கருத்தூட்டம் மிகுந்த இக்கவிதைகளை இதழ்களில் படித்திருந்தாலும் முழுத்தொகுப் பாகப் படிக்கும்போது பிரமிப்பும் மனப்பதற்றமும் கூடுகின்றன.  கவிஞரின் கவிதா விலாசம் ஆயிரம் சிறகுள்ள பறவையாக திசைகளைக் கடந்து செல்வதை வியக்காமல் இருக்க இயலாது.  இதை யெல்லாம் எழுதலாமா? இப்படிக்கூடச் சொல்ல முடியுமா? என்று இத்தொகுப்பின் கவிதைகள் மனதில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.  தமிழ், தமிழினம், தேசியம், சர்வதேசியம் என்றெல்லாம் ஊடுருவிச் செல்லும் கவிதை ஆவேசம் நமது ஊனை உருக்கவும் உள்ளொளிப் பெருக்கவும் செய்கிறது.

“...கபில மலர்களின்

கதைகளைக் கேட்ட ஆல்ப்சு

கேட்டது

‘பத்துப்பாட்டை எமது சரிவில்

பயிரிட வேண்டும் - என்ன செய்யலாம்?

ஐங்குறுநூற்றை

அரூப உதடுகளால் உச்சரித்த

தென்றலை

ஆன்டீசு மலை

அப்படியே கட்டிப்பிடித்து முத்தம்

இட்டது - கூடவே

குறுந்தொகை விருந்தைத்

தருவது எப்போது என்று கேட்டது”

என்று நீளும் தமிழின் மேன்மையை அடுக்கிச் சொல்லும் கவிஞர்,

“தனித்த அடையாளங்களின் கனத்தினால்

பயணம் பாதிக்கும் பயனும் பாதிக்கும்

என்று எல்லாவற்றையும் கீழே இறக்கிவிட்டுவிட்டு

விமானம் ஏறுகிறான் - நம்

சடலத் தமிழன்”

எனத் தற்காலத் தமிழனின் தடித்தனத்தைப் பதை பதைக்கப் பேசுகின்றார்.

“இல்லாத கடவுளோடுகூட

ஒருநாள் உடனிருக்க என்னால்

இயலாது

அவருக்குத் தமிழ் தெரியாதென்றால்”

என்றெல்லாம் தமது தமிழ்க் காதலை வெளிப் படுத்தும் கவிஞர்,

“கையில் பையோடு வந்த

என் பக்கத்து வீட்டுக் கன்னடக்காரர் கேட்டார்

‘எப்படி உங்கள் மொழியை அழியவிட்டீர்கள்?’

‘அப்படியா’ என்பதை ஆங்கிலத்தில்

கனமற்ற கவனத்தோடு

அவருக்குப் பதிலாக்கிவிட்டு

அடுத்த தெருவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள

வால்மார்ட்டுக்கு அவரோடு போனேன்”

என வரும் வாக்கியத்தில் தமிழ்க் காதல் முறிக்கப் படுவதை ஆதங்கத்துடன் பதிவுசெய்துள்ளார்.  ஏனென்றால் வரலாற்றெழுதியலும், இயக்கவியல் வரலாறும் அவரைப் பிடர்பிடித்து உந்துகின்றன.

இந்தியா என்பது ஒற்றைத் தேசம்

என்கிற நில எல்லையை வரைவதன்

மூலம், இந்தியத் தேசம் என்கிற

பெருநிலப்பரப்பு ஒன்று நமது

நினைவுத் தளத்தில் உருவாக்கப்படுகிறது.

என்று தேசம் பற்றியும், வரலாற்றின் உருவாக்கம் பற்றியும் நவசிந்தனையாளர் ஜமாலன் தமது புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ என்ற படைப்பை முன்வைத்து எழுதும் கட்டுரையில் கருத்துரைக்கின்றார்.

வரலாறு எழுதுவதான எழுத்துச் செயல்பாடு மேற்குலகிடம் இருந்து பல்கிப் பெருகியதாகக் கொண்டாலும் வரலாற்றை எழுதுவோனின் சார்பும் இடமும் இருப்புமான கூறுகள் இவ் வெழுத்துருக்களைத் தீர்மானிப்பதாகவே அமைந்து விடுகின்றன.  எனவே, ஏதோ ஒன்றைப்பற்றிய வரலாற்றில் புனைவுகள் உணர்ந்தே கலக்கப் படுவதன் முலம் விளிம்புநிலையினர் பற்றிய சித்திரிப்புகள் அல்லது விவரணைகள் தணிக்கை செய்யப்படுகின்றன.  இதனாலேயே இத்தகைய வரலாறு இன்று, விசாரணைக்கு உள்ளாகிறது.  எனவே, பூகோள வரலாற்றைப் போலவே மொழி வரலாற்றையும் முதன்மைப்படுத்தும் கவிஞர்

“தமிழ்த்தாயே!

நீ பிறந்தது தைத்திங்களிலா?

சித்திரை மாதத்திலா?

வாரத்தின் எந்தக் கிழமையில்?

அல்லது

வாரத்துக்குள் வந்து சேராத எந்தக் கிழமையில்

உன் நிலத்தில்

முகை அவிழ்ந்த முதல் மொட்டு

முல்லையா? குறிஞ்சியா?

தும்பையிலா? எருக்கம் பூவிலா?

எதன் இதயத்துள் இருந்தது உனது முதற்சொல்?”

என்று இனநினைவை மீட்கும் வரலாற்றின் முதலெழுத்தை எழுதிப் பார்க்கின்றார்.

வரலாறு எழுதுவதன் தேவையும் அதன் அளிப்பும் கால இடச் சூழலில் வேறுபாடு கொண்டு விடுகின்றன.  இதனைத் தமிழாய்வுலகில் கால ஆராய்ச்சி எனப் பயின்றுவரும் பதப்பிரயோகம் உணர்த்துவதை நினைவுகூரலாம்.  தேசம் பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாறாகப் பதியப்படு வதைப் போலவே மொழிபற்றிய வரலாற்றிலும் சிக்கல்களின் நுண்ணலகுகள் காணப்படுகின்றன.

“சரித்திரம் சொல்லும்

இந்தத் தங்கச்

சந்ததிச் சங்கிலியில்

மங்கிய மணிகளாய் வந்துசேர்ந்த

இன்றைய தமிழன்,

வையகம் முழுதும் போகிறான்

மென்பொருளாய், வன்பொருளாய்,

தமிழ்மொழி என்னும்

நன்பொருள் மறந்து”

என்னும் வாக்கியங்களில் வார்த்தளிக்கின்றார்.

சமஸ்கிருதத்தின் வரலாற்றைப்பற்றி பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி எழுதுவதற்கும் தேவநேயப் பாவாணர் எழுதுவதற்குமான அடிப்படையை அவரவர் சிந்தனை முறையும் எழுத்துச் செயலும் தீர்மானிக்கின்றன என்று ஒற்றை வரியில் வியாக்கி யானம் செய்தாலும்கூட வரலாற்றுக்கும் புனைவுக்கு மான மோதல் என்றே இதனைச் சொல்லத் தோன்று கிறது.  எனவே நமக்கான சுயவரலாற்றை மீட்டெடுக்க வேண்டியதை,

“எப்போது

தமிழுக்குள் தமிழன் வந்து

நிரம்புவான்?

எப்போது

தமிழனுக்குள் தமிழ்வந்து

நிரம்பும்?

அப்போது வரும் பொங்கல் திருநாள்

எப்போது

தன்னுரிமை மீட்டெடுத்துத்

தமிழினம் தலைநிமிரும்?

எப்போது

அடையாளம் இழக்காத - தன்

அழகு

தமிழன் முகத்தில்

முத்திரை பதிக்கும்?

அப்போது வரும் பொங்கல் திருநாள்”

என்னும் பகுதியில் வெளிப்படுத்துகின்ற கவிஞர் தங்களுக்கான வரலாற்றைச் சகல சிடுக்குகளில் இருந்தும் மீட்டெடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை,

“உலக வரைபடத்தில் தாய்மொழிக்காகக்

குருதியிலும் நெருப்பிலும் குளித்த ஒரே ஒருநாடு

தமிழகம் என்பது

பார்வை பழுதுற்ற உலக வரலாற்றின் கண்களில்

படவே இல்லை”

என வரும் வாசகத்தின் மூலம் நினைவூட்டுகின்றார்.

இனக்குழுவாக இருந்த வரலாற்றையும் அவ் வரலாற்றுக் கண்ணிகள் அரச பயங்கரவாதத்தால் அழிவுற்றதையும் இன்று உலகமயமாக்கலின் மூலம் அடையாளம் அழிக்கப்பட்டு வருவதையும்,

“நெல் இருந்தது; நீர் இருந்தது; மக்கள்

நேர்உறவு கிழிபட்டுப் போனது.

மன்னன் மனம் வைக்காமல்

தட்டுக்குச் சோறு வராது

தாகத்துக்குத் தண்ணீர் வராது.

‘மன்னன் உயிர்த்தே

மலர்தலை உலகம்’

காற்றைக் கடைந்து எழுந்தது

கவிதைக் குரல்”

என்னும் துயர்மிகுந்த வரிகளில் எழுதிச் செல் கிறார்.

“தன் பெண்டு தன் பிள்ளை”

என்பது போல் இல்லாமல் கவிஞரின் கவிதை யுள்ளம் அறச்சினத்தோடு சர்வதேச நிலவெளியைப் பற்றிப் படர்ந்து செல்கிறது.

பாரதிதாசன், பாப்லோ நெரூதா என்கிற பட்டறையில் கூர்தீட்டப்பட்ட ஆயுதமானதால் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, வெனிசுலா என நீண்டு செல்லும் கவிதைக் கரங்கள் துயர் துடைக்கின்றன.

“தற்கொலை செய்துகொண்ட

செருமனியின் கொடுங்கோலன்

சிங்கள அதிபதியாக

வரலாற்றின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு

வந்தான்”

என வேரும் வேரடி மண்ணுமாகப் பிடுங்கி எறியப்பட்ட தமிழ் வாழ்வின் நிதர்சனத்தைச் சொல்ல வந்த கவிஞர்,

“இனப்படுகொலை வரலாற்றில்

புதிய அத்தியாயங்களைத் திறந்து வந்தவன்

தமிழ்ப் பிணங்களை அடுக்கி

அவற்றின் மேல்

அதிகார நாற்காலி போட்டு அமர்ந்தான்”

என்று சினந்து சிவப்பதைப் பார்க்கலாம்.

மானுட சமுத்திரம் நானென்று கூவும் மகத்துவம் அறிந்தவர் நம் கவிஞர்.  ஆனதால்,

“அவள் படிப்பது அவசியம்

அவள் படிப்பதைவிட அவளைப் படிப்பது

அவசியம் என்று

திருந்தாத நெஞ்சங்களுக்குத்

தெரியுமா?”

மலாலாவுக்கு நேர்ந்த கொடூரத் தாக்கு தலுக்காக மனம் நோகவும்,

“மண்டேலா

மாண்டுவிடவில்லை

எதற்கு இரங்கற்பா?

ஆகாயம் இறந்ததென்றால்

அப்போது எழுதலாம் இரங்கற்பா.

வெப்ப மொழியை இழந்து

சூரியன்

விக்கித்து விழுந்தால்

அப்போது எழுதலாம் இரங்கற்பா”

என்று மண்ணைப் பிரிந்துவரும் மணிகளாகவும் விண்ணைக் குடைந்தெழும் நிலவாகவும் ஆயிரம் ஆயிரம் விடுதலைப் போராளிகள் வேள்வித் தீ மூட்டுவார்கள் என்ற நன்னம்பிக்கை விதைகளைத் தூவிடவும் கவிஞரால் இயல்கிறது.

இப்படி எரிமலையாக இருக்கும் கவிஞரால்,

“ஒரு நாள்

அணில்கள்

இரண்டு கொய்யாவை

முற்றுகையிட்டன.

துரத்தப் பாய்ந்த

என் கவிதை

திரும்பவில்லை

அணில்களோடு கூட்டுச் சேர்ந்து

கொய்யாக்களைப் பங்கு

போட்டுக் கொண்டிருந்தது”

பனிமலையாகவும் இயல்கிறது.  தொழிலாளர் போராட்டம் எழுதிய பாப்லோ நெரூதா தக்காளி பற்றியும் எழுதியுள்ளார்தானே.  ஏன் எழுத வேண்டும் என்ற வினாவுக்கு விடையாகக் கவிப் பேரருவி தமிழன்பனின் கவிதை வாழ்வே விடையாகத் திகழ்கிறது.  இந்தக் கவிதைத் தொகுப்பு நம்மைக் கொந்தளிக்கச் செய்கிறது.  தீராத தேடலில் நம்மையும் இட்டுச் செல்கிறது.  நமது மனச்சான்றுகளை உலுக்குகிறது.  நம்மைச் சிந்திக்கவைக்கிறது.  ஒரு மகா வாக்கியம் இப்படித்தான் இருக்க முடியும்.

Pin It