சென்னை செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனமும், பெரியார் ஈ.வெ.இராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து திருநெல்வேலி மாநகரத்தில் 22,23.1.2010 ஆகிய நாள்களில் ஆதிச்சநல்லூர் (ஆதித்தநல்லூர் என்பதே சரி. ஆதி+எச்சம்+நல்லூர் என்று நம் அறிவாண்மையை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டுமானால் அப்படிச் சொல்லிக்கொள்ளலாம். ஆதித்தன் என்பது கதிரவனைக் குறிக்கும் பெயராகும். ஆதியில்-முதலில் தோன்றிய மாந்தன் எனினுமாம். எனவே, அவன் தோன்றிய இடம் என்பதால் ஆதித்தநல்லூர் என அறிவர் பெயர் சூட்டியுள்ளார்) அகழ்வு இரண்டாம் கருத்தரங்கை நடத்தின. தொல்லியல் ஆய்வறிஞர்கள், தமிழறிஞர்கள் கூடி ஆய்வரங்கில் பேசினர்; கட்டுரைகள் படித்தனர்.

இரண்டாம் நாள் பேசிய ஆய்வாளர் சத்தியமூர்த்தி என்பார் ஒளிப்பட விளக்கங்களோடு தம்முரையைத் தொடர்ந்தார். அவர் காட்டிய ஒளிப்படத்தில், ‘சிந்துவெளி’ என்ற இடத்திலெல்லாம் ‘இந்து வெளி’ என்றே பதிவு செய்திருந்தார். அப்போது கல்லூரி மாணவ இளைஞர் ஒருவர் எழுந்து இந்துவெளி எனப் பதிவு செய்துள்ளது குறித்துத் தன் மறுப்பைத் தெரிவித்துக் கண்டித்து முழக்கம் எழுப்பினார்.

கேள்வி நேரத்தின்போது அவர் தொடர்ந்து தம் கருத்தைத் தெரிவிப்பதற்கு மேடையில் இருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவருக்கு ஒலிபெருக்கிக் கருவியைத் தர மறுத்தனர். எனினும் ஒலிபெருக்கிக் கருவி இல்லாமலேயே தம் கருத்தைப் பதிவு செய்தார். இதில் வேடிக்கை என்ன தெரியுமா? பாவாணர் பட்டறையில் வளர்த்தெடுக்கப்பெற்ற தமிழறிவாயுதம் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தில் நுழைந்திருக்கிறது என நாம் பெருமைப்பட்டுக்கொண்ட அந்தத் தமிழறிவாயுதம்தான் சிந்துவெளி எனப் பதிவு செய்ய வந்தவருக்கு ஒலிபெருக்கி தராமல் தடுத்தது என்பதுதான்.

தமிழன்பர்களின் கடும் எதிர்ப்பைத் தாங்கமாட்டாமல் திணறிய சத்தியமூர்த்தி சிந்துவெளி என்பதுதான் சரி; எழுத்துப் பிழை நேர்ந்துவிட்டது எனப் பின்வாங்கிய பின்னரே தமிழன்பர்கள் அமைந்தனர்.

சிந்துவெளியில் ஆய்வு நடத்திய பேரறிஞர்கள் சர். சாண் மார்சல், சர். மராட்டியர் உயிலர், ஆர்.டி. பானர்சி, மெக்கே, வாட்சி, அலெக்சாண்டர் காந்திரதோவ் போன்ற அறிஞர்கள் சிந்துவெளி என்றே பதிவு செய்துள்ளனர்.

சாத்தான்குளம் அறிஞர் அ. இராகவன், இரா. மதிவாணன், குருவிக்கரம்பை வேலு, ப. இராமநாதன், த.வி,. வேங்கடேசுவரன், பி. பரமேசுவரன் முதலான அறிஞர் பெருமக்களும் சிந்துவெளி என்றே பதிவு செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு சிந்துவெளி எனப் பதிவெய்திய வரலாற்றுச் செய்தியை அண்மைக் காலமாகத் திட்டமிட்டு இந்துவெளி எனத் திரித்து எழுதியும் பேசியும் வருகிறார்கள். மூத்த தொல்லியல் அறிஞர் எனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றாற்போல் சிந்துவென்றும், இந்துவென்றும் மாற்றி மாற்றிக் குறிப்பிட்டு அனைவரையும் குழப்பி, சிந்துவா இந்துவா என மயங்கும் அதே வேளையில் இந்துதான் என முடித்துவிடலாம் எனக் கருதகிறார்போலும்.

உலகச் செம்மொழி மாநாட்டு முத்திரையில் தொல்லியல் சான்று அடைவுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அம்முத்திரைப் பதிப்பிலும்கூட, காளையைக் குதிரையாகக் காட்டும் முயற்சியைச் செய்திருக்கிறார்களோ என ஐயுற வேண்டியுள்ளது. கணினிப் பயன்பாடு என்பது நம் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்ப இழுத்துச் செல்லும் தகைமையுடையதென்பது தெளிவாகியுள்ளது. அவ்வகையில் காளையின் வடிவை நீட்டித்துக் குதிரை வடிவாகக் காட்டி மயங்கவைக்கும் சூழ்ச்சி மாநாட்டு முத்திரையிலும் கையாளப்பட்டிருக்கிறது. மூன்று முகங்களையுடைய குதிரை போன்ற ஓருருவை முத்திரையில் புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். தொல்லியல் ஆய்வாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் அடுத்த நாட்டில் இருந்தால் பல உண்மைகளை மறைத்து விடுவார்கள். அழித்துவிடுவார்கள். என்பதால்தானே அதன் அலுவலகத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார்கள். ஆனால், இங்கேயும் அதன் பணி அப்படித்தான் இருக்கும் என்றால் அது காங்கோவில் இருந்தால் என்ன கலிபோர்னியாவில் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே?

மீமிசை ஓங்கிச் செழுமைபெற்ற தமிழர்தம் அறத்தையும் மறத்தையும் கலையையும் பண்பாட்டையும் பகடி செய்து பட்டிமன்றம் நடத்திச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் ஆள்களைத் தாம் தமிழறிஞர்கள் என்று அரசு வேடிக்கை காட்டுவதற்கு வைத்துக்கொண்டிருக்கிறது.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

 அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

 அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

என்பர் தொல்காப்பியர்.

இவற்றுள் பட்டிமன்றம்வழி சிரிப்பையும் தொலைக்காட்சிவழி அழுகையையும் திரைப்படங்கள் வழி இளிவரலையும் விளைவித்து எஞ்சிய ஐவகை மெய்ப்பாடுகளையும் இல்லாமல் செய்துவிட்டால் மக்கள் ஆட்டுக் கூட்டமாய்க் கோட்டைத் தாண்டாது கிடப்பர் என ஆட்சியாளர் கருதி அம்மூன்றிலும் ஊன்றிக் கிடக்கச் செய்துவிட்டனர்.

இச்சோம்பலையும் கூம்பலையும் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட பார்ப்பன அறிவாளிகள் வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது என்பார்களே அப்படித் தம் கொள்கைகளைத் தமிழர் வாழ்வியலில் புகுத்தி அழித்து வருகின்றனர். அப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி முத்திரையான காளையைக் குதிரை என்றும், கொம்புகளைக் காதுகள் என்றும் கணிப்பொறிவழி மாற்றிக் காட்டி - ஆகவே, சிந்துவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகமே எனக் குதர்க்கம் செய்து நிலைநிறுத்த முயன்றனர். வாய்மையும் தூய்மையும் வாய்ந்த தொல்லியல் அறிவோர் சிலரின் கண்டனத்திற்குப் பின்னர்ஆரியக் குசும்பினர் அடங்கிப் போயினர்.

(நன்றி : “தேமதுரத் தமிழோசை” சூன் 2010)

Pin It