ve aanaimuthu 300தொண்ணூற்று நான்கைத் தொட்டது கண்டு
தொண்டின் நீட்சியைத் தொழுதிடும் காலம்!
கண்முன் இங்கொரு கருத்தின் உலைக்களம்
கனவாய் விரிவது மானுடச் செம்புலம்
மண்ணின் உறவொடு மலரும் சிந்தனை
மக்களின் விடுதலைக் குற்றதும் செல்வழி
எண்ணில் நூறெனில் இறக்கிச் சொல்வது
இன்னு மிருப்பீர், இன்னொரு தலைமுறை!

கிழவன் படைத்தது கிழக்கின் வெளிச்சமே
கேடென் றுரைத்தவர் ஆடிக் கவிழ்ந்தனர்
அழுகைப் பாடலை அறிவென் றேத்திய
அழிவைத் தூர்த்தவர் முழவை ஏந்தினை
எழுதி எழுதியெம் பழுதை நீக்கினை
ஏறி மேடையில் சீறி முழங்கினை
எழுக! விழி!யென் றெம்மை ஊக்கிட
இன்னு மிருப்பீர், இன்னொரு தலைமுறை!

ஒடுங்கிய உடலில் ஒடுங்கா உள்ளம்
ஓய்வு ஓய்ந்திடும் ஓயா உழைப்பு
நடுங்கா அறிவு நாச்சொல் தெளிவு
நாட்டிய கொள்கையில் பூட்டிய திண்மை
படும் பாடுகளில் அடங்காத் துணிவு
படமாய் விரியும் நெடுவர லாறே
எடுமாப் புகழே! ஏந்தல்! நெடுநாள்
இன்னு மிருப்பீர், இன்னொரு தலைமுறை!

Pin It