தேர்தலில் பெரியார் திராவிடர் கழகம் ஜெயலலிதாவை ஆதரிப்பது ஒரு தற்காலிக நிலைப்பாடு; செயல் உத்தியை மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறோம்; போர் உத்தி அப்படியே இருக்கிறது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ஆனந்த விகடன்’ (20.5.2009) ஏட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். பேட்டி விவரம்:

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசியதால் தானே நீங்கள் கைதானீர்கள்?

‘தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. ஆதரவாகச் செயல்படுவதுதான் குற்றம்’ என்று முன்பு வைகோ, நெடுமாறன் ஆகி யோர் பொடாவில் கைது செய்யப்பட்ட போதே உச்சநீதிமன்றம் தெளிவாகத்தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், மறுபடியும் மறுபடியும் வெறும் பேச்சுக்காகக் கைது செய்யப்படு கிறோம். வைகோவின் பொடா வழக்கு விடுதலைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்த, செயலாற்றிய அதே கலைஞர்தான் இப்போது மூன்று பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறார். ஒரே சட்டத்தை ஆளுங் கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியாக மாறினால் வேறு மாதிரியும் கையாள்கிறார் கலைஞர்!

நீங்கள் தேர்தலில் பங்கேற்காத அமைப்பாக இருந்த போதிலும், காங்கிரஸ் கட்சியைக் காயப்படுத்தும் சி.டி.யை வெளியிட்டதால் தானே உங்கள் மீது கோபம் வந்தது?

நாங்கள் தேர்தலில் பங்கேற்பது இல்லை. ஆனால் அரசியலைப் புறந்தள்ள முடியாது. நீங்கள் சொல்வது மாதிரி அது காங்கிரசுக்கு எதிரான சிடி என்பதைவிட ஈழத் தமிழனுக்கு ஆதரவான சிடி. ஒரு திட்டமிட்ட இன அழித் தொழிப்பு இலங்கைத் தீவில் மேற் கொள்ளப் படுகிறது. சிங்கள ராணுவம் தமிழர்களை விதவிதமான குண்டுகளால் கொலை செய்கிறது. பட்டினி போடுகிறது. கொட்டாங்குச்சிகளைக் கையில் ஏந்தியபடி ஒரு கவளம் சோற்றுக் காகவும், ஒரு குவளைத் தண்ணீருக்காகவும் தமிழர்கள் கையேந்தி முண்டியடிக்கிறார்கள். இந்த உண்மை களை எடுத்துச் சொல்வதில் என்ன பிழை? அதுவும் நாங்கள் தயாரித்திருந்த சிடி.யில் தொலைக் காட்சிகளில் ஒளி பரப்பான காட்சிகளைத் தான் தொகுத்திருந்தோம். அதையே கூடாது என்கிறார்கள். ஒரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது எப்படி ஜன நாயக உரிமையோ, அதுபோல இன்ன கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதும் ஜனநாயக உரிமைதான். ஆனால், கலைஞர் அரசு இந்த ஜனநாயகத்தை அடியோடு மறுக்கிறது.

அதற்காக, கோவையில் ராணுவ லாரிகளைத் தாக்கியதையும், ஆயுதங்களை எரித்ததையும் எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

கோவைச் சம்பவத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது. அது ஒட்டு மொத்த தமிழர் கொந்தளிப்பின் ஒரு துளி வெளிப்பாடு. உண்மையில், கோவையில் அன்று எங்கள் இயக்கத்தோழர்களின் எண்ணிக்கை 30 பேரோ, 40 பேரோதான். விஷயத்தைக் கேள்விப்பட்டு சாலையில் நின்றிருந்த வர்களும், பேருந்துகளில் அமர்ந்திருந்தவர்களும், கிராமத்து மக்களும் தோழர்களுடன் இணைந்து கொண்டனர். அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது தமிழர்களுக்குக் கோபம் இருக்கிறது.

புலிகள் மீது உங்களுக்கு விமர்சனங்களே இல்லையா...?

விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால், அவை தூற்றுதல் ஆகிவிடக் கூடாது. இலங்கை விவகாரத்தில் தீர்வு காண முடியாத தற்கு சாக்காக ராஜீவ் கொலை பற்றி இன்று பேசும் சிலர், அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னால் மட்டும் புலிகளை ஆதரித்துக் கொண்டு இருந்தார்களா... இல்லையே! சிங்கள அமைச்சரவையில் கனகரத்தினம் என்ற தமிழ் எம்.பி. இருந்தார். அவரது துரோகத்தால் புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். ஆனாலும், அவரது மகன் சைமன் பிற்பாடு அதே புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, சிங்கள ராணுவத்துக்கு எதிராகப் போரில் மடிந்தார். ஆனால், கருணாநிதி விமர்சனம் என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் கொடுத்த பேட்டியைத் திரித்துப் பேசுகிறார். அந்தப் பேட்டிக்குப் பிறகுதான் அவரது தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பே வந்தது. ஆக, தன்னுடைய இயலாமையை பிரபாகரன் மீதான விமர் சனமாகக் கலைஞர் மாற்றுகிறார். தமிழ னுக்கு ஒரு நாடு அமைந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள், ஏதோ நியாயவான்கள் போல புலிகள் மீது பாய்கிறார்கள். விமர்சனங்கள் வைக்க வேண்டிய நேரம். இது அல்ல. சாவுக்கும் நோவுக்கும் மத்தியில் இயங்கிக் கொண்டு இருக்கும் இயக்கத்தைத் தத்துவார்த்தப் போர்வைக்குள் மூடி, அங்கு நடக்கும் சிங்களச் சித்ரவதைகளை மறைத்துவிடக் கூடாது. புலிகளை விமர்சிக்கக் காலம் இருக்கிறது. தமிழனைக் காப்பாற்ற இதுதான் கடைசி நேரம்.

திராவிடர் கழகம் ஜெயலலிதாவை ஆதரிக்கிறது என்ற காரணத்தைச் சொல்லித் தான் பெரியார் திராவிடர் கழகமே உதயமானது. ஆனால், இப்போது ஈழப் பிரச்சினையில் கருணாநிதியை விமர்சிப்பது என்ற நிலையோடு சேர்ந்து நீங்களே ஜெயலலிதாவை ஆதரிப்பது சரியா...?

தேர்தல் அரசியல் வழியாக அமைகிற எந்த அரசும் உழைக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தராது என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். ஆனால், நடப்பில் தேர்தல் அரசியல் என்ற சீரழிந்த வடிவம் மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. இதில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. ஒப்பீட்டு அளவில் குறைந்த கேடுள்ளவர்களைத் தேர்ந் தெடுத்தாக வேண்டும். அப்படி ஈழப் பிரச்சினை யில் கருணாநிதியை விடக் குறைந்த கேடுள்ள வராக ஜெயலலிதாவை நினைக்கிறோம். ஜெய லலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப் பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும், அதே நடிப்புக் காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே! எனவே தான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம். செயல் உத்தியை மட்டுமே மாற்றிக் கொண்டு இருக்கிறோம். போர் உத்தி அப்படியேதான் இருக்கிறது.

தி.க.வுக்கும், பெரியார் தி.க.வுக்கும் என்ன வேறுபாடு?

நாங்கள் மக்களிடம் சாதி வேறுபாடுகளைக் களைவதற்கான வேலைகளையும் செய்கிறோம். தமிழ்நாடு முழுக்க இன்னமும் இரட்டை தம்ளர் வழக்கம் நடைமுறையில் உள்ள கிராமங்களை எங்கள் தோழர்கள் கணக்கெடுத்துக் கண்டு பிடித்திருக்கிறார்கள். திராவிடர் கழகம் இந்த மாதிரியான சமூக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக விலகி விட்டது. வீரமணிக்கு இப்போது கருணாநிதியே உலகம். அவரது நற்பெயரைக் காப்பாற்றுவதுதான் வீரமணியின் லட்சியம். பெரியாரின் எழுத்துக்களை வெளியிடுவதை விட ‘வாழ்வியல் சிந்தனைகள்’ எழுதுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார். அதை எழுதத் தான் ஆயிரம் சாமியார்கள் இருக்கிறார்களே... பெரியார் இயக்கம் எதற்கு?

இவ்வாறு பேட்டியில் கூறியுள்ளார்.

Pin It