இந்தியாவின் தென்கோடி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம். மூங்கில், தேக்கு, கோங்கு போன்ற மரங்களைக் கொண்ட அடர்த்தியான மலங்காடு. புலி, கரடி, யானை, மிளா, மான், தனிச் சிறப்புடைய சிங்கவால் குரங்கு, காட்டெருமை, காட்டுப் பன்றிகள், விருவு, கிளி, குயில், கருங்காகம், மலை அணில், மலைப் பாம்பு, நாகப் பாம்பு, கட்டுவிரியன், உடும்பு என நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன எனப் பல்வேறு பட்ட உயிரினங்களுடன் ஏராளமானத் தாவர வகைகளையும் தன்னகத்தே கொண்ட நிலம். முண்டந்துரைப் புலிகள் காப்பகமாகத் திகழும் ஒரு பகுதி. அங்கு அம் மலையில் கருமேகங்கள் திரண்டு, மழையாகப் பொழிந்து, உருவாக்கியதொரு ஆறு ஒன்று உண்டு. அதன் பெயர் பச்சையாறு.

ஆற்றின் இரு மருங்கிலும் காட்டுப் பத்து, வாணியம் பத்து, கோவர் நெடுங்கன், கோனார் பள்ளி, சத்திரங்காடு, பரிசுகொடுத்தான் பத்து, கால்பரவு, என்னும் பெயர்களைக் கொண்ட நெற்பயிர் வயல்கள் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்று, காற்றில் அலை அலையாய் வீசும் பசுங்கடல் கண்ணுக்குச் சிறப்பு விருந்தளிக்கும். தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், வாழைத் தோட்டங்கள் என பறவைகளின் வசிப்பிடங் களுடன், நெட்டேரிக்கால் அணை, தலை அணை, தேங்காய் உருளி, எலவடி அணை, கருங்கல் கசம், மொட்டைக் கலங்கு என்னும் நீர்த் தேக்கங்கள், வடக்குக்கால், காலாங்கரை, மணல் அடைப்புக் கால் வாய், முத்து ஓடை என்னும் உச்சி வெயிலிலும் குளிர்ந்த நீரைச் சுமந்து செல்லும் சிறு கால்வாய்களைக் கொண்ட பசுமையான கிராமம்.

சிதம்பரபுரம் என்பது அதன் பெயர். திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தாலுகாவைச் சேர்ந்த சிறு கிராமம். அந்நாளில் மோட்டார் வாகனங்கள் அதிகம் இல்லாமையால் மாசற்ற தூய காற்றையும் நீரையும் கொண்ட பசுமையான கிராமமாக விளங்கியது. முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், இசக்கி அம்மன், சாஸ்த்தா, ஊர்க்காட்டான், பட்ராயன், அதலி பாறையம்மன், நிழல் தாங்கல் என்று அழைக்கப்படும் இரு நாராயண சாமி கோவில்கள், ஒரு கத்தோலிக்க வேதக் கோவில், சி.எஸ்.ஐ வேதக்கோவில் என சிறு கிராமமே என்ற போதிலும் ஏராளமான கோவில்களைக் கொண்டிருந்தது. அதனால் திருவிழாக்கள், கோவில் கொடைவிழாக்கள் என ஆண்டு முழுமையும் நடைபெற்றன. செம்மண் பூமியையும் சிறந்த நீராதாரத்தையும் கொண்ட பூமியான படியால் விவசாயம் முக்கியத் தொழிலாய் அமைந்திருந்தது.

விவசாயம் சார்ந்த இதரத் தொழில்களான கலப்பை செய்யும் ஆசாரிகள், கொளு, கதிர் அரிவாள் இத்தியாதிகள் செய்யும் கொல்லாசாரிகள் அதற்கான பட்டறைகள், களம் கூட்டும் விளக்குமாறு, பதர் நீக்கும் முறம் செய்யும் குறவர் இன மக்கள், ஏராளமான பனைமரங்களையும் கொண்டிருந்ததால் பனை சார்ந்த கருப்புக் கட்டி செய்வோர், ஓலை பெட்டி, நார்ப்பெட்டி செய்வோர் என பலதரப்பட்ட மக்களைக் கொண்ட பகுதியாக இருப்பதால் சிறுகிராமமா? பெருங்கிராமமா? எனப் பிரித்து அறிய முடியாத கிராமத்தில் பிறந்து வளர்ந்து சுற்றித்திரிந்த பதினாறு வயதே நிரம்பிய பருவ மங்கையவள். நல்ல மஞ்சள் நிறத்தழகி. இராணுவ வீரரின் கைத்தலம் பற்றியதால் இத்தென்கோடியி லிருந்து இந்தியாவின் வடமேற்கு எல்லைப் பகுதிக்கு, மறு செழுமைப் பார்க்கப் புறப்பட்டாள்.

நீண்ட ரயில் பயணம். முதல் இரு நாட்கள் மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தன. காடுகள், மலைகள், ஆறுகள், ரயில் நிலைய அழுக்குகள், ஏழை பாழைகள், இளையோர் முதியோர், ஆண்கள் பெண்கள், உடல் ஊனமுற்றோர் என பலதரப்பட்டோரை இங்கும் அங்குமாகக் காண நேரிட்டது அவளுக்கு. சில சமயம் ஆச்சரியம், சில சமயம் வெறுப்பு, கோபம், அசூசை எனப் பலவித உணர்ச்சிகளோடு இருந்தாள். எப்போதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருந்த அவளுக்கு மூன்றாம் நாள் அயர்ச்சியாய் இருந்தது. மெதுவாக எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பெரியவரிடம், “தாத்தா உங்களுக்கு எந்த ஊர்?” என்று தமிழில் கேட்டு வைத்தாள். “கியா பேட்டி” என்றார் கரடுமுரடான குரலில். அவ்வளவுதான் பயந்து விட்டாள். அவரின் குரலில் அவள் பயப்படவில்லை. அதே சமயம், “பேசாமல் இரு” எனத் தன் பெரிய விழிகளை உருட்டிக் உரத்தக் குரலில் கட்டளையிட்ட  கணவரின் சத்தத்தில் தான் பயந்தாள். முதன் முதலாக அவள் கேட்ட அந்நிய மொழி என்ன ஏது எனப் புரியாமல் அச்சம் கொள்ளச் செய்தது.

இந்தியாவின் தலைநகரில் கால் பதித்தாள். பயம் கலந்த மகிழ்ச்சி. என்றோ படித்தது நினைவில் வந்தது. ஆனால் ஊர் பெயர் ஞாபகத்தில் இல்லை. எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவள். அதனால் டில்லி என்பதனைத் தன் கணவரைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். மீண்டும் ஓரிரவு ரயில் பயணத்திற்குப் பின் அமிர்தஸரஸ் நகர் வந்து சேர்ந்தாள். வரும் வழி எங்கும் தான் கண்ட பச்சை வயல்வெளிகள் அவளுக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. ஏனென்றால் தான் மீண்டும் ஒரு உழவுத் தொழிலை மையமாகக் கொண்ட நிலத்திற்கு வந்து விட்டதை உணர்ந்து கொண்டாள். அது அவளை அந்நியப்படுத்தாதிருந்தது. மார்கழி மாதக் குளிரை ரசித்த அவளுக்குப் பஞ்சாபின் நவம்பர் மாதக் குளிர் விரும்பத்தக்கதாக இருந்தது. கிராமத்திலிருந்து கிளம்பும் போது வெறும் ஊறுகாயும், தமிழகத்து மசாலாப் பொருட்களை மாத்திரமா கொண்டு வந்திருந்தாள்? கோலப் பொடியையும் அல்லவா எடுத்து வந்திருந்தாள்.

அதிகாலை எழுந்து குளித்து வாசலில் கோலமிடுவது, தமிழ் காலண்டர்படி மார்கழியில் கோலத்தின் மீது அழகழகாகப் பூக்களை வைத்து அலங்கரிப்பது, விளக்கேற்றுவது, பாந்தமாக தான் புடவைக் கட்டிக் கொள்வது எனத் தமிழ் பழக்க வழக்கத்தை விடாமல் அவள் மேற்கொண்டமை அவளது தனிச் சிறப்பு. அவளின் கோலமிடும் திறனை அக்கம் பக்கத்தினர் சிலாகித்தமை அவளை மகிழும்படிச் செய்தது. புடவையில் கண்ட அப் பெண்கள் அவளை தேவதையாகவே கொண்டாடினர். மேம்சாப் என்று தன் கணவரின் துணைநிலை அதிகாரிகள், அவர்களின் வீட்டுப் பெண்கள் தன்னை அழைக்கின்ற பட்சத்தில் தனக்கு கிரீடம் வைக்கப்பட்டதாகவே நினைத்து ஆனந்தம் கொள்வாள்.

கடல்களே அற்ற பூமி என்பதை அறிந்த போது ஆச்சரியப்பட்டாள். மேடுபள்ளங்கள் அற்ற சம பூமி என அறிந்து கொண்டாள். பெருங்கடலாய் விரிந்திருக்கும் பேராறுகள், பெருங்கால்வாய்கள், வியக்கச் செய்வதாய் இருந்தன. இவ்வாறுகளின் வண்டல் மண், வற்றாது பாயும் நீர், நிலத்தடி நீர், மண் வளம், தாது வளம் போன்றவற்றின் சிறப்புதான் வயல்வெளிகளின் செழுமைக்குக் காரணம் என்பதனை மக்களைக் கேட்டு அறிந்து கொண்டாள். எதனையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாய் பஞ்சாபி மொழியை சீக்கிரமே பிறரிடம் பேசிப் பழகியே கற்றறிந்து கொண்டவள். அவள் பிறந்து வளர்ந்த ஊரில் பசுமாடுகளை மாத்திரமே அறிந்திருந்தவள். இப் புதிய ஊரில் எருமைகள் மாத்திரமே உண்டு என்பது விந்தையாகவே இருந்தது. பால், தயிர், வெண்ணெய், பாலாடை என பால் பதார்த்தங் களை விரும்புபவளாய் இருந்தது இப்பொருட்களின் சரளமானப் பயன்பாட்டில் ஈடுபாடு மிக்கவளாக்கிற்று.

அது மட்டுமின்றி இம் மக்களின் திருமண வைபவங்கள் ஈர்க்கச் செய்வதாய் இருந்தது. குறிப்பாக நள்ளிரவில், மாப்பிள்ளையின் அம்மா, மற்றும் அவர்களின் கூடப் பிறந்த சகோதரிகள், இன்னும் மிக நெருங்கிய உறவுக்காரர்கள் என பத்துப் பதினைந்து பெண்கள் சேர்ந்து, நல்ல பலவண்ண அலங்கார ஆடை அணிகலன்களுடன், அலங்கரிக்கப்பட்டு, சுற்றிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்ட மட்குடங்களைத் தலையில் சுமந்து, தோல் கருவி, இசை முழங்க ஆடிப்பாடி ஊர்வலமாகச் சென்று தங்கள் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கும் வைபவம், பைசாகி என்னும் அறுவடைத் திருவிழா, லோரி, தீஜ், ஹோலி போன்ற விழாக்களைக் கண்டும் கொண்டாடியும் மகிழ்ந்தாள். தான் இருக்கும் ஊரின் மொழியறிவை சீக்கிரமாகக் கற்றுக் கொண்டதால் அந்நிய ஊரில் இருப்பதாகவே உணர்ந்தாளில்லை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதனை மெய்ப்படச் செய்தாள்.

குளிர்காலத்தினை அடுத்துக் கோடையும் வருமே. இந்நகரில் கோடையும் உக்கிரம் மிக்கதாய்த் தகித்தது. வீட்டிற்குள் அறைகளுக்குள் அரை நாளுக்குத் தண்ணீரை நிரப்பி வைத்து வெப்பத்தைத் தணிக்கும் முறையைக் கண்டாள். வெளியே செல்லும் போது துணியை நனைத்து தலை முகம் முழுவதையும் சுற்றிக்கொள்வது, வீட்டு வராந்தாக்களில் வெட்டி வேர்தட்டிகள் அமைத்து மாலையில் தண்ணீர் தெளித்து இயற்கை முறையில் குளிரூட்டுவது போன்ற பல கோடைக்கால வாழும் முறைகளையும் அறிந்து கொண்டாள் அவள்.

பசுமையான வயல் வெளிகளில் மனதைப் பறி கொடுத்தவளைக் கொள்ளை கொண்ட இன்னுமொரு விடயம் உண்டென்றால் அது பொற்கோவில். இரவில் அலங்கார மின் விளக்கொளியில் புனிதநீர் தேக்கத்தில் தகதகத்து பிரதிபலிக்கும் கோபுரக் கலசங்கள், கோவில் கூரையின், சுற்றுச் சுவரின் வண்ண ஓவியங்கள், அங்கு இலங்கும் தூய்மை, மக்களின் சேவையுள்ளம், செழுமை, அமிர்தமாய் விளங்கும் குரு பிரசாதம், சமபந்தி உணவு வழங்கல் முறை, இசைக்கப்படும் பாடல்கள் என அனைத்தும் என்றும் அவள் நினைவலையின் நீங்கா ஓவியங்களாயிற்று.

கடுங்குளிரைத் தாங்குவதற்கான கம்பளி ஆடைகள், வீட்டு அமைப்புகள், வீட்டு வாசல்கள், சன்னல்கள் என எல்லாவற்றிலும் வலைக் கதவு மரக் கதவு என இரட்டைக் கதவுகள் கொண்ட கட்டிடங்கள், பூஞ்செடிகளைக் கொண்ட பங்களாக்கள், தோட்டங்கள் எனப் பலவற்றையும் மனத்திரையில் ஏற்றிக்கொண்டவள். சலிப்பற்ற ஏராளமான மகிழ்ச்சியானத் தருணங்களைச் சந்தித்தவள். வாழ்க்கைச் சக்கரம் சுழன்று மூன்று பிள்ளைகளுடன் தாயகம் திரும்ப வைத்தது. ஆம் பிள்ளைகளை ஓரிடத்தில் இருந்து படிக்க வைக்க வேண்டிய பொறுப்புக்குள்ளானாள். இராணுவ அதிகாரியின் அடிக்கடியான வேலை மாற்றம் பிள்ளைகளின் படிப்பிற்கு இடைஞ்சலாயிற்றே என்ற காரணத்தினால்.

அவளது இரண்டாந்தலைமுறையும் அவள் பாதையிலேயே தன் ஐம்பதாம் வயதில் பயணம் மேற்கொண்டாள், ஆராய்ச்சியாளரின் மனைவியாகத் தம் கணவரோடு. தன் தாயின் வார்த்தைகளை அதே மாதிரியான நீண்ட ரயில் பயணத்தின் போது அசை போட்டவாறு. திடீரென்று பெரியதொரு ஆற்றினைக் கடந்த போது, ‘பியாஸ்Õ என்ற பெயர் பலகையைக் கண்ட போது பழைய நினைவொன்று வந்து போனது. ஆம் ஒரு நாள் படித்துக் கொண்டிருந்த போது, இந்தியாவின் நதிகளென்ற தலைப்பில் பல ஆறுகளின் பெயர்களைப் படித்துவிட்டு. பஞ்சாபின் நதிகள் பற்றி படிக்க நேரிட்டது. “ஜீலம், ஜீனாப், ம்... ம்...Ó என்று படித்துக்கொண்டு சொன்னதையே ஓட்டை ரெக்காடாய் வாசித்துக் கொண்டிருந்தாள். அங்கு வந்த முதல் தலைமுறைக்காரி, அவளது அம்மா “ரவி, சட்லெஜ் என்று கூறி. பாஞ் என்றால் ஐந்து என்றும், ஆப் என்றால் ஆறுகள் என்றும் இந்த ஐந்து ஆறுகளும் பாய்கின்ற செழிப்பான மாநிலமே பஞ்சாப்” என்றும் தன் சிறு பெண்ணிற்கு விளக்கமளித்தாள்.

அதன் பின் பொற்கோவிலுக்குச் செல்கின்ற போதெல்லாம் தன் அம்மையின் சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து போயின. பெரிய செழிப்பான கோவில் என்பது மாத்திரமே நம் கோவிலுக்கும் பொற் கோவிலுக்கும் உள்ள வேறுபாடு என்றும், வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் ஒன்றே என்ற அவளது வாதம் சரியானதே என்று பின்னவளை எண்ண வைத்தது. இவர்களின் ஊரில் நாராயண சாமி கோவில் உள்ளது. நிழல் தாங்கல் என்று அழைக்கப்படும். அதாவது இங்கு வரும் பக்தர்களின் துன்பெனும் உக்கிரத்தை நிழலாகத் தாங்குமிடமாகக் கொள்ளப்படும். கோவில் கர்ப்பக் கிரகத்தில் விக்ரகம் கிடையா. ஐயா நாராயணரின் செய்திகள் பாடல்களாக எழுதப்பட்ட ஏடு ஒன்று நடுப் பகுதியில் இருக்கும் மேடையில் வைக்கப்பட்டிருக்கும். தினப்படி விளக்கு ஏற்றி வைத்து முரசங்கள் ஒலிக்க ஒலிபெருக்கியில் ஏடு வாசிப்பு நடைபெறும். பால் அன்னம், உம்பாஞ் சோறு என அனைவருக்கும் விசேட நாட்களில் வயிறாற உணவு வழங்கப்படும். அது சமயம் ஆண்கள் அனைவரும் தலையில் முண்டாசுக் கட்டிக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட இதே வழிமுறை தான் பொற்கோவிலிலும் பின்பற்றப்படுகிறது என்பது வியக்கத் தக்கதாய் இருந்தது.

அம்மையின் ஒவ்வொரு வார்த்தைகளும் செயல் களும் அவளுக்கு நினைவில் கொள்ளத்தக்கதாய் இருந்தன. குறிப்பாகக் குளிர்காலங்களில் வென்னீரில் பாத்திரங்கழுவுவது, வென்னீரில் நல்ல சுவை இருக்கும் என்று கூறி இறுதிவரை வென்னீர் குடிப்பது, மப்ளெர், ஸ்வெற்றர், சால் இத்தியாதிகளைச் சுற்றிக் கொண்டு கோமாளித்தனமாகக் குளிரில் அலைவதின் சுகம், சுட்ட நறுக்கிய சீனிக்கிழங்கு, மக்காச்சோளத்தை அவித்து எலுமிச்சை சாற்றில் நனைத்து உப்பில் தேய்த்து தின்னும் ருசி, மக்கி ரொட்டியும் சாகு என்ற கடுகுக் கீரை மசியலின் தனிச்சுவை, பைங்கன் பர்த்தா என்று அழைக்கப்படும் சுட்டக் கத்தரிக்காய் கறி, ஆலு பரோட்டா, கீர் போன்றவைகளுடன் கித்தா என்ற பெண்களின் கையையும் காலையும் தட்டித் தட்டி ஆடும் சீரான நடனம், ஆண்களின் பங்கரா வீர நடனம், கட்கா வாள் சண்டைக் காட்சிகளுடனான நகர் வலம் போன்ற அனைத்தையும் அம்மையின் கண்ணோட்டத்திலேயே சிற்சில மாற்றங்களுடன் காண நேரிட்டது இரண்டாம் தலைமுறைக்கு. 

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகளுக்கு அவளது அம்மை உடனிருந்து சொல்லுவது போலவே தெரிந்தது. எது நினைவு, எது நனவு? எப்படி இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்தது! இரண்டு தலைமுறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்துப் பெண்கள் இந்த ஊரில் வந்து கிட்டத் தட்ட ஒரே மாதிரியாக நல்லதும் கெட்டதும் அனுபவித்திருக்கிறார்களே!

Pin It