1. நேற்றைக்கு நின்ற நெறிகள் பழையனவே

இற்றைக் குதவா எனவுரைத்தீர் இற்றையவை

நாளைப் பழையனவே நாடாதீ ரெனவுணர்த்தி

நாளெல்லாம் நற்றுணையாய் நடந்திட்டீர் அய்யாவே!

கற்றார்க்குத் தெளிபொருளாய்க் கல்லார்க்கும் எளிமையராய்க்

2. கற்பனைக்கும் எட்டாத கருத்தூற்றாய்க்; கற்போர்க்கு

உற்றபே ராசானாய் உயர்ந்திருந்தீ ரீனியாங்கள்

பெற்றிருத்தல் பேராசை யெனவெண்ணிப் பொன்றினிரோ?

3. நாடோறும் ஊர்தோறும் நலந்தெளித்து, நடந்திட்டீர்;

ஈடேறும் எம்மினந்தான் எனவெண்ணி யாமெல்லாம்

 மேடேறுங் காலத்து மேதினியை அழவிட்டுத்

தேடேம் யாம் எனக் கருதிச் சென்றீரோ அய்யாவே?

4. வாடாதீர், சிந்திப்பீர், வழி வழியென் றோதாதீர்!

நாடாதீர் நலங்கெடுத்த நால்வருண மென அறைந்தீர்?

தேடாதீர் கடவுளரைத் தேடியவ ரெவர் கண்டார்?

வாடாமல் வதங்காமல் வதிவ தவன் யாங்கென்றீர்?

5. அறிவதற்கு இயலானாய் அவனொருவன் ஏதென்றீர்;

அடைவதற்கு இயலானாய் அவனிருத்தல் ஏனென்றீர்;

தடைய மதாய்க் கண்ணுக்குத் தட்டாத அந்நிலைக்குத்

தகையவனாய் அவனொருவன் தானிருத்தல் இலையென்றீர்!

6. யாதானும் நாடாமல் ஊராமால் எனக்கொள்ள

யாதானுந் தடையென்றால் - யாதென்பீர், ஏனென்பீர்;

வேதா கமங்கள் என வீணர்பலர் சொற்றக்கால்

வேகாது ஈங்கெனவே வீசிடுவீர், என்றுரைத்தீர்!

7. அழியாத தன்மையதாம் ஆன்மாவென் றறைந் தார்க்கே

அழிவுற்ற பாட்டனிற்பின் அணியணியா யுளமாந்தர்

தனித்தனி ஓர் ஆன்மாவா? தனியாகார் எனவுரைத்தால்

இனித் தனியே வந் தவருள் எவ்வழியே புகும்என்றீர்!

8. ஆன்மாவை அழித்திட்டீர்; அதன் வழியே நிலைபெற்ற

மேன்பாடு உளதென்னும் மேலுலகம் பொய்யென்றீர்!

தான்பாடு படலெல்லாம் தனக்கென்றே கருதாது

மேன்பாடு அனைவர்க்கும் மேவ வகை காணென்றீர்!

9. வானூர்தி வேகத்தில் வளர்ந்திட்ட புதுமையெலாம்

வானூர்தி வேகமதில் வந்தடையச் செய்திட்டீர்!

வானூர்தி வேகத்தில் வளர்ந்திட்ட நெஞ்சங்கள்

வானூர்தி வேகத்தில் வறட்டுவரோ நன்றியினை?

10. ஆயிரத்தோ டெண்ணூற்றி எழுபத்தி ஒன்பதன்மேல் -

ஆயிரத்து ஆண்டுகளின் அடிமை நிலை மீட்கவந்தீர்!

அடிமைநிலை மீளற்குள் அடிகொடுத்து மறைந்திட்டீர்

அடிமைநிலை மீட்டற்கு யாருள ரிங் கய்யாவே!

(“சிந்தனையாளன், 14-9-1974)

Pin It