காவிரி ஆற்றுநீர்ப்பங்கீடு சிக்கல் கி.பி.1807 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. பேச்சுவார்த் தையும் அதே கட்டத்தில் நடந்தது. மைசூரு அரசில் நிருவாகத்திலிருந்த பிரிட்டனைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி என்பவர் மலைச்சரிவில் விழும் மழைநீரைச் சேகரித்து ஓர் அணைகட்டி அதில் நீரைத் தேக்கத் தீர்மானித்தார்.

இதற்கு மெட்ராஸ் மாகாண அரசு ஒத்துக் கொண்டது. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல காவிரிக்கு நீர்வரத்து குறையுமே என்ற அச்சம் சென்னை மாகாணத்தாருக்கு ஏற்பட்டது. பல சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பின்னர், 1892 பிப்ரவரி 18ஆம் நாள் ஓர் ஒப்பந்தம் ஆயத்தமானது. இதுதான் காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு பற்றி ஏற்பட்ட முதலாவது ஒப்பந்தம்.

அந்த ஒப்பந்தப்படி, மைசூரு அரசு காவிரியின் குறுக்கே ஏதேனும் அணை கட்டத் தீர்மானித்தால், காவிரியின் கீழ் மடையிலுள்ள சென்னை மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும்; பாசனப் பகுதியின் பரப்பை அதிகரிக்க வும் சென்னை மாகாண அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

அப்போது 1910ஆம் ஆண்டு முதன்முதல் சிக்கல் ஏற்பட்டது. அதாவது காவிரியின் குறுக்கே கண்ணம்பாடி என்கிற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்க கிருஷ்ணராஜசாகர் அணையைக் கட்ட மைசூரு சுதேச அரசு தீர்மானித்தது. அதே காலக்கட்டத்தில் சென்னை மாகாண அரசு, சேலம் மாவட்டத்தில் ஓர் அணை கட்டத் தீர்மானித்தது. அது குறித்த பேச்சுவார்த்தை பல சுற்றுக்களாக நடந்தது. ஆனால் ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை.

உடனே, இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு, 1924ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கியது. அந்த ஒப்பந்தப் படி இரு மாகாண அரசுகளும் பாசனப் பரப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என ஏற்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் நீடிக்கும் என ஏற்கப்பட்டது.

வெள்ளையர் வெளியேறிய பிறகு, 1956இல், மொழிவாரியாக, மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 1960களில் மேலும் இரண்டு புதிய அணைகளைக் காவிரியின் குறுக்கே கட்ட கர்நாடக அரசு தொடங்கியது. அதைத் தமிழக அரசு எதிர்த்தது. கர்நாடக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. இந்திய காங்கிரசுக் கட்சி அரசும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

1974ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கம், கர்நாடக அரசு காவிரியில் நீர்விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. கர்நாடக அரசு, பிரதமர் இந்திரா காந்திக்கு அழுத்தம் கொடுத்து, முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மூலம் மேலே கண்ட வழக்கை தஞ்சை விவசாய சங்கம் திரும்பப் பெறச் செய்தது. இங்கேதான் முதல் சிக்கல் தொடங்கியது.

1977 பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று, நடிகர் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனார். அவருடைய ஆட்சி 1979இல் கலைக்கப்பட்டது. 1980 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 1982ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். அரசு 1892 ஒப்பந்தமே செல்லும் என வாதாடியது.

இதில் தீர்வு எட்டப்படாததால், தஞ்சை மாவட்ட விவ சாயிகள் சங்கத்தார், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். உச்சநீதிமன்றம், “தமிழகம், கர்நாடகம் இரண்டு மாநில அரசுகளும் கலந்துபேசி 24.4.1990க்குள் ஒரு தீர்வு காணவேண்டும்” என்று ஆணையிட்டது. அப்படி ஒரு தீர்வும் எட்டப்படாததால், 2.6.1990இல் ஒரு காவிரி நீர் தீர்ப்பாயம் உருவாக்கப் பட்டது.

அந்தத் தீர்ப்பாயம் 25.6.1991இல் ஒரு இடைக் காலத் தீர்ப்பை வழங்கியது. அதன்படி 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடக அரசு தமிழக அரசுக்கு விட வேண்டும்.

இதை வைத்து, கர்நாடக அரசு, அங்கு வன்முறை யைத் தமிழர்கள் மீது ஏவியது. தமிழர் சிலர் கொல்லப் பட்டனர்; தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன; தமிழச்சிகள் பலர் கற்பழிக்கப்பட்டனர்; சில தமிழர்கள் தமிழகத்திற்கு ஓடி வந்தனர்.

11.12.1991இல் இந்திய அரசிதழில் இடைக்காலத் தீர்ப்பு வெளியாகியது. அதன்பிறகும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்க மறுத்தது. 1998இல் பிரதமரின் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப் பட்டது. அதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இதற்கு ஆலோசனை வழங்க காவிரி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.

2002 வரையில் போதிய பெருமழையின் காரண மாகப் பெரிய சிக்கல் உருவாகவில்லை. 2002இல் மீண்டும் சிக்கல் உருவாயிற்று. தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது.

இதன் பிறகு, காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று ஒரு தீர்ப்பை வழங்கியது.

அத்தீர்ப்பின்படி, கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. தமிழகம், புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி., கேரளாவுக்கு 21 டி.எம்.சி. நீரும் கர்நாடகம் விட வேண்டும் என்று கூறியது.

தமிழகம் பெறவேண்டிய நீர் 192 டி.எம்.சி. அதன் விவரம் மாதவாரியாக விடப்படப்வேண்டிய நீர் அளவு

சூன் மாதம்      10 டி.எம்.சி.

சூலை  34 டி.எம்.சி.

ஆகத்து            50 டி.எம்.சி.

செப்டம்பர்      40 டி.எம்.சி.

அக்டோபர்      22 டி.எம்.சி.

நவம்பர்           15 டி.எம்.சி.

திசம்பர்           8 டி.எம்.சி.

சனவரி            3 டி.எம்.சி.

பிப்பிரவரி       2.5 டி.எம்.சி.

மார்ச்சு            2.5 டி.எம்.சி.

ஏப்பிரல்           2.5 டி.எம்.சி.

மே       2.5 டி.எம்.சி.

ஆக மொத்தம் 192 டி.எம்.சி.

இப்போது 16.2.2018இல் தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கில், இது, தமிழக அரசின் முதலாவது கோரிக்கை.

மாதா மாதம் தண்ணீர் திறந்துவிட வேண்டிய அளவைக் கண்காணிக்கவும், கர்நாடக அணைகளில் உள்ள நீரைக் கணக்கெடுத்து நீர்ப் பகிர்வை உறுதி செய்யவும் “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக் கப்பட வேண்டும். இது இரண்டாவது கோரிக்கை.

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும், கபினி அணையிலிருந்தும் திறந்துவிடப்படும் நீர், பில்லி குண்டுலு வரையில், சரியாக வந்து சேர்கிறதா என்பதைக் கண் காணிக்க, “காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம்” அமைக்கப்பட வேண்டும். இது மூன்றாவது கோரிக்கை.

இவற்றுக்குச் சட்ட வடிவிலான அதிகாரம் அளிக்கப் பட வேண்டும்.

இவை தமிழ்நாட்டின் கோரிக்கைகள்.

இம் மூன்று கோரிக்கைகளைப் பற்றி, 16.2.2018 அன்று இந்திய உச்சநீதிமன்றம் என்ன முடிவுகளைக் கூறியது?

  1. தமிழகம், புதுச்சேரிக்கு ஆண்டுக்கு 192 டி.எம்.சி. நீர் தரவேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் கூறியது தவறு. ஏனெனில், வளர்ந்துவரும் பெங்களூரின் குடிநீர் சிக்கலையும், தமிழகம் பெற்றுள்ள நிலத்தடி நீரையும் காவிரி நடுவர் மன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டது.

இந்தத் தவறு இப்போது சரிசெய்யப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி நீர், 177.25 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்டிருக் கிறது. அதாவது 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்குக் காவிரியில் விடப்படுவதற்குப் பதிலாக, அது கர்நாடகத் துக்குத் தரப்படுகிறது. இதில் வேகமாக வளர்ந்துவரும் பெங்களூரின் குடிநீருக்காக 4.75 டி.எம்.சி. கன அடி காவிரி நீரும், பெங்களூரில் வளர்ந்துவரும் தொழிற் சாலைகளுக்காக 10 டி.எம்.சி. காவிரி நீரும் பகிர்ந்தளிக் கப்படுகிறது. கர்நாடக மக்கள் காவிரி நீரை அனுபவிக்க முடியாமல் செய்யப்பட்ட அநீதி இதன்மூலம் களையப் படுகிறது.

2. இந்திய அரசு இன்றிலிருந்து 6 வார காலத்துக் குள், “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு அரசு தமிழ்நாட்டில் காவிரிப் பாசனப் பகுதியில், நிலத்தடியில் தேங்கியுள்ள 20 கோடி கன அடி நீரை எடுத்து, அதில் 10 கோடி நீரைப் பாசனத் துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

3. “காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம்” பற்றி எந்தக் கருத்தையும் உச்சநீதிமன்றம் கூறவில்லை.

I. இந்த உச்சநீதிமன்ற ஆணை இன்றிலிருந்து 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

II. காவிரி நீர்ப் பங்கீடு பற்றி, சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும், 16.2.2018இல் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய அனுமதி இல்லை.

III. கேரளாவுக்கு உரிய 30 டி.எம்.சி. கன அடி நீரும், புதுச்சேரிக்கு உரிய 7 டி.எம்.சி. கன அடி நீரும் குறைக்கப்படவில்லை.

இதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என்பதே அத்தீர்ப்பின் விவரங்கள் ஆகும்.

நாம் - தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் உணர்ச்சியில் மிதக்கிறவர்கள்; மேடையில் வீர முழக்கம் செய்யக் கற்றவர்கள்.

காவிரி நீர் உரிமைக்கு உலை வைத்தவர்கள். தமிழ் நாட்டுக் காங்கிரசுக் கட்சியினரும், தி.மு.க.வினரும், அ.இ.அ.தி.மு.க.வினரும் இவர்களின் தொங்கு சதைக் கட்சிகளுமே ஆவர்.

எப்படி?

1967 முதல் 2018 வரை 51 ஆண்டுகளில், 42 ஆண்டுகளாகக் காவிரி நீர்ச் சிக்கலைத் தமிழர் எதிர் கொள்கிறோம்.

தமிழ்நாட்டுக்கு உரிய 57 (39 + 18) நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதுச்சேரிக்கு உரிய 2 (1+1) நாடாளு மன்ற உறுப்பினர்களும் ஆக 59 உறுப்பினர்களும் - எப்போதாவது, காவிரி நீர்ப் பங்கீடு சிக்கல் பற்றி 1) குடிஅரசுத் தலைவர், 2) பிரதமர், 3) இந்தியப் பாசனத் துறை அமைச்சர் ஆகியோரை ஒரு தடவையாவது பார்த்து, உண்மை நிலையை நேரில் விளக்கிச் சொல்லி யிருக்கிறார்களா?

இல்லை; இல்லவே இல்லை. அவ்வளவு ஈனத்தன மானவர்கள் நம் தலைவர்கள்.

கர்நாடகத்தை எந்தக் கட்சி ஆண்டாலும், அவர்கள் - கட்சி, சாதி, பதவி இவற்றைப் பார்க்காமல் - சிக்கலை முன்வைத்து-இந்நாள், முன்னாள் முதலமைச்சர்களும், எல்லாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து, தில்லிக்குப் போய் எல்லோரையும் பார்த்துப் பேசுகிறார்களே! தில்லிக்காரரை அச்சுறுத்துகிறார்களே!

தமிழர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை?

இனியும் காவிரியைப் பற்றிய கூப்பாடு, முல்லைப் பெரியாறு பற்றிய உரிமைப் போர் இவற்றோடு நிற்காதீர்கள்!

சோழர்கள் காலந்தொட்டு தமிழகத்தில் ஏரிகள் உள்ளன. 41,000 பெரிய - சிறிய ஏரிகள் உள்ளன.

நீங்கள் எந்தக் கட்சி - எந்தச் சாதியைச் சார்ந்த வராக இருந்தாலும், உங்கள் உங்கள் ஊரில் - ஊர்க் குளம், கோவில் குளம், குட்டை, சிறிய ஏரி, பெரிய ஏரி, நீர்வரத்து வாய்க்கால், நீர்ப்போக்கு வாய்க்கால் இவை இருக்கின்றன.

கடந்த 50 ஆண்டுக்காலமும் தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சி ஆட்சியாளர்களும், அதிகாரிச் சாதியினரும் இவற் றைச் செப்பனிடத் தவறிவிட்டார்கள். அல்லது செப்பனிடு வதாகப் பேர் வைத்து, மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டார்கள்.

இவர்கள் ஆற்று மணல், ஓடை மணல், வனத்துறைக் காடுகள் இவற்றைச் சூறையாடிவிட்டார்கள்.

இனி, வீட்டுக்கு ஒருவர் வீதிக்கு வந்து -

  • காவிரி நீர் உரிமையைக் காக்கப் போராடுங்கள்
  • நீர்நிலைகளைக் காப்பாற்றப் போராடுங்கள்!
  • மணல் கொள்ளையைத் தடுக்கப் போராடுங்கள்!
  • அரசுக் காடுகளைக் காக்கப் போராடுங்கள்!
  • வேளாண்மையைக் காப்பாற்றுங்கள்!

- வே. ஆனைமுத்து