குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்

doctor semmalarஎன்றார் தமிழர் வாழ்வியலை வகுத்தளித்த வள்ளுவப் பெருந்தகை. ஆனால், அன்பு நிறைத் தோழி செம்மலர் குரல் கேட்டிருப்பின் அவ்வள்ளுவப் பெருந்தகை தம் குறளை மாற்றியிருப்பாரோ! என்று எண்ணுகிற அளவுக்குத் தம் மலரினும் மெல்லிய குரலால் மலையினும் கடினமான செய்தியைக் கூட மிக எளிமையாக, இனிதே எடுத்துரைக்கும் வல்லமை வாய்ந்தவர் நம் செம்மலர்..!

யாராகினும், எந்நேரமாயினும், எந்நிலையாயினும், எந்தச் சிக்கலுக்காகவும் அவரைக் கைப்பேசியில் அழைத்தால் சொல்லுங்க தோழர், எப்படி இருக்கீங்க! எனும் இன்சொல்லைக் கூறி, மெல்லிய புன்னகையோடு கேட்பவருக்கான விடையையோ மருந்தையோ கொடுக்கும் அன்பும் அறனும் நிறைந்தவர்..

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொலினதே அறம்

எனும் அறத்தின் வழிநின்று மனிதம் அறக்கட்டளை வழியாக மனிதம் காக்கும் ஒல்லியல் மருத்துவம் வழங்கி வாழ்வாங்கு வாழ்ந்தவர்..

ஆருயிர்த் தோழன் அன்புத் தமையன் தி.துரைசித்தார்த்தன் அவர்களை வாழ்விணையராக ஏற்ற நாள் முதல், 14 ஆண்டுகள் நம் கட்சிக் குடும்பத்தார் பலரின் உடல்நலம் மீதும் அளவற்ற அக்கறை கொண்டு மருத்துவக் குறிப்புகள் வழங்கியவர்..

தோழர் ஆனைமுத்து மீது வான் கடந்த மதிப்பும் மாறாப் பற்றும் கொண்டவர். அய்யாவின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர் நம் செம்மலர் என்பதற்கு அய்யா ஆனைமுத்து பங்கேற்ற இறுதிப் பொதுக்குழுவே சான்று..!

கொரோனா பெருந்தொற்று முதல் அலையில் பார்ப்போருக்கெல்லாம் தற்காப்பு மருத்துவக் குறிப்புகளைச் சொல்லி, தேடித் தேடிச் சென்றும், நேரில் அழைத்தும், அஞ்சல் வழியிலும் மருந்துகளை வழங்கிய மனிதநேயர்..

18.5.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை திருச்சிக்கு மருத்துவமனைக்கு அவர் செல்லுகிற போது கூட தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், தாம் மருத்துவமனைக்குச் செல்கிறேன் என்கிற செய்தியைச் சொல்லாமல், பெருந்தொற்று குறித்த மருத்துவ ஆலோசனைக்கு இன்னொருவரை அணியப்படுத்தி வைத்துவிட்டுப் பதிவிட்ட பின்வரும் செய்தி இதோ ..

“அனைவருக்கும் வணக்கம். நான் வெளியூர் செல்வதால் உங்கள் அழைப்பை ஏற்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால் மருத்துவ ஆலோசனை பெற மருத்துவர் மஞ்சுளா அவர்களை தொடர்பு கொள்ளவும். நன்றி!”

இதுவே அவர் வழங்கிய இறுதிச் செய்தியாகி விட்டது. அய்யகோ! வெளியூர் செல்வதாகச் சொன்னவர் வீடு திரும்பவே இயலாமற் போய் விட்டது.

இரண்டாம் அலை பற்றிய அவரின் கணிப்பும், தம் மருத்துவத்தின் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய நம்பிக்கையும், உறுதியுமே அவரைக் காவு வாங்கிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது.. தாம் மருத்துவக் கொள்கையை நிலைப்படுத்த தன்னையே கொடையளித்து விட்டார் மக்கள் மருத்துவர் செம்மலர்..

26.11.2006-இல் சித்தார்த்தன்-செம்மலர் மணவிழா அழைப்பு அச்சடிக்க முதன்முதலாகத் திருச்சியில் சந்தித்த நாள் முதல் 18.5.2021 மருத்துவமனைக்குச் செல்லும் வரை எல்லா நிகழ்வுகளும் வந்து வந்து நெஞ்சை மோதிச் செல்கின்றன. காற்றினும் மெல்லிய
அந்தக் குரல் இப்போதும் காதுகளில் நினைவுகளாக ஒலித்துக் குடைகிறது..

தந்தை பெரியார் அவர்கள் தம் துணைவியார் நாகம்மையார் மறைந்தபோது எழுதிய இரங்கல் இலக்கியத்தின் ஆழத்தை தோழர் ஆனைமுத்து எழுத்துகளால் தான் எல்லோரும் அறிந்தோம்.

மாமேதை மார்க்சு - ஜென்னி இணையரின் ஒப்பற்ற காதலை அய்யா ஆனைமுத்து அவர்கள் தம் துணைவியார் சுசீலா அம்மமையாருக்கு எழுதிய இரங்கலின் வழி புரிந்தோம். இவ்விரண்டின் வலியை ஆருயிர்த் தோழன் சித்தார்த்தன் தம் செம்மலரை இழந்து வாடி வதங்கியதை நேரில் கண்ணுற்ற போதுதான் உணர முடிந்தது..

25.05.2021 காலையில் செம்மலருக்கு முதல் சுற்றில் மருத்துவம் பார்த்த மருத்துவர் இராமமூர்த்தியிடம் பேசியபோது, “ஆறுநாள் கடந்து விட்டது. அது நம்பிக்கை தருகிறது!”என்றார். அன்று காலை 10 மணிக்கு செம்மலர் மாறாத இன்முகத்துடன் கையசைத்த காணொளியைக் கண்ணுற்றதும் தோழர்களுக்கும் உறவுகளுக்கும் முன்னனுப்பி செம்மலர் மீண்டு விடுவார் என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லி வந்தோம்.. நாள்தோறும் செம்மலரின் உடல்நிலை பற்றிக் கேட்டு வந்த தோழர் மதனகவி, காணொளி கண்டதும் “இப்போதுதான் தோழர் ஒரு வாரம் இருந்த மனக்குடைச்சல் போயிற்று!” என்றார்..

எழுந்து வருவார் என்று எல்லோரும் நம்பியிருந்த வேளையில், அன்புத் தோழமை, தங்கை செம்மலர் தம் இறுதிப் பயணத்தைத்தான் அதே மெல்லிய புன்முறுவலோடு கையசைத்துப் பிரியா விடை சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்..!

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மகளிர் அணியின் ஆற்றல்மிக்க தோழர் மக்கள் மருத்துவர் எ. செம்மலர் 26.5.2021 புதன் கிழமை அன்று நண்பகலில் நம்மைப் பிரிந்தார். திருச்சி அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து 27.5.2021 காலை பகல் 11.45 மணிக்கு மா.பெ.பொ.க. கொடிபோர்த்தி செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைத்தோம்.

இறப்பை ஏற்கும் பகுத்தறிவு உள்ளங்களுக்கும் தோழர் செம்மலரின் இறப்பை ஏற்பதென்பது மலையினும் கடினமானதாகி மறுக்கிறது..

மக்கள் மருத்துவர் செம்மலர் தம் நுல்களான ‘ஒமியோ எனும் ஒல்லியல் மருத்துவம்’, ‘மழலை மொழி அறி’, ‘நோயும் மனமும்’ போன்ற நூல்களின் வழி வரலாற்றிலும், அவர் காட்டிய அன்பறம் வழி எல்லோர் நெஞ்சத்திலும் இறவாது வாழ்வார்..!

தோழர் செம்மலருக்கு செவ்வணக்கம்!

- முனைவர் முத்தமிழ்

Pin It