உலகமய யானையின் கால்

முதலில் ஏறி மிதித்தது

நெசவாளனின் வயிற்றை

இங்கிலாந்தின் தொழிற்புரட்சி

இவனுக்களித்ததோ

தொழில் வறட்சி

'சில்க் ரூட்' வழியாக

சீனா வரை வாணிபம் செய்தவன்

சென்னை மண்ணடியில்

சிதிலமாகிப் போனான்

அடுத்தடுத்து வரும் ஆபத்துகளை

அறியமாட்டாமல்

அரசியல் காற்றால்

நூலறுந்து போனான் இவன்

விசைத் தறியின் விசையில்

காற்றில் பறந்தன

கைத்தறிகள்

பொட்டி பலகைக்குள்

பாய்ந்த நாடாக்கள்

விசை தவறி

அவன் பிள்ளைக்குட்டிகளின்

வயிற்றில் பாய்ந்தன

கால்குழி மிதியடிகளின் கீழ்

தன் வாழ்க்கையே மிதிபட்டுக்கொண்டிருப்பதை

அவன் உலகுக்குக்கு

உணர்த்தவில்லை

'முதலியார் ஜம்பம்

விளக்கெண்ணெய்க்கே கேடென்பது'

வேளாவேளைக்கு

நிரூபணமாகிக்கொண்டிருந்தது

நெடுநாள்களாகவே

தெருவில்தான்

பாவு தோய்ந்துக் கொண்டிருந்தான்

பின்னர்

தெருவுக்கே வந்துவிட்டான்

உலகின் மானம்காக்க

ஆடை நெய்தவன்

மிச்சமான துண்டுத்துணிகளால்

தன்மானம் காத்தான்

'இழைக்கு ஒரு வெட்டு' என

உழைத்த அவன் கைகள்

தறிக்கப்பட்டு நாளாகிவிட்டது

கைத்தறி நெசவாளனின் வறுமை வாழ்வை

இதைவிடச் சுருக்கமாகச்

சொல்லமுடியாது

"தல்லக்கு புல்லக்குத்

தறி நெஞ்சான்;

தட்டான் வூட்டுல

கூழ் குடிச்சான்"!...

Pin It