திரிந்தலையும் திணைகள்: ஜெயந்தி சங்கரின் நாவல்
சிங்கப்பூர் சூழலில் எழுதப்பட்டுள்ள நாவல். சிங்கப்பூருக்கு திருமணமாகிச் செல்லும் பத்மா வையும் அவரது பள்ளித் தோழி ரேணுகாவையும் மையமிட்டு நாவல் இயங்குகின்றது. இது ஒரு வகையில் இந்த இரண்டு பெண்களின் கதை என்றாலும் பல பெண்கள் இதற்குள் வருகிறார்கள். பல வித வாழ்க்கை முறைகளும், வாழ்க்கை பற்றிய பலவித நோக்கு நிலைகளும் நாவலில் இடம் பெறுகின்றன.

புலம்பெயர் சிங்கப்பூர் வாழ்வு, பல்தேசிய மக்கள் மத்தியில் ஊடாடி தன் இருத்தலை உறுதி செய்யும் எத்தனம், பிற வாழ்க்கை முறைகளோடும், மக்களோடும் ஒன்றிப்போதல் ஆகியன மிக இயல்பாக நடந்தேறுகின்றன.
பெரு நகரங்களின் பெருக்கம் அவை உற்பத்தி செய்திருக்கும் சந்தைத் தன்மை, மந்தை வாழ்வு, மனித உறவு, உணர்வுச் சிதைவுகள் நாவலில் சித்திர மாகின்றன. சிங்கப்பூர், சென்னை, டெல்லி, பூனா... என்று பல பெருநகரங்களின் அழகும், அழகின் மையும், இரைச்சலும், நிசப்தமும், பேரொளியும், இருளும் நாவலில் குறுக்கு வெட்டாய்ப் பதிவாகின்றன.
பெண் என்றால் துயரம் தானோ... என்பது மாதிரி அடுக்கடுக்காய்த் துன்பங்கள் பெண்களைத் துவம்சம் செய்கின்றன. திறமும் திடமும் மிக்க பெண்கள் சுக்குநூறாகி அகமும் முகமும் இழந்து பைத்தியங்களாகிப் போகிறார்கள். நினைக்கவே அச்சம் தரும் கொடுமைகள் அந்தப் பெண்களின் மீது நிலைநாட்டப்படுகின்றன.
பத்மா, சரவணனுடன் வாழ்கிறார். மாமனார் சுப்பையா, மகள் அர்ச்சனா, குடும்பம், உறவுகள் என்று இயல்பானதொரு வாழ்க்கை அவருக்கு அமைகின்றது. தமிழ் நாட்டிலிருந்து பெயர்ந்து சென்ற பிரிவும் ஏக்கமும் கணவனின், உறவுகளின் அன்பிலும், சூழலோடு ஒத்திசைவாகும் அவரது குணத்திலும் ஈடாகின்றது.
ரேணுகாவோ படுசுட்டியாக வலம் வந்தவள். அதே நேரத்தில் படிக்கும் காலத்தில் சக ஆண் நண்பர்களைத் தூர நிறுத்தியே பழகியவள். மருத்துவ தாதிமைப் பயிற்சி முடித்து வேலைக்குச் செல்கிறாள். திருமணம் வேண்டாம் என மறுத்து வாழ்ந்தவள். ஒரு நிலையில் அவளது தம்பி, தங்கை இருவரும் கூட திருமண மறுப்புக்கு முன்வரும் போது திருமணத்துக்கு இசைவாகின்றாள். சிறிது காலம் வசந்தகாலமாகக் கழிகிறது. இரவி பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பவனாக, ‘மேனியாக்’ ஆக இருப்பது மெல்ல வெளிப்படுகின்றது. கருத்தரிப்பு நிகழ்ந்த நிலையில் இதனை உணர்ந்து, பாதிப்புக்கும் ஆளாகி கருவைக் கலைக்க முயல் கிறாள். இரவியும், அவனது நண்பன் அருளும், பிடிவாதமும், வேண்டுகோளும் செய்ய ஒப்புக் கொள்கிறாள். ஒரே கூரையில் தூர தூர வாழ் கிறார்கள். ஆண் குழந்தை பிறக்கிறது. நவீன குழந்தையைக் கொஞ்சம் நாள் கொஞ்சி மகிழ்ந்த இரவி, ஒரு நிலையில் குழந்தையையே குதறத் தொடங்க, ரேணு நிரந்தரமாகப் பிரிகிறாள். மண விலக்கும் பெறுகிறாள்.
“அவள் போர்த்தியிருந்த இரட்டைப் போர் வையை விருட்டென்று இழுத்து விலக்கித் தூர எறிந்தான். சுதாரிக்கும் முன் அவளுடைய இரவு உடையைக் கால்பாகத்தைப் பிடித்து மேலே தூக்கி தலைவழியாகக் கழற்றி மறுபுறம் போட்டுவிட்டு வேகமாக அவளுடைய உள்ளாடைகளையும் ஒரு கையால் கால்வழியாகவும் மறுகையால் தலை வழியாகவும் கழற்றிவிட்டு, எல்லாவற்றையும் தூரக்கிடந்த போர்வைக்குள் போட்டுச் சுற்றி எடுத்துப் படுக்கையின் மறுபுறம் கொண்டு வைத்துக் கொண்டான். நடந்ததென்னவென்று அவளுக்குள் விஷயம் இறங்கும் போது உடலில் பொட்டுத் துணியில்லாமல் நிர்வாணமாகக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். உடலில் ஒவ்வொரு சிறு ரோமமும் குத்திட்டு நின்றது. லேசாக நடுங்கியதில் சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது. முலைக்காம்புகள் அரையிருட்டில் கத்திரிப்பூ நிறங்கொண்டு குளிரில் சுருங்கத்தெரிந்தன.
கோபத்துடன் முறைத்தபடி ‘இதென்ன புதுசா’? என்று கேட்டாள். குளிர்கிறதென்று சொல்லிக் கெஞ்சுவாள் என்று எதிர்பார்த்தவன் போல அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந் திருந்தவனைப் பொருட்படுத்தாமல் கையைப் பரபரவென்று தேய்த்துக் கொண்டவள் குளிர் சாதனத்தை நிறுத்தவென்று நகர்ந்தபோது பாய்ந்து தடுத்தான்”. (ப.62)
இப்படி நள்ளிரவில் கட்டிய மனைவியைக் கொடுமைப்படுத்தியதோடு அவன் வக்கிரம் நிற்க வில்லை. தனக்குப் பிறந்த குழந்தையை மிக மோச மாகத் தாக்குகிறான்.
“அங்கேயே நில்லு, கிட்ட வராத, வந்தீன்னா பனிஷ்மெண்ட் இருக்குன்னு சொல்லியிருக்கேன்ல? பனிஷ்மெண்ட் உனக்கில்ல, இவனுக்கு. அதான், இப்ப எங்க குத்தினா உனக்கு வலிக்கும்னு எனக்குத் தெரிஞ்சிருச்சே”, என்றபோது அருகில் இரண்டு எட்டு எடுத்து வைத்தவள் சட்டென்று பின்வாங்கி அறைவாசலில் நின்றாள். குழந்தை அழுகையை நிறுத்தாமல் அவளை நோக்கி மெதுமெதுவாகத் தவழ்ந்து நகர்ந்து கட்டிலின் விளிம்புக்கு வந்தான். அழுது அழுது குழந்தையின் மூக்கிலிருந்து சளி நீண்டு ஒழுகியது. “அப்புறமாப் பேசுவோங்க... இப்ப பிள்ளைய என்கிட்ட குடுத்துருங்க, ப்ளீஸ்”, என்று மீண்டும் கெஞ்சினாள்.
குழந்தை விழும் முன்னர் சட்டென்று முன்ன கர்ந்து அவனைத் தூக்குவதற்குள் அவளை மிக பலமாக ஒரே தள்ளு தள்ளிவிட்டான். பீரோ முனையில் பட்டு அவள் நெற்றியில் காயம்பட்டது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு நின்றான். அவளது நெற்றியை வெறித்துப் பார்த்தான். ரத்தம் கசிவதை உணர்ந்த நொடியில் முன்னால் நகர்ந்து இரு கைகளையும் முன்விரித்துக் கொஞ்சும் குரலில் குழந்தையைக் கேட்டாள்.
குழந்தையுடன் விலகி நகர்ந்தவன் சொல்லச் ‘சொல்ல கேக்காம இப்ப கொழந்தையத் தொட்டீல்ல’, என்று சொல்லிக்கொண்டே குழந் தையின் சின்னஞ்சிறு குஞ்சைக் கடித்துவிட்டான். வலியில் துடித்து அழுததில் குழந்தையின் குரலே அதன் தொண்டையிலிருந்து எழும்பவில்லை சில நொடிகளுக்கு.
வீலென்றலறியபடி பாய்ந்து அவன் கையி லிருந்து குழந்தையைப் பிடிங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறும் போது அதிர்ச்சியில் பேயறைந்த முகத்துடன் மாமனார் அறை வாசலில் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள். ‘கொலகாரப் பாவி. இங்கயிருந்தா எங்க ரெண்டு பேரையுமே கொன்னுடுவான்’, என்று இரைந்தபடி வெளி யேறியவளை ஏதும் பேசத் தோன்றாமல் உறைந்து நின்று கேட்டார் மாமனார். (பக்.120-21)
கொலையைக் காட்டிலும் கொடிய இந் நிகழ்வு ரேணுவை நிரந்தரப் பிரிவுக்கே இட்டுச் சென்றது.
ரேணு சில ஆண்டுகள் பூனா மருத்துவக் கல்லூரியில் தாதிமையாகப் பணியாற்றினாள். மகன் நவீன், அப்பா, அம்மாவுடன் வசித்து வந்தான். வசீகர உடலும் முகமும் கொண்ட அவளிடம் பலரும் இனிது பழகினர். அத்தருணத்தில் மும்பையி லிருந்து பூனா கல்லூரிக்கு வந்து செல்லும் டாக்டர் மாதவன் ரேணுவை பார்த்து ஒரு சில பேசி நட்பு பாராட்ட முனைகிறார். ரேணு தொடர்ந்து புறக் கணிக்கிறாள். வீட்டிற்குச் சென்று, திருமணம் செய்வதாய்ப் பெண் கேட்டு, எல்லா விவரமும் தெரிந்து ஒற்றைக்காலில் நிற்கிறான். நவீன் வாழ்வு குறித்த ஒப்பந்தத்தோடு இணைந்து இல்லறமா கின்றனர். நவீன் மாதவனிடம் ஒப்புக்கொள் கின்றான். தன் நிஜத் தந்தையாகக் கருதுகிறான் (அவனுக்கு அவன் தந்தை நினைவில் இல்லை) மாதவனும் ஈடு கொடுக்கிறான். காலம் ஓட மாத வனுக்குத் தனக்கென ஒரு குழந்தை ஆசை பிறக் கிறது. ரேணு தடுமாறுகிறாள். மாதவன் விலக முடிவு செய்கிறான். உண்மையான அவன் அன்பு ரேணுவை இளகச் செய்கிறது. தன் முடிவிலிருந்து இறங்கிவர முயல்கிறாள். மாதவன் நிரந்தரமாகப் பிரிந்து விடுகிறான்.
நவீன் மனம் உடைகிறான். மாதவன் என்ற அப்பாவை, நண்பனை இழந்து தவிக்கிறான். இந்த இழப்பு தன் தாயால் நேர்ந்தது எனத் தவறாகப் புரிந்து கொள்கிறான். தாயை வெறுக்கிறான். புகை, மது, என்று தொடங்கி வன்முறை வரை சென்று சீரழிகிறான். கம்பீரமான ரேணு மனச் சிதைவு நோய்க்கு ஆளாகிறாள்.
பத்மாவின் கணவன் சரவணனின் அத்தை மகள் கவிதா. உயர்கல்வி கற்றவள். நல்ல வசதியும் கூட. பாலா என்ற நல்ல இளைஞன் கணவனாக வாய்க்கிறான். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப் பட ஆல்பம் பற்றிய எதிர்பார்ப்பில் இருக்கிறாள். ஒரு விபத்தில் புகைப்படக்காரர் செத்துப்போக, கேமராவும் உடைந்து புகைப்படங்கள் கிடைக் காமல் போய் விடுகிறது. சிறு வயதிலிருந்தே புகைப்படங்கள் மீது தீராத ஆவலில் இருந்த கவிதா அதிர்ச்சியடைகிறாள். கல்வியும், வேலையும், அழகும், மனத்திடமும் மிக்க கவிதா மனச்சிதைவுக்கு ஆளாகிறாள்.
“நிஜ வாழ்க்கையைவிட அது ஏற்படுத்தக் கூடிய நினைவுகள் மற்றும் அடையாளங்கள் மிக முக்கியமென்று கருதக்கூடியவளாக இருந்தாள் என்பதே எல்லோருக்கும் ஆச்சரியம். தனது திருமணப் புகைப்படம் ஒன்று கூடத் தனக்குக் கிடைக்காமல் போகுமென்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. கிடைத்திருக்கும் நல்ல கணவனுடன் வாழும் கணங்களை எண்ணிப் பார்க்காமலே இருந்தாள்.
புகைப்படங்கள் வாழ்க்கையாகாது என்றும் அது வாழ்வின் சிறு பகுதிதான் என்றும் மருத்துவர் உட்பட எத்தனை விளக்கிச் சொல்லியும் அவள் மூளைக்குள் ஏறவேயில்லை. தன் அதிருஷ்டங்கள் எதையும் உணர மறுத்து மெல்ல மெல்ல அடர் மனஅழுத்தத்தில் வீழ்ந்திருந்தாள். ஏதேனும் திருமணப் புகைப்படத்தை எங்கே யார் வீட்டில் காண நேர்ந்தாலும் தனது இழப்பின் வலி அவளுக்குள் சட்டென்று கிளம்பித் தீவிரம் கொண்டு வெறியாகவே ஆகிவிடுகிறது”. (ப.150)
பத்மாவின் தம்பி கதிருக்கு திருமணம் நடை பெறுகிறது. மும்பைக்குச் சென்று திரும்ப அழைத்துச் செல்வதாகக் கூறிச் செல்கிறான். அவன் மனைவி மீனாவை அவளது காதலன் விடாது விரட்டி, தன் கூட அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். தன்னுடனான காதலை அம்பலப் படுத்தி அசிங்கப்படுத்துவேன் என மிரட்டித் தன் னோடு புறப்பட்டு வர நிபந்தனை விதிக்கிறான். மீனா மனம் கலங்கிக் கிணற்றுக்குள் விழுந்து பிணமாகிறாள்.
பத்மாவின் பக்கத்து வீட்டு லீலிங் (சீனப் பெண்) தன் மகனின் நண்பனுடன் நட்புறவு கொள் கிறாள். மகன் வெறுத்து வெளியேறுகின்றான். லீலிங்கைப் பணங்காய்ச்சி மரமாகக் கருதும் அவ்விளைஞன் அவளது பணம், நகைகளைத் திருடிச் சென்று வேறு ஒருத்தியைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறான். அப்பெண் லீலிங்கைப் பார்த்து தனக்குக் கணவனாகும் நபரை விட்டுவிடும் படி இரைச்சலிடுகிறாள். லீலிங் உண்மைகளைக் கூறி விடுகிறாள். கோபம் கொண்ட அந்த இளைஞன் லீலிங்கை வெட்டிச் சாய்க்கிறான். லீலிங் கொலையாகிறாள்.
பத்மாவின் தோழியாக மாறும் வீட்டு வேலைகள் செய்யும் ஈழப்பெண் தர்ஷினி, தன் பிள்ளைகளை வளர்க்கப் படாதபாடு பாடுகிறாள். பொருந்தாத் திருமணம் செய்துகொண்ட தன் மகன், இறுதியாக ஈழத்தில் போராளிகளுடன் சேர்ந்து விடுகிறான். தர்ஷினியோ புற்றுநோய் வந்து இறந்துபோகிறாள்.
இப்படி நாவலில் வரும் பெண்களின் பாடு சொல்லி மாளாததாக இருக்கிறது. இது வெறும் ஆண்-பெண் சிக்கல் மட்டுமல்ல. நவீன சமூகத்தின் சிக்கல்.
பெண்ணின் தனித்த குணங்களும், வீரியமும், விவேகமும் வெளிறிப் போகின்றன. எந்த நேரத்தில் யார் எப்படி மனப்பிறழ்வுக்கு ஆளாவார்களோ என்ற பதற்றம் நாவல் வாசிப்பில் இழையோடு கிறது. நாவலாசிரியரின் உளவியல் அறிவு போற்றத் தக்கது.
ரேணுகாவின் தம்பி செந்தில் வேற்று இனப் பெண்ணோடு திருமணம் செய்துகொள்ளாமலே இணைந்து வாழ்கிறான். பத்மாவின் மகள் அர்ச்சனா தனக்குச் சிறு வயது முதல் தொல்லை தரும் (தமிழ்) கூந்தலை வெட்டி எறிகிறாள். மற்றவர் முன் பாட்டுப் பாடவும் மறுக்கிறாள். செல்பேசி, கணினி, நட்பு என வலம் வரும் அவளது போக்கை விரும்பாமலே கூட பெற்றோர் ஏற்க வேண்டி வருகிறது.
தனது கணவனின் தாய் குறித்த (தவறான வழியில் குழந்தை பெற்றவர்) செய்தி காதில் விழுந்தும், அதைப் பெரிதுபடுத்தாமல், காலப் போக்கில் அதனை மறந்து, மறத்து மீள் எழு கிறாள் பத்மா. இல்லை என்றால் அவளும் மன நிலைப் பாதிப்புக்கு ஆளாகி இருக்கக்கூடும்.
எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை. மனப்பிறழ்வு அடைந்த கவிதாவைப் போற்றிக் காக்கும் பாலா, ரேணுவுக்கு நேசக்கரம் நீட்டிய மாதவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
இது இன்றைய மனிதர்களின் கதை. நம் சமூகத்தின் படப்பிடிப்பு. நம்மில் பலரும் இத் தருணங்களைச் சந்திக்கிறோம். முகமற்ற மனிதர் களை உருவாக்கும் உலகமயத்தின் கதை இதுதான். மரபும், நவீனமும் முட்டி மோதுகின்றன. அகமும் புறமும் உரசிக்கொள்கின்றன. நாவல் ஒருவித யதார்த்தத் தன்மைகளுடன் விரிந்தாலும் நவீனத் துவத்தில் கால் பாவி நிற்கிறது.
சிங்கப்பூர் குறித்த பதிவுகள், காட்சிகள், மொழிநடை குறிப்பிடத்தக்கது. சில விவரணைகள் அலுப்புத்தட்டுகின்றன. சில இடங்களில் நாவலின் மொழிதல் இடறுகின்றது. (தன்மை, முன்னிலை மயக்கங்கள்) என்றாலும் இந்நாவல் இன்றைய மனிதர்களைப் பிரதிபலிக்கிறது. புலம் பெயர் வாழ்வை, அதன் சிக்கல்பாட்டை முன்வைக்கிறது. இன்றைய உலகின் மனிதர்கள், குறிப்பாக நடுத்தர மக்கள் வாழ்வியல் விழுமியங்களைக் காக்கக் கொடுக்கும் விலை பெரிது என உணர்த்துகிறது இந்நாவல். வசதிப்பெருக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித உறவுகளைச் சிதிலமடைய வைக்கின்றன. சமூகத்தில் அதிகரித்து வரும் நோய்கள் தனி மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை என்ற கவலை வெளிப்படுகின்றது. கவனம்பெற வேண்டிய நாவல்.
‘பொன்கூண்டு’ சிறுகதைகள்: சுந்தரம்பாள்
மலேசியப் படைப்பிலக்கியத்துக்கான விருது சுந்தரம்பாள் அவர்களின் ‘பொன்கூண்டு’ சிறு கதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டது.
தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள், வாழ்வின் எளிய தருணங்கள் கதைகளாகி உள்ளன. சிறுகதையின் இலக்கணங்கள் பின்பற்றப்பட்டு எடுப்பு, தொடுப்பு, முடிப்பு, எதிர்பாரா முடிவு... என்பவை பின்னப்பட்டுள்ளன.

எந்த நிலையிலும் வெடித்துச் சிதறிவிடாமல் ‘பொத்திப் பொத்தி’ உணர்வுகளைக் காக்கும் பொறுமை கதைகளில் நிறைந்துள்ளது. பெண்ணின் குடும்ப வாழ்வு குறித்த எச்சரிக்கையும், பதற்றமும் கவனிக்கப்படவேண்டியது. மலேசியா போன்ற புலம் பெயர் தேசங்களில் இதன் இருப்பை நோக்க ‘லட்சியவாத’ விருப்பங்களுக்கே சாத்தியமிருக்கும்.
‘சுதந்திரமாகப் பறந்து வெறி நாய்ங்ககிட்டே அடிபட்டு கஷ்டப்படுறதைவிட இந்தக் கூண்டி லேயே அடைபட்டு பத்திரமாயிருக்கிறது எவ்வள வோ மேல்’ என அடங்கும் சுலோசனாக்கள் (பொன் கூண்டு:24).
“ஆணோடு மனைவியாக மட்டும்தான் வாழ முடியுமா? என்று வயதான தோற்றம் சிதைந்த, நோஞ்சானைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வரும் சீத்தாக்கள்” (தாயாக வாழ்கிறாள்: 29) என எல்லோரும் ஆணைக் காக்க, குடும் பத்தைக் காக்க, கௌரவத்தைக் காக்க தங்களின் உணர்வுகளைத் தொலைத்து நிற்கிறார்கள்.
‘சிபாரிசு’ கதை சற்று வித்தியாசமானது.
“என்ன சிவம், நான் எதையோ உளர்றேன்னு நினைக்கிறியா? இல்ல... பட்டணத்திலே யாராவது இந்த மாதிரி ஏதாவது சின்ன உதவி செய்துட்டானுங் கன்னா... அந்த உதவியை நாம ஏற்றுக்கிட்டோ முன்னா அதையே காரணமா வச்சி எந்தெந்த வகையில நம்பகிட்ட உதவி பெற முடியுமோ அந்தந்த வகையிலேயெல்லாம் நம்பளைப் பயன் படுத்திக்கப் பார்ப்பானுங்க. ஆனா... இந்தக் கம்பத்தில பார்த்தியா!... ஏதோ என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார். அவர் மரத்தில விளஞ்ச முதல் இளநிகளை அறுத்து எனக்குக் கொண்டு வந்து கொடுத்துட்டு, கொடுத்தவர் யாருன்னு கூடக் காட்டிக்காம போயிட்டாரு. பசியால துடிச்சிக்கிட்டிருந்தவனுக்குச் சோறு போடறதா இருந்தாலும் போட்டோ கிராபரைக் கூட்டிவச் சிட்டு தர்மம் செய்யற காலத்தில் இந்த மாதிரி இடங்களும் இந்த மாதிரி ஜனங்களும்... அப்பப்பா... எவ்வளவு நெஞ்சி நெறஞ்சிருக்கு”! (ப.75) எதிர் பார்ப்பற்று அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வினைக் கூறியதும், தனது மகனின் வேலைக்கு சிபாரிசுக்காகச் சென்றவர் எதுவும் சொல்லாமல் திரும்புகிறார். மிக்க உயிர்ப்பான கதை.
கதைக்குத் தலைப்பை வைத்துவிட்டுக் கருப் பொருள் தேடி ‘அழுத கண்ணும் சிந்திய மூக்கு மாக’ பரிதாபமாக நிற்கும் எழுத்தாளர் (அழுத கண்ணும் சிந்திய மூக்கும்) சாகக்கிடக்கும் தருவா யிலும் வட்டிக் கனவில் மிதந்து மற்றவரை உறிஞ்சிக் கொழுக்கும் கருப்பையா தண்டல் (இதயத்தின் நிறங்கள்) போன்ற மாந்தர்கள் யதார்த்த முகம் காட்டி நிற்கிறார்கள்.
சிறுகதைகள் என்ற வரையறையில் இக் கதைகள் வெற்றி பெறுகின்றன. வாசக ஈர்ப்பைப் பெறுபவையாக இவை விளங்குகின்றன. தமிழ்ச் சிறுகதைகள் தொட்டிருக்கும் உயரத்தோடு இவற்றை ஒப்பிடக் கூடாதுதான்.புலம் பெயர்ச் சூழலில் மொழி இனஅடையாளம் பேணுதலே பெரும் பொறுப்பு. அந்த வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை. கருத்து, உருவம் இரண்டிலும் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கும்போது சுந்தரம் பாள் எழுத்துலகில் மிளிர்வார். மலேசியாவில் வாழும் எழுத்தாளரால் அச்சூழலில் எழுதப் பட்டுள்ள இக்கதைகளில் அவை குறித்த அடை யாளங்கள் மிகக் குறைவாகவே இருப்பது வியப்பைத் தருகின்றது. எளிய, இனிய நடை, கச்சிதமான உரையாடல்கள், திட்டமிடப்பட்ட கதைக் கட்டமைப்பு ஆகிய படைப்பாக்க நுட்பங்கள் கைகூடி வந்துள்ளன. நெஞ்சார்ந்த தமிழ்ப் பகிர்வுத் திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள இக்கதைகள் மலேசிய இலக்கிய வளர்வில் முக்கிய பங்காற்றத்தக்கன.