அநாயாசமான கலைஞானமும் அபூர்வமான கவிமனமும் கொண்ட கவிஞர் நா.முத்துக்குமார் எனும் ஆளுமையின் எதிர்பாராத மரணம் தமிழிலக்கிய வெளியிலும் திரையிசையுலகிலும் பேரதிர்ச்சியும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது,

‘கடவுளுடன் சீட்டாடுவது

கொஞ்சம் கடினமானது

எவ்வளவு கவனமாக இருந்தாலும்

பார்க்காமலே அறிந்துகொள்கிறார்’

என்று கவிதையெழுதிய முத்துக் குமார்தான் ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னாலே’ என்றுமெழுதினார்.

சகலருக்குமான எல்லையற்ற காதலும் நேசமும் அன்பும் தன்வசங் கொண்டிருந்த மாகலைஞனின் முன்னால் தெய்வங்கள் தோற்றுப் போனதுடன் தலைகவிழ்ந்து நிற்பதாகவே தோன்றுகிறது,

“இறந்து போனதை

அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான்!”

என்றெழுதிய முத்துக்குமார் தன் இருப்பை புவிவெளியில் படர்த்திவிட்டு இறப்பை அறிந்துகொண்டுவிட்டார். அவரது கவிதை வரிகளை மணங்கொண்டு மலர்ந்த தமிழ்ச் சமூகம், ஆற்றாமையைச் சுமக்கவியலாமல் தவித்தலைகிறது.

2001ம் ஆண்டில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற அ,வெண்ணிலாவின் ‘கனவிருந்த கூடு’ கடிதத் தொகுப்பு வெளியீட்டு விழாவின்போது தோழர் மு.முருகேஷின் அறிமுகத்திலிருந்து அவருடன் தொடங்கிய சிநேகம் அறிவுமதி அலுவலகத்தில் தொடர்ந்த சந்திப்புகளில் இறுக்கமானதானது, 2003ல் கோவில்பட்டியில் நடந்த முருகபூபதி திருமணத்தில் சந்தித்தபோது அவர் திரையுலகில் மிகப் பிரபலமாகியிருந்தார், முதற்சந்திப்பின்போதான அதே மென்சிரிப்பு, அதே எளிமை, அதே கைப்பற்றல்.

இடையில் வந்து பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பரிடம் விடைபெறுவதாகச் சொல்லிவிட்டு பையிலிருந்த பணத்தை அவரிடம் கொடுத்து ‘இப்போதைக்கி இத வச்சிக்கங்க, இங்க ஏடிஎம் எதுவும் இல்ல’ என்று அன்பொழுகச் சொல்லி அவரது தோளைத் தட்டியனுப்பிவிட்டு என்னிடம், ‘திரும்பவும் சென்னைக்கே வந்துடுங்க’ என்று சொல்லிச் சென்றார். 2004ல் திருபுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் சி,மகேந்திரன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோருடன் கலந்து கொள்வதாகச் சொல்லியிருந்த நிலையில் கடைசி நேரத்தில் வர இயலாத சூழலை விளக்கி ஒரு கவிதையை அலைபேசியிலேயே சொல்லி இதனை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்த பின்னாலும் ஏதேதோ காரணங்களால் அவரைச் சந்திக்கவோ உரையாடவோ வாய்க்கவில்லை. அவரது இறப்பு மீண்டும் அவருடன் திரும்பவும் உரையாட வைப்பதாக அமையும் என ஒருபோதும் எண்ணிப் பார்த்ததில்லை.

பொதுவாக திரையுலகத்தினருக்கே உரித்தான ஆர்ப்பாட்டமான எந்த குணாம்சங்களும் அவரை எப்போதும் அண்டவேயில்லை.

திரையுலகிலும் இலக்கிய வெளியிலும் எண்ணிக்கையற்ற நண்பர்களைக் கண்டடைந்தது, அவரது எளிமைப் பண்பினாலும் அன்பும் அமைதியுமான அவரது சிநேகத்தாலும்தான் என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவர்.

பூஞ்சையான அவரது உடலைப் போலவே அவரது மனசும் அத்துணை மென்மையானது. பேதமற்ற அன்பு அவருடையது.

எல்லாவற்றையும்விட அவரது எளிமை மிகமிகப் பிரசித்தமானது.

திரையுலகில் புழங்கும் பலருக்கும் சித்திக்காததும்கூட.

காஞ்சிபுரம் மாவட்டத்துக் கிராமமான கன்னிகா புரத்தைச் சேர்ந்த நா.முத்துக்குமார் சிறுவயதில் தாயை இழந்தநிலையில் தமிழாசிரியரான தந்தையாரின் நூலகச் சேமிப்பளவிருந்த புத்தகங்களைத் தன் இரண்டாவது தாயாக ஏற்றணைத்துக் கொண்டவர்,

சங்க இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரை ஆழமாகப் படித்தறிந்து பள்ளி நாட்களிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கியவர்,

காஞ்சிபுரம் வீதிகளிலும் வெவ்வேறு கல்லூரிகளிலும் தமிழ்க் கவிதை முழக்கத்தோடு சமூகத்திற்கான அக்கறைக் குரலாகவும் ஒலித்தவர். ஆணாதிக்கத்திற்கெதிரான தனது விசாரணையை ‘தூர்’ என்ற கவிதையில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார், இந்தக் கவிதையை எழுத்தாளர் சுஜாதா கணையாழி விழா மேடையில் சிலாகித்துப் பேச அந்த மேடையிலேயே பார்வையாளராக அமர்ந்திருந்த முத்துக்குமாருக்கு ஒரு அன்பர் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கியபோது, அத்தொகையை அதே மேடையில் கணையாழி வளர்ச்சி நிதிக்கு வழங்குவதாக அறிவித்து கவிதையின் உயர்ந்த அம்சங்களோடு தனது குணாம்சத்திலும் உயர்ந்தோங்கித் தோன்றியவர், Ôநியூட்டனின் மூன்றாம் விதி’ மற்றும் Ôபட்டாம்பூச்சி விற்பவன்’ கவிதைத் தொகுப்புகளின் வழியாக நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க கவனத்தையும் பெற்றார்.

பச்சையப்பன் கல்லூரியில் பயில்கிற காலத்திலேயே கவிஞராக பிரபலமடையத் தொடங்கியவருக்கு சினிமாவின் மீதிருந்த விருப்பத்தினால் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக சிலகாலம் பணிபுரிந்தார், திரையுலகில் பாட்டெழுதும் இளங்கவிஞர்கள் பலரையும் வளமாக வார்த்தெடுப்பு செய்யும் தோழமை கவிஞர் அறிவுமதியின் கூடாரத்தில் தன்னை மெருகேற்றிக்கொண்டு சிறிதுகாலத்திலேயே திரையுலகின் உச்சத்தை எட்டிப் பிடித்தவர், இருபது வயதில் தொடங்கிய கலைப்பயணத்தில் தன் கடும் உழைப்பாலும் கவித்திறத்தாலும் தனித்ததொரு அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டவர். தமிழ்த்திரையுலகத்துக்கேயான கீழ்த்தரமான தந்திர குணங்களாலும் சிபாரிசுகளாலும் அடையாளப்படுத்தப்பட்டவர் அல்ல அவர். பிரபலமாகிவிட்ட பின்னால் எந்த சந்தர்ப்பத்திலும் அகங்காரமோ ஆவேசமோ கொள்ளாத நிலையில் பெரும் புகழுக்குப் பின்னும் தன் நேர்மையான எளிமையைக் கைநழுவவிடாத கலைமனம் அவருடையது. போற்றுதலையும் ஏச்சுதலையும் அளவுக்கதிகமான பாராட்டுதல்களையும் கருத்தில் கொள்ளாது தன் அழகிய புன்னகையால் கடந்து செல்லும் எளிமை அவருக்கு வாய்த்திருந்தது.

திரையிசைப் பாடல்களுக்கு மாநில அரசின் விருதுகளுடன் இரண்டுமுறை தேசிய விருது என பதினைந்தாண்டுகளுக்குள் அளப்பரிய சாதனைகளை தன் கவிதைகள் மற்றும் பாடல்களின் வழியே நிகழ்த்திய அசாத்தியமான கலைஞன். குறுகிய காலத்திலேயே கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்றவர்கள் நிகழ்த்திய சாதனைகளுக்கு மிக அணுக்கமாக நெருங்கிச் சென்றவர் முத்துக்குமார். எழுதவேண்டிய ஏராளமான பாடல்களைத் தன்னோடு எடுத்துக்கொண்டு சென்று விட்ட கவிஞனை எண்ணுகையில் ஆழ்ந்து லயித்து ரசித்துக்கொண்டிருக்கையில் தடைப்பட்டுவிடும் இனிய இசைப்பாடல் தோற்றுவிக்கும் துயரத்தை ஒத்ததாயுள்ளது.

இனி எங்கும் நிறைந்தவராகினார் அவர்.

பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் உச்சிமுகர்ந்து கொண்டாடப்பட்ட ஆனந்தயாழ் காலவெளியெங்கும் மீட்டப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

காலகாலமாக அனலாக உணர்ந்த வெயில்கூட ஓரழகு என்பதை உணர்ந்துகொள்வதோடு வெயிலோடு விளையாடும் வழக்கத்தை வரும் தலைமுறைகள் கைக்கொள்ளும்.

வழிதேடி வந்த வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களுக்காக காதலர்களின்

காதல்மனம் விரல்களையேந்தி நிற்கும்.

மின்சாரக் கம்பிகளில் மைனாக்கள் கூடு கட்டட்டும்.

காதலையும் அன்பையும் இயற்கை நேசத்தையும் இன்றைய தலைமுறையினருக்கு புதிய புதிய அர்த்தங்களிலும் வெவ்வேறு பரிமாணங்களிலும் அழுத்தமாகச் சொல்லிச் சென்ற முத்துக்குமார் இசையும் இசைப் பாடலும் உள்ள காலம்வரை உறவாடிக் கலந்திருப்பார். வாழ்வைக் கொண்டாடித் திளைக்கும் கலைக்கும் கலைஞனுக்கும் மரணமேது?

Pin It