வேளாண் தொழில் நன்கு வளர்ச்சிநிலை பெற்றிருந்த காலத்தில் நமது சங்க இலக்கியப் பாடல்கள் தோன்றியுள்ளன. சங்க இலக்கியங்களில் உள்ள தானிய வகைகளின் குறிப்புகளும் அதைச் சேமித்து வைப்பதற்கான உழவர் வீடுகளிலிருந்த ‘குதிர்’ பற்றிய குறிப்புகளும் (பெரும். 243 - 247) பண்டைக் கால வேளாண் தொழிலின் இருப்பையும், தானியத்தைச் சேமித்து வைக்கும் நிலையையும் வெளிப்படுத்துகின்றன. சேற்று நிலத்தில் விதை விதைத்தும், நாற்றாக வளர்த்துப் பின் பெயர்த்தெடுத்து நட்டும் இருவகையில் நெற்பயிர் செய்தனர் (புறம் 230) என்ற குறிப்பும், ஒரு வேலி நிலம் ஆயிரம் கலம் செந்நெல்லை விளைவித்தது எனும் குறிப்பும் (பொருந 246 - 248) விளைந்த நெற்கதிர்களை அறுத்துக் களத்திற்குக் கொண்டுசென்று சேர்த்து, அடித்துக் காற்றில் தூற்றித் தூய்மை செய்தது பற்றிய குறிப்பும் (அகம். 30) அக்கால வேளாண் தொழிலின் செழிப்புநிலையைக் காட்டுகின்றன.

அதேநிலையில், தமிழகப் பழங்கால மக்களின் வாழ்க்கைநிலை வேளாண் தொழிலுடன் மட்டும் இருந்திருக்கவில்லை என்பதையும் அறியமுடிகின்றது. வேளாண் தொழிலுடன் வேறுபல தொழில்களும் சிறந்து விளங்கி இருந்திருக்கின்றன. ஒருபுறம் வேளாண் தொழிலும் இன்னொருபுறம் நெசவு, உலோகத் தொழில், தச்சுவேலை, மணிகள் - கற்கள் - பொன் - வெள்ளி - தந்தம் ஆகியனவற்றைப் பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்ற தொழில்களும் செழிப்புடன் நடைபெற்றுள்ளன. இத்தகு தொழில் சார்ந்த பொருட்களுக்குத் தேவையும் மதிப்பும் அந்தக் காலத்தில் இருந்துள்ளன. இவை சார்ந்து உள்நாட்டு வெளிநாட்டு வாணிபமும் நடைபெற்றுள்ளன.

பழங்கால வேளாண் தொழிலின் சிறப்பை, நில வகைகள் பற்றிய சங்க இலக்கியங்களில் உள்ள சொற்குறிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. அவல் - விளை நிலம் (மலை. 450); புன்புலம் - புன்செய் நிலம் (குறு. 183); கொல்லை - பயிரின்றித் தரிசாய்க்கிடக்கும் நிலம் (குறு. 186); புனம் - பயிர்செய்யப்பட்ட நிலம் (குறு. 186); கழனி - நெல் வயல் (ஐங். 25); செறு - வயல் (ஐங். 26); அரிகால் - நெல் அறுவடை செய்யப்பட்ட நிலம் (ஐங். 47) ஆகிய குறிப்புகளும் தினை பயிரிடப்பட்டுள்ள நிலம் ‘தினைப்புனம்’ என்று அழைக்கும் குறிப்புகளும் பழங்கால வேளாண் நிலப் பிரிவுகளை அறிந்துகொள்ள துணைசெய்கின்றன.

சங்க இலக்கியங்களில் வேளாண் தொழிலுக்கன்றி, பிற நிலப் பகுதிகளின் பெயர்களும் சிறப்புற பதிவாகியுள்ளன. அப்பெயர்கள்,

·      அத்தம் - பாலை நிலம் (குறு. 207, 255)

·      அழுவம்-கழிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலம் (குறு. 340)

·      எக்கர் - மணல் மேடான இடம் (நற். 267)

·      கடம் - பாலை நிலம் (குறு. 174)

·      கடறு - வன்நிலம் (குறு. 209)

·      களரி-களர் நிலம்(உப்பு நிலம்) (நற். 126, 384, 374)

·      கானல் - கடற்கரைச் சோலை (குறு. 145)

·      சுடலை - சுடுகாடு (குறு. 231)

·      சுரம் - பாலை நிலம் (நற். 246)

·      சுவல் - மேட்டு நிலம் (மலை. 436, நற். 202)

·      சூழ்கழி - ஊரைச் சுற்றிக்கிடக்கும் உப்பங்கழி        (ஐங். 111)

·      பழனம் - ஊர்ப்பொது நிலம் (பொது நிலம்)

      (ஐங். 4, 53); வயல் (அகம் 146)

·      புறவு - முல்லை நிலம் (நற். 59)

·      முரம்பு - வன்நிலம் (நற். 33, 274)

·      மென்புலம் - நெய்தல் நிலம் (ஐங். 138)

·      வன்புலம் - முல்லை நிலம் (ஐங். 469)

எனும் வகையில் வருகின்றன. இந்தச் சொற்குறிப்புகள் பண்டைய தமிழ் மக்களின் நிலம் சார்ந்த வாழ்க்கை முறையினைத் தெளிவுபடுத்துகின்றன.

வேளாண் தொழில் செய்யும் நிலவகையுள் ‘படப்பை’ என்றொரு வகை பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் வருகின்றது. இந்தப் படப்பை எனும் சொல் ‘விளை நிலம்’/ ‘தோட்டம்’ எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. உப்பு விளைந்துள்ள வயல்/தோட்டம் ‘கழிப் படப்பை’ (அகம். 227) என்றும், மிளகு விளைந்துள்ள வயல்/தோட்டம் ‘கறி இவர் படப்பை’ (அகம். 272) என்றும், நெல் விளைந்துள்ள வயல் ‘நெல் படப்பை’ (அகம். 204) என்றும், கரும்பு விளைந்துள்ள வயல்/தோட்டம் ‘கரும்பு அமல் படப்பை’ என்றும் கதிர் கொண்ட வயல் ‘மருது ஓங்கு படப்பை (அகம். 376) என்றும், காவிரிக் கரையோரம் உள்ள வயல் ‘காவிரிப் படப்பை’ (அகம். 284, 385) என்றும் சுட்டப்பட்டுள்ளன.

ஒரு மன்னன் எதிரி நாட்டின் மீது போர் தொடுத்துக் கைப்பற்றும்/அழிக்கும் இடங்களுள் வயல், அரண்மனை பகுதிகள் இரண்டும் முக்கியமாக அமைந்தன. பொருளுக்கும் - இருப்பிற்குமான இடங்களை அழித்தல்/கைப்பற்றுதல் எதிரியை அழித்தலும் கைப்பற்றுதலுமாகும். எதிரி நாட்டை அழிக்கும் ஒரு பகுதியாக வயல் பகுதிகளை அழிக்கும் வழக்கம் அன்றைய அரசப் போர் மரபாக இருந்திருக்கிறது. இச்செயல் பண்டைய தமிழ்ச் சமூகத்தில், வேளாண் தொழில் பெற்றிருந்த இடத்தைக் காட்டுகின்றன. காரிக்கிழார் எனும் சங்கப் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை,

............ ..................... அடர் புகர்ச்

சிறுகண் யானை செவ்விதின் ஏவி

பாசவல் படப்பை ஆர்எயில் பலதந்து

                  (புறம். 6: 12 - 14)

என்று வாழ்த்திப் பாடியிருக்கிறார். அவர், ‘யானை ஏவிப் பசிய நெற்கதிர்களைக் கொண்ட வயல்களையும் அரிய மதில் அரண்கள் பலவற்றையும் கொள்க’ என்று பாடியுள்ளமையும், அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் ‘வரப்பை நெருங்கி வளையும் நெற்கதிர்கள் கொண்ட நெல் வயல்களையுடைய பகைவர் நாடு அழியும்படி போர் செய்பவன்’ (புறம். 98: 18 - 20) என்று பாடியுள்ளமையும் ‘படப்பை’ யின் (வேளாண் நிலத்தின்) இடத்தை வெளிப்படுத்துகின்றன.

சங்க காலத்தில் விளை நிலத்தைச் சுட்டிய சொல், நெடுங்காலம் கடந்தும் இன்றைய வழக்கிலும் நீடித்து வந்திருப்பதைக் காணமுடிகிறது. சென்னையை ஒட்டியுள்ள தாம்பரத்திற்கு அருகில் ‘படப்பை’ என ஊரின் பெயராக வழங்குகின்றது. இந்தப் ‘படப்பை’ எனும் ஊர் வேளாண் தொழில் செழிப்புற்று விளங்கும் நிலப்பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. விளை நிலங்கள் சூழ்ந்திருந்ததால்தான் ‘படப்பை’ எனும் பெயர் அங்கு ஊர்ப் பெயராக நிலைபெற்றிருக்க வேண்டும். பாலாற்றை ஒட்டியுள்ள இந்தப் நிலப்பகுதி வேளாண் தொழிலுக்கு ஏற்ற இடமாக இருந்திருக்கிறது.

சென்னை புறநகரப் பகுதிகளுள் வேகமாக வளர்ச்சியடையும் பகுதியாகப் ‘படப்பை’ உருவெடுத்து வருகிறது. இன்றைக்கு முதலீட்டு நோக்கில் வீட்டுமனை வாங்குபவர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் பகுதிகளில் ஒன்றாகவும் ‘படப்பை’ பகுதி இருக்கிறது. ஸ்ரீபெரும்புத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் படப்பை அமைந்திருப்பதாலும் அப்பகுதியைச் சுற்றி அமைந்திருக்கும் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களாலும் ‘படப்பை’ வேகமாக உருமரிவருகின்றது. தொழில் நிறுவனங்கள் அதிகமாகச் சூழ்ந்திருக்கும் பகுதிகளின் மையமாகப் ‘படப்பை’ அமைந்திருப்பதால் கட்டமைப்பு வசதிகளும் பெருகி வருகின்றன. இதனால் வணிக நோக்கில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அப்பகுதியின் பசுமையைச் சூறையாடி வருகின்றன.

பெருங்களத்தூர், தாம்பரம், திருப்பெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகள் இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருக்கின்றன. அத்துடன் இந்தப் பகுதிகளைத் துரிதமாகச் சென்றடையும் வகையில் சாலை வசதிகள் இருப்பதால் ‘படப்பை’ வேகமாக உருமாற்றம் பெற்றுவருகின்றன. பெருநகரத்தின் அருகில் இந்தப் பகுதி அமைந்துள்ளதால் விளைநிலங்கள் இன்றைக்கு நல்ல விலை நிலங்களாக மதிப்புயர்ந்துள்ளது.

நெடுங்காலத்துக்கு முன்னர் காரணத்துடன் வழங்கி, காலப்போக்கில் ஊரின் பெயராக நிலைபெற்ற ‘படப்பை’ எனும் பெயர் எதிர்காலத்தில் காரணம் தெரியாமல் வழங்கப்போகிறது.

Pin It