கீற்றில் தேட...

 

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றவே செய்வர். ஆன்மீகத்தின் பெயரால் மக்களை சுரண்டும் போலி சாமியார்கள் அவ்வப்போது பிடிபட்டு அவர்களை பற்றிய செய்திகள் வெளியானாலும் போலி சாமியார்களை நம்பும் மக்கள் திருந்துவதுபோல் தெரியவில்லை.

இத்தகைய போலி சாமியார்கள் பட்டியலில் ஒரு முக்காலி சாமியார் பற்றிய பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. இதில் ஏனைய சாமி யார்களுக்கும் இவருக்கும் ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. மற்ற சாமியார்கள் எல்லாம் காணாமல்போன பொருட்களை கண்டுபிடித்து தருவதாக கதை விட்டால், இவரோ காணாமல் போன கடவுளையே(?) கண்டுபிடித்து தருவதாக கதை விட்டு கடைசியில் கம்பி நீட்டியுள்ளார்.

காரைக்குடி அருகே 15 கி.மீ தூரத்தில் உள்ளது அந்த கிராமம். அங்கு ஒரு அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மறைவான ஒரு இடத்தில் சுவாமி சிலை உள்ளது. இந்த சிலை கடந்த ஆண்டு காணாமல் போய் விட்டதாக கிராம மக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர்.

காவல்துறை அதிகாரி விசாரணையை மேற்கொண்டபோது, காணாமல்போன சுவாமி சிலை எது? அந்த சாமியின் பெயர் என்ன? எந்த உலோகத்தால் ஆனது? அதன் மதிப்பு என்ன? அதனை பார்த்தவர்கள் யார் என்ற போலீசார்களின் கேள்விகளுக்கு யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அந்த புகாரின் பேரில் போலீசாரால் வழக்கு கூட பதிவு செய்ய முடிய வில்லை.

இந்நிலையில், அறந்தாங்கியில் உள்ள முக்காலி சாமியார் என்பவரிடம் சாமி சிலை காணாமல் போனது குறித்து முறையிடப்பட்டது. அவரோ கவலைப்படாதீர்கள் நான் கண்டுபிடித்து தருகிறேன் என காரியத்தில் இறங்கினார்.

உடனே கிராமத்தில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடானது. பூஜையின் முடிவில் முக்காலி ஒன்றை நிறுத்தினார் அறந்தாங்கி சாமியார். அதனை அந்த பகுதி குழந்தை கள் சிலர் தொட வேண்டும் எனவும், அதன் பின் முக்காலி தானாகவே நகர்ந்து சாமி சிலையை திருடியவர் வீட்டுக்கே சென்று விடும் என கூறினார். அதன்பின் சாமியார் செய்த தந்திரமும், குழந்தைகள் கைகளால் முக்காலியை அழுத்தியதாலும் முக்காலி லேசாக நகரத் தொடங்கியது.

இதனால் பரபரப்பான அப்பகுதி மக்கள் கூட்டம் முக்காலி பின்னாலும், முக்காலி சாமியாரின் பின்னாலும் ஆர்வத்துடன் சென்றனர். காலையில் ஆரம்பித்த சாமியை தேடிய முக்காலி சாமியாரின் கண்டுபிடிப்பு படலம். காடு,மேடு, கண்மாய் என நகர்ந்து இரவிலேயே அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் வீட்டு முன்பு நின்றது.

அந்த வீட்டில் இருந்த பெரியவர் ஊர் மக்கள் மத்தியில் நல்ல பெயரோடும், புகழோடும் வாழ்ந்து வரும் பிரமுகராம். அவரது மகன்களும் நல்ல வேலையில் இருப்பவர்களாம். இதனால் சாமியாரின் செயல் மீது சந்தேகம் அடைந்த ஊர்மக்கள் சாமியாரை சுற்றி வளைத்துக் கொண்டனர்.

நீங்கள் கூறியப்படி அந்த சிலை இங்கு இருந்தால் நீங்கள் எடுத்து தாருங்கள் ஒரு கோடி ரூபாய் தருகிறோம்; இல்லையென்றால் "பிராடுத்தனம்' செய்த முக்காலி சாமியாரை சும்மா விடமாட்டோம் என கூறினர். கூட்டத்தில் நின்ற சிலர் முக்காலியோடு சேர்த்து சாமியாரை மரத்தில் கட்டுங்கள் என கூச்சலிட அந்த இடமே பரபரப்பானது.

அடுத்த நொடியில் ஊர் மக்கள் காலில் விழுந்த முக்காலி சாமியார், "அய்யா என்னை விட்டு, விடுங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இதை செய்து விட்டேன்; இனி மேல் இதுபோன்ற பிராடுத்தனத்தில் ஈடுபட மாட்டேன் என சத்தியம் செய்து கதறி அழத் தொடங்கி விட்டார். அதன் பின் ஊர்மக்கள் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

முக்காலி சாமியாரின் ஒவ்வொரு நடவடிக்கையை கூர்ந்து கவனித்த போலீசார், முக்காலி சாமியாரின் பிராடுதனத்தை மக்களே புரிந்து கொண்டதால், இதுபோன்று ஏமாறாதீர்கள் என அறிவுரை கூறி சென்று விட்டனர். இந்த முக்காலி சாமியாரின் விஷயத்தில் முடிவிலாவது மக்கள் விழித்துக் கொண்டனர். ஆனால், "முற்றிலும் துறந்த! முக்காலிகள் முன்னால் இன்னும் சரணடையும் முட்டாள்தனமான மக்கள் என்றைக்குத்தான் விழிப்ப டைவார்களோ?

- தரசை தென்றல்