நூல் நூலாயிருந்தவரை

நூல்கள் பெருமைக்குரியனவாயிருந்தன

பஞ்சைத் திரித்த

நூல்களுக்குப் பதிலாய்

நஞ்சைத் திரித்த நூல்களால்தான்

வேறுவேறு வர்ணங்களானது

வெண்மை!

சாயம் ஏற்றப்பட்ட

நூல்களிலிருந்து தொடங்குகிறது

நிறபேதங்களின் நிறுவனமயம்

பஞ்சு ஆடைகளை

பஞ்ச ஆடைகளாய் ஆக்கிவிட்டது

உலகமய மானம்காத்த

டெர்லினும் டெரிகாட்டனும்

இராமாயணம்

கலந்துவிட்டது போலவே

இரசாயணமும் கலந்துவிட்டது

நூல்களில்

இப்போதெல்லாம்

நாகரிக நஞ்சைப் பரப்பும்

நச்சுக் கருவிகளாகிவிட்டன

நூல்கள்!

உடுத்தாலும்

படித்தாலும்

எது உயர்வுதருகிறதோ

அதுவே நூல்!

ஆனால்...நூல்களோ

ஊடக போதையை

உள்வாங்கிய நூல்கள்

இப்போதெல்லாம்

விளம்பர றெக்கை கட்டியே

விற்பனைக்கு வருகின்றன

கண்காட்சி எனும் பெயரில்

நூல்கள் இப்போது

நூதனக் கொள்ளையடிக்கின்றன

நூல் நூலாயிருந்தவரை

நூல்கள் பெருமைக்குரியனவாயிருந்தன

இயற்கையாய்ச் செய்த நூல்கள்

உடலுக்கும் உள்ளத்துக்கும்

உதவியாய் இருப்பன

மானத்தையும் மனிதனையும்

பிரித்துக்காட்டுகின்றன

வர்ணம் கலந்த நூல்கள்!

ஏற்றுக்கொள்ளத் தக்கதாயிருக்கிறது

வள்ளலாரின் வர்ணம் நீங்கிய

வெண்மை நூல்!

ஒரு சல்யூட்டும்

சொல்லிவைக்கலாம்

ராம்ராஜ்க்கு!

Pin It