்சிப்பய வேணும்னே கேக்குறானே, எவ்ளோ திமிர் இருக்கும்) பை தி வே கஜிதன் நல்லா மார்க் வாங்கிருக்கான்னு கேள்விப்பட்டேன், நல்லா என்கரேஜ் பண்ணுங்க, எனக்கும் அவனுக்கும் ஜாக்கி சான், ரஜினின்னு ஒத்துப் போற விசயம் பலது இருக்கு (உன்னோட ரம்பத்துக்கு அந்தப்பையன் எவ்வளவோ மேல், அவன்ட்டயும் டெய்லி விஷ்ணுபுரம் கதையச் சொல்லி சாவடிக்கறத நிறுத்தவா போற?)

சு. மோ: அதாவது பாரு. . இந்த உலகத்துல நாம நினைச்சு எதையும் செய்யறதில்ல, பாறைக்குள்ளேர்ந்து செடி முளைக்கிற மாதிரி அவனே பாத்துக்குவான்னு நினைக்கறேன். அவனைப் பத்தி நான் எழுதின பதிவை “தந்தைமை”ன்னு சொல்லி, தமிழில்ல இதுதான் பெஸ்ட்டுன்னு கனுஷ்ய பத்திரனே சொல்லிருக்காரு.

சா. நி: (அவனை நொண்டி நாய்னு சொல்லி ஒரு கதை எழுதினவன் நீ. அதுக்கு பழிவாங்கியிருப்பான்) அப்டியா நான் படிக்கலயே.

சு. மோ: ஆமா. அதுக்கு மட்டும் ஐம்பதாயிரம் ஹிட்ஸ், மத்தபடி அவன் இப்ப ரஜினி, ஜாக்கி சானையெல்லாம் விட்டுட்டான், இப்போ ஜென் தத்துவம், சங்க காலக் கவிதைகள், சத்ய சோதனை, அயோமா பவுத்தம்னு மூழ்கிட்டான். (சிங்கத்துக்கு பிறந்தது பன்னிக் குட்டியாகுமா முட்டாளே) அப்புறம் கூட்டத்துக்கு எப்படி வந்தீங்க, நான் திருவனந்தபுரத்துல இருந்து ஜெட் ஏர்வேஸ்ல வந்தேன், ஏர்போர்ட்ல என்னோட வாசகர், அம்பத்தூர்ல பெரிய பேக்டரியெல்லாம் வச்சுருக்குராரு. அவர்தான் என்னை பிக்கப் பண்ணி இங்க கூட்டி வந்தாரு (இதெல்லாம் சொன்னா உனக்கு பிரஷர் ஏறுமே, என்ன இருந்தாலும் சென்னையில கூட நான்தான் உன்னைவிட பாப்புலர்)

பா. நி: (நான் ஸ்டாப் ஃபிளைட்ல பாரிசு, சிங்கப்பூர், பாங்காக்னு போய்க்கிட்டு இருக்கவன் கிட்ட கட்ட வண்டியில போறதைப் பேசுறான் ஃபூல்) நான் ஸ்டேட்ஸ்ல இருந்து ஒரு அமெரிக்கன் மேட் என்னோட ஸீரோ டிகிரி பற்றி அதோட அமெரிக்க ரிலவென்ஸ் பற்றி டாக்டரேட் பண்றார், அவரை கன்னிமாரா பார்ல பாத்துட்டு அப்புடியே நடந்துவாரேன், (உன்னோட லெவல் ஆந்திரா பார்டர் தாண்டாது மச்சி, இதக்கேட்ட ஒடனே வயிறு பத்தணுமே)

சு. மோ: இந்த மாதிரி ரிசர்ச் பத்தியெலாம் எனக்கு நல்ல ஒப்பீனியன் இல்ல பாரு, எல்லாம் அகாடமிக் ஃபிரேம்குள்ள இருந்து எல்லாத்தையும் பாப்பாங்க, ஊர்க்குருவியின் சுதந்திரம் கூண்டுக்கிளிக்கு வராதுல்ல (அமெரிக்காவுல இல்லாத போர்னோ எழுத்தா? உன்னோடது பத்தி ஆராய்ச்சி செய்ய வாரன்னா அவன் எவ்ளோ மேங்கோ மடையனா இருக்கணும்) நானும் அடுத்த மாசம் கனடா போறேன், நயாக்ரா பக்கத்துல நைவேத்தய கிரின்னு ஒரு ஆசிரமத்துல இளைஞர்களுக்கு கவிதை பத்தி கிளாஸ் எடுக்குறோம், இன்னைக்குக் கூட அதப்பத்தித்தான் பேசலாம்னு இருக்கேன்

பா. நி: எல்லாம் அகாடமிக்ன்னு முத்திரை குத்தக்கூடாது, இந்த அமெரிக்கா காரன் ஒரு பின் நவீனத்துவக் கொண்டாட்டக்காரன், கூவம் குடிசைங்களுக்கு போய் சுண்டக்கஞ்சி அடிக்குற ஆளு, பெரிய பிலாசபிக்காரர், அவருக்கு என்னோட நாவல் அதான் இப்போ இங்கிலீசுல வந்திருக்கே, நீங்களும் கேள்விப்பட்டிருக்கணுமே, ஓரே நேரத்துல நியூயார்க், பாரிஸ், சிட்னி, லண்டன்ன்னு எல்லா இடத்துலயும் ரீலீஸ் ஆயிருக்கு, இந்த வருடம் புக்கருக்கு செலக்ட் ஆகும்னு என்னுடைய பாரிஸ் தோழி இப்பதான் மெசேஜ் அனுப்பியிருக்கா. அந்த அமெரிக்கர் என்னோட நாவல் அமெரிக்கனின் பிராப்ளத்தை ஹார்ட் டு ஹார்ட் பேசுதுன்னு ரொம்ப டீப்பா பீல் பண்ணி ரிசர்ச் பண்றார். (நான்தான் உலக எழுத்தாளன்னு உலகமே ஒத்துக்கிட்ட விசயம், நீ உள்ளூர்ல குப்பை கொட்டிக்கிட்டிருக்க, கற்பூர வாசனை கழுதைக்கு தெரியுமா)

சு. மோ: அது வந்து பாரு இப்ப பாத்தீங்கன்னா எனக்கு மொழிபெயர்ப்புகள் மேலயே பெரிய நம்பிக்கையில்லை. கசந்தகுமார் கூட விஷ்ணுபுரத்த லாங்குவேஜூல பெரிய கமாண்ட் உள்ளவங்கிட்ட குடுத்து மொழிபெயர்த்தார், எனக்குத்தான் திருப்தி இல்லை, என்னோட மனவெளி, மொழிபெயர்ப்புல மிஸ்ஸாகுதுன்னு பீல் பண்ணி வேணாம்னு சொல்லிட்டேன். இத இங்கிலீசுல போட்டா பல ஆயிரம் விக்கும்னாங்க. நான் ஒத்துக்கல, என்ன இருந்தாலும் கலையில காம்பரமைஸ் பண்ணக்கூடாது இல்லையா (உன்ன மாதிரி கனிமொழி, அந்துமணி, கமலஹாசன்னு ஜால்ரா போட்டு பிழைக்குறவன் நானில்லை) அப்புறம் புக்கர் பத்தியெல்லாம் எனக்கு பெரிய அபிப்ராயமில்லை. அருந்ததிராய் படிச்சுருக்கேன், எல்லாம் குருவி மண்டைங்க எழுத்து, வெளிநாட்டு மன நிலையில் நம்ம பண்பாட்டை கேலி செய்து எழுதப்பட்டதால வெஸ்ட்டர்ன் மார்க்கெட்ல ஹிட் ஆகலாம்,

பா. நி: உங்க கருத்த அடியோட மறுக்குறேன் சுயமோகன். இலக்கியத்துல வெளிநாடு உள்நாடுன்னு பிரிவினை பிரிக்கறது பாசிசம்னு நினைக்கிறேன். ஒரு தென்னமரிக்கனின் கொண்டாட்ட மனநிலையை என்னோட எழுத்து டச் பண்ணுதுன்னு பார்க்குறேன். ஆக்சுவலா நானெல்லாம் பிரேசிலில் பிறந்து சாக்கர் விளையாடி சம்பா நடனம் ஆடவேண்டிய ஆளு, ஏதோ இங்க பிறந்து சாம்பார், ரசம்னு விதிக்கப்பட்ட பூமியில சகிச்சுக்கிட்டு வாழறேன். என்னப் பொறுத்தவரை கலைக்கு மொழி கிடையாது, அதோடு கவித்துவமான மொழி எல்லா இடத்துலயும் பாஸாக முடியும், ஏன் என்னையே எடுத்துக்கங்களேன், சுட்டுப் போட்டாக்கூட மலையாளம் எனக்கு வராது, நீங்களோ மலையாளத்துல கதா கலேட்சபமே நடத்தக்கூடிய ஸ்கில் உள்ளவரு, இப்போ என்னோட புக்ஸ் எல்லாமே மலையாளத்துல ரீலீஸ் ஆகி மாதத்துல பாதி நாளு கடவுளோட சொந்த தேசத்திலதான் சுத்திக்கிட்டு, புட்டு, பயிறு, பப்படம்னு ஆயிட்டுது வாழ்க்கை, கேரளாவுல 88 இடத்துல எனக்கு கட்அவுட் வைச்சுருக்காங்க, மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்த இடத்துல நான்தான்னு சொல்றாங்க, இதெல்லாம் பெரிய விசயம்னு நானும் எடுத்துக்கல, நான் சொல்ல வர பாயிண்டு இலக்கியத்துக்கு மொழி ஒரு ஓபனிங்தான். (மலையாளத்துல நான்தான் சூப்பர் ஸ்டாருன்றது தெரிஞ்சு நீ எத்தனை நாள் தூங்காம இருந்தேன்னு உன் அறுவைகளை வேறு வழியில்லாமல் படித்து ஃபுரூப் பாக்கும் உன் மனைவியிடம் கேட்டால் உண்மை தெரியும்)

சு. மோ: (சற்று பதட்டமடைந்து) ஐயோ பாரு கேரளாவோட நிலைமையே வேறு, அங்க மரபு ரீதியான எழுத்துக்களுக்கு மத்தியில ஒரு ரீலீஃப்பாத்தான் உங்களைப் பாக்குறாங்கன்னு கிருஷ்ணன் குட்டி கூட சொல்லிட்டிருந்தார். இதப்பத்தி நானும் நிறைய எழுதியிருக்கேனே, நம்ம தமிழ்ல இருக்குற நவீன எழுத்தெல்லாம் அங்க அதிகமில்லை, ஒரு மாதிரி பாப்புலர் லெவல்லதான் சீரியஸ் லிட்டரேச்சர் இயங்குறதால அதுவே அவங்களுக்கு ஒரு தடை ஆயிடுதில்ல, மத்தபடி நீங்க மலையாளத்துல என்ட்ரி ஆனது எனக்குக்கூட பரவசமான மனநிலையைத்தான் குடுத்திருக்கு. பாலாவுக்கு வசனம் எழுதிக்கிட்டிருக்கிறப்போ கேரளாவோட ரசனை பற்றி ஒரு பெரிய டிஸ்கஷன் பண்ணினோம். நீங்க சொன்ன உடன இப்போதான் மெமரி ஸ்ட்ரைக் ஆகுது. (சினிமாவுக்கு நான் வசனம் எழுதுறதப்பத்தி நீ மனம் நொந்து எத்தனை நாள் பார்க் ஷெர்ட்டன்ல சரக்கடிச்சேன்னு அந்துமணிகிட்ட கேட்டதான் தெரியும், அவிடே பிராந்தனக்க சாகித்யக்காரனானு கேட்டோ)

சா. நி: (அதேபோல பதட்டமடைந்து) இல்ல சுயமோகன், சினிமாவில தீவிர இலக்கியவாதிகளுக்கு இடமுண்டான்னு தெரியலை, ஆரம்பத்துல நீங்களும், மெஸ். கிராமகிருஷ்ணனும் எழுதறதப் பத்தி, போஸ்டர்ஸ்ல உங்க பெயர் பாத்துட்டு கூத்தாடிருக்கிறேன். ஆனா நம்மள ஒரு காண்டம் மாதிரி அவங்க யூஸ் பண்ணிக்கிட்டு த்ரோ பண்ணிடுவாங்க, ஏதோ பணம் கொஞ்சம் கிடைக்கலாம், ஆனா ரியல் சேட்டிஸ்பேக்ஷன் அங்க கிடைக்காதுன்றதுதான் என்னோட ஸ்ட்ராங்கான ஃபீலிங்.

சு. மோ: அலோ. . . ஏதோ கேரளாவில சில அரைக் கிராக்குங்க உன்னை சுத்தி வருதுன்னு ரொம்ப ஆடாத, தமிழ் நாட்டுல குழாயில தண்ணிவரலேன்னா கூட கவலைப்படாத ஷோக்குப் பேர்வழி, கேரளாவில விவசாயிகளுக்காக கோகோ கோலாவ எதிர்த்து போராட மாதிரி சீன் காட்டுற. . .

பா. நி: நிறுத்துடா. ஏதோ ரெண்டு சினிமாவுல ஐஞ்சு தயிர் சாத கேரக்டருக்காக வாந்தி எடுத்துட்டு காசு பொறுக்கினு வர ஆளு நீ. என்மேல உனக்கு காண்டு, கொலைவெறிங்குறத ஒத்துக்கடா என் பிளாக்குக்கு டெய்லி பத்தாயிரம் ஹிட்ஸ் தெரியுமாடாபெரிசா பேசவந்துட்டான்

சு. மோ: ஐயோ உன் ஹிட்ஸ் கதைதான் நெட்டுல நாறுதே. வியூஸ் எல்லாம் ஹிட்ஸ்னு கள்ளக் கணக்கு காட்டிட்டு, அதுக்கு துட்டு கேட்டு கேவலப்பட்டு, அப்புறம் ஒரு நாயும் படிக்க மாட்டான்னு பிச்சை கேக்குறஞ் உன்னை மாதிரி நான் இல்லைடா மானம் கெட்டவனே.

பா. நி: நிறுத்துடா டெய்லி ஐஞ்சாறு பதிவு போடுற மெஷின், நீயெல்லாம் வொர்க் ஷாப் வெச்சு பிழைக்க வேண்டியவன், கவர்மண்டு காசுல வாழ்ந்துட்டு அதுவும் பணிநேரத்துல தூங்குறேன்னு அதையும் வெக்க மானமில்லாம பிளாக்ல எழுதிட்டு, ஏதோ கீதை, பேதைன்னு ரீல் விட்டுட்டு காலத்த ஓட்டற நான்சென்ஸ். இலக்கியத்தை நம்பி என்னை மாதிரி வி. ஆர். எஸ் வாங்க தைரியம் இருக்காடா உனக்கு?

சு. மோ: போடா. . .

பா. நி. : போடா. . . 

அடுத்து இவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. தெரிந்தால் எழுதி அனுப்புங்கள். நன்றி:

(நன்றி: www.vinavu.wordpress.com)

Pin It