பேராசிரியர் மு. நாகநாதன் அவர்கள் எழுதி அண்மையில் (2013- நவம்பர்) வெளிவந்த நூலே நீதியா? நியாயமா? என்பதாகும். நூலின் முகப்பில் அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டுரைகள் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நூலின் உள்ளே சென்றால் அவற்றோடு ஆட்சியியல், சட்டம், அறிவியல், விளையாட்டு, வரலாறு ஆகிய துறை களிலும் கட்டுரைகள் உள்ளன; ஜாலியன் வாலா பாக் படுகொலை- வெளிவராத உண்மைகள் என்னும் கட்டுரை முதல் பெரியார்சிலை: பாராட்டுக் குரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரை 25 கட்டுரை களை உள்ளடக்கி 194 பக்கங்களுக்கு நூல் விரிந் துள்ளது. முதற் கட்டுரையில் வெளிவராத உண் மைகள் இருப்பன போலவே அனைத்துக் கட்டுரை களிலும் பல வெளிவராத உண்மைகளும் புதுச் செய்திகளும் உள்ளன; நிரம்பத் தொடர்ந்து படிப்பவர்களும் அறிந்திராத செய்திகளும் உள்ளன; அவ்வப்போது வெளிவரும் நூல்களையும் மாத- வாராந்தர இதழ்களையும், குறிப்பாக இணைய தளத்தையும் நோக்குபவராக இருப்பதால்தான் எண்ணற்ற செய்திகளை ஆசிரியரால் வெளிக் கொணரப்பட்டுள்ளன எனலாம். நூலிலுள்ள எட்டுக் கட்டுரைகள் முதலாளித்துவச் சுரண்டலை, கள்ளத்தனமான கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அவை நம்மைத் திடுக்கிட வைக் கின்றன.

naganathan 400கூட்டாட்சித் தத்துவத்தை உள்ளீடாகக் கொண்டு மத்திய-மாநில உரிமைகள் குறித்து ஆசிரியர் நான்கு விரிவான கட்டுரைகளை எழுதி யுள்ளார். மத்திய அரசு, தொடர்ந்து மாநில உரிமை களைப் பறித்து வருவதை ஆசிரியர் சிறப்பாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். குறிப்பாக, மணிப்பூர் மாநிலமா? நாடா? என்னும் கட்டுரை மேலும் மேலும் ஆய்வதற்குரிய கட்டுரை, இக் கட்டுரையில் மணிப்பூரின் தேசிய இன உரிமை களை நடுவண் அரசு எவ்வாறு நசுக்கி வருகிறது என்பதையும் மணிப்பூர் மக்கள் நடுவண் அரசை எப்படி நோக்குகிறார்கள், அம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அளித்த முனைவர்பட்ட ஆய்வேட்டில் குறிப்பிட்டிருக்கும் உண்மைகளை எடுத்துக்காட்டி ஆசிரியர் விளக்குவதும் சிந்தனைக்கு விருந்தாக உள்ளது.

மணிப்பூரில் உரிமை குறித்து, அம்மாநிலப் பெண்கள் 15.7.2004 அன்று நடத்திய அம்மணப் போராட்டத்தைக் குறிப்பிட்டிருப்பது நம்மைத் திடுக்கிட வைக்கிறது. மத்திய- மாநில உரிமைகள் குறித்து நூலாசிரியர் ஏற்கனவே சில நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்; இவற்றை யெல்லாம் ஒருங்கு நோக்கின் இவை குறித்து மிகுதி யாகத் தமிழில் எழுதியவராக இந் நூலாசிரியர் தான் காட்சியளிக்கிறார்.

இந்திய காங்கிரசா? அமெரிக்கக் காங்சிரசா? என்னும் கட்டுரையில், காங்கிரசானாலும், பா.ஜ.க. வானாலும், தனியார் மயம், தாராளமயம், உலக மயம் ஆகியவற்றுக்கு எவ்வாறெல்லாம் துணை போகிறது என்பதைப் புள்ளி விவரங்களோடு சில நூல் குறிப்புகளையும் தருகிறார். அவையும் நம்மை திக்குமுக்காட வைக்கிறது. குறிப்பாக அயல்நாட்டு நூலாசிரியர்களான ஸ்டார்ட் கார் பிரிட்ஜ் மற்றும் ஜான்ஹேரிஸ் எழுதிய “இந்தியா மறு ஆய்வு நூலில் இந்தியாவில் இந்துத்துவா எப்படி வளர்ந்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவது நம்மை அதிர வைக்கிறது. மேலும் உலகமயமாக்கலின் பேராபத்தையும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்டிக்லிஸ் என்னும் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் உலகமயமாக்கலால் அமெரிக்காவில் ஒரு விழுக்காட்டு மக்கள் மட்டுமே எல்லாப் பயன் களையும் அடைந்து வருவதை விளக்கிக்காட்டி யிருந்தும், மன்மோகன்சிங்கும், ப.சிதம்பரமும் வால்மாட் நிறுவனத்தை இந்தியாவுக்கு அழைப் பதும், அந்நிய நேரடி முதலீட்டிற்குப் புதுப்புது சலுகைகள் வழங்குவதும், பொதுத்துறை நிறுவனங் களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதும், பல்லா யிரம் கோடி வருமானத்தை அளிக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகங்களில் அந்நிய முதலீட்டை நுழைப்பதும், தொழிலாளர் வைப்பு நிதியைப் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதும் யாருக்காக? இந்திய மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினராக உள்ள முதலாளிகளின் பயனுக்காகவா? 7 விழுக்காட்டினராகவுள்ள நடுத்தர மக்களுக்காகவா 90 விழுக்காட்டினராகவுள்ள ஏழை- எளிய மக்களுக் காகவா? என வினா எழுப்புகிறார். மன்மோகனும், சிதரம்பமும் யாருக்காகத் திட்டம் தீட்டுகிறார்கள் என்பதைத் தோலுரித்துக்காட்டுகிறார். இந்தத் தோலுரித்துக் காட்டும் தன்மை பல கட்டுரை களில் பளிச்சிடுகிறது.

டெல்லியில் அரங்கேறும் கருப்புப்பண நாடகம் என்னுங் கட்டுரையில் பல திடுக்கிடும் செய்திகள் உள்ளன; இந்தியாவில் கருப்புப்பணம் பல மடங் காகப் பெருகுவதற்குப் பெரும் நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும் செய்யும் வரி ஏய்ப்பே.... காரணமாகும் என்று வாஞ்சு கமிஷன் 1972-இல் அறிக்கை அளித்தது. நடுவண் அரசு அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்காமல், மாறாக இந்திரா காந்தி காலத்தில் நடுவண் அரசு அந்தக் கமிஷனின் அறிக்கையை முதலாளிகளிடம் காட்டி அச்சுறுத்திப் பெருந்தொகையை நன்கொடையாகப் பெற்று உள்ளது. இந்தக் கொடும் செயலைப் பாராளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜோதிர் மாயிபாசு பாராளுமன்றத்தில் ஆதாரங்களோடு விளக்கி ஊழலை வெளிக்காட்டியதை ஆசிரியர் நமக்குக் காட்டுகிறார். 1990- 2010 வரை நடுவண் அரசு, இந்திய முதலாளிகளுக்கு 100 லட்சம் கோடிக்கு மேல் வரிச்சலுகை அளித்துள்ளதாம். பீரங்கி ஊழல், நீர் மூழ்கிக் கப்பல் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், G2- அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்ற ஊழல்களின் காரணமாகக் கருப்புப் பணம் மேலும் பெருகியுள்ளதாம். இந்தியர்களின் கருப்புப்பணம் சுவிஸ் வங்கி உட்பட 40 அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ளதையும், சுவிஸ் வங்கிப் பட்டியலில் உள்ளவர்களில் முதல் 100 பேர் காங்கிரசு கட்சியோடு தொடர்புடையவர்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுவது திகைக்க வைக் கிறது. இந்தக் கருப்புப் பணப் பட்டியலில் ஆட்சி யாளர்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே அல்லாமல், புட்டபர்த்தி சாயிபாபா மடம், நித்தி யானந்தாமடம், வாழும் கலை ரவிசங்கர் அமைப்பு, வேலூர் நாராயணி தங்கக் கோயில், மேல்மருவத்தூர் கோயில் போன்றவையும் அடக்கமாம்! கடவுள் இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் கருப்புப்பணம்; “காசேதான் கடவுள் அப்பா” என்று பாடியது இதற்குத்தான் போலும்!

கருப்புப் பணச் சுரங்கத்தை அடையாளம் காட்டிய ஆசிரியர், நடுவண் அரசின் புலனாய்வுத் துறையின் பொய்முகத்தையும் அம்பலப்படுத்து கிறார். நேர்மை, உண்மை, நடுவு நிலைமை ஆகிய வற்றிற்கு இலக்கணமாகத் திகழ வேண்டிய அமைப்பு நடுவண் அரசின் கைப்பொம்மையாக மாறியுள்ளதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவது நம்மை அதிர்ச்சியில் கலங்கடிக்கிறது, நடுவண் அரசின் திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்த கிருஷ்ணமூர்த்தி வெளி நாடுகளிலிருந்து 1000 கோடிரூபாய் லஞ்சம் வாங்கி யதற்கும், ஹாவலா பணமோசடியில் ஈடுபட்டோரைக் கைது செய்வதற்கும், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மீதிருந்த குற்றச் சாட்டை விசாரிப்பதற்கும் பல ஆதாரங்கள் இருந்தும், அவர்கள் மீது நட வடிக்கை எடுக்காதிருப்பதற்கு நடுவண் அரசு சி.பி.ஐ-யை எப்படி முடக்கியது என்பதையும், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தரகராக குவத்ரோச்சி செயல்பட்டதையும், சத்திஸ்சர்மா, சந்திராசாமி ஆகியோர் போஃபர்ஸ் ஊழல் பணத்தைப் பெற்றதையும், துர்காபூர் எஃகு ஆலையை நவீனப்படுத்துவதில் ராஜிவ் காந்தி முறைகேடாகக் கையூட்டுப் பெற்றதையும், முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சாமி, முன்னாள் செயலாளர் இராமசாமி, கடற்படைத் தளபதிகள் தகிலானி, இராமதாஸ் ஆகியோர் இணைந்து நிலக்கரி ஓதுக்கீட்டை அடிமாட்டு விலைக்குத் தனியாருக்கு ஒதுக்கியதையும் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர்களாக ஜோகீந்தர்சிங், மற்றும் பி.ஆர்.லாலும் இணைந்து எழுதிய “சி.பி.ஐ. யார் கையில் உள்ள வெளிப்படையான உண்மை” என்னும் நூலின் வழி நின்று ஆசிரியர், பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்காட்டுவது நம் ரத்தத்தை உறையவைக்கிறது. ஊழல் செய்திகளும், மறைக்கப் பட்ட ரகசியங்களும் இக்கட்டுரையிலும் வேறு கட்டுரைகளிலும் அடுக்கடுக்காக உள்ளன. இந் நூலின் முக்கிய சிறப்பே இவைதான். ஆம், ரகசியங் களின் வெளிச்சமே இந்நூல்.

அயல்நாடுகளின் ரகசியங்களை வெளிக் கொணரும் விக்கிலீக்ஸ் அசாங்கே பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. அக்கட்டுரையிலும் பல அதிர்ச்சித் தகவல்கள் உள்ளன; அவை நாம் அறியாதவை; சோமாலியாவில் அதன் அதிபர் 2006-இல் தம் உயர் அலுவலர்களைக் கொலை செய்ததையும், கென்யாவின் அதிபர் டேனியல் ஆர்ப் மோயின் குடும்பம் செய்த பெரும் ஊழலையும், கௌடி மாலாவில் அமெரிக்க ராணுவம் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றதையும், ராணுவ வீரர்களைச் சிறையில் கொடுமைப்படுத்தியதையும் சுட்டிக்காட்டு வதோடு, 2007-இல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட்டு ஓ கிளார்த் என்பவர் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய செய்திகளை விக்சிலீர்லி அம்பலப்படுத்தியுள்ளதை ஆசிரியர் நமக்கு எடுத்துக் காட்டுவது தலையில் இடி விழுவது போல் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா, இலங் கையில் வணிகர்களிடம் கட்டாயப்பணம் வசூலிப் பதையும், புலிகள் அமைப்பைச் சார்ந்த வீரர் களாகச் சந்தேகித்தவர்களைப் படுகொலை செய் திருப்பதையும் சிறுவர்களைத் தம் ஆயுதப்படையில் வன்முறையில் சேர்ந்திருப்பதையும், போர்க் காலத்தில் அஞ்சியோடிய பெண்களைச் சிங்கள ராணுவ வீரர்களின் பாலியல் தேவைக்காக ஒப்படைத்த அக்கிரமத்தையும் ராஜபக்சேவின் துணையோடு செய்திருக்கும் இரசியங்களை ராபர்ட் ஓ கிளார்க் அமெரிக்க அரசுக்குக் கமுக்கமாக அனுப்பிய செய்திகளை ஆசிரியர் சுட்டிக்காட்டுவது நம்மை சோகத்தில் மூழ்த்துவதாக உள்ளது. இந்திய ஊடகங்கள் எதை எதையோ காட்டுகின்றன; அந்த ஊடகங்கள் செய்யத் தவறியவற்றை நடுங்க வைக்கும் செய்திகளை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

‘நிலக்கரி ஊழலும் தலைமைத் தணிக்கை அலுவலரும்’ என்னும் தலைப்பிலும் ஒரு கட்டு ரையை எழுதியுள்ளார். நிலக்கரி ஊழலில் அரசுக்கு 1,86,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதைத் தணிக்கை அலுவலர் அறிவித்தபோது ஆளும் கட்சியின் அமைச்சர்களும், தலைவர்களும் அவ்வாறு அறிவிக்க அவர்க்கு உரிமை கிடையாது என்று கூசாமல் அவரை எச்சரித்தனர். சில செய்தித் தாள்களும் அதற்கு ஆதரவு அளித்தன. 1990-க்குப் பின்தான் இப்படித் தணிக்கை அலுவலரை எச்சரிக்கும் போக்குத் தோன்றியுள்ளதாக ஆசிரியர் கூறுவது கவனிக்கத்தக்கது. படேல், தம் ஆட்சிக் காலத்தில் அதிகாரிகளைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருந்தார் என்பதையும், இராஜேந்திர பிரசாத் தலைமைத் தணிக்கையாளரின் அதிகாரத்தை எப்படி மதித்துள்ளார் என்பதையும், நீதித் துறையைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர் தலைமை தணிக்கை அலுவலர் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியிருப்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுவது அருமையானது ஆளும்பொறுப்பில் வருபவர்கள் இவற்றை நன்கு உணர்வது நாட்டுக்கு நல்லது. அரசால் ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் சரியாகச் செலவு செய்யப்பட்டுள்ளதா?

ஒதுக்கீடுகள் மற்றத் துறைகளுக்குச் சரியாகச் சென்றுள்ளதா? நடுவண் அரசு மாநில அரசுகளுக்கு ஒதுக்கும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகின்றன? அந்த நிதிகளின் தற்கால நிலை என்ன? என்பவற்றை எல்லாம் எந்த அதிகாரத்திற்கும் அச்சப்படாமல் உள்ள உண்மை நிலையை எடுத்து விளக்குவது தான் அவரது பொறுப்பு. அந்தத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்க்கு அதிகாரம் இல்லை யென்று அரசியல்வாதிகள் கூறுவது எப்படிச் சரியாகும்? நடுவண் அரசின் அமைச்சர்குழு ஒரு முறை பெரிய தனியார் நிறுவனங்களுக்கு விதி முறைகளுக்கு மாறாக ஓதுக்கீடு வழங்கி, பின்னர் செய்த தவற்றை (ஊழலை மறைக்க 6 நிறுவனங் களின் உரிமையை ரத்து செய்துள்ளது. ஆண்டுக்கு 35,000 கோடிக்குப் பற்றாக்குறை நிலக்கரியை வாங்கும் நிலையிலுள்ள நம் நாட்டில், நிலக்கரியில் தோண்டத் தோண்டப் புதுப்புது ஊழல்கள் தோன்றுகிறதாம்; நிலக்கரி உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் ஊக வணிகத்தில் ஈடுபட்டுப் பகற் கொள்ளை அடிப்பதையும், நிலக்கரிச் சுரங்கங்களுக்காக இதுவரை 10 லட்சம் ஹெக்டர் பரப்புக் கொண்ட நிலம் பாழ்படுத்தியிருப்பதையும் ஆசிரியர் சுட்டுக் காட்டுவது பெரும் வேதனை தருவதாக உள்ளது. காட்டு வளங்களை, இயற்கை வளங்களை, உயிரியல் தாவர ஆதாரங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் தாராள மயக்கொள்கை மக்களுக்கு நலம் பயக்குமா? என வினா எழுப்புகிறார். மக்கள் அரசியல் விழிப்புப் பெற்றால்தான் அதற்கு விடை கிடைக்கும். மக்கள் விழிப்பும் தெளிவும் பெறு வதற்குத்தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரி யரின் சமூகப் பொறுப்பை இந்நூல் நன்கு அடை யாளம் காட்டுகிறது.

மருத்துவர் பினாயக் சென் அவர்கள், மாவோ யிஸ்டுகளுக்கு உதவினார் என்றும், அவர்களிட மிருந்து கடிதங்களைக் கொண்டு சென்றார் என்றும் பொய்யாகக் குற்றம் சாட்டி சத்திஸ்கர் மாநில அரசின் முதல்வர் அவரைக் கைது செய்து ஆயுள் தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளார். காவல்துறை ஒருவர்மீது குற்ற நடவடிக்கை மேற் கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய எந்த நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கவில்லை; சரி யான சாட்சிகளும் இல்லை. இந்நிலையில் தொண்டு உள்ளம் வாய்ந்த மக்கள் மருத்துவரை மனித நேயரை, அநியாயமாகக் கைது செய்து தண்டித்ததை அம் மாநில காங்கிரசாரும், இந்திய காங்கிரசு தலைவர்களும் வாய்மூடிய மௌனியாக இருப்பது அரசியல் நெறியாகுமா? சமுதாய அறமாகுமா? எனக் கண்டனக் குரல் எழுப்புகிறார் ஆசிரியர். பா.ஜ.க. போட்ட பொய்வழக்கைக் கண்டித்தோ விமர்சனம் செய்தோ நடுவண் அரசு வாய் திறக்காதது ஏன்? என்கிறார். அவருக்குத் தண்டனை வழங்கி யிருப்பது இந்திய நீதித்துறையின் வரலாற்றில் கறைபடிந்த கருப்புப்பக்கம் என்று ஆசிரியர் கண்டிப்பது மிகச் சரியானது; மக்கள் சார்பாக நாமும் இதனைத்தான் ஓங்கி ஒலிக்கிறோம்; பழைய அரசியல் நிகழ்வுகளையும், இக்காலத்திய ஊழல்களையும் படம்பிடித்துக்காட்டும் ஆசிரியர், அன்றாடச் செய்திகளிலும் எத்துணைச் சமூக அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு பினாயக் சென் பற்றிய கட்டுரை நல்ல எடுத்துக்காட்டாகும். பினாயக்குக் கொடுத்த தண்டனை நீதிக்குக் கொடுத்த தண்டனை என்கிறார் ஆசிரியர் நாமும் அதனை அப்படியே ஒப்புகிறோம்; ஆயுள் தண்டனை பெற்ற சென் இப்போது விடுதலையாகி விட்டார்; எப்படியோ உண்மையான நீதி வென்றுவிட்டது. ஆசிரியரின் வருத்தமும் நீங்கியிருக்கும். ஆனால், ஆசிரியர் காங்கிரசார் மீது எழுப்பிய வினா என்றும் மறையாது; “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும் அன்றோ!”

பல அரிய செய்திகளும் சிந்தனைகளும் கொண்ட இந்நூல் புதுமை பொங்கும் புதுநூல் எனலாம். எனினும் சில சிறுகுறைகளும் உள்ளன; பல கட்டுரைகளில் பத்தி மிகப் பெரியதாக உள்ளது; அதனைப் பிரித்துச் சிறிதாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; நூலின் இறுதிப் பகுதியில் சொல் லடைவு உள்ளது; அது பெயர்ச் சொல்லடைவு என்றிருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையின் கீழும் கட்டுரை வெளிவந்த இதழின் பெயரும் காலக் குறிப்பும் இருந்திருக்க வேண்டும். அப்படி யிருப்பது பின்னைய ஆய்வுக்கு நன்கு துணை செய்யும். எழுத்துப் பிழைகள் சிலவே உள்ளன. அவற்றைக் களைந்திருந்தால் நன்றாக இருந் திருக்கும்.

பம்பாய் மாநிலத்தை மும்பை என்றும், கல்கத்தாவைக் கோல்கத்தா என்றும் அவர்கள் குறிப்பிடுவதைப் போன்று ஆசிரியர் டெல்லியை தில்லி எனக் குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந் திருக்கும். 148-ஆம் பக்கத்தில் ஜார்ஜ் ஆர்வல் பீகாரில் பிறந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது; அவர் வங்கத்தில் பிறந்தவராக வரலாற்றுக் குறிப்புக் கூறுகிறது. அறிவியல் மேதை சந்திரசேகரின் நூற்றாண்டு விழாவைப் பற்றிய கட்டுரையில் சந்திரசேகர் சென்னைக்கு வந்ததாகக் குறிப்பில்லை; ஆனால் பெரியவர் ஆனைமுத்து, தம் அணிந் துரையில் சந்திரசேகரை அழைத்து நூற்றாண்டு விழாவை நடத்தியதாகக் குறிப்பு உள்ளது; மெய்ப்பைப் பார்த்த போது அதனைத் திருத்தி யிருக்கலாம். எப்படியோ தவறு நிகழ்ந்துவிட்டது. இவையெல்லாம் சிறுகுறைகளே; அடுத்த பதிப்பு மிகச் செம்மையாக இருக்கும் பொருட்டே இவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன; இக்குறைகளை மிஞ்சிய நிறைகளே நூலின் நிறையாகும்.

* சிக்கல் நெருடல் இல்லாமல் நல்ல தமிழில் தெளிவான உரைநடையில் நூல் அமைந் துள்ளது.

* மாநிலங்களின் தனியுரிமையையும், கூட்டாட்சியின் மாண்பையும் வலியுறுத்துவதாக உள்ளது.

* மறைக்கப்பட்ட வரலாற்றை, மறந்துவிட்ட அரிய செய்திகளை வெளிக்கொணர்வதாக உள்ளது.

* ஊழல்களையும் மதப் பொய்ம்மைகளையும் தோலுரித்துக் காட்டி அறிவியலைச் சிறப் பித்துக் காட்டுகிறது.

* முதலாளித்துவத்தின் கள்ளத்தனத்தை, கொள்ளைச் சுரண்டலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

* உண்மையை, சமூகநீதியை ஆழ்ந்த ஆய்வோடு புலப்படுத்தி மனிதவுரிமையை நிலை நாட்டு வதாக உள்ளது.

*ஓர் அறிஞரின் சமுதாய அக்கறையை, கொள் கையைப் புலப்படுத்துவதாக உள்ளது. மொத்தத்தில் இந்நூல் ஒரு கருத்துக் களஞ்சியம்.

நீதியா? நியாயமா?
பேராசிரியர் மு.நாகநாதன் எம்.ஏ., எம்.எல்., பிஎச்.டி., டி.லிட்.,
வெளியீடு: கதிரொளி பதிப்பகம்
14, சிவசங்கரன் மாடிக் குடியிருப்பு,
சிவசங்கரன் சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 086
விலை : ரூ.160/-

Pin It