இந்தியாவில் உள்ள மதங்களுள் மிகவும் மூத்தது இந்து மதம் என்கிற ‘பிராமண மதம்’ - வேத மதம்.

அதற்குக் காலத்தால் இளையவை சமணமும், பௌத்தமும். இவைகளைவிட இளையவை கிறித்துவமும், இஸ்லாமும்.

இந்து மதத்துக்கு அடுத்த மூத்த மதமான பௌத்தம் - கி.மு.185இல் புஷ்யமித்ர சுங்கன் காலம் தொடங்கி, ஆதிசங்கரர் காலமான கி.பி.832க்குள் வடஇந்திய மண்ணில் அழிக்கப்பட்டுவிட்டது. சமணமும் பௌத்தமும் சைவ சமயத்தாரால் - தென்னிந்தியாவில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குள் அழிக்கப்பட்டுவிட்டன.

சீனா, ஜப்பான், இலங்கை, இன்றைய மியான் மார் என்கிற எல்லாம் உலகம் அறிந்த பௌத்த நாடுகள். இங்குள்ள பௌத்தர்கள் 150 கோடி பேர் அவர்கள் பின்பற்றுகிற ‘பௌத்தம்’ பிராமணிய வழிப் பட்ட ‘பௌத்தம்’. அதாவது - ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவது - தாழ்த்தி வைப்பது - கொல்லுவது என்பதை ஓராயிரம் ஆண்டுகளாகச் செய்து வருகிற பௌத்த மத நாடுகள், அவை.

கிறித்துவம் பழைய ஏற்பாடு - புதிய ஏற்பாடு அடிப் படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகவும், நூற்றுக் கணக்கான உள்பிரிவுகளாகவும் மக்களைப் பிரித்து வைத்திருக்கிற மதம். ஆனால் எந்தப் பிரிவு கிறித்து வரும், பிறப்பால் உயர்ந்தோராக - தாழ்ந்தோராகக் கருதப்படுவதும், நடத்தப்படுவதும் இல்லை. ஆனால், இந்தியாவில் மட்டும்-கிறித்துவம் அப்படி இல்லை.

இன்றைய உலகிலுள்ள 720 கோடி மக்களுள் “கிறித்துவர்” என்போர் 250 கோடிக்கு மேற்பட்டோர்.

அதற்கு அடுத்த பெரிய எண்ணிக்கையினர் இஸ்லா மியர்கள் என்கிற 150 கோடி பேர். மிக இளைய மதத்தினர்.

இன்று, மேலே சொல்லப்பட்ட எல்லா மதக்காரர்களும் இந்தியாவில் உள்ளனர். எல்லா மதங்களையும் நம்புகிற - பின்பற்றுகிற இன்றைய இந்திய மக்கள் தொகை 127 கோடி பேர்.

1. மிக மூத்த மதமான “பிராமண மதம்” என்கிற இந்து மதக்காரர்கள் (இதில் அயல்நாடுகளில் உள்ள 2 கோடி பேரும் அடக்கம்) - 108 கோடி

2.  இந்தியாவில் 600 ஆண்டுகள் ஆட்சிசெய்த முகம்மதியர்களின் - இஸ்லாம் மதக்காரர்கள் - 13 கோடி

3. 200 ஆண்டுகள் (1757-1947) இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களின் கிறித்துவ மதம் - 2.50 கோடி

4. இஸ்லாமியரை எதிர்த்து எழுந்த இந்துக்களின் சீக்கிய மதக்காரர்கள் - 2.50 கோடி

5. ஆதியில், பிராமண - வேத மதத்தை எதிர்த்து எழுந்த சமணமும், பௌத்தமும் - 1.00 கோடி

இந்தியாவில் உள்ள - அயல்நாடுகளில் உள்ள இந்துக்கள், மத உரிமையின்படி ஒருவருக்கொரு வர் சமமானவர்கள் அல்ல. இவர்கள் பிறவி காரணமாக மட்டும் அய்ந்து பெரும் பிரிவுகளாக வும், 6700 சிறுசிறு உள் பிரிவுகளாகவும் 2016லும் இருப்பவர்கள்; வாழ்பவர்கள். இந்தியக் கிறித்துவரும், சீக்கியரும், பௌத்தரும், சமணரும், அப்படியே. இவர் கள் 300க்கு மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள்.

ஒரே மொழியைப் பேசுகிறவர்கள் - ஒரே வருணமாக - ஒரே உள்சாதியாக - ஒரே உள்பிரிவாக, பிறவி காரணமாக மட்டுமே இல்லை.

இந்தியாவில், இஸ்லாமியர் தவிர்த்த மற்றெல்லா மதக்காரர்களின் சமய வாழ்விலும் - சமுதாய வாழ்விலும் - வீட்டு வாழ்விலும் - எத்தனைப் புற மாற்றங்கள் வந்திருந்தாலும் - அவற்றையும் தாண்டி, நீக்கமற நிறைந்திருப்பதும், நிலைத்திருப்பதும் பிராமணியமே - பார்ப்பனியமே!

இதைத் தகர்க்க விரும்புவோர் எத்தனை பேர்?