தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்! கரைமேல் இருக்க வைத்தான், எங்களை கண்ணீரில் மிதக்க விட்டான்....

மேற்கண்ட வரிகள் தமிழ் திரைப்படத்தின் பிரபலமான பாடல் வரிகள். இந்த வரிகளை எழுதும்போது அந்தக் கவிஞர் எந்த எண்ணத்தில் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் தமிழக கரையோர மீனவர்கள் தினந்தோறும் கண்ணீரில் மிதந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

மீன் பிடிக்க படகில் சென்று கணவன் வரவுக்காக காத்திருக்கும் மனைவி பிரார்த்தனை செய்யும்போது, "கணவன் அதிக அளவு மீன்களை பிடித்துக் கொண்டு வர வேண்டும்" என்று பிரார்த்தனை செய்வதில்லை. மாறாக, சிங்கள ராணுவத்தின் கண்களில் படாமல் எப்படியாவது மீண்டு விட வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்கிறாள்.

அந்த அளவிற்கு சிங்கள ராணுவத்தின் அட்டூழியம் தலைதூக்கி நிற்கிறது. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை இடைமறிக்கும் சிங்கள ராணுவம், தயவு தாட்சண்யம் பாராமல் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. வலைகளை அறுத்தெறிவது மட்டுமல்லாமல் அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களையும் கொள்ளையடித்துச் செல்கிறது.

தமிழ்நாட்டிற்கும் - இலங்கைக்கும் இடையே உள்ள கடல் குறுகிய எல்லைப் பரப்பைக் கொண்டது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 16 கிலோ மீட்டர்கள் வரை உள்ள கடல் பகுதி அந்த நாட்டின் கடல் எல்லையாக வரையறுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் கடற்கரையில் இருந்து 16 கிலோ மீட்டருக்குள் கச்சத்தீவு உள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவை இரண்டு நாட்டு மீனவர்களும் இந்தப் பகுதியில் மீன் பிடிக்கலாம், வலை உலர்த்த, ஓய்வெடுக்க கச்சத் தீவைப் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடுகளுடனும் கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

கடல் எல்லையான 16 கிலோ மீட்டர்களில் முதல் 6 கிலோ மீட்டர்கள் கற்களும், பாறைகளும் உள்ள பகுதி என்பதால் இங்கே பெருமளவில் மீன்கள் கிடைப்பதில்லை. 6 முதல் 10 கிலோ மீட்டர் வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் கட்டுமர மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டுமென்ற வரையறை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் உள்ள பகுதியில் தான் மோட்டார் படகில் செல்லும் மீனவர்கள் மீன் பிடிக்க முடியும். இந்தப் பகுதியில் மீன் பிடிக்கும்போது கடலில் அலையோட்டத்தின் காரணமாகவும், பலமான காற்றின் காரணமாகவும், இருட்டில் சரிவர திசை தெரியாத காரணத்தினாலும் அந்த எல்லையை தாண்டிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

இந்த எல்லையைத் தாண்டும் மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கடத்துவதாக காரணம் கூறினர் சிங்கள ராணுவத்தினர்.

ஆனால் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த போதிலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இலங்கை ராணுவத்தின் கடத்தல் குற்றச்சாட்டாவது உண்மையா என்று பார்த்தால் அதுவும் வடிகட்டிய பொய் என்பது தெரிகிறது.

இப்பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கென்று அரசாங்கத்தின் சார்பாக அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைகளை மீன்பிடி துறைமுகத்தில் ஒரு தடவையும், 10வது கிலோ மீட்டரில் ஒரு முறையும் ராணுவம் மற்றும் காவல் துறையினர் சோதனை செய்கின்றனர். மேலும் படகில் இருக்கும் பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். இவ்வளவுக்குப் பிறகு நாங்கள் என்ன கடத்தல் செய்ய முடியும் என்று மீனவர்கள் பொருமுகின்றனர்.

படகுகளைச் சோதனை செய்யும் இந்திய ராணுவம், இலங்கை ராணுவம் தாக்குதல் நடததும்போது உதவிக்கு வந்ததாக சரித்திரமேயில்லை. இதுவரையில் 500க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உடல் ஊனமாக்கப்பட்டு தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். 1500க்கும் மேற்பட்ட மோட்டார் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய மீனவர்களைத் தொடர்ந்து படுகொலை செய்யும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர் சங்கங்கள் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கடந்த 9ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்.இ.ராஜா (அகில இந்திய மீனவர் சங்கம்), ஜெயபாலையன் (தலைவர், தென்னிந்திய மீனவர் பேரவை), ஜெயக்குமார் (கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம்), மாறன் (தலைவர், தமிழ்நாடு மீனவ முன்னேற்றச் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு மீனவ அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மனித உரிமை ஆர்வலரான டிஎஸ்எஸ் மணி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

வல்லரசான இந்தியாவின் மீனவர்களை காக்கை, குருவியை சுடுவது போல இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதும், அதனை மத்திய - மாநில அரசுகள் பார்த்துக் கொண்டு இருப்பதும் கேவலமான ஒன்று.

தனது வாரிசுகளுக்கு மந்திரி பதவி வேண்டுமென்றால் வீரம் காட்டுவதும், மக்கள் பிரச்சினைகள் என்றால் கடிதம் எழுதுமாக பாவ்லா காட்டி முதல்வர் வேஷம் போட்டால், வரும் தேர்தலில் ஆட்சிக் கனவுகள் எல்லாம் சின்னாபின்னமாகிவிடும்.

தமிழன்தானே அடிபடுகிறான் - சாகிறான் என்று மத்திய அரசு மேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் உலக அரங்கில் இந்தியாவுக்குத் தான் கேவலமே தவிர தமிழ்நாட்டிற்கல்ல.

- அபு சுபஹான்

Pin It