எல்லா அமைப்புகளையும் சார்ந்த தன்னலமற்ற பெரியார் தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

தந்தை பெரியார் அவர்கள் அன்றாடமும், மாதந் தோறும் செலவு செய்கிற இரண்டு பணிகளைத் தம் சொந்தப் பணத்தைச் செலவு செய்தே பல ஆண்டுகள் மேற்கொண்டார்.

1919 செப்டம்பர் வாக்கில் காங்கிரசில் சேர்ந்த அவர், 1925 நவம்பர் முடிய கதர் பரப்புரை செய்தல், கதர் மூட்டைகளைச் சுமந்து சென்று துணி விற்றல், கள்ளுக்கடை எதிர்ப்புப் பரப்புரை செய்தல், 20 மாத கால வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம், சேரமாதேவி குருகுலப் போராட்டம் என, எல்லாப் பணிகளுக்கும் அவருக்கும், அவருடன் பயணம் சென்ற தோழர்களுக் கும் அவருடைய சொந்தப் பணத்தையே செலவு செய்தார்.

22-11-1925இல் காங்கிரசுக் கட்சியைவிட்டு வெளி யேறுவதற்கு முன்னரே, ஈரோட்டில், 2-5-1925இல், “குடிஅரசு” கிழமை இதழை அவருடைய செலவி லேயே தொடங்கி வெளியிட்டார்.

26-12-1926 இல் மதுரையில், “பார்ப்பனரல்லா தார் சுயமரியாதை இயக்கம்” தொடங்கப்பட்ட பின்ன ரும், 1928இல் “Revolt” ஆங்கிலக் கிழமை இதழைத் தொடங்கிய பின்னரும், 1929 பிப்ரவரி 17, 18இல் செங்கற்பட்டில் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெறுகிற வரையில், பெரிதும் அவரு டைய சொந்தப் பணத்தையே இயக்கப் பணிகளுக்குச் செலவிட்டார்.

தொடர்வண்டிப் பயணம் என்றால் மூன்றாம் வகுப்பு; சிற்றுண்டி என்றால் தெருவில் தட்டுக் கடையில் ஏழைத் தாய்மார்கள் விற்கும் ஆப்பம், இட்டிலி, வடை; பயணத்தின் போது தங்குவது என்றால் நண்பர்கள் வீட்டுத் திண்ணைகள் - இவை உடன் வருகிற சில ருக்கு வருத்தத்தைத் தரும். அவருக்குப் போதிய பண வசதி இருந்தாலும், அந்தச் சிக்கன முறைகளையே அவர் பெரிதும் விரும்பினார்.

இந்தித் திணிப்பு என்பது 1937இல் வந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938-1939இல் 20 மாதங்கள் நடைபெற்றது. அப்போதுதான், தமிழ்ப்பொது மக்கள் 100 பைசா, 100 காலணா, 100 ரூபா எனப் பண நன் கொடை தர முன்வந்தார்கள். இது பொதுமக்கள் தந்த ஒரு வருவாய்.

தாம் வெளியிட்ட சிறு சிறு நூல்களை அரை அணா, ஓர் அணா, இரண்டணா, நான்கணா என ஒரு நூறு ரூபாவுக்கு ஒரு பொதுக்கூட்டத்தில் விற்றால், அது ஒரு வருவாய்.

கூட்ட வழிச் செலவுக்கென்று, தோழர்கள் - 50 ரூபா, 100 ரூபா தந்தால், அதில் மிச்சமாகும் பணம் ஒரு வருவாய்.

இவையெல்லாம் அவ்வப்போது இயக்க வங்கிக் கணக்குக்குப் போய்விடும்.

இப்படியெல்லாம் அவர் சேர்த்த பணத்தை கோயம்புத்தூர் நூல் நூற்பு ஆலை, துணி நெசவு ஆலைகளில் முதலீடு செய்தார். அந்த ஆலைகள் மூழ்கிவிடும் நிலையில் இருந்தபோது, எங்கே இயக்கப் பணம் இழக்கப்படுமோ என்று கவலைப் பட்டார். ஆனால் இரண்டாம் உலகப் போர் நெருக்கடி தீர்ந்த பின்னர், கோவை ஆலைகளில் போட்ட பணம் முதலும் வட்டியுமாகச் சேர்ந்து கிடைத்தது.

அத்தொகையை வைத்தே திருச்சிராப்பள்ளியில், புத்தூரில், 1950இல், “பெரியார் மாளிகை” என்னும் இடத்தை, திருச்சி தி.பொ. வேதாசலம் முயற்சியால், இயக்கப் பெயரில் விலைக்கு வாங்கினார். அங்கே இருந்த திடலில்தான், 3.12.1950இல் வகுப்புரிமை மாநாடு நடந்தது. நான் முழுநாளும் பார்வையாள னாக இருந்தேன்.

1952-1953இல் சென்னை மாகாணத்தில் ஆச் சாரியார் ஆட்சி அமைந்தது. அவர் ஆட்சிக்கு வந்த வுடன் 6000 சிற்றூர் தொடக்கப் பள்ளிகளை மூடினார்; சிறார்கள் அரை நேரம் பள்ளியில் படிக்க வேண்டும் - மீதி அரை நேரம் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக ஆக்கினார்.

காங்கிரசின் ஒரு பகுதியினர் உட்பட, எல்லாக் கட்சியினரும் அக்குலக்கல்வித் திட்டத்தை முழு மூச்சுடன் எதிர்த்தனர்.

அச்சமயத்தில், பார்ப்பனர் அல்லாத வகுப்புப் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும், பத்தாம் வகுப்புத் தேறிய பிறகு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு, அவரிடம் பரிந்துரை மடல்கள் பெற வந்தனர். அது வழியாக, மாணவர்களுக்குப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

திருச்சி நகரில், அரசு ஆண்கள் இடைநிலைப் பயிற்சிப் பள்ளி, கிறித்துவர், இஸ்லாமியர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இருந்தன. இருங்களூரில் ஒரு கிறித்துவர் பயிற்சிப் பள்ளி இருந்தது. அப்பள்ளியில் சேர அன்று (1952-1954) ரூ.100, ரூ.150 என நன் கொடை கேட்டனர்.

இதைச் செய்ய முடியாமல் தவித்த பிற்படுத் தப்பட்ட-தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவ-மாணவி களுக்கு உதவும் வகையில்தான்-முதன்முதலாக, திருச்சியில், ‘பெரியார் ஆண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி’, ‘நாகம்மை பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி’ என்பவற்றை, அரசு நிதி உதவி பெறும் பயிற்சிப் பள்ளிகளாகத் தொடங்கினார், 1955இல். முதலாமாண்டில், ஆண்கள் 110 பேர்; பெண்கள் 110 பேர் சேர்ந்து பயின்றனர். முதலாமாண்டில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை பெறவில்லை.

முதலாம் கல்வி ஆண்டு முடிவில், அப்பள்ளிகளை நடத்தியதில், ரூபா 11,000 இழப்பு வந்தது. ‘சுயமரி யாதைப் பரப்புரைச் சங்கத்தின் நிதியிலிருந்து, அது ஈடுசெய்யப்பட்டது. ஆண்டுதோறும் அப்படிச் செய்தால், இயக்க நிதி கரைந்து போகுமே என்று கருதினார். அப்படி நேராமலிருக்க, இரண்டாமாண்டில், தலைக்கு ரூ.50 நன்கொடை என, 220 மாணவ-மாணவி களிடமும் பெற்றார்.

பள்ளியில் சேர்க்க பெரியார், நன்கொடை வாங்கியது 1956-57 கல்வி ஆண்டில் தான். நான் 1956 சூன் முதல் - 1957 நவம்பர் வரை திருச்சியி லிருந்தேன். அப்போது அங்கிருந்து “குறள் முரசு” வார இதழை வெளியிட்டேன். அதில்வரும் கட்டுரை கள் “விடுதலை”யில் மறுபதிப்பாகி வெளிவரும்.

1959, 1960 தவிர, 1981 வரையில் திருச்சியில் குடியிருந்தேன்.

1963இல், திருச்சியில் தனிப் பயிற்சிக் கல்லூரி, 1966இல் பருவத் தேர்வுகளுக்கு உரிய வினாத்தாள் அச்சிட்டு விற்பனை; 17.8.1973இல் தமிழக அரசிடம் கடன் பெற்று அச்சகம் தொடக்கம் என, மூன்று வருவாய் வழிகளைப் பெற்றிருந்தேன். இந்த 11 ஆண்டு களில், பெரியாரிடம் பேசிட வேண்டி, குறைந்தது 1100 நாள்கள் நானும், நோபிள் கு. கோவிந்தராசலுவும் - அன்றாடம் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை பெரியார் மாளிகைக்குச் சென்று, பெரியாருடன் பல செய்திகள் பற்றிப் பேசுவோம். அவர் திருச்சியில் இல்லாத போதும் - பழைய ஏடுகளைப் படிப்பதற்காக நான் பெரியார் மாளிகைக்குச் செல்வேன்.

1958 முழுவதும் நான் சிறைப்பட்டிருந்தேன்; 1959, 1960இல் என் ஊரிலிருந்தேன்.

1959க்குப் பிறகு, கொஞ்சங்கொஞ்சமாகப் பள்ளிச் சேர்க்கைக்காக மாணவர்களிடம் பெறும் நன்கொடை யின் அளவு உயர்ந்து - 1971இல் தலைக்கு ரூ.1000 செலுத்தும் அளவுக்கு அது உயர்ந்தது. “அது ஒரு நல்ல வருவாய் வழி” - “எளிய வருவாய் வழி” என்று ஆகிவிட்டது.

பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து அப்பயிற்சிப் பள்ளிகளில் சேர்ப்பதை, இரண்டொரு தி.க. தோழர்கள், ஒரு தொழிலா கவே செய்தார்கள்.

சேரும் மாணவர்களில் பெரும்பாலோர் - சுய மரியாதை இயக்கக் குடும்பங்களைச் சாராதவர்கள்; “விடுதலை”, “உண்மை” இதழ்களைப் படிக்க விரும்பாதவர்கள்.

மாணவிகள் ‘கட்டுப்பாடு’ என்கிற பேரால் ‘கட்டுப் பெட்டிகளாக’ நடத்தப்பட்டார்கள்.

இவற்றின் காரணமாக, பெரியார் பெயருக்கு-பெரியார் இயக்கத்துக்கு மதிப்புக் கூடுவதற்கு மாறாக, மதிப்பும் மரியாதையும் இவற்றால் குறைந்தன என்பதே உண்மை.

இன்றைக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் வரை யில், இந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ப்ப தற்கு ஆண்கள் என்றால் 1, 1ஙூ, 2 இலக்க ரூபாய் நன்கொடை பெற்றார்கள்; பெண்கள் என்றால் ரூபா இரண்டு, இரண்டரை இலட்சம் நன்கொடை பெற் றார்கள். இவ்விரண்டு வழியிலான நன்கொடைகள் மட்டுமே ஆண்டொன்றுக்கு இரண்டு கோடியாகும்.

1955இல் தொடங்கப்பட்ட அரசு நிதி உதவி பெறும் அப்பள்ளிகளுக்கு, 50 ஆண்டுகளாக, ஆண்டு தோறும் புதிய கட்டடங்கள் கட்டுவதும், புதிய நூலகங்கள் வைப்பதும் இல்லையே!

இதுதான் பெரியார் பெயரால் செய்யப்படும் “கல்வித் தொண்டு” என்னும் கல்வி வணிகத் தொண்டு ஆகும். நிற்க.

இந்தச் சூழலில்தான், பெரியார் பெயரில் திருச்சி யில் ஒரு பெண்கள் கல்லூரியை நடத்திட மணியம்மை திட்டமிட்டார். அது அப்போதைக்கு வேண்டியதில்லை - ஆண்கள் கல்லூரியே வேண்டும் என்று கூறி, அதை மடைமாற்றிட, நானும் என் நண்பர்களும் எல்லாம் செய்தோம். பெரியார் அதை ஏற்றார்.

சொந்தப் பொறுப்பில் அப்படி ஒரு கல்லூரியை நடத்துவதற்குப் பெருஞ்செலவு ஆகும் என்பதைப் பல கல்வியாளர்கள் வழியாக அவர் அறிந்தார். எனவே தம்மால் ஆனதைச் செய்து, தம் பெயரில், திருச்சியில், ஓர் அரசுக் கல்லூரி நடத்தப்படப் பெரும் பொருளும்; மற்றும் கட்டடமும், பரந்த இடமும் விலைக்குப் பெற்றுத் தந்தார்.

பெரியார் வாழ்ந்த காலத்தில், அவர், ஒடுக் கப்பட்டோரின் கல்வி வளர்ச்சி கருதி, கல்வி நிறு வனங்களை நடத்தியது என்பது இவ்வளவு மட்டுமே. இதை, பெரியார் தொண்டர் ஒவ்வொருவரும் நெஞ்சில் பதித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் 1976க்குப் பிறகு திராவிடத் தேர்தல் கட்சிகளைச் சார்ந்த அமைச்சர்கள், முன்னாள் அமைச் சர்கள்; சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள்; கிறித்துவ, இஸ்லாமிய மத அமைப்புகள்; காஞ்சி சங்கர மடத்தினர், பெரியார் சுயமரியாதைப் பரப்புரை நிறுவனத்தினர் எனப் பல தரப்பினரும்-பொறியியல், கலை-அறிவியல், பலதுறைத் தொழிற்கல்விகள் தரும் தனியார் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினர். “கல்வித் தொண்டு” என்கிற பேரால் வணிக வடி விலான கல்வி நிறுவனங்களையும்-மாணவர் தங்கும் விடுதிகளையும் என, இன்று வரையில் 500, 600 நிறுவனங்களைத் தொடங்கிவிட்டனர்.

“கல்வித் தொண்டு” செய்வது என்கிற பேரால், சமூகத்தின் பார்வையில் மதிப்பும் மரியாதையும் சம்பாதிப்பதுடன், ஒவ்வோராண்டிலும் கோடிக்கணக்கில் கள்ளப் பணம் கொட்டும் தனியார் கல்வி நிறு வனங்களை வளர்த்துக் கொண்டனர். இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி தருவதில்லை. ஆனால், நிறுவனத்தை நடத்தியாக வேண்டும். அதைச் சாக்காக வைத்து, ஒரு மாணவரிடமிருந்து ரூபா 20 ஆயிரம் முதல் 1, 2, 3, 4, 5 இலட்சம் வரை படிப்புத் துறைக்குத் தகுந்தபடி, நிர்வாகத்தினருக்கு உரிய 50ரூ இடங்களுக்கு, மாணவர் சேர்க்கைக்கு “நன்கொடை” திரட்டிக் கொண்டார்கள்; கொள்ளுகிறார்கள்.

பொறியியல், கணினி இயல், உயிரிநுட்பவியல், மருத்துவம், மருத்துவப் பட்டமேற்படிப்பு, சிறப்பு மருத்துவப் படிப்பு என ஒவ்வொரு வேலைவாய்ப்பு உள்ள துறைப் படிப்புக்கும் - மொத்தம் 100 இடங்கள் என்றால், 50 இடங்களை ஏலங்கூறி விற்றுப் பணக் கொள்ளை அடிக்க வழி தேடிக் கொண்டனர்.

பணமே குறி என்பதால், அதனை ஒரு கவர்ச்சி யோடு நல்ல விலைக்கு விற்பதற்கு, அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, “தரமான-உயர்வான தொழிற்கல்வி தருகிறோம்” என்கிற பெயரில், “தனியார் கல்வி நிறுவனங்களை” - “பணம் அச்சடிக்கும் கருவியாக விளங்கும் பலவகைப் பட்டப்படிப்புகளை”த் தொடங்கி, விரைவில் பெரும் பணம் குவிக்கிற “கல்வி வள்ளல்களாக” உயர் கிறார்கள்.

“கீழ்ச்சாதி-கீழ்த்தட்டு-சிற்றூர்ப்புற வேளாண் மக்களுக்கு” இந்த உயர்ந்த விலைக் கல்வி கிடைக்கவே முடியாது. எத்தனைத் தனியார் கல்வி நிறுவனங்களை ஒரு தனி ஆளோ, ஒரு தனி அமைப் போ நடத்துகிறார்கள் என்பது முதன்மை அன்று. அவற்றால் பயன்பெறத் தகுதி படைத்தவர்கள் - யார், யார் என்பதே முதன்மையானது. அதனால் பயன் பெறுகிறவர்கள் - மேல் சாதி - மேல்தட்டு - பணக்கார - நகர்ப்புற மாணவ, மாணவிகளே ஆவர் என்பதே மிகப்பெரிய உண்மை.

இத்தகைய கல்வித் துறைகளை வளர்த்து - அவற்றால் பகுத்தறிவு உணர்ச்சியை-மதச்சார்பற்ற உணர்வை-சுயமரியாதை உணர்வை-சாதி, மத ஒழிப்பு உணர்வை; பார்ப்பனியப் பண்பாட்டு ஒழிப்பு உணர்வை ஒரு விழுக்காடு அளவுக்காவது வளர்க்க-கற்பிக்க முடியுமா என்பதே முதன்மை.

“கல்வி என்பதிலிருந்து மதம் பிரிக்கப்பட்ட கல்விதர-மதச்சார்பற்ற கல்வி தரப்பட அரசு ஆவன செய்ய வேண்டும்” என்பதே தந்தை பெரியாரின் கல்விக் கொள்கை. மேலும் கல்வி தருவது மக்கள் நாயக அரசின் உயிரான பணி; தனியாரின் பணி அன்று.

இன்றைய அரசு அதைச் செய்யாது.

இன்றைய அரசமைப்புச் சட்டம் அதைச் செய்ய இடந்தராது. இவை உறுதியானவை.

அப்படியானால், கல்வியிலிருந்து மதம் பிரிக்கப்பட ஏற்ற ஓர் அரசை - அரசு நடப்பிலிருந்து மதம் பிரிக் கப்பட்ட ஓர் அரசை, நாம் - பெரியார் கொள்கையினர் நம் தமிழகத்தில் நிறுவ வேண்டும் - அத்திசை நோக்கி நாம் எல்லோரும் பயணிக்க வேண்டும் என்பதே, நாம் செய்யத்தக்க ஒரே பணியாகும்.

அன்புகூர்ந்து, அனைத்து அமைப்புகளிலுமுள்ள பெரியார் கொள்கையினர், மனங்கொண்டு இவை பற்றிச் சிந்தியுங்கள்! திறந்த மனத்துடன் சிந்தியுங் கள்! எனப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

Pin It