மனுவின் வருணாசிரமத் தர்மத்தால் பல வகுப்புகள் கல்வியிலும், சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட தன்மைக்கு ஆளாக்கப்பட்டன.
வேற்றுமை தெரிந்த நாற்பால்களான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பகுப்பு மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது. இந் நான்கு வகுப்பிலும் முதன் மூன்று வகுப்பான பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூவருக்கு மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு. சூத்திரனுக்குக் கல்விக் கற்பிக்கக் கூடாது என்று திட்ட வட்டமாகக் கூறப்பட்டுள்ளது. தொழில் முறையிலும் பிராமண னுக்கு வேதம் ஓதுதலும் மற்ற இருபிரிவினருக்கு ஓதுவித்தலும், சத்திரியனுக்கு அரசாள்வதும், வைசியனுக்கு வியாபாரம், வேளாண்மை முதலிய தொழிலைச் செய்யும்படியும், சூத்திரனுக் குத் தொழில் மற்ற மூவருக்கும் பலனை எதிர்பாராமல் தொண்டூ ழியம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிராம்மணன் சம்பள கொடுத்தேனும், கொடாமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம்; ஏனெனில் அவன் (சூத்திரன்) பிராமணனுக்கு உழைக்கவே பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கிறான். இம்மைக்கும்மறுமைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன்தான் நீக்குவான் ஆதலால் அவன் மறுமைக்காகவும் பிராமணனுக்குத் தொண்டூழியம் செய்ய வேண்டும். சூத்திரன் யார் என்றால் தொழிலாளி. அவன் யுத்தத்தினால் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்; பக்தியினால் வேலை செய்கிறவன்; தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப்பட்டவன்; குலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன்; என ஏழு வகைப்படுவர். “வைசியினையுந் சூத்திரனையும், தன்றன் தொழி லைச் செய்யும்படியாக முயற்சியோடு அரசன் கட்டளையிடுக இல்லாவிடில் அவர்களுலக முழுமையும் அழித்து விடுவார்கள்”. தன் மந்திரி புரோகிதர் முதலிய மனிதர்களைக் கொண்டு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோமாகத் தான் செய்விக்கிற லௌகீக வைதீகக் காரியங்களையும்,
மேற்கொண்ட சகல விவகாரங்களையும் தீர்மானிக்கின்ற அரசன் பாபத்தினின்று நீங்கி சுவர்க்க முதலிய மேலான கதியடைகிறான்.
இவ்வாறு மனுதர்ம சாத்திரம் கூறியிருப் பதனால் தங்களுக்குப் பாபம் நேரிடாமலும், மோட்சத்திற்குச் செல்ல வேண்டுமென்ற ஆசையினாலும் நம் நாட்டின் அரசர்கள் அனைவரும் மனுநீதியைத் தங்களுக்கு உரிய நீதிபரிபாலன முறையாக அரசின் சட்டமாக ஏற்று வெகுமக்களான ஒடுக்கப்பட்ட மக் களுக்கு கல்வியைக் கொடுக்காமலும், குற்றேவல் பதவிகளை மட்டும் கொடுத்து பல ஆயிரம் வருடங்களாக அவர்களை ஒடுக்கியே வைத்திருந்தார்கள்.
தற்காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் 26.1.1950-இல் நடப்புக்கு வந்தது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் அச் சட்டம் கட்டுப்படுத்தும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அந்த விதிகளுக்குக் கட்டுப் பட்டு நடக்க வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி கள் 13(1), (3); 16(5), 17; 25; 26, 372(1), 372(3) ஆகியவை நான்கு வருணங்களையும் சில இடங்களில் தீண்டாமையையும் பழைய காலத்துப் பழக்க வழக்கங்களையும் இன்றும் காப்பாற்றுகின்ற விதிகள்.
மேலும் 1860-இல் வெள்ளையரால் தொகுக்கப்பட்ட இந்துச் சட்டம் என்பதில் 2019-லும் இந்துக்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவை முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவையாகும். மேலும் அவர்கள் (3000) மூவாயிரம் உள்சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெளிவாக உள்ளது. இதற்கு ஆதாரம் மறுஸ்மிருதி, பராசரஸ்மிருதி, யக்ஞவல்கியஸ்மிருதி, முதலானவை.
மேற்கண்ட ஸ்மிருதிகள், ஆகமங்களைத் தான் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் இந்தியப் பெரும்பரப்பில் ஆட்சி செய்த எல்லா அரசர்களும் பின்பற்றினர்.
தமிழ்நாட்டில் பழைய பாண்டியன் காலம் முதல் கி.பி.1320 வரை ஆண்ட பிற் காலப் பாண்டியர் காலம் வரை இதையே பின்பற்றினர். அதற்குப்பின் தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட இஸ்லாமியரும் தென் பகுதியை ஆண்ட மராட்டியரும், நாயக் கரும் இதையே பின்பற்றினர்.
இவ்வாறாக ஒடுக்கப்பட்ட மக்கள், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியல் பழங் குடிகள், பட்டியல் வகுப்புகள், இதர பிற் பட்ட வகுப்புகள் என்று மூன்று பிரிவுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பிரிவினைக்கு உள்ளாகாத மற்றனைவரும் உயர் வகுப்பினர். இந்திய மகளாட்சிக்குப் பங்காளிகளான இந்த நால்வருக்கும் நாட்டிலுள்ள அனைத் தையும் அம்பேத்கரும், பெரியாரும், லோகியாவும் வகுத்துக் கொடுத்துள்ள விகிதாசார வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அடிப்படை யில் பாகப்பிரிவினை செய்து கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமூகநீதி காக்கப் பட்டு சமத்துவ சமுதாயம் படைப்பதற்கு வழி ஏற்படும். அனைத்து வகுப்பினரின் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சியும் ஏற்படும்.
ஏனென்றால் பெரியார் கூறுவது போன்று “பொது உடைமை வேறு, பொது உரிமை வேறு; பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். பொதுவுரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம் தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பாலபாடம்” என்பதை உணர்ந்தால் காரணம் புரியும்.
சமுதாய வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் அந்தச் சமுதாயத்தில் அடங்கி யுள்ள பல வகுப்புகளும் உரிமை, உடமை, அனுபவிப்பு ஆகிய மூன்றிலும் மக்கள் தொகை யில் தங்களுடைய வகுப்பின் விகிதாச்சார அளவுக்குரிய பங்கினைப் பெற்று வாழ வேண்டும். ஒரு வகுப்பு கூடுதலாகவோ குறை வாகவோ பெற்று வாழ்வது சமுதாய நோய் ஆகும். கூடுதலாகப் பெறுவது ஆதிக்கம் செய்யும்; குறைவாகப் பெறுவது அடிமை ஆக்கிவிடும்.
பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் கூற்று :
“சமமானவர்களுக்கு இடையில் தான் சமத்துவம்இருக்கிறது.சமமற்றவர்களைச் சமமாக நடத்துவது சமமின்மையை நீடிக்க செய்வதற்கேயாகும்”.
எனவே ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அவர்களுக்குரிய இடஒதுக்கீட்டினை அளித்து முன்னேற்றுவது தான் நாட்டின் முன்னேற்ற மாகும்.
இந்திய சமுதாயத்தில் உள்ள சமூக நிலைமைகளையும் பெரும்பான்மையான பிரிவு மக்களின் பிற்படுத்தப்பட்டத் தன்மைக்கான காரணங்களையும் கவனித்துப் பார்த்த பின்னர் பிற்படுத்தப்பட்ட தன்மையினை வரையறுக்கக் கீழ்க்காணும் வரையறைகள் பொது வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.
காகா கலேல்கர் குழு அறிக்கை
1) பாரம்பரியமான இந்து சமுதாயத்தின் சாதிப்படிநிலையில் கீழான சமூகப் படிநிலையில் இருத்தல்.
2) ஒரு வகுப்பிற்குள்ளோ, ஒரு சமுதாயத்திற் குள்ளோ பெரும்பான்மையான பிரிவின ரிடம் பொதுக்கல்வி முன்னேற்றம் இல்லா திருத்தல்.
3) அரசின் பணிகளில் போதிய பிரநிதித்துவம் இல்லாதிருத்தல் அல்லது பிரநிதித்துவம் எதுவுமே இல்லாதிருத்தல்.
4)வணிகம் பெருவணிகம் தொழிற்சாலை ஆகிய துறைகளில் போதிய பிரநிதித்துவம் பெறாதிருத்தல்.
இந்திய நாட்டில்மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களில் இட ஒதுக்கீடு முறை முழுமையாக செயல்படுத்தப்பட வில்லையென்றாலும் தமிழ்நாட்டில் ஓரளவு நன்றாகவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் விளைவாகவே வாய்ப்புப் பெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் உயர் வகுப்பினரை விட திறமைசாலிகள் என்று அனைத்துதுறை களிலும் மெய்ப்பித்துஇருக்கிறார்கள்.
குறிப்பாக மருத்துவத் துறையில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவில் மருத்துவர்களாக உள்ள தமிழ்நாடு, மருத்துவச் சிகிச்சையில் இந்தியா விலேயே மிகச்சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து மட்டு மல்லாமல் உலகின் பிற பகுதிகளி லிருந்தும் உயர் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழ்நாடு வருகிறார்கள். உயர் வகுப்பினரே மருத்துவர் களாக உள்ள வடமாநிலங்களில் இந்த மாதிரி உயர் சிகிச்சைக்காக மக்கள் வருவதில்லை.
தமிழ்நாட்டைப் போல் பிற மாநிலங் களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தி இருந்தால் அங்கும் தரமான மருத்துவர்கள் உருவாகி இருப்பார்கள். மருத்துவத்துறை மட்டுமல்லாமல் பிற துறை களிலும் திறமைசாலிகள் உருவாகியிருப்பார்கள். நிர்வாகம் இன்றுபோல் மோசமாக இல்லாமல் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆகவே முறையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்தப்படாத இடஒதுக்கீடுக் கொள்கை முழுமையாக செயல்படுத்தப்படும் வரை இடஒதுக்கீட்டினைப் பற்றி பேசியும் செயல்பட்டும் வரவேண்டிய இன்றியமையாத் தேவை இருக்கிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கை மேலும் விரிவாக்கப்பட்டு மக்கள் தொகை விழுக்காட்டின் அடிப்படையிலான விகிதாசாரப் பங்கீடு முறையாக வளர்த்து எடுக்கப்பட வேண்டிய இன்றியமையாத் தேவை இருக்கிறது.
இடஒதுக்கீட்டுக் கொள்கையைப்பற்றி சரியான புரிதல் இல்லாதவர்க்குப் புரிய வைக்க வேண்டும்.விகிதாச்சாரப் பங்கீட்டுக் கொள்கையைப் பற்றிப் புரிந்து கொண்ட வர்களே கூட இது என்ன அனைத்து பிரச்சனை களையும் தீர்க்கக் கூடிய சர்வரோக நிவாரணியா? என்று கேட்பவர்களுக்கு விளக்கத்தையும் தர வேண்டும்.
எடுத்துக்காட்டாக நாம் முன்னரே கூறியபடி இட ஒதுக்கீட்டுமுறையின் ஒரளவு சிறந்த செயல்பாட்டினால் திறமைசாலிகள் தமிழ்நாட்டில் மருத்துவர்களாக உருவாக முடிந்துள்ளது. ஆனால் வடமாநிலங்களில் உயர் வகுப்பினரை மட்டுமே மருத்துவ படிப்புக்குத் தேர்ந்தெடுத்ததால் அவர்களில் உள்ள திறமைசாலிகள் மட்டுமல்லாமல் திறமைக் குறைவானவர்களும் தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். ஆகவே தமிழ்நாட்டின் மருத்துவர்களின் அளவுக்குச் சிறந்து விளங்க முடியவில்லை. இது பொதுப்போட்டிமுறை திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கப்பட பயனற்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்த அனுபவம் ஏற்பட்ட உடனேயே நாடு முழுவதும் இட ஒதுக்கீடு முறையைக் கண்டிப்புடன் முழுமையாகச் செயல்படுத்தி நாட்டில் மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் மருத்துவச் சேவைக்காக உயர் வகுப்பினரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். தங்களிடையே தற்போது உருவாகியிருக்கும் மருத்துவர்களிடையே நிகழும் பரவலான மருத்துவச் சேவையை நசுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து “நீட்” முறையை உயர்வகுப்பினரையே அதிகம் தன்னகத்தைக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம் தன்னுடைய இடைக்காலத் தீர்ப்பின் மூலம் வெகுமக்களான ஒடுக்கப் பட்ட மக்கள் மீது திணித்துள்ளது.
உயர் வகுப்பினர் பெறும் கல்வி சிறப்புப் பயிற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி பெறும்படியாக இம்முறை (தேர்வு) வடி வமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிராக நாட்டின் மற்ற மாநிலங் களில் மக்கள் திரண்டு போராடவில்லை. தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே உயர் வகுப்பு ஆதிக்க அரசின் மக்கள் விரோத நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்து போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பெரியாரியல் கருத்தின் தாக்கமும் ஒரு தொன்மைக் காரணியாகும்.
ஏனெனில் இங்குமட்டும்தான் பொருட்படுத்தத் தக்க அளவிலான எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கல்வி பெற்று உள்ளனர். மற்ற மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவர்களால் எதிர்க்க முடியவில்லை. மீறி எதிர்க்க முயல்பவர்களின் குரல் நசுக்கப்படுவதும் வெளியில் தெரிய வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது.
தமிழ்நாட்டில் கூட அதிகார மையங் களின் எல்லா நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட வகுப்புமக்களின் எண்ணிக்கை பொருட் படுத்தத்தக்க அளவில் இருப்பதால்தான் குரல் எழுப்ப முடிகிறது. முடிவெடுக்கும் / முடிவெடுக்க வைக்கும் அளவிற்கான எண் ணிக்கையில் இருந்திருந்தால் நாம் இந்நேரம் வெற்றி பெற்றிருப்போம்.
ஆகவே நமது உரிமை மீட்புப் போராட்டங்களின் வெற்றிக்கு அதிகார மையங்களின் அனைத்து நிலைகளிலும் பிரதிநிதித்துவம் தேவைப்படுகிறது. அத்தகைய நிலையைப் பெறுவதற்கு இப்போது பின் பற்றும் இடஒதுக்கீடு ஒரு வழியே என்றாலும் அது போதுமான வழி அல்ல.
தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் வலியுறுத்துகின்ற மக்கள் தொகை விழுக் காட்டின் அடிப்படையிலான விகிதாச்சாரப் பங்கீடு இருந்தால்தான் எந்தவொரு போராட் டத்திலும் நம் கோரிக்கைகளை வென்றெ டுக்க முடியும்.
அதுமட்டுமல்ல விகித்தாசார வகுப்பு வாரிப் பங்கீடு ஒடுக்கப்பட்ட மக்களான தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகார மையங்களில் அவரவர்க் குரிய பங்கைப் பெற்றுத் தருவதால் அவ்விரு வகுப்பினருக்கும் இடையேயான முரண் பாடுகளின் கூர்மை மழுங்கத்தொடங்கும்.
இங்கு இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும் விகித்தாச்சாரப் பங்கீடு முறை அமுலில் இருந்திருந்தால் உயர் வகுப்பு ஆதிக்க வர்க்கத்தினருக்கு “நீட்” முறையைத் திணிக்கும் யோசனை தோன்றியே இருந்து இருக்காது. என்னமுறையைப் புகுத்தினாலும் உயர்வகுப்பினருக்கு அவர்களுடைய பங்கு மட்டும்தான் கிடைக்கும் என்றும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு அவர்களுக்குரியபங்கு கொடுக்கப்பட்டே தீர வேண்டும் என்ற விதி முறை இருந்தால் உயர்வகுப்பு ஆதிக்க வர்க் கத்தின் அயோக்கியத்தனமான சிந்தனைகள் முடக்கப்பட்டு விடும்.
ஆகவே விகித்தாச்சாரப் பங்கீடு என்பது சர்வ நோக நிவாரணி அல்ல. அது நமது திரட்டப்பட்ட உரிமை உணர்வுகள் ஒழுகி ஒழுகி இல்லாமல் ஆகிவிடாமல் போவதைத் தடுத்து அடைக்கும் அடைப்பானே ஆகும்.
மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப விகித்தாச்சாரப் பங்கீடு முறைக்கான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தாத காரணத்தால் அதிகார மையங்களில் நமது வலிமை கூடுவதை இழந்து விடுகிறோம்.
தற்போது தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலின் விளைவாகப் பொதுத் துறை நிறுவனங்களைவிட தனியார் நிறுவனங்களில்தான் வேலை வாய்ப்பு அதிகமாக உருவாகின்றன. எனவே தனியார் துறையிலும் விகித்தாச்சார இடப்பங்கீடு முறையை போராடிப் பெற வேண்டும்.
“மானம் அறிவு பெற்ற மனிதன் தன் வகுப்பை மற்றொரு வஞ்சக அறிவு பெற்ற வகுப்பு சூறையாட அனுமதித்துக் கொண்டு இருந்து விட்டு மறைவது அறிவுடைமையா என்பதை யோசித்துப் பாருங்கள்” என்று தந்தை பெரியார் கூறியதை எண்ணத்தில் கொண்டு இடஒதுக்கீட்டின் தேவையை மக்களுக்கு உணர்த்தி அவர்களை ஒருங் கிணைத்துக் கொண்டு போராடுவதே சமூக நீதியை நிலைநாட்ட நாம் செய்ய வேண்டிய நீங்காக் கடமையாகும்.
மக்கள் தொகை விகித்தாச்சாரப்படி பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், பிறபடுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு உயர்கல்வியிலும், வேலையிலும் இட ஒதுக் கீடு அளிக்கப்பட வேண்டும்.
வளர்ந்த பிரிவினர் என்ற வகைப்பாடு எந்தப் பிரிவினைக்கும் பணியில் நுழைவு நிலையிலேயே பதவி உயர்விலோ இருத்தல் கூடாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்த நிலையை அடையாவிட்டால் உயர்வகுப்பு ஆதிக்க ஆளும் வர்க்கம் இடஒதுக்கீட்டு கோட்பாட்டையே படிப்படியாகச் சிதைத்து ஒழித்து விடுவார்கள் என்பது உறுதி.
- மு.சுவாமிநாதன், வேலூர்