என் முன்னுள்ள பணிகள் மூன்று ஆகும்.

என் உடல்நிலையில், எனக்கு 11.3.2017 சனி மாலையில் அய்யம் ஏற்பட்டது.

11-அன்று, கிருட்டிணகிரியில் தோழர் குயில்தாசன் அவர்கள் விருப்பப்படி, பிற்பகலில் 3 மணிநேரம் “வகுப்பு வாரி விகிதாசார இடப்பங்கீடு” பற்றி வகுப்பு நடத்தினேன். என்றுமே இல்லாத களைப்பை அன்று உணர்ந்தேன்.

நேரே அவருடைய மகள் வீட்டுக்குச் சென்று, குயில் தாசன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு, இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, வாணியம்பாடி, மா.பெ.பொ.க. செயலாளர் நா. மதனகவி இல்லம் அடைந்தேன். உணவுக்குப்பின், நானும் அவரும் ஒரு விடுதியில் உறங்கினோம்.

12.3.2017 பகலில் அம்பத்தூர் அறக்கட்டளையை அடைந்தேன்.

உடல் சோர்வை நன்கு உணர்ந்தேன்.

வழக்கம்போல், தோழர் அ. மதிவாணன் அவர்கட்கும் அவருடைய துணைவியார் ராணி அம்மையார், அவர்கட்கும் தொலைப்பேசி செய்து, அடுத்த நாள் 13.3.2017 திங்கட்கிழமை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துவிடும்படி வேண்டினேன். அவர்கள் மருத்துவ மனையில் நேரில் பேசிவிட்டு, 14.3.2017 செவ்வாய் காலை 8 மணிக்குச் சேர்த்துவிட ஏற்பாடு செய்தனர்.

எப்போதும்போல் வேண்டிய பொருள்களுடன் கலச. இராமலிங்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தோழர் அ. மதிவாணன் உள்ளக மருத்துவரிடமும் (R.M.O) முதியோர் நலப்பிரிவு தலைமை மருத்துவரிடமும் எங்களை அழைத்துச் சென்று, எல்லா விவரங்களையும் என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, 14.3.2017 செவ்வாய் 1.00 மணிக்கு, பணம் செலுத்தும் படுக்கை உள்ள 246 - பிரிவில் (ward) அறை எண்.ஐ-இல் சேர்த்தனர்.

21.3.2017 வரை எட்டு நாள்கள் அவ்வறையில் தங்கிக் கொண்டு, எல்லா நோய்களுக்குமான ஆய்வுகளைச் செய்து கொள்ள அ. மதிவாணன், ராணி மதிவாணன், முத்துஇலட்சுமி, கலச. இராமலிங்கம், த. புகழேந்தி, முதுகலை மாணவர் அ. அழகன் ஆகியோர் துணைநின்றனர்.

1. செப்பமான ஆய்வுகளை 5 நாள்கள் மருத்து வர்கள் மேற்கொண்டனர். நீரிழிவு, மூத்திரக் கோளாறு தவிர எந்த நோயும் இல்லை என்று விவரமாகப் பதிவு செய்தனர்.

2. என் வாய்மொழியைக் கொண்டு 92 வயதுக்கு மீறி, நான் அலைவதும், படிப்பதும், எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தலைமை மருத்துவர் அறிவுறுத்தி னார். அது என்னால் தவிர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்களிடமே தெரிவித்தேன். அதில் நான் உறுதியாக உள்ளேன். என் முன்னுள்ள பணிகள் அப்படிப்பட்டவை என நான் திடமாக நம்புகிறேன்.

3. மூக்குப்பொடி போடுவதைக் கைவிட, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 64 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பொடியை, 17.3.2017 பிற்பகல் நிறுத்தி விட்டேன். அதனால் என் உடலில் இன்றுவரை புற்றுநோய் அறிகுறி ஏதும் இல்லை என்பதையும் இப்போது உறுதிசெய்து கொண்டேன். இது, நான் பெற்ற பெரிய திருத்தப்பாடு ஆகும்.

என் முன்னுள்ள பணிகள் மூன்று ஆகும்.

1. முதலாவது, “சிந்தனையாளன்” இதழை நிலைப்படுத்திட எல்லாம் செய்தல்;

2. அறக்கட்டளை செப்பமாக நடத்தப்படவும், தத்துவப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடத்தப்படவும் எல்லாம் செய்தல்;

3. பெரியார் வரலாறு எழுதி முடிக்கப்பட எல்லாம் செய்தல்.

இவற்றுக்கே இன்னும் மூன்று ஆண்டுகள் நான் நலமாக இருக்க வேண்டும்; இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு இயக்கத்தார் ஆவன செய்யுங்கள். என் குடும்பத்தினர் என்றும்போல் துணைபுரிவர்.

Pin It