ஒரு முறை தேர்தல் பணிக்காக லெம்பலக்குடி, எனும் ஊருக்குச் செல்ல நேரிட்டது. திருமயம் ஒன்றியத்தில் அவ்வூர் இருக்கிறது. அந்த ஊரின் பெயரைப் பார்த்ததும் தமிழ் இலக்கணத்தை என்னால் மறுதலிக்க முடியவில்லை. லெம்பலக்குடியா, இலெம்பலக்குடியா என்று. தமிழ் இலக்கணப்படி, ல -எழுத்துக்கும் முன் ‘இ’ இடம்பெற வேண்டும். லக்குமணன் - இலக்குமணன், லட்சியம் - இலட்சியம் இப்படியாக. இலெம்பலக்குடி என்றுதான் இருக்க வேண்டுமோ?, நம் தமிழ்ப்பற்றாளர்களுக்கு இந்தப் பிழை எப்படிக் கண்ணுக்குத் தெரியாமல் போனது? ஊரின் பெயர்க்காரணத்தை விசாரிக்கத் தொடங்கினேன். ஒரு பெரியவர் சொன்னார். "ஏழு அம்பலக்குடி என்பது இவ்வூரின் பெயர். மெல்ல மருவி லெம்பலக்குடி என்றாகிவிட்டது.”
தமிழில் ழ வரிசை எழுத்துகள் தமிழர்களிடம் வழக்கொழிந்து வந்திருக்கிறது, என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில், அழும்பில் என்றொரு ஊர் உண்டு. அகநானூற்றில் இடம் பெற்றுள்ள ஊர். இவ்வூரை மதுரைக்காஞ்சியும் பாடியுள்ளது. ‘மானவிறல் வேள்’ என்கிற குறுநில மன்னன் ஆண்ட பகுதி. அவ்வூரிலுள்ள ழ வரிசை எழுத்தான ‘ழு’ மக்கள் நாவில் நுழையாமல், அம்பில் என்றாகிப் போனது.
பாண்டிய ஆட்சியின் கீழிருந்த அழும்பில், பிற்காலச் சோழ ஆட்சியின் கீழ் சென்றதன் பிறகு, அவ்வூரில் ஒரு சிவன் கோவில் எழுப்பப்பட்டது. அதன்பிறகு, அவ்வூர் அழும்பில் கோவில் என அழைக்கப்பட்டு, அதுவும் மெல்லத் திரிந்து அம்பில் கோவில் என்றாகி, தற்போது அம்புக்கோவில் என அழைக்கலாகிறது. அதேபோன்றுதான், ஏழு அம்பலக் குடி என்கிற ஊர் லெம்பலக்குடியாகியிருக்கிறது.
ஏழு அம்பலக்குடி என்பது என்ன, என்று அடுத்த விசாரணையில் இறங்க வேண்டியதாகிவிட்டது. ஏழு அம்பலக்காரர்கள் இந்த ஊரை ஆண்டதாக ஒருவர் சொன்னார். இப்படியாகச் சொல்லுகையில் அவரது பின்னால் நின்றிருந்தவரின் முகம் மாறத் தொடங்கியது. அவரிடம் விசாரிக்கையில், அம்பலம் என்பது அம்பலக்காரர்கள் அல்ல, அவை, ஏழு அவைகள் கொண்ட ஊர், என்றார். இதை நான் சொன்னால் யாரும் ஏற்கப்போவதில்லை. ஏனென்றால், ‘ஏழைச்சொல் அம்பலம் ஏறாது' என்றார். இங்கு அம்பலம் என்பதன் பொருள் அவை அல்லது சபை. ஏழு அம்பலக்குடி என்பது ஏழு அம்பலத்தார்கள் ஆண்ட ஊரா, அல்லது ஏழு அவைகள் கொண்ட ஊரா, என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
அம்பலம், அம்பலப்படுத்துவர், அம்பலகாரர் இம்மூன்றும் ஒரே வேர்ச்சொல்லைக் கொண்ட வெவ்வேறு சொற்கள். அம்பலம் என்கிற சொல்லுக்குப் பொது மண்டபம் என்றொரு பொருளுண்டு. பொது இடத்தைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது. இதே சொல், சிங்களத்தில் அம்பலம என்று உள்ளது. பாதசாரிகள் ஓய்வு கொள்ளும் இடத்திற்கு அம்பலம் என்றே பெயர். மடத்தைக் குறிக்கும் சொல்லாகவும் அம்பலம் இருக்கிறது. பிற்கால சோழர், பாண்டியர்கள் காலத்திற்குப் பிறகு கிராமப்புறத்தில் நிலவரிகளை வசூலித்து குறுநில மன்னர்களிடம் வழங்கும் மணியக்காரர்கள் அம்பலம் என அழைக்கப்பட்டார்கள். இங்கு அம்பலம் என்பது கிராம மக்கள் தன் நிலத்தில் விளைவித்த தினைப் பொருட்களை, மூட்டையாகக் கட்டி, வரிகளைக் கொண்டு சேர்க்குமிடம். இந்த இடம் மழை வெயிலுக்கு ஒழுகாத கூரை வேயப்பட்ட இடமாக இருந்திருக்கிறது. அந்த இடத்தின் பெயரே அம்பலம். அந்த இடத்தில் மணியக்காரர் உட்கார்ந்து வரி வசூல்களைக் கணக்கிட்டு வாங்கியதால், அம்பலம் என அழைக்கப்பட்டார்கள். ஆனால், அதே சொல், இன்றைக்குக் குறுநில மன்னர் அளவிற்கும், ஊர் நாட்டாண்மை என்கிற அளவிற்கும் பொருள்கொள்ளப்பட்டு வருகிறது. இதே சொல் ஒரு சாதியின் பெயராகவும், மற்றொரு சாதியின் உட்சாதி பெயராகவும் திரிக்கப்பட்டு விட்டது.
அம்பலம் என்பதற்கு ஆகாயம் அல்லது வெளி என்றொரு பொருளும் உண்டு. திருச்சிற்றம்பலம், திரு+சிறு+அம்பலம் = திருச்சிற்றம்பலம். இங்கு அம்பலம் என்பது சிறிய வெளி என்று பொருள். இச்சொல் சைவத்துடன் தொடர்புடையது. தமிழ்நாட்டில் ஐம்பெரும் அம்பலங்கள் உண்டு. அவை பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம். இதன்படி பொன்னம்பலம் என்பது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். வெள்ளியம்பலம் என்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள நடராஜர் சன்னதி. இரத்தின அம்பலம் - திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேசுவரர் கோவில். தாமிர அம்பலம் - திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சித்திர அம்பலம் - குற்றாலநாதர் கோவில்.
அம்பலம் என்பது பாடுவோனின் சிறப்புப் பெயராகவும் இருந்திருக்கிறது. கவி புனையும் புலவர். உதாரணமாக, ஆதி கருநாடக மும்மூர்த்திகளில் ஒருவரான அருணாசலக் கவிராயரின் குமாரர் அம்பலவாணக் கவிராயர். இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மருதூரில் பிறந்த கவி வல்லவர். ஆதித்தபுரி புராணம் பாடியவர். இவரைத் தவிர அம்பலவாண தேசிகர் என்றொரு கவிராயர் இருந்திருக்கிறார். இவரது காலத்தையொட்டிய யாழ்ப்பாணத்து வித்வான்களில் ஒருவரான அம்பலவாண பண்டிதர், யாழ்ப்பாண தமிழ்ப் புலவர்களில் முக்கியமானவர்.
பள்ளி, அம்பலம், மன்றம், திண்ணை, இவை நான்கும் வெவ்வேறு காலத்துடன் தொடர்புடைய பாதசாரிகள் தங்கிச் செல்லும் இடத்தைக் குறிக்கும் சொற்கள். பள்ளி என்பது சமண சமயத்துடன் தொடர்புடையது. அம்பலம் என்பது சைவம். மன்றம் சங்ககாலச் சொல். திண்ணை பிற்பகுதிக் காலம்.
லெம்பலக்குடி என்கிற ஊர் சைவ புராதன அடையாளங்கள் கொண்ட ஊராக இருந்திருக்கிறது. இதைக்கொண்டு பார்க்கையில் அம்பலம் என்பது அவை அதாவது ஏழு அவைகள் கொண்ட ஊர் எனப் புரிந்துகொள்ள முடிந்தது.
கல்லாக்கோட்டை பெயர்க்காரணம்
புதுக்கோட்டையில் மரங்களானவன், என்றொரு வனத்துறை அதிகாரி இருந்தார். அவரது இயற்பெயர் என்னவோ? எந்நேரமும் மரங்கள் பற்றியே பேசுவார். கவிஞரும் கூட. அவர் எழுதும் கவிதைகள் மரங்களைக் குறித்ததாக இருக்கும். மரங்களைத் தான் பெற்ற குழந்தையாகவும், தன்னைப் பெற்ற தாயாகவும் பாவிப்பவர். ஒரு நாள் கேட்டார், "கல்லாக்கோட்டைக்கு ஏன் கல்லாக்கோட்டை என்று பெயர்?" கற்களினாலான கோட்டை என்பதால் அப்படியொரு பெயர், என்றேன். இல்லை, என மறுத்துவிட்டார்.
மரங்கள் குறித்து பேசச் சொன்னால் நாள் கணக்கில் பேசக்கூடியவர். முருங்கைப் போத்து, முருங்கை விதை இரண்டினால் உருவாகும் மரத்தில் எதற்கு ஆயுள் அதிகம்? ஒரு போத்திலிருந்து வளரும் ஒரு கன்று, அந்த மூலமரம் வாழ்ந்தது போக மிச்ச ஆண்டுகளே வாழும். விதையின் மூலமாக வளரும் மரம் மொத்த ஆயுளும் வாழும் என்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்பு மரங்கள்தான், என்பது இவரது கண்டுபிடிப்பு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து நிலங்களையும் கொண்ட நிலப்பகுதி என்பதால் எல்லா வகை மரங்களும் இங்கே உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பான்மை ஊர்கள் மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள் என்றார். அவர் புதுக்கோட்டை உசிலங்குளத்தில் வாடகை வீடெடுத்துத் தங்கியிருந்தார். அந்தக் குடியிருப்பு பெயர்க்காரணம் குறித்து இவ்வாறு சொன்னார். உசிலம் இலையின் சாறுடன் உவர்மண்ணைச் சேர்த்தால் நுரை வரும். நம் முன்னோர்களின் சோப்பு இந்த உசிலம் இலைதான். இதனை அரப்பு மரம் என்றும் சொல்வார்கள், என்றார்.
புதுக்கோட்டை மரங்கள் குறித்துப் பேசுகையில், கவியோகி சுத்தானந்த பாரதியாரைத் தவிர்த்துவிட்டு பேச முடியாது. அவரது பிறப்பிடம் சிவகங்கையாக இருக்கலாம். பெரும்பகுதி நாட்களை சமஸ்தான புதுக்கோட்டையில் கழித்தவர். தமிழர் முன்னேற்றத்திற்கு தவம் புரிந்த பெரியார். அவர் அருளிய நூல்களில் மிகச் சிறந்த ஒன்று ‘தமிழர் உணர்ச்சி' இந்நூல் வெளியாகி அன்றைய வாசகர் பரப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு புதுக்கோட்டை இராமச்சந்திரபுரத்தில் இயங்கிய கார்த்திகேயினி பிரசுரம் அச்சில் வெளியானது. வெளியான ஆண்டு, அக்டோபர் 22, 1947. இந்நூலில் புதுக்கோட்டையைத் தனித்தமிழரசு எனக் குறிப்பிடும் இவர், புதுக்கோட்டை, பாண்டிய நாட்டிற்கும் புனல் நாட்டிற்கும் இடையில் இருக்கிறது என்கிறார். இவர் குறிப்பிடுவதைக் கொண்டு பார்க்கையில் புனல் நாடு என்பது சோழநாடு. குறிப்பாக கீழ்த்தஞ்சை. புனல் என்பதற்கு நீர் என்று பொருள். சோழநாடு பொன்னி நீரால் சூழ்ந்த பகுதி. ஆனால் சுத்தானந்த பாரதியார் அதை சோழநாடு என்று சொல்லாமல் புனல்நாடு என்று சொன்னதன் காரணத்தை ஆராயாமல் இருக்க முடியவில்லை. இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு எல்லை ஆனைவிழுந்தான்கேணி. தஞ்சை மாவட்டம் வல்லம் நகரத்தையொட்டி இவ்வூர் உள்ளது. இந்த ஊர்களைப் பற்றி முத்தன் பள்ளம் நாவலில் சொல்லப்பட்டுள்ளது. ஆனைவிழுந்தான் என்றால் ஆனைகளைப் பழக்கும் இடம் என்று பொருள். ஆனைகளைப் பள்ளத்திற்குள் விரட்டி, அதன் கோபத்தைத் தணித்து, மனிதன் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் இடம் என்றும் பொருள் கொள்ளலாம். தமிழகத்தின் வட பகுதி விஜயநகரப் பேரரசு. சோழர் ஆட்சிக்காலத்திற்குப் பிந்தைய ஆட்சிப்பகுதி இது. புதுக்கோட்டை மன்னர்கள் அங்கேயிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களே!
ஆனைகள் பெருத்த காடு விஜயநகர காடுகள். பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்களுக்கு யானைகள் பெரிதும் தேவைப்பட்டன. இதற்காக தஞ்சைப் பகுதியிலிருந்து தெலுங்கு பகுதிக்குச் செல்லும் வீரர்கள் அங்கேயிருந்து கையில் பெரிய தீப்பந்தம்கொண்டு தென்கிழக்கு நோக்கி யானைகளை விரட்டிக்கொண்டு வருவார்கள். மேய்ச்சலாக ஓட்டிவரும் அவர்கள் தற்போது ஆனைவிழுந்தான்கேணி என்று அழைக்கப்படும் இவ்வூர் அன்று வெறும் காடாக இருந்திருக்கிறது. அதற்குள் பெரிய பள்ளம் வெட்டி, அதை மரம், செடி, கொடிகள் கொண்டு மூடி அதற்குள் யானையை இறக்கி, அதன் கோபத்தைத் தணித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் இடமாக இருந்திருக்கிறது. முதலில் ஆனைவிழுந்தான்பள்ளம் என அழைக்கப்பட்ட அவ்வூர் பிறகு ஆனைவிழுந்தான்கேணி என்பதாக மாறி இப்போது ஆனைநகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இதுவே முத்தன்பள்ளம் நாவலில் சோழர், பாண்டியர்களுக்கு இடையிலான போரில் முத்தரையர்கள் பாண்டியர்களுக்கு ஆதரவாகவும் பல்லவர்கள் சோழர்களுக்கு ஆதரவாகவும் கைகோர்த்துப் போர் புரிந்தார்கள். பாண்டியர்கள் யானைகளை மதம் பிடிக்க வைத்து சோழர்படைகள் மீது ஏவினார்கள். அதிலொரு ஆனை பள்ளத்திற்குள் விழுந்துவிட அந்த இடம் ஆனைவிழுந்தான்பள்ளம், என அழைக்கப்பட்டது. பிறகு அவ்வூர் ஆனைவிழுந்தான்கேணி என்பதாக மாறியது. மஞ்சப்பேட்டை எனும் ஊராட்சி கிராமத்தின் உள்ளடங்கிய கிராமம். புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு எல்லை.
புனல் நாடு என்பது புனல்குளமா?
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் இரண்டு பேட்டைகள் உண்டு. ஒன்று மஞ்சப்பேட்டை. மற்றொன்று சொக்கம்பேட்டை. சொக்கம்பேட்டை ஊர்க் காரணம் பற்றி விசாரிக்கையில், சொக்கம்பட்டி என்பதை இளைஞர்கள் சொக்கம்பேட்டை எனத் திட்டமிட்டு மாற்றியதாகச் சொல்கிறார்கள். ஊர் ஆவணங்களில் சிலவற்றில் சொக்கம்பட்டி என்றே உள்ளது. மஞ்சம்பேட்டை தஞ்சாவூரையொட்டியுள்ள கிராமம். சொறிக்கான் கல் பூமி. விவசாய நிலங்கள் இல்லாத கிராமம். இந்த ஊர் ஒரு காலத்தில் வல்லம் சிற்றரசர் ஆளுகையின் கீழ் இருந்திருக்கிறது. வல்லம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகள் காவிரி பாசனப்பகுதிகள். விவசாயக்கருவிகளான தொரப்பணம், ஒலக்கடம், பாதாள கொரடு, கோடாரி, கொந்தாளி, மூலை அரம், ஒற்றை வாள், சொரட்ட, களைக்கொட்டு, கொடுவா, காடி உளி, தச்சுளி, குத்தூசி, கொட்டாபுளி, கூட்டான், கலப்பை, கமலை, தொரடு, கவகோல், அரிவாள், கத்தி, பாரை, சுத்தியல், கருக்கருவாள்,மண்வெட்டி, உலகாரம்...போன்ற கருவிகள் துவைத்தும், அடித்தும் கொடுக்கும் இடமாக மஞ்சப்பேட்டை கிராமம் இருந்திருக்கிறது.
மஞ்சப்பேட்டை கிராமத்தையொட்டியுள்ள மற்றொரு கிராமம் புனல்குளம். இந்த ஊருக்குப் பல சிறப்புகள் உண்டு. திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியின் மேனாள் உறுப்பினர் பொன்.குமார் இந்த ஊர்க்காரர். கந்தர்வகோட்டை தொகுதியின் இன்றைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த எம். சின்னத்துரை இந்த ஊரில் பிறந்தவரே.
அந்த ஊரிலிருந்து மூன்று இலக்கிய பத்திரிகைகள் பிறந்திருக்கின்றன. தமிழ் உத்தம் சிங், புனைபெயர் கொண்ட அறிவழகன் எனும் இயற்பெயர் கொண்ட இவர் வழக்கறிஞர். ‘என் யோனியைக் கேட்கிறார்கள்' எனும் இவரது கவிதைத் தொகுப்பு பெரும்சர்ச்சைக்கு உள்ளானது. இவர் ஈரநிலம், சயின்ஸ், பகல் என்று மூன்று இதழ்கள் நடத்தியுள்ளார். மூன்றும் கம்யூனிச சித்தாந்தங்கள் கொண்ட பத்திரிகைகள். இதுதவிர மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்.
சரி, ஊர்ப்பெயருக்கு வருவோம். புனல்குளம் என்றால் நீர்க்குளம் என்று பொருள். இவ்வூர் பற்றி விசாரிக்கையில் நீரினாலான குளம் என்பதாக காரணம் சொன்னார்கள். இங்கு, புனல்குளத்தைப் புனல் நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்க இடமிருக்கிறது. புனல்நாடு என்று சொல்லக்கூடிய கீழ்த்தஞ்சை பகுதியிலிருந்து குடியேறியவர்கள். புனல்நாடு என்பது பொன்னி நதியின் கழிமுகம். சுற்றிலும் பொன்னி ஆற்றினால் சூழப்பட்ட நாடு.
அந்நாட்டிலிருந்து சில குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு வறட்சியான மானாவாரி இடத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் குடியேறிய இடத்தில் ஒரு குளத்தை வெட்டி, குளம் வெட்டிய மண்ணைக்கொண்டு மேடமைத்து, அதில் வாழிடத்தை அமைத்துக்கொண்டார்கள். புனல் நாட்டினர் வெட்டிய குளம் புனல்குளம். இவ்வூருக்கும் நேர் கிழக்கில் முதுகுளம் என்றொரு ஊர் உள்ளது. இவர்கள் புனல்குளத்து மக்கள் குடியேறுவதற்கு முன்பே குடியேறி விட்டவர்கள். மிகவும் செழிப்பான நிலப்பகுதி இது. பனிரெண்டு மாதங்களும் வேளாண்மை நடைபெறும் மண். கிராம ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள கிராமம். கிராம ஒப்பந்தம் என்றால் ஊரில் ஆடுகள் வளர்க்கக்கூடாது என்கிற கட்டுப்பாடுகளைக் கொண்டது. சித்த வைத்தியத்திற்குத் தேவையான வேர், இலை, செடிகள் இங்கேயிருந்து சேகரிக்கப்படுகின்றன.
ஊர்க் குடியேற்றத்தில் முதுகுளம் முந்தியது. புனல்குளம் பிந்தியது. இவ்விரு ஊர்களுக்குமிடையில் தெத்துவாசல்பட்டி என்றொரு கிராமம் உள்ளது. தெற்குவாசல்பட்டி என்பதுதான் தெத்துவாசல்பட்டி என்றானது. சோழர், நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தென் எல்லையாக இருந்த ஊர் இது. புனல்குளம், தெத்துவாசல்பட்டி, அரியாணிப்பட்டி, மெய்க்குடிப்பட்டி, புதுநகர் ஆகிய ஊரார்கள் தங்களைப் புனல்நாட்டார் என்று அழைத்துக் கொள்கிறவர்கள்.
புதுக்கோட்டை புதுவை என்று அழைக்கப்பட்டதா?
கவியோகி சுத்தானந்த பாரதியார் குறிப்பிடும் புனல்நாடு என்பது சோழநாடா, இன்றைய புனல்குளம், தெற்குவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, ஆனைவிழுந்தான் கேணி கிராமங்களை உள்ளடங்கிய புனல்நாடா, என்பது விவாதத்திற்குரியது. புதுக்கோட்டையின் வட எல்லை புனல் நாடு என்று குறிப்பிடும் சுத்தானந்த பாரதி, மற்ற விடயங்கள் குறித்துப் பேசுகையில் சோழ நாடு என்று குறிப்பிட்டுப் பேசுகிறார். மேலும் சுத்தானந்த பாரதி, தன் நூலில் புதுக்கோட்டை குறித்து இவ்வாறு பதிவு செய்துள்ளார். இப்பதிவு சமஸ்தான காலத்தின் இறுதி காலக்கட்டமாகும்.
புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி, தஞ்சை, இராமநாதபுரம் ஜில்லாக்களால் சூழப்பட்டு 1178 சதுர மைல் எல்லைகளாகக் கொண்டது. தெற்கு வடக்காக 41 மைல் தூரம். கிழக்கு மேற்காக 52 மைல்கள். இதில் ஆலங்குடி, திருமயம், குளத்தூர் என மூன்று தாலுகாக்கள். வேழ மலையில் பிறந்து மணமேல்குடி வங்கக் கடலில் கலக்கும் வெள்ளாறு சமஸ்தானத்தின் மிக முக்கிய ஆறு. இதன் நீளம் 85 மைல். இதுதவிர குண்டாறு, பாம்பாறு, அக்னியாறு, உய்யக்கொண்டான் ஆறு, அம்புலியாறு, கோவையாறு, சூரையாறு,..ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.
புதுக்கோட்டை இன்று புதுகை என சுருங்கிய பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சுத்தானந்த பாரதி தன் நூலில் பல இடங்களில் புதுவை எனக் குறிப்பிட்டு எழுதுகிறார். பாண்டிச்சேரி சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் பிறகு அவ்வூர் புதுவை என அழைக்கத் தொடங்க, புதுக்கோட்டை புதுகை என்பதாக வேறுபடுத்தி அழைத்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
சுத்தானந்த பாரதி குறிப்பிடும் புதுவை என்கிற புதுக்கோட்டை எட்டில் ஒரு பங்கு காடுகளாலான நிலம். இவரது கணக்கின்படி அறுபது காடுகள் இங்கு இருந்துள்ளன. இவற்றில் பெரியவளைக்காடு, சின்னவளைக்காடு, வாராப்பூர், சங்கிலியான்கோட்டை காடுகள் முக்கியமானவை. மேலும் இந்நிலம் பற்றி குறிப்பிடும் இவர், புதுவை வெப்பமான பகுதி. சித்திரை, வைகாசி மாதங்களில் அதாவது அக்னி நட்சத்திரம் மாதக் காலங்களில் 106 தி வெப்பமும்; குளிர்காலத்தில் 60 - 70 தி அளவிலும் இருந்திருக்கிறது. புதுவை வானங்காத்த பூமி. இதன் மழையளவு சுமார் 35 அங்குலம். புதுவையில் மா, பலா மரங்கள் அதிகம் விளைந்துள்ளன.
இதுதவிர ஆல், அரசு, தென்னை, ஈச்சை, பனை, இச்சி, இலந்தை, நாவல், பூவரசு, மாதுளை, முருங்கை, மூங்கில், வாகை, வாதா, வில்வம், விளா, பாலை, இத்தி, உசிலை, உடைவேல், குருந்தை, சூறை, நெய்க்கொட்டான், புலவு, சவுக்கு, வெப்பாலை மரங்கள் அதிகம் விளைந்திருக்கின்றன.
கோவிற்தோப்புகள்
எஸ்.கார்த்திகேயன், புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மாணவர் பாண்டிச்சேரி இளம் ஆய்வாளர் எ.சி.தங்கவேலு உடன் இணைந்து களப்பணியாற்றி எழுதிய நூல் JOURNEY THROUGH SACRED GROVES (கோவிற்தோப்புகளினூடே ஒரு பயணம் ).
இந்தியாவின் முதல் வன அதிகாரியாக பிராண்டிஸ் (1897) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் மெட்ராஸ் மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, அம்மாகாணத்தில் உள்ளடங்கியிருந்த சேலம் மாவட்டத்திலுள்ள கோவிற்தோப்புகளைக் (கோவிற்பத்தை - கோவிற்சிட்டே) கணக்கெடுக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் நீட்சியாக மாகாணத்திற்குட்பட்ட மற்ற மாவட்டங்கள் புதுக்கோட்டை சமஸ்தான கோவிற்தோப்புகளைக் கணக்கெடுத்தார். இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியாக 238 கோவிற்தோப்புகள்; பெரம்பலூர் (63), திருவண்ணாமலை(47), விழுப்புரம் (34), திருச்சிராப்பள்ளி (33), தர்மபுரி (32), நீலகிரி (32), கடலூர் (31), சேலம் (24), ஈரோடு (21), நாமக்கல் (20), ராமநாதபுரம் (17), வேலூர் (16), தேனி (13), திருநெல்வேலி (12), நாகப்பட்டினம் (11), கோயம்புத்தூர் (9), கரூர் (8), காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்கள் தலா 6, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 5, மதுரை (4), திருவள்ளூர், திருவாரூர் தலா 3 கோவிற்தோப்புகளும் இருந்தன. புதுக்கோட்டையில் இதன் எண்ணிக்கை 51 ஆக இருந்துள்ளன.
இவர்களுக்கும் முன்னதாக அமிர்தலிங்கம் என்கிற ஆய்வு மாணவர் 2005 ஆம் ஆண்டு புதுக்கோட்டையிலுள்ள புதர்காடுகளைக் கணக்கெடுத்துள்ளார். அவரது எண்ணிக்கை இருபத்து எட்டாக இருந்துள்ளது. ஆனால் எஸ். கார்த்திகேயன், எ.எஸ்.தங்கவேலு இருவரும் ஐம்பத்தொன்று கோவிற்தோப்புகளையும் கண்டுபிடித்து அதிலுள்ள குலதெய்வங்களைப் பட்டியலிட்டுள்ளார்கள். இதன்படி காளி, முனீஸ்வரர், முன்னடியான், கருப்பு, வீரனார், மதுரை வீரன்,.. ஆகிய தெய்வங்கள் குலதெய்வ வழிபாட்டின் முதன்மையான தெய்வங்களாக இருப்பதைக் கண்டறிந்தார்கள். இவர்கள் கண்டறிந்த பெரும்பாலான கோவிற்காடுகள் குளம், குட்டை, ஏரிக் கரைகளில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் கண்டறிந்த மரம், செடி, கொடிகள் மருத்துவ மூலிகைகளாக இருந்திருக்கின்றன.
பழைய ஆதனக்கோட்டை முனீஸ்வரர் கோவில், ஆதனக்கோட்டை அய்யனார், ஆதனக்கோட்டை கருப்பர், அம்மன்பேட்டை அய்யனார், அரசந்தன்பட்டி உருமையா, அரியூர் மச்சமுனி, ஆத்திரிப்பட்டி சுனலியம்மன், எரிச்சி மெய்யர் அய்யனார், இலைகடிவிடுதி வடுவச்சி அம்மன், கம்மங்காடு ஈருகாளி, கரம்பக்குடி முத்துக்கருப்பையா, ஈழக்குறிச்சி அடைக்கலங்காத்த அய்யனார், கீழக்குறிச்சி அய்யனார், மேலக்கீழக்குறிச்சி அய்யனார், கீழக்குறிச்சி கருப்பர், கீழக்குறிச்சி சூத்திக்காரன், கீழக்கிறிச்சி வெட்டிக்கருப்பர், கெண்டையன்பட்டி கருப்பர், கெண்டையன்பட்டி முனீஸ்வரர், கூத்தினிப்பட்டி சிங்கன்பட்டி அய்யனார், லெட்சுமிபுரம் முனீஸ்வரர், மாந்தக்குடி முனீஸ்வரர், மங்களத்துப்பட்டி உருமநாதர், மலையூர் கருப்பர், மலையூர் முனீஸ்வரர், மலையூர் செம்முனி, மலையூர் உருமநாதர், மேலவாண்டான்விடுதி அம்மாயாண்டி, மேலவாண்டான்விடுதி பொங்கமனை, மேல்மலையூர் கருப்பர், நார்த்தாமலை அய்யனார், நவுளிக்காடு அய்யனார், பஞ்சாதி கதமாரவர்காளி, பெருங்களூர் பிரம்மர், பெருங்களூர் உருமநாதர், பொற்பனைக்கோட்டை கீழக்கோட்டை அத்திமுனீஸ்வரர், பொற்பனைக்கோட்டை மேலக்கோட்டைமுனீஸ்வரர், பொற்பனைக்கோட்டை தெற்கு அய்யனார், பொற்பனைக்கோட்டை வடக்குக்காளி, புதுப்பட்டி பம்மையா, ரெங்கநாயகிபுரம் குதிஅய்யனார், சொக்கநாதன்பட்டி திருமலைஆண்டவர், திருக்கோகர்ணம் மாலையக்கருப்பர், துவார் முனீஸ்வரர், வாராப்பூர் பாலடிகருப்பர், வடசேரிப்பட்டி காளி, வடசேரிப்பட்டி பட்டவன், வீப்பங்குடி மலையாளத்துமுனி, வீரப்பங்குடி மெய்யம்மா ஆகிய புதர்காட்டுக் கோவிலைக் கணக்கெடுத்தார்கள். மேலும் இக்காட்டிலுள்ள மரங்களைப் பட்டியலிட்டார்கள்.
புதுக்கோட்டை தாவரங்கள்
புதுக்கோட்டையில் ஐநூற்று நாற்பது தாவர இனங்கள் உள்ளதாக ஆவணக் குறிப்பு குறிப்பிடுகிறது. எஸ். கார்த்திகேயன், தங்கவேலு இருவரும் 262 தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார்கள். இதன்படி, குண்டுமணி, துத்தி, கருவேலம், வெள்வேலம், குப்பைமேனி, முள்ளுக்கீரை, கல்பாசி, வில்வம், பூலாப்பூ, தக்கசெடி, கத்தாழை, மூக்குத்திப்பூ, சொக்களா, அழிஞ்சள், துறிஞ்சமரம், வாகை, சோற்றுக்கற்றாழை, பொன்னாங்கன்னி, பூண்டுச்செடி, முந்திரி, சேத்துப்புண்தழை, பேய்மிரட்டி, ஒட்டந்தழை, பூண்டுச்செடி, ஊம்முள், கருடகொடி, தண்ணீர்விட்டான் கிழங்கு, காட்டு எலுமிச்சை, குருந்து, மனோரஞ்சிதம், வேம்பு, சங்கமுள்ளு, நீர்பிரம்மி, மூங்கில், கண்ணுக்காட்டிமுள், காட்டுகனகாம்பரம், ஆத்தி, காரை, நேத்திரப்பூண்டு, மூக்கரட்டை, இலவம், பனை, முள்வேங்கை, மரம்நெல்லி, புரசு, விழுதி, எருக்கு, மலைக்கொழிஞ்சி, தொரட்டிமரம், சிறுவள்ளி, கள்ளிமுடையான், முடக்கத்தான், கிளா, குரங்குவெத்தலை, மூள்கிளா, அரளி, ஆவாரம், மஞ்சள், கொன்றை, ஊசி தகரை, தகரை, கீரிமரம், கொத்தன், நித்யகல்யாணி, மரக்கீரை, சிறுவல்லிக்கொடி, வல்லாரை, சப்பாத்திக்கள்ளி, பெருங்கொடி, கல்பாசி, பொற்ச்ச, முத்தாம் கொடி, புளிக்கீரை, பிரண்டை, பேய்குமட்டி, காட்டுகருவேப்பில்லை, ஒடுகன்தழை, நாய்வேளை, பீசங்கு, கோவை, சிறுவெட்டுகொடி, தென்னை, செறுப்படை, வறகா, கானாவாழை, கிளுவை, வீழிமரம், கூந்தல்பனை, நாகலிங்கம், மாவிளங்கம், கனகாம்பரம், ரயில்பூண்டு, நிலப்பனை, புல்லுருவி, புளி, அரைக்கொடி, எலுமிச்சைப்புல், அருகம்புல், கோரை, ஊமத்தை, கருஊமத்தை, வாதநாராயணன், வெப்பங்கொடி, விடதரன், வெத்திலை, வள்ளிகிழங்கு, கருந்தும்பிலி, வீரிபருத்தி, இரும்பாளி, வக்கனை, விராலி, அழுகன்னி, வீரமரம், கரிசலாங்கண்ணி, கல்விரசு, கோரை, கல்யாணமுருங்கை, செம்புலிச்சான், மலைநாவல், திருக்கள்ளி, அம்மான்பச்சரிசி, கொடிக்கள்ளி, திருக்குகள்ளி, விஷ்ணு கிரந்தி, ஆலமரம், அத்தி, அரசமரம், வெள்ளைபுலா, கம்பளிமரம், சிறுசெருப்படை, கண்வலிப்பூ, காட்டுகருவேப்பிலை, வாடாமல்லி, சடச்சி,
சிறுகுறிஞ்சான், தனுக்கு, இன்பூரல், தேள்கொடுக்கு, நன்னாரி, எலிக்காது இலை, சிறுபுளிச்சை, குறுக்கத்திக்கொடி, ஆவிமரம், மோதிரக்கண்ணி, ஓரிதழ்தாமரை, கருஞ்சடைச்சி, பறைவல்லிக்கொடி, சிவனார்வேம்பு, நீலி, கோபுரந்தாங்கி, ஓணாங்கொடி, கொருவி, காட்டுமல்லி, காட்டாமணக்கு, ஆடாதொடை, கருந்தும்பை, சிறுசின்னி, தவசிமுருங்கை, ஒதியம், மருதாணி, தேன்தும்பை, மணிபுங்கன், பாலைக்கொடி, தும்பை, சவுண்டல், வெண்தேக்கு, இலுப்பை, கபிலப்பொடி, மாமரம், பாலாமரம், புலியரை, வெட்டாலை, காயா, எலிக்காதுசெடி, கருநானா, இண்டுமுள், மகிழமரம், கடம்பமரம், பற்பாடகம், நுணா, பூனைக்காலி, ஆக்கனா, நாய்துளசி, துளசி, காட்டுபவளம், சப்பாத்திக்கள்ளி, காட்டுத்துளசி, தாழைமரம், பாவட்டை, மம்மட்டி, யானைநெருஞ்சி, வேலிப்பருத்தி, ஈச்சம், சிறுஈச்சம், கிழாநெல்லி, மலநெல்லி, திப்பிலி, முள்ளுமரம், கொடுக்காப்புளி, எக்கிமரம், மலைநாரத்தை, கீறிமரம், சித்திரமூளம், புங்கன், மின்னை, பாய்முல்லை, வேலிக்கருவை, வன்னிமரம், இண்டமுள்ளு, செம்பொழவு, வடலைக்கொடி, முன்னி, முசட்டக்கீரை, வெடிக்காய், மருள், மணிபுங்கன், கள்ளிக்கொடி, தொரட்டிமுள்ளு, வெள்ளைபூலா, சீமைஅகத்தி, அரிவாள்மனைப்பூண்டு, பழம்பாசி, நிளதுத்தி, கண்டங்கத்தரி, சுண்டை, நமகொடி, நத்தைச்சூரி, கொட்டக்கரந்தை, காட்டுமா, புறாமரம், சிறுசெடி, எட்டி, நாவல், காட்டுச்சுருளி, புளி, தெரணி, பூவரசு, பெருகட்டுகொடி, சீந்தில், மிளகரணை, நெருஞ்சி, வீராமரம், தாத்தாதலைவெட்டிப் பூ, நஞ்சறுப்பான், பூச்சிச்செடி, வேம்படன், ஜிம்க்கிபூ, மரஒட்டி, நொச்சி, காட்டுசிறுவேலம், பெருகுறிஞ்சான், வெப்பாலை, இலந்தை, கர்கொடி, சூரமுள், கொட்டைஇலந்தை, மேலம்மரி ஆகிய தாவரங்கள் புதுக்கோட்டையிலுள்ள ஐம்பத்தொன்று கோவிற்தோப்புகளில் உள்ளன. இவற்றில் இருபத்து ஐந்து வகை பாம்புகளும் நாற்பத்தைந்து பறவை வகைகளும் உள்ளன.
புதுக்கோட்டை கிராமங்களும் பெயர்களும்
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஊர்களில் பல மரங்களின் பெயரைக் கொண்டு பிறந்தவை, என்கிறது 'புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று ஆவணக்குழு செய்தி மலர்' மரம், செடி, கொடிகளின் பெயரைக் குறிப்பிட்டு அதிலிருந்து பிறந்த ஊர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. இதன்படி அறந்தாங்கி என்பது அதாங்கி என்கிற மரத்தைக் கொண்டு பிறந்தது. வள்ளிக்கீரையைக் கொண்டு வள்ளிக்காடு. பலா மரத்தைக் கொண்டு பிலாவிடுதி. குருந்து - குருந்தடிமனை, குருந்தம்பட்டி, முருங்கை - முருங்கைகொல்லை, இரும்புளி - இரும்பாளி, ஓணான்குடி, சூறை மரங்களைக் கொண்டு உருவான ஊர் சூறக்காடு. பிறகு இது சூரக்காடு என்றான். பிலா மரங்களைக் கொண்டு பிலாவிடுதி. இரும்புளி - இரும்பாளி, ஓணான்கொடி - ஓணான்குடி, இலுப்பை - இலுப்பூர், காட்டுமாவு - கட்டுமாவடி, கொக்கிமுள்ளு - கொக்குமுட்டை, கொத்தமரம் - கொத்தமங்கலம், கொன்னை - கொன்னையூர், ஆட்டான்குடி - ஆத்தங்குடி, விராலி - விராலிமலை, விராலிப்பட்டி, காரை - காரையூர், முள்ளுக்கடம்பு - முள்ளுக்குண்டு, பூவம் - பூவம்பட்டி, செங்காரை - செங்கீரை, வேலா - வேலாவயல், வேலாடிப்பட்டி, உசிலை, உசிலம்பட்டி, முள்ளி - முள்ளிக்காய்ப்பட்டி, கீளாங்காய் - கிளாங்காடு, கூரைப்புல் - கூகைப்புலிக்குடி, சூரைக்கொடி - சூரைக்காடு, கடுக்காய் - கடுக்காய்க்காடு, கன்னி - கன்னியாங்கொல்லை, பேய்மிரட்டி - பேயாடிப்பட்டி, மஞ்சள்துத்தி - மஞ்சள்கரை, முருங்கை - முருங்கைக்கொல்லை, குருந்து - குருந்தடிமனை, குருந்தம்பட்டி, வள்ளிக்கீரை - வள்ளிக்காடு, சூரைக்கொடி - சூரன்விடுதி, ஆலமரம் - ஆலங்காடு, புளிச்சை - புளிச்சங்காடு, மல்லிகை - மல்லிகைநத்தம், மாணியம்பூண்டு - மணியம்பள்ளம், தினை - தினைக்குளம், கத்திரி - கத்திரிக்காடு, புங்கம் - புங்கம்காட்டுப்பட்டி, செந்தட்டி - செந்தட்டிப்பனை, முல்லை - முல்லையூர், நாவல், நாவலிங்கக்காடு, காட்டுநாவல், சீத்தா - சீத்தாபட்டி, எருக்கு - எருக்கலைக்கோட்டை, அத்தடலி - அத்தாணி, ஆடாலி - ஆடலை, பூவத்தி - பூவத்தக்குடி, கம்பு - கம்பங்காடு, பனை - மேற்பனைக்காடு, சுரக்காய் - சுரக்காய்ப்பட்டி, முள்ளிச்செடி - முள்ளிப்பட்டி, முள்ளிக்காய்ப்பட்டி, நெருஞ்சி - நெரிஞ்சிக்குடி, ஈச்சமரம் - ஈச்சம்பட்டி, வாகை - வாகவாசல், புளி - புளிவயல், கடம்பன் - கடம்பவயல், பின்னை - பின்னங்குடி, கொள்ளு - கொள்ளுத்திடல், அடம்பை - அடம்பூர், எட்டி - எட்டிச்சேரி. மேலும் விலங்கு, பறவை, மண், மேடு இவற்றைக் கொண்டு உருவான ஊர்களும் புதுக்கோட்டையில் உண்டு.
மரங்களானவன் என்கிற அதிகாரியை நீண்ட ஆண்டுகள் கழித்து சந்திக்க நேரிட்டது. அவரிடம் கேட்டேன். கல்லாக்கோட்டைக்கு அதன் பெயர் எதனால் வந்தது? கோட்டையைக் கொண்டுதானே அப்பெயர் வந்திருக்க வேண்டும், என்று. அதற்கு அவர், நானும்கூட முதலில் அப்படியாகத்தான் நினைத்தேன். புதுக்கோட்டையில் கல்கோட்டை என்றொரு மரம் உண்டு. இதன் தாவரவியல் பெயர் Gardenia Latifolia. இந்த மரத்தின் பொதுப்பெயர் கும்பை. அது வளர்ந்து படர்ந்தால் கோட்டையைப் போலிருக்கும். அதன் கிளைகள் கல் போன்று உறுதியாக இருக்கும். இந்த மரங்கள் விளைந்து நின்ற நிலமாக அப்பகுதி இருந்திருக்கிறது. அந்த மரத்தைக்கொண்டு அழைக்கப்பட்ட ஊர் கல்லாக்கோட்டை, என்றார். இதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு புதுக்கோட்டை ஸ்டேட் ஆவணத்தைத் தேடுகையில் கல்கோட்டை என்கிற பெயரில் ஒரு மரம் இருப்பதும் அதன் பெயரால் கல்லாக்கோட்டை அழைக்கப்படுவதும் உறுதியானது.
- அண்டனூர் சுரா