1

சட்டம் உடைந்த கண்ணாடியை
காவித்திரிகிறேன்
பிரதிபலிப்புக்களுக்குள்
மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறது
அழகிய தருணங்கள்
ஏதிரெதிர் முகங்களிடையே
காற்று
ஒரு பயணியைப் போலலைகிறது

2

வார்த்தைகளுக்கு வர்ணமிட்டு
வரையப்பட்ட
ஓவியப்புதிரை வழிபடும் மனிதர்களிடை
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்
நொந்த மனதுக்கு
இரவின் சிறகைக் கட்டியபடியிருந்தாயா
அல்லது
மாயக் கனவுகளின்
சிறகுகளைக் கத்தரித்தபடியிருந்தாயா

3

பாதைகளற்ற நிலம் எப்படியிருக்கிறது
மந்தைகள் வெறுந்தரை தின்னுகையில்
மேய்ப்பனின்
மந்தை ஓட்டும் தடியில்
எந்தக் களிப்பிற்காக
கொடி பறந்துகொண்டிருந்தது

4

கடலின் அலைகளில்
மனிதர்கள் புதைகையில்
வீறிட்டுக் கதறிய குழந்தை
உடைந்து சிதறிய நட்சத்திரத் துண்டுளை
என்ன செய்தது
அலைகளில் வீசிற்றா
தன் கனவின் வெளியில்
எறிந்து விளையாடியதா

5

கேள்விகளுக்கேதும்
இடமில்லாத நிலத்தில்
அடவிகளில் மூண்ட பெரு நெருப்பை
ஊதி வளர்த்தவர்கள் எங்குள்ளார்கள்
அறிய ஆவல்
கைவிடப்பட்ட நிலத்தில்
கற்களாய் எஞ்சியவர்களின்
தீபங்கள் எப்படி அணைந்து போயின

6

கடைசியில் செய்யப்பட்டதெல்லாம்
பசித்த வயிறுகள்
பால் வற்றிய முலைகள்
கதறல்
கண்ணீர்
மௌனம்
ஏமாற்றம்
எப்போதும் நீங்காத அடர்ந்த இருள்

7

உன் சிலுவை எங்கே
தவிர
அவரவர் சிலுவைகளும்

8

உயிர் சுமந்து
இடந்தேடி அலையும் போதும்
எதையுணர்ந்தாய்
வெறுமைமீது கரைந்து கொண்டிருக்கும்
ஒளிவட்டம் சூடிய மனிதரின்
சொற்களில் தெறித்த வன்மத்தின் நெடியையா

9

எரியும் நிலத்தின்
கடைசிப் பசுமைத்துளிரும் கருகியபின்
எதை எடுத்து வந்தாய்
எதை விட்டு வந்தாய்
உயிர் காவிச் சலிப்புற்று நடை தளர்ந்த
உன் மனைவிக்கும் மகவுக்கும்
என்ன சொன்னாயோ

10

காலத்தின்
ஈரம் வற்றிக் காய்ந்த பிறகு
நீ எதைத்தான் எழுத முடியும்
 
(தானா. விஷ்ணுவுக்கு)

- சித்தாந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.