protest copyதமிழ்நாடு நாள் விழாக்களும் போராட்டங்களும் ...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு அமைந்த நாளைத் தமிழ்நாடு அளாவிய பெரு விழாவாகக் கொண்டாட முடிவெடுத்து, அத் தகவலை அரசுக்கும் முறையாகத் தெரிவித்தோடு, நவம்பர் முதல் நாளைப் பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், தமிழ் நாட்டுக்கென ஒரு கொடியை அறிவிக்கவும் கோரிக்கை வைத்திருந்தது.

தமிழ்நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், கொடி ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் திடுமெனக் கூறி, 31.10.2020 மாலையிலிருந்தே தமிழ் நாடெங்கும் உள்ள பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பியக்கப் பொறுப்பாளர் களையெல்லாம் தேடித் தேடிக் காவல் துறையினர் கொடியேற்றக் கூடாது எனும் அறிவிப்பை இர வோடு இரவாகக் கொடுத்துச் சென்றனர்.

அந்த இரண்டடித் துணி இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானதாம். தமிழ்நாடு படம் உள்ள அந்தக் கொடி இந்தியாவைத் துண்டாடிச் சிதைத்து விடுமாம். கொடி ஏற்றினால் 124-ஏ சட்டம் பாயும் என காவல்துறையின்மூலம் அடக்குமுறைகளை ஏவியது, பாசக ஏவலாளியான அதிமுக அரசு.

மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்தில் அத்துமீறிப் புகுந்து பதாகைகளையும் கொடிகளையும் பறித்துச்சென்றதுடன், விழா ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர் தம்பி மண்டேலா; அதேபோல் இனிப்பு மட்டுமே வழங்கிய வட சென்னை தோழர்கள் 13 பேர் மற்றும் பட்டாபிராம் பகுதித் தோழர்கள் 6 பேர் என 21 பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்புத் தோழர்களையும், மற்ற பல்வேறு அமைப்புகளின் தோழர்களையும் தாயக நாள் விழா கொண்டாடியதற்காகத் தளைப்படுத்தி கொடுஞ் சட்டப் பிரிவுகளான 124-ஏ, 143, 188, 353, 506(1) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையிலடைத்தது தமிழ்நாடு அரசு.

இக் கொடுஞ்செயலைக் கண்டித்துப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். 07.11.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கூட் டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தற்போது 21 தோழர்களும் நீதி மன்றப் பிணையில் வெளிவந்துள்ளனர். தமிழ் நாட்டிற்கென ஒரு கொடியை அடையாளப் படுத்தியதற்காக தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

- சிந்தனையாளன்

Pin It