தன்னிடம் மட்டுமே திராவிடம் என்று
தருக்கும் தன்னலம்
ஐயா,
உங்கள் விடுதலைக் கோட்பாடு
ஒவ்வொன்றுக்கும்
சொட்டுச் சொட்டாய் ஊட்டுகிறது
கள்ளிப்பால்.
துயரத்தின் போர்க் கொடியாம்
உயர்த்தப்பட்ட கருமை
நயவஞ்சகத்தின் திரையாகிவிட்டது.
தனக்கான பேரங்கள்
இனத்துக்கான பேரங்களாய்ச்
செய்யப்படும் ஒப்பனையில்
காணாமற் போகிறது
விடுதலையின் திசைமுகம்!
ஐயா
வெடிப்புறப் பேச யாருமில்லை இன்று
உங்கள் தீப்பொறிகளை
வைக்கம் தொடங்கிச்
சட்ட எரிப்பு வரை நீண்ட
களங்களில் அன்றித்
தேட முடியாது
உச்சாடனப் பூசாரிகளின்
உடுக்கைகளில்
இயலாமையின் பேனாமுனைகள்
இந்தப் பேனாமுனையை முடக்குமுன்
குருதிச் சொல்லாலும்
நெருப்பின் குரலாலும்
இதைத்தான் சொல்லியாக வேண்டும்.
Pin It