கீற்றில் தேட...

கவிதை இலக்கியக் கலையின் ஆதி வடிவம். படைப்பின் ஊற்றுக்கண் கவிதை வழியேதான் மடை திறக்கிறது. எது கவிதை? எவர் கவிஞர்? என்கிற விவாதங்கள் தீராதவை. மொழியின் சிக்கலான படைப்பு வடிவம் கவிதைதான் என்றாலும் ஏராளம் கவிதைகள் எழுதப்படுகின்றன. வெளியிடப்படுகின்றன. பதிப்பிலும், விற்பனையிலும், நூலக எடுப்பிலும் கவிதையை ஒதுக்கி வைத்தாலும் கவிதைகளின் உற்பத்தி அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. படைக்கவும், வாசிக்கவும் எளிமை, நேரச் சிக்கனம், குறைந்த உழைப்பு ஆகிய காரணிகளும் தமிழ் மரபில் புலவர் - கவிஞர் என்ற அடைமொழி களுக்குக் கிடைக்கும் மரியாதையும் கவிதைப் பெருக்கத்திற்குக் காரணமாகின்றன. மனதின் மொழியான கவிதை தொடர்ந்து வருவது கொண்டாடத்தக்கது. 2013ஆம் ஆண்டை இந்திய மொழிகள் கவிதை ஆண்டாகக் கொண்டாடின.

‘விரல் தொட்ட வானம்’ ஆங்கரை பைரவி எழுதியுள்ள கவிதைத் தொகுப்பு. கவிஞராக, நல்ல சிறுகதைக் கலைஞராக, இலக்கியச் சுவைஞராக அறிமுகமாகி இருப்பவர் பைரவி. இலக்கியத்தையே உயிர் இயக்கமாக்கி இருப்பவர். பைரவியின் கவிதைகள் நிகழ்வாழ்வின் சிக்கல் சிடுக்குகளை ஒருவித எளிமையோடும் அழகோடும் பேசுகின்றன. வாழ்வின் சுகங்களும், சுமைகளும், வலிகளும், ஏக்கங்களும் எள்ளல் தன்மையோடு கவிதைகளாகின்றன. இத்தகைய கவிதைகள் பைரவி கணம்தோறும் அனுபவிக்கும் பாடுகளின் பட்டியலாகவே படுகின்றது. மனதின் நுட்பங்கள் அறிய பாதாள கரண்டியுடன் புறப்பட்டு எழுதிய அகவயக் கவிதைகளும் தொகுப்பில் இருக்கின்றன என்றாலும் கவிதை முகத்தில் கவிஞனின் அகத்தை ஒளிக்க முடியாதல்லவா... வெள்ளந்தியான, உழைப்பைப் பொழியும், பாசத்திற்கு ஏங்கும், அன்பை அள்ளி வழங்கும், சமூகக் கேடுகளுக்கும், சட்டக் கேடுகளுக்கும் பலியாகும் மனிதம் காக்கத் துடிக்கும் பைரவியே வெற்றி பெறுகிறார்.

பைரவியின் கவிதைகள் பல மேடைகளில் புழங்கப்பட்டவை. பொழிப்புரை தேவையில்லா தவை. சமூகத்தின் பழிப்புரைகளாகக் கருதத் தக்கவை.

மூத்தமகன் மேலத் தெருவில்
இளையமகன் கீழத் தெருவில்
பெற்றோர்கள் நடுத்தெருவில்

பிள்ளைகளால் கைவிடப்பட்டப் பெற்றோர்களை, முதுமையின் சோகத்தை இதைவிட எப்படிச் சொல்வது? அயல்நாடுகளுக்குப் பிள்ளை களை அனுப்பிவிட்டு டாலர் கனவு கண்டு, வெப் கேமராவில் பேசி, இமெயிலில் செலவுக் கணக்குப் பார்த்து, வீடியோ கான்பரன்ஸில் சாவை அஞ்சல் செய்யும் பெற்றோர்களுக்கும் இது பொருந்தும் தானே?

வாழ்வதற்கு
தாத்தா ஏர் பிடித்தார்
தந்தை கொடி பிடித்தார்
பேரன் காக்கா பிடிக்கிறான்.

புறநானூற்று வீரமும் மானமும் போற்றியத் தமிழ்ச் சமூகம் இன்று எந்நிலையில் உள்ளது என்பதற்குச் சான்று இக்கவிதை. உழைப்பின் குறியீடாய் ஏர்பிடித்தவன், உரிமை கோரி கொடி பிடித்தவன் இன்று காக்கா பிடிக்கிறான். காலில் விழுகிறார்கள். காலை வாருகிறார்கள். வாழ்வது என்பது போய் பிழைக்கப் படாதபாடு படு கிறார்கள். நீதியும் நேர்மையும் தன்மதிப்புமற்ற இன்றைய போலி வாழ்வை அம்பலப்படுத்தும் கவிதை இது.

காட்டுக்குள்ளே திருவிழா
வரப்போகும் தேதியை
அறிவித்துவிட்டார்
வனவிலங்கு அதிகாரி
இப்போதே
அடித்துக் கொள்ளத்
தொடங்கிவிட்டன
நாய்களும்
நரிகளும்
மனிதர்களின்
ஆள்காட்டி விரலுக்காக

இந்திய ஜனநாயகத்தை இப்படிப் படம் பிடிக் கிறார். மனிதர்களும் கூட நாய்களும் நரிகளுமாய் இடமாறித் தொலைத்தது யதார்த்தம். போகட்டும். சாதி, மதங்களால் துண்டாடப் பட்டவர்களின் குருதியல்லவா ஆள்காட்டி விரலில் அழியா மையாக்கப்பட்டது? மனிதனைச் செயற்கைதான் இப்படி சின்னாபின்னமாக்குகிறது என்றால் இயற் கையின் கதி என்ன, ஒரு கவிதையில் ஆதங்கப் படுகிறார்.

தானாக வளர்ந்து
வேரூன்றி
கிளை பரப்பி
பூவும் பிஞ்சுமாய்
தழைத்து நிற்கிறது
மரம்
தூரத்தில் கேட்கிறது
பொக்லின் எந்திர ஓசை

மனிதக் கைகள் ஆக்டோபஸ்களாக மாறி இயற்கையைத் துண்டாடுகின்றன. காற்றை, ஆற்றை, நீரை, மலையை, வனத்தை, மணலை துவம்சம் செய்கிறான் மனிதன். இயற்கையைக் கடந்தவன் வென்றவன், இன்று இயற்கையிடம் தோல்வியடைந்துவிட்டான். இயற்கையிடம் மண்டியிட வேண்டிய தருணம் இது. சூழல் காப்பு குறித்த எச்சரிக்கையாக இக்கவிதை

மனித மனங்களை படம் பிடிப்பதில் பைரவி வெற்றி பெருகிறார்.

தரை இறங்கும்
ஒவ்வொரு முறையும்
சுத்தமாகவே இருக்கிறது
மழை
கொஞ்சம் மேலே ஏறினாலும்
அழுக்காகி விடுகிறான்
மனிதன்.

மழையையும் மனிதனையும் பலவாறு ஒப்பிட்டு பலநூறு கவிதைகள் வந்துள்ளன என்றாலும் இது மிகப் புதிது. மனித அகந்தையை இதைவிட எப்படிச் சித்தரிப்பது. மழை ஓ மனிதன், சுத்தம் ஓ அசுத்தம், ஏற்றம் ஓ இறக்கம் முரண்களின் கலவையில் முகிழ்க்கிறது கவிதை.

என் தோட்டத்திற்குள்
உன் சுவடு தெரியாமல்
வந்து போனதாய்
நினைக்கிறாய்
உன் மீதான எனதன்பை
உணர்ந்த காற்று
காட்டிக் கொடுத்தது
உன் மணம் பரப்பி.

இங்கே மனமும் மணமும் கிறங்கி அன்பை முன்மொழிகின்றன. காலம் தோறும் எழுதியும் வற்றாத ஜீவநதி காதலல்லவா? பைரவியும் காதலை இப்படி வரவு வைக்கிறார்.

பைரவியின் கவிதை உலகில் ஏராளம் பெண்கள். துளிமழையில் பூக்கத்துடிக்கும் தரிசாய்க் கிடக்கும் தனிமை நிலம் - அழுக்கைச் சுமந்து அலையும் கிண்ணங்களுக்கு மத்தியில் சுத்தமான உதடுகளுக்காக வெப்பம் சுமந்து கிடக்கும் தூயக் கிண்ணங்கள் - கோலத்தை அழித்திடும் மழை - பிறன்மனை நோக்கும் பேனாக்கள் - தன் வாசனை யற்ற இரவில் துடிப்பது. வெளியில் சுத்தும் யானை. வெள்ளைத்தாள் எழுத்து - பச்சைக்கீற்று படலுக்குள் - மனவெளியை அற்புதமாய்ப் படம் பிடிக்கும் கவிதைகள். இவை பெண்களுக்கான இரங்கற்பாக்கள் அல்ல. பெண்ணாய் தன்னைக் கீழிறக்கம் செய்து கொண்ட கவிமனசின் குமுறல். நுட்பமாய் பெண் உடலின், உணர்வின் வலிகளைக் கவிதைகளாக்கி உள்ளார்.

அதே போல சாதி இழிவையும் சில கவிதைகள் கூர்மையாக மொழிகின்றன. வெள்ளத்தில் மூழ்கி எல்லாம் இழந்து அபயக்குரல் எழுப்பி அடைக் கலம் ஆகும் வரை எல்லாரும் ஒன்றாக. முகாமில் வந்து இலவசச் சாப்பாட்டில்... சாதி வந்து விடுகிறது.

அவர்கள் கையில்
உணவு சமைத்து
பரிமாறும் போது
மறக்காமல் அழைத்தார்கள்
எங்களை
இலை எடுக்கவும்
கடைசி பந்திக்கும்.

பேதம் மனிதர்களை எப்படி ஆட்டிப் படைக் கிறது? இன்னொரு கவிதையில் இடிபாடுகளுக்குள் சாகக்கிடக்கும் மனிதன் காப்பாற்ற வந்த கடவுளிடம் என்ன சாதி என்கிறான். கடவுள் இடிபாடுகளுக்குள் போய்விடுகிறார். தூணிலும், துரும்பிலும் இருக்கும் சாதியை எப்படிக் கடப்பது?

ஆங்கரை பைரவின் கவிதைகள் அலங்கார மற்றவை. பல கவிதைகள் உள் ஒடுங்கி மெல்லப் பேசுகின்றன. செய்நேர்த்தியற்று இயல்பாய் மிளிர் கின்றன. நீங்களும் நானும் பார்க்கும் உலகைப் புதிதாய்ப் பார்க்கத் தூண்டுகின்றன. ஏக்கமும் இரக்கமும் சொற்களாய் மாறுகின்றன. நாடித் துடிப்பும், கண் பாய்ச்சலும் வரிவடிவம் கொள் கின்றன. நடப்பு வாழ்வு குறித்த வினாக்குறியும், வியப்புக்குறியுமாய் நீள்கின்றன இவரின் கவிதைகள்.

எவ்விதப் பம்மாத்தும், மேதாவித்தனமும் இல்லாமல் காட்டாற்றுக் கரையில் முகிழ்த்தக் காட்டுச் செடியாய் பைரவியின் கவிதைகள். இயற்கை மணமும் குணமும் மிக இயல்பாய்.