கீற்றில் தேட...

 

அனைவருக்கும்
அடிப்படை உரிமைகள் ஏழாம்.
அரசமைப்புச் சட்டம் சொல்கிறது.
இந்தியர்களுக்கு
‘எழுத்துரிமை’ உண்டாம்.
இந்தியச் சொந்தங்கள்
இலங்கையில் கொன்று குவிக்கப் படுவதைத்
தட்டிக் கேட்டதற்கு
நெடுமாறன், வைகோ, சீமான்களுக்குச் சிறை.
மிசா, தடா, பொடா என
வழிநெடுக வாய்பூட்டுச் சட்டங்கள்
இவர்கள் இந்தியர்களால்
இவர்களுக்குப் ‘பேச்சுரிமை’ உண்டாம்.
முப்பது கோடிப்பேர்
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளதாய்
அரசுக் கணக்கே
அம்மணமாய் ஒத்துக்கொள்கிறது.
ஒரு கைப்பிடி மண்கூடச் சொந்தமில்லாத
இவர்களும் இந்தியர்களாம்
இவர்களுக்கும் ‘சொத்துரிமை’ உண்டாம்.
சுதந்தரம் பெற்று
அறுபத்து நான்கு ஆண்டுகள் கழித்து
வல்லரசு என
வாய்கிழியப் பீற்றிக் கொள்ளும்
கல்விக் கடவுள் சரஸ்வதி வாழ்கிற
இந்தியாவின் மக்கள் தொகையில்
கால் பங்குப் பேருக்கு இன்னும்
கல்வி சென்று சேரவில்லை.
ஆனால் இவர்களும் இந்தியர்கள்
இவர்களது ‘அடிப்படை உரிமை கல்வி’.
மசூதி இடிப்பு, கோத்ரா தீ வைப்பு
பாதிரியார் எரிப்பு எனக்
கோரத்தாண்டவமாடும் திரிசூல தேசத்தில்
‘வழிபாட்டு உரிமை’ அடிப்படையானதாம்.
அடப் போங்கடா
நீங்களும் உங்கள் சட்டமும்.
எல்லா உரிமைகளின்
கொட்டைகளையும் நசுக்கிக் காயடித்துவிட்டு
‘வாக்குரிமையின்’ பெருமையை மட்டும்
வாய்கிழியப் பேசி, எழுதிப்
பணம் கொடுத்து, காலில் விழுந்து ஏமாற்றி
வாக்காள பொலிகாளைகளைக் கொண்டு
சினைப் படுத்தப்பட்டு கிடக்கிறது
வாக்குப் பெட்டி.
அதுவாகப் பிரசவிக்க
வாய்ப்பில்லை என்பதனால்
மே பதிமூன்றில்
வாக்குப் பெட்டியின் வயிற்றைக் கிழித்து
பிள்ளைப் பேறு நடத்துவார்கள்
தேர்தல் ஆணைய மருத்துவர்கள்.
பிறக்கப்போவது.....
கருணாநிதியோ, செயலலிதாவோ
அத்வானியோ, அன்னை சோனியாவோ!
ஆனால்..... சாகப்போவது
மக்கள்.