ஆர்மோனியக் கலைஞர் காதர்பாட்சா போன்றோரைப் பற்றிச் சிறுவயதில் எனது ஊர்ப் பெரியவர்கள் வியப்புடனும் மரியாதையுடனும் நினைவு கூர்ந்ததைக் கேட்டிருக்கிறேன். மதுரகவி பாஸ்கரதாஸின் டைரிக் குறிப்புகளை வாசித்திருக் கிறேன். முருகபூபதியின் நாடகங்களைப் பார்த் திருக்கிறேன். இந்நூலின் கட்டுரைகள் ‘தீராநதி’யில் தொடராக வெளிவந்தபோதே கவனித்திருக் கிறேன். இந்தக் காரணங்களால் இந்நூல் எனக்கு மிகவும் நெருங்கியதாகின்றது.

veli rengarajan book‘நாடகவெளி’ இதழை அர்ப்பணிப்புடன் நடத்தியவரும், அகலிகை, மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை என்னும் நாடகங்களை இயக்கிய வருமான வெளி ரங்கராஜனின் இந்த நூல் கூத்து, நாடகம் சார்ந்த அரிய கலைஞர்களை அறிமுகப் படுத்துகிறது. மூத்த கலைஞர்கள் ஒருபுறம், இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் மறுபுறம் என ஒரு சேர இத்தொகுப்பில் காணமுடிகிறது.

நடிகர்கள், இயக்குநர்களுடன் பாரதப் பிரசங்கி; புகைப்படக்கலைஞர், ஆர்மோனியக் கலைஞர், ஒளியமைப்பு - ஒப்பனைக் கலைக் கலைஞர், துடும்பு இசைக்கலைஞர் போன் றோரையும் கவனத்திற்குள்ளாக்குகிறார் ரங்க ராஜன். தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், பாகவதமேளா, கைசிக நாடகம், துடும்பு இசை என விதவிதமான நிகழ்த்துக் கலை சார்ந்த ஆளுமைகளை இந்நூலில் சந்திப்பது போன்ற மனப்பதிவை இந்நூல் ஏற்படுத்துகிறது.

பொதுவாக தெருக்கூத்தில் பெண் வேடங் களை ஆண்களே ஏற்று நடிப்பதுண்டு. சேலம் பகுதி சார்ந்த கூத்துக் கலைஞர் லட்சுமிக்கு பெண் பாத்திரங்களில் சலிப்பேற்பட்டு, ஆண் வேடங்களில் நடிக்கும் இயல்புள்ளவர். அதற்கு லட்சுமி கூறும் விளக்கம் சுவையானதும் கூட: ‘எனக்கு இந்த அழுது புலம்பறது, மூக்க சிந்தறது, அடி வாங்கறது, ஒப்பாரி வைக்கிறது இந்த மாதிரி சமாசாரமெல்லாம் சேரவே சேராது. ஆட்டம் பழக்கையிலே எங்கப்பன் துடியா ஆடச்சொல்லிப் பழக்கினாரு, எனக்கு அதே எடுத்த கையாப் போயிடுச்சு’ (பக். 69).

கும்பகோணம் பாலாமணி பற்றிய கட்டுரையில், பாலியல் தொடர்பான விஷயங்களைப் பெண் கலைஞர்கள் கையாண்டபோது, அக்கலைஞர் களை இழிவாக நோக்கிய பாமரத்தன்மை, பண்டித மனங்களிடமிருந்து வெளிப்பட்டதை ரங்கராஜன் நாசூக்காகச் சுட்டிக்காட்டுகிறார் - “நடனம் மற்றும் பாலியல் அம்சத்தில் கலைத் தன்மையை உணர்ந்துகொள்ள முடியாத வறட்டு சீர்திருத்தவாதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் இருப்பின் நுண்ணிய இழைகளைத் தவற விடுபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த மன நிலையின் பிரதிபலிப்பாகவே பாலசரஸ்வதி - ருக்மணிதேவி விவாதங்களும், பின்னாட்களில் நடிகைகளின் தற்கொலை மரணங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.” (பக். 25)

செவ்வியல் மரபில் வாலி வதம் ராமன் பார்வையில் சொல்லப்பட்டு ராமனின் சூதுக்கு நியாயம் பேசப்படும், தத்துவமாக்கப்படும். ஆனால் கூத்து மரபில் அது வாலியின் பார்வையில் சொல்லப்பட்டு, வாலியின் மேன்மை பேசப் படுவதை, அம்மாப்பேட்டை கணேசன் என்னும் கூத்துக்கலைஞரை விவரிக்கும்போது, ரங்கராஜன் சுட்டிக் காட்டுகிறார். ‘உன்கிட்ட உயிர்ப்பிச்சை வாங்கி சாவ எனக்குப் பிரியமில்லை. எனக்கு யாசகம் கொடுக்கிற யோக்கியதை உனக்கு இல்லை. நீ என்ன கிஷ்கிந்தாபுரியை மீட்டுக் கொடுக்கிறது; மனசார நான் கொடுக்கிறேன்’ என்று கூத்தில் வரும் வாலி பேசுகிறான்.

முந்தைய கூத்து / நாடகக் கலைஞர்களானாலும் இன்றைய நவீன நாடகக் கலைஞர்களானாலும், வணிகத்தளம் தவிர்த்து / தாண்டிச் செயல்படு பவர்கள் பெரிதும் அர்ப்பணிப்பு கொள்ள வேண்டி யுள்ளது, இழப்புகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது, (அ) பாண்டிச்சேரி வேலாயுதம் போலத் தன்னை இழக்க வேண்டியுள்ளது.

தஞ்சை விஜயகுமார் குறித்த கட்டுரையில், ஒரு நாடகக் கலைஞனின் உருவாக்கத்தைக் கவனித்து, ரங்கராஜன் பதிவு செய்கின்றார். “வாழ்வியக்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு கிரியேட்டிவான நகர்வு ஒரு சுவையை, ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும் என்பதை அனுபவித்து அறிபவர். பத்தாண்டுகளில் நாடகம் அவருக்குள் விளைவித்த இந்த மாற்றம் சுலபத்தில் உருவானது அல்ல. ஒரு கடுமையான பயணம் அவருடையது. இன்று பேராசிரியர் ராமானுஜத்தின் அண்மையில் அவரைச் சுற்றியுள்ள நாடகச் சூழலின் அரவணைப்பில் நடிப்பின் அடிப்படை நுகர்வுகள், நகர்வுகள், உணர்வுகள் என அவர் பாதுகாப்பும் வளர்ச்சியும் பெற்றிருந்தாலும், தமக்கான நாடக உடலைக் கண்டறிய அவர் ஒரு பிரத்யேகமான பயணம் மேற்கொள்ள வேண்டி யிருந்தது.” (பக். 45)

ஓலைச்சுவடிகளிலிருந்தும் தாசி மரபுக் கலைஞர்களிடமிருந்தும் கைசிக நாடகத்தை மீட்டெடுத்து நடத்துகின்ற பேரா. ராமானுஜம் போல உழைப்பும் ஈடுபாடும் உள்ள கலைஞர்களே கலாசாரத்தைப் பாதுகாக்கவும் போற்றவுமான காலடிகளை எடுத்துவைக்கின்றனர்.

இந்நூலில் சுவையான நிகழ்வொன்றை ரங்க ராஜன் எடுத்துரைக்கிறார். ‘ஒருமுறை ராகம் பாடுவதில் வல்லவரான விளாத்திகுளம் சுவாமிகள் ராகம் பாடவும், அதே ராகத்தில் மாரியப்ப சுவாமிகள் தமிழ்ப்பாடல் பாடவும், அப்பாடலுக்கு ராஜபாளையம் குழந்தைவேலு கற்பனை சுரமும் பாடி சுமார் 4 மணி நேரம் ஒரு நிகழ்ச்சியை ஒரே ராகத்தைக் கொண்டு நிகழ்த்தியிருக்கிறார்’ (பக். 51). தீராநதியில் கட்டுரையாக வெளிவந்தபோது இப்பகுதியை வாசித்ததிலிருந்து, அந்தக் குழந்தை வேலு எனும் கலைஞரை ராஜபாளையத்தில் விசாரித்து வருகிறேன். ஒரு விபரம் கூட இன்னும் கிடைத்த பாடில்லை. ரங்கராஜன் போன்றவர்கள் நிழல் ப. திருநாவுக்கரசு (சோழ நாடன்) போன்ற வர்கள் தமிழின் கலைஞர்களைப் பதிவு செய்து வருவது அரிய பணியாகும். இல்லாதுபோனால், எம்.எஸ். காந்திமேரி, பாலாமணி, செல்வதுரை, ராமச்சந்திர புலவர், கமலவேணி, மாரியப்ப சுவாமிகள், பபூன் சண்முகம் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது சாம்பல் பூத்துவிடும்.

இந்நிலையைத்தான் பேரா. ராமானுஜமும் தன் குறிப்பில் எழுதுகிறார்: “நிகழ்த்துக் கலையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் அங்கீகாரத்தையும் புலப்படுத்தும் சரியான, முறையான ஒரு கலைப் பண்பாட்டு வரலாறு நமக்கு இல்லை என்பது தான் அவ்வெளிச்சத்தில் பெறப்படும் உண்மை.”

ஒரு நாடகக் கலைஞராக இருந்து கொண்டு சக கலைஞர்களை / படைப்புகளைப் பற்றி எழுதும் ஒருவருக்கு, பாரபட்சம் / காழ்ப்புணர்வு போன்ற கசடுகள் இருந்துவிடும். அந்த மாசுகள் துளி யளவும் இல்லாமல், நிகழ்வுகளை ஓடிச்சென்று கவனிப்பதும் கலைஞர்களை வாரியணைப்பது மான மேன்மையான செயல்பாட்டில் இருப்பவர் ரங்கராஜன். மூத்த கலைஞர்களைப் பற்றிப் பேசு கையில் அவர் தொட்டுச் செல்வதும் முடித்து வைப்பதும் சங்கரதாஸ் சுவாமிகளும், பாஸ்கர தாசுமாக இருக்கும். நவீன அரசாங்கக் கலைஞர் களின் பங்களிப்பு (அ) சென்ற தலைமுறைக் கலைஞர்களின் பதிவு என்றால் அது முருக பூபதியாக இருக்கும். தனது ஈடுபாட்டின் அடிச்சரடாக அவர் கொள்வது: “நிகழ்கலைகள் காலம் காலமாக ஒரு மனித லயத்தையும் ஸ்பரிசத்தையும் நினைவுபடுத்திக் கொண்டிருப் பவை. மனித உறவுகள் மேலும் மேலும் நெருக் கடிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில் கலையும் மதிப்பீடுகளும் சார்ந்த இத்தகைய நினைவோட்டங்கள் நம்முடைய கலாச்சார செயல்பாடுகளுக்கு உயிர்ப்பையும் உத்வேகத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்”

வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்

ஆசிரியர்: வெளி ரங்கராஜன்

வெளியீடு: அடையாளம்

1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621310

திருச்சி மாவட்டம்

விலை: ரூ.100/-

Pin It