பிரதமர் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார்!

ஆசாத் காஷ்மீர் - பாக்கித்தான் நிருவாகத்தின் கீழ் இருந்தது. அவர்களிடையே ஒரு ஒப்பந்தம் மட்டுமே இருந்தது. அந்த ஒப்பந்தம் என்ன கூறியது?

1.            ஆசாத் காஷ்மீரின் பாதுகாப்பு;

2.            அயலுறவுக் கொள்கை;

3.            அய்.நா. அவையில் தொடரும் வழக்கு மற்றும் விவாதங்கள்;

4.            ஜம்மு-காஷ்மீர் குறித்து மற்ற நாடுகளில் செய்யப்படும் பரப்புரை;

5.            மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விவகாரங்கள்;

6.            இடம்பெயர்ந்த அகதிகளின் உணவு, போக்குவரத்து உள்ளிட்ட பிற தேவைகள்.

இவற்றை பாக்கித்தான் அரசு கவனித்துக் கொள்ளும்.

ஆசாத் காஷ்மீரிடம் உள்ளாட்சி விவகாரங்களும் பிற நிருவாக அதிகாரங்களும் இருக்கும்.

முஸ்லீம் மாநாட்டுக் கட்சிக்கு-அரசியல் விவகாரங் களை நடத்திச் செல்லும் பணி மற்றும் பிரிந்திருக்கும் ஜம்மு-காஷ்மீரையும் அதன் மக்களையும் ‘ஒன்றுபட்ட காஷ்மீர்’ நோக்கி ஒருங்கிணைக்கும் பணி இவை ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்தியாவுடன் இருக்கும் காஷ்மீரில், ஷேக் அப்துல்லா தலைமையில் ஒரு சீரான அரசமைப்பு நிர்வாகத்தைக் கவனிப்பதற்கான நிருவாகம் இருந்தது.

ஆசாத் காஷ்மீரில் நிர்வாகத்திலிருந்தவர்கள் பெரும் பாலும் சிறீநகரிலிருந்து இடம்பெயர்ந்து வந்த அதி காரிகள்தான். அவர்களே அங்கே உயர் அதிகாரிகளாக இருந்தார்கள்.

இந்த நிலையில், பாக்கித்தான் அரசு, ஆசாத் காஷ்மீரில் குடிஅரசுத் தலைவராக இருந்த இப்ராகிம் கான் என்பவரைப் பதவி நீக்கம் செய்தது. இதனால் அங்குப் புதிய சிக்கல் தோன்றியது. அது என்ன?

அவர், பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த ‘சூடான்’ இனத்தைச் சேர்ந்தவர். எனவே பூஞ்ச் பகுதி மக்கள் பாக். நடவடிக் கையை எதிர்த்தனர். “எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் பதவியில் இருக்கக்கூடாது என்றால், எங்களை ஆளும் தகுதி உங்களுக்கு இல்லை” என்று கூறிப் போராட் டங்களை நடத்தினர்.

ஆசாத் காஷ்மீர் பகுதியில் நிலவளமோ, வருவாய்க்கு வழிசெய்யும் மற்ற ஆதாரங்களோ இல்லை என்பது பின்னாளில் தான் மக்களுக்குப் புரிந்தது. ஏற்கெனவே அங்கு நடப்பில் இருந்த ஜமீன்தாரர் பாணி நில வுடைமை மாறி, ஷேக் அப்துல்லா பாணி நிலச் சீர்திருத்தங்கள் ஆசாத் காஷ்மீரிலும் தொடங்கின. ஆனால் அவை மட் டுமே வருவாய் தரப் போதுமானதாக இல்லை.

மேலும் போதுமான பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள், பிற வாழ்க் கை வசதிகள் ஏதுமின்றி மக்கள் மிகவும் துன்பப் பட்டனர். தங்களுடைய பெரும்பாலான தேவைகளுக்குப் பாக்கித்தான் அரசை நம்பியே இருந்தனர்.

ஆனால், “காஷ்மீர் முழுவதும் தனக்கே வேண்டும்” என்பதில் நாட்டம் கொண்டிருந்த பாக்கித்தான் அரசு ஆசாத் காஷ்மீருக்கு மட்டும் முன்னேற்றம் தரும் நடவடிக்கைகளை மேற் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினால் முழு காஷ்மீரும் தன்வசம் வந்துவிடும் என்று நம்பிய பாக்கித்தான், அதில் தான் அவசரம் காட்டியது. அதனால்தான், ஆசாத் காஷ்மீரில் வாழும் மக்களின் தேவைகள் பற்றி அக்கறை கொள்ளவில்லை. அந்த மக்களும், “முழு காஷ்மீரும் நம்மோடு வந்து சேரட்டும்; அதுதான் நமக்கு விடிவு தரும்” என்று மடத்தனமாக நம்பினர்.

இந்நிலையில் ஷேக் அப்துல்லா ஆசாத் காஷ்மீரை அலட்சியமாக நினைத்தாலும், அங்கிருந்த மக்களுடனும், தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்புடன் இருப்பதைக் கைவிடவில்லை.

இத்துடன் இந்தியத் தலைவர்கள், காங்கிரசுக் கட்சி, அதன் கொள்கைகள், நடவடிக்கைகள் இவற்றை விமர்சனம் செய்து பேசி வந்தார். பல நேரங்களில் நேருவையும் விமர்ச்சித்தார். மேலும், “இந்தியா என் றைக்கும் தனது இந்து மத வாதங்களைக் கைவிடாது; பெருவாரி மக்களான இந்துக்களைத் திருப்திப்படுத்த வேண்டியிருப்பதால், காங்கிரசுக் கட்சியால் நடு நிலைமையில் இருக்க முடியாது” என்றும் கூறத் தொடங்கினார், அப்துல்லா.

ஒரு கட்டத்தில், “இந்தியாவுடன் சேர்ந்திருப்பதுதான் காஷ்மீர் மக்களான நமக்குப் பாதுகாப்பு என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால், இப்போது, படித்து வேலையற்ற இளைஞர்கள் எல்லாம் பாக்கித்தானில் நடப்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில், படித்த இந்துக்களுக்கு அரசு வேலையில் மிகப் பெரிய வேலை வாய்ப்புகள் இருக்கையில், அங்கு முஸ்லீம்களுக்கு மட்டும் அது எட்டாக் கனியாக இருக் கிறது. சில இடங்களில் முஸ்லீம்களுக்குத் தடையே கூட இருக்கிறது” என்று, மேடைகளில் பேசத்தொடங்கினார். அதற்கு எடுத்துக்காட்டாக, முஸ்லீம்களுக்கு அஞ்சல் நிலை யங்களில் வேலை தரப்படவில்லை என்று குறிப்பிட்டுக் கூறினார்.

இந்த நேரத்தில்,

1.            ‘வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்ட ஷேக் அப்துல்லா, அங்கு பாக்கித்தான் அதிகாரிகளைச் சந்தித்தார்’ என்ற செய்தியும் கசிந்தது.

2.            1953 மே மாதத்தில், டேட்லி ஸ்டீவென்சன் என்ற அமெரிக்கரை ஷேக் அப்துல்லா சந்தித்தது, பெரிய குற்றமாக இந்திய அரசால் கருதப்பட்டது. ஏன்?

இந்த ஸ்டீவென்சன்தான், “காஷ்மீர் சிக்கலுக்குச் சரியான தீர்வு என்றால், அது இந்தியா - பாக்கித்தான் இரண்டையும் சமநிலையில் வைத்து விட்டுத் தனி நாடாகக் காஷ்மீர் இருப்பதுதான்” என்று சொன்னவர்.

காஷ்மீர் சிக்கலில் தாங்கள் தலையிடுவதில்லை என்று அமெரிக்கா சொல்லி வந்தாலும் - அமெரிக்காவின் மறைமுக ஆதரவு ஷேக் அப்துல்லாவுக்கு இருக்கிறது என்று இந்தியா நம்பியது.

3.            1953 சூலை 13 அன்று, “தியாகிகள் தினம்” என, மறைந்த அப்துல் காதர் நினைவாக, ஜம்மு-காஷ் மீர் மக்கள் கொண்டாடினர். அவ்விழாவில் பேசிய ஷேக் அப்துல்லா, “பாக்கித்தான் அல்லது இந்தியா என இரண்டில் ஒரு கூடுதல் இணைப்பு நாடாக ஜம்மு-காஷ்மீர் நாடு இருக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை” என்றே பேசினார்.

மேலும் ஷேக் அப்துல்லாவின் நிலச்சீர்திருத்தங்களுக்கு ஆரம்பத்தில் இருந்த ஆதரவு இப்போது இல்லை. ஏன்?

அதிகாரத்தில் இருந்தவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தங்களின் பெயர், பதவி போன்றவற்றைப் பயன்படுத்தி, சட்டத்தை வளைத்து, பெரும் பரப்பு நிலங்களை அவர்கள் கைப்பற்றிக் கொண் டார்கள். எல்லா மட்டங்களிலும் ஊழலும் கைக்கூலியும் ஊடுருவின நிருவாகக் கோளாறு தலைவிரித்து ஆடியது.

மறுபுறம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள்ளேயே இருந்த ஷேக் அப்துல்லாவின் அரசியல் எதிரிகள் - குறிப்பாக இந்து அரசியல் வாதிகள், “ஷேக் அப்துல்லா, ஒரு கட்சி ஆட்சியை நடத்துகிறார். மன்னரை வெளியேறச் சொல்லிப் போராட்டம் நடத்திய காலத்தில், சனநாயக ஆட்சியைக் கொண்டு வருவோம் என்ற அவர், இப் போது எதிர் கருத்துகளுக்கும் மற்றக் கட்சிகளுக்கும் இடந் தராமல், சனநாயகம் என்பதையே சிரிப்புக்கு இடமாக்கி விட்டார்” என்று குற்றஞ்சாட்டினர்.

4. இதற்கிடையில், ஷியாம் பிரசாத் முகர்ஜியின் சாவுக்குப் பின்னர், ஷேக் அப்துல்லாவுக்கு எதிராக நடந்த போராட்டங்களும் அவருக்குக் கேடு சூழும் நிலையை உண்டாக்கின.

இவற்றின் காரணமாக, ஷேக் அப்துல்லா மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, அவருடைய அரசு கலைக்கப்பட்டு, பிரதமர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். தொடக்கத்தில் மிகுந்த மரியாதை யுடன் அவரிடம் நடந்துகொண்ட இந்திய அரசு, இப்போது அவர் பேரில் நடவடிக்கை எடுக்கவும் கைது செய்யவும் அஞ்சவில்லை.

1953 ஆகத்து 8 அன்று ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார்.

கைது செய்வதில் நேரு நெருக்கம் காட்டவில்லை.

மாறாக, அன்று ஜம்மு-காஷ்மீரின் குடிஅரசுத் தலை வராக இருந்த கரண் சிங்கே, அப்துல்லாவைக் கைது செய்யும் பணியை நிறைவேற்றினார்.

ஷேக் அப்துல்லாவின் நெருங்கிய சகாவாக இருந்த பக்ஷி குலாம் முகமது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரதமராக 9.8.1953 அன்று அமர்த்தப்பட்டார்.

ஷேக் அப்துல்லா கைது பற்றி காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களிடம் நிலவிய கருத்து வேறு.

தொடக்கத்தில் ஷேக் அப்துல்லாவின் கோரிக்கையை ஏற்று எல்லா அனுமதிகளையும் தந்துவிட்டாலும், அதன் பின்னர் மற்ற தரப்பினரும், எதிர்க்கட்சிகளும் எழுப்பும் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாத நிலை, பிரதமர் நேருவுக்கு. சில சலுகைகளைத் திரும்பப் பெற வேண் டிய நிலையும் நேருவுக்கு ஏற்பட்டது. ஷேக் அப்துல்லா சிறை வைக்கப்பட்டதால், மற்ற அரசியல் தலைவர் களை அச்சுறுத்தி அடக்கி வைப்பதையும் நேருவினால் செய்ய முடியும்.

இந்த இரண்டு நிலைமைகளையும் பயன்படுத்தி இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், ஜம்மு-காஷ் மீர் அரசமைப்புச் சட்டத்திலும் தாங்கள் செய்ய எண்ணிய மாற்றங்களைச் செய்து கொள்ள ஏற்ற சூழ்நிலையை இந்திய அரசினர் உண்டாக்கிக் கொண் டார்கள் என்று வெளிப்படையாகக் காஷ்மீர் பள்ளத் தாக்கு மக்கள் கூறினர்.

இதுவே உண்மை.

இனி ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் பற்றி விரிவாகக் காண்போம்!

(தொடரும்)

Pin It