நான் எழுத நினைத்த காந்திய ஆளுமைகளின் வரிசையில் ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஒருவர். அவரைப் பற்றிய தகவல்களுக்காக ஓராண்டாகத் தேடிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல நான் சந்திக்கும் அனைவரிடமும் அவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி வைத்தேன்.
ஒருநாள் என் சென்னை நண்பரொருவர் ஆக்கூரார் எழுதிய சுயசரிதையை தன் இளம்வயதில் படித்திருப்பதாகவும் அந்தப் புத்தகம் சமீபத்திய வெள்ளத்தில் நனைந்து கிழிந்துவிட்டதாகவும் சொன்னார். அதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் புத்தகத்தின் பெயரோ, அதில் படித்த தகவல்களோ எதுவுமே அவருக்கு நினைவிலில்லை.
அவருடைய சுயசரிதை தமிழில் வெளிவந்திருக்கிறது என்னும் உறுதியான தகவலே என்னுடைய தேடலின் வேகத்தை இன்னும் அதிகமாக்கியது. மற்றொரு நண்பர் வழியாக அந்தச் சுயசரிதையின் பெயர் ‘அரசியல் நினைவு அலைகள்’ என்பதும் அது அறுபதுகளில் தினமணி சுடரில் தொடராக வெளிவந்தது என்பதும் தெரியவந்தது.
இன்னொரு நண்பர் அந்தப் புத்தகத்தை கோவையைச் சேர்ந்த மெர்க்குரி புத்தகநிலையம் வெளியிட்டதாக தன் நினைவிலிருந்து சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் புத்தகத்தை நெருங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. கடைசியில் சர்வோதயம் பேசுகிறது இதழின் ஆசிரியரான திரு.நடராஜன் காந்திய அருங்காட்சியக நூலகத்திலிருந்து அப்புத்தகத்தை எனக்காகத் தேடி எடுத்து அனுப்பிவைத்தார்.
ஒரே அமர்வில் அந்தச் சுயசரிதையைப் படித்து முடித்தேன். தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்த பிறகே ஆக்கூர் அனந்தாச்சாரி அந்தத் தொடரை எழுதியிருக்கிறார்.
உயிர் பிரிவதற்கு முன்னால் தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதிமுடித்துவிட வேண்டும் என்று பதற்றமுடன் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அவர் அஞ்சியபடியே விதி அவரை மரணத்தில் தள்ளிவிட்டது. தொடரில் எழுதிய பகுதிகள் நூல்வடிவம் பெறும் முன்பேயே அவர் மறைந்துவிட்டார்.
அந்த நூலின் வழியாக ஆக்கூர் அனந்தாச்சாரியார் மேலும் சில நூல்களை எழுதியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக டால்ஸ்டாய் சரிதம். அத்தகவல் எனக்கு ஆர்வமூட்டியது.
மீண்டும் திரு.நடராஜன் அவர்களைத் தொடர்புகொண்டு அப்புத்தகத்தைப் பெற்று படித்துமுடித்தேன். திரு.வி.க முன்னுரையோடு அப்புத்தகம் 1934இல் வெளிவந்தது. டால்ஸ்டாய் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம் இது. ஏறத்தாழ 85 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் கூட அந்தப் புத்தகம் தன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
வழக்கமாக பிறப்பு முதல் இறப்புவரை வரிசையாக வாழ்க்கை நிகழ்ச்சிகளை அடுக்கிச் சொல்லும் விதத்தில் டால்ஸ்டாய் வாழ்க்கையை ஆக்கூரார் எழுதவில்லை. மாறாக, டால்ஸ்டாய் இந்த உலகத்துக்கு ஏன் முக்கியமானவர் என்னும் கேள்வியை முன்வைத்து, அதற்கான பதிலாக தான் தெரிந்து வைத்திருக்கும் தகவல்களைத் தொகுத்து இந்த 92 பக்க நூலை அவர் எழுதியிருக்கிறார். அதுவே இந்த நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது.
காந்தியடிகளை ஈர்த்த மிகமுக்கியமான உலக ஆளுமை டால்ஸ்டாய். காந்திய நினைவுகளுடன் டால்ஸ்டாயை அணுகும்போது ஆக்கூரார் சில புதிய வெளிச்சங்களைக் கண்டறிகிறார். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, தகவல்களைத் தேடித் தொகுத்து வைத்துக்கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஆக்கூரார்.
இரண்டு வயதில் தாயையும் ஆறு வயதில் தந்தையையும் இழந்து அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தவர் டால்ஸ்டாய். கல்லூரியில் சட்டப்படிப்பைப் படித்துவிட்டு தேர்வெழுதாமலேயே ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். ராணுவத்தில் சேர்ந்தாலும், யுத்தகளத்தில் நிகழும் மரணங்களை நேரில் கண்டு மனம் சோர்ந்து, வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்.
நெப்போலியன் உருவாக்கிய போரினால் விளைந்த அழிவுகளையும் மரணங்களையும் பற்றி நேரடி அனுபவங்களை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார். அது ஒரே சமயத்தில் அவருக்கு பாராட்டுகளையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொடுத்தது.
அப்போது நாட்டில் நிலவி வந்த கல்விமுறையை டால்ஸ்டாய் வெறுத்தார். விளையாட்டுக்கும் படைப்பூக்கத்துக்கும் இடமில்லாத கல்விமுறையால் பயனில்லை என்று நீண்ட விளக்கங்களுடன் பல கட்டுரைகளை எழுதினார். பிறகு அவரே ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து, அவரே ஆசிரியராகவும் இருந்து நடத்திக் காட்டினார்.
அந்தப் பள்ளியில் குழந்தைகள் புத்தகங்களையும் நோட்டுகளையும் கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு நாளும் விளையாட்டுகளுடன்தான் பள்ளி தொடங்குகிறது. அதற்குப் பிறகு ஆசிரியரே எல்லோருக்கும் தேவையான புத்தகங்களோடு வகுப்பறைக்கு வந்து ஆளுக்கொன்றை எடுத்துக் கொடுப்பார்.
அப்புறம் பாடங்கள் கதையைப்போல சொல்லப்படும். விளையாட்டில் காட்டிய உற்சாகத்தைப் போலவே பிள்ளைகள் பாடத்திலும் உற்சாகத்தைச் செலுத்துவார்கள். தினமும் நான்கு பாடங்கள் நடக்கும். இறுதியாக புத்தகங்களையெல்லாம் ஆசிரியரே திரும்ப வாங்கிக்கொள்வார். மீண்டும் விளையாட்டு தொடங்கிவிடும்.
பிள்ளைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும் கதைப்புத்தகங்களையும் டால்ஸ்டாயே எழுதினார். ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் வசித்த அவருடைய மாவட்டத்தில் பல இடையூறுகளுக்கிடையில் 21 பள்ளிகளை உருவாக்கி வெற்றிகரமான முறையில் நடத்திவந்தார் டால்ஸ்டாய். டால்ஸ்டாயின் பிள்ளைகளும் இதே பள்ளியில் படித்து, வளர்ந்தபின்பு இதே பள்ளியில் வேலை செய்தனர்.
ஒருமுறை டால்ஸ்டாய் வீட்டில் இல்லாத சமயத்தில் காவல்துறையினர் நுழைந்து சோதனையிட்டனர். கடப்பாரையினால் தரையை இடித்துத் தகர்த்தனர். பெட்டிப்பேழைகளை உடைத்தனர். கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் கைப்பற்றிக் கிழித்து வீசினர். டால்ஸ்டாய் பற்றியும் அவருடைய பள்ளி பற்றியும் தவறான எண்ணத்தை பொதுமக்கள் மனத்தில் விதைக்கவேண்டும் என நினைத்து செயல்பட்டனர்.
இறுதியாக வீட்டிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றது காவல்துறை. வீட்டுக்குத் திரும்பிவந்த டால்ஸ்டாய் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்து அரசருக்கு விரிவாக ஒரு கடிதமெழுதி, நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கப்போவதாகத் தெரிவித்தார். கடிதத்தைப் படித்த அரசர் உடனடியாக டால்ஸ்டாய்க்கு வருத்தம் தெரிவித்து பதில் எழுதி கவர்னர் வழியாக அனுப்பிவைத்தார். அந்தப் பதிலால் தற்காலிகமாக தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டார் டால்ஸ்டாய்.
அவர் மீது கொண்ட சினம் தணியாத காவல்துறை அவரை எப்படியாவது ஒரு வழக்கில் சிக்கவைத்து சிறையில் தள்ள தக்க தருணத்துக்காகக் காத்திருந்தது. ஒருநாள் டால்ஸ்டாய்க்குச் சொந்தமான பண்ணையைச் சேர்ந்த காளையன்று ஒருவரை தன் கொம்பால் குத்திக் கொன்றுவிட்டது.
டால்ஸ்டாயின் பராமரிப்பு முறை சரியில்லாததாலேயே இந்த மரணம் நிகழ்ந்தது என அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுத்தது காவல்துறை. ஏராளமான குறுக்கு விசாரணைகள், அவமதிப்புகள். நல்ல வேளையாக குற்றத்தை நிரூபிக்க முடியாததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
ஒரு மருத்துவரின் மகளான சோபியாவை 1862இல் டால்ஸ்டாய் மணந்துகொண்டார். அப்போது அவருக்கு 34 வயது. சோபியாவின் வயது 18. இருவருக்கும் பதின்மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிறுவயதிலேயே ஐந்து குழந்தைகள் மரணமடைந்துவிட, எட்டு பேர் மட்டுமே எஞ்சினர்.
ஒரு பிரபுவுக்குரிய வசதிகள் இருந்தாலும் டால்ஸ்டாய் எளிய வாழ்க்கையையே எப்போதும் விரும்பினார். அவர் மனம் எளிய உணவையும் எளிய உடைகளையும் மட்டுமே நாடியது. குடியானவர்களுடன் நெருங்கிப் பழகினார். பயணத்தின்போது மூன்றாவது வகுப்பிலேயே பயணம் செய்வது அவர் வழக்கம்.
தினமும் எட்டு மைல்கள் தொலைவு நடக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. இளமைக்காலத்தில் புலால் உண்பவராகவும் புகை பிடிப்பவராகவும் வேட்டையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருந்தாலும், பிற்காலத்தில் அப்பழக்கங்களை அவர் துறந்துவிட்டார். தொடக்கத்தில் தேவாலயத்துக்கே செல்வதில்லை என எடுத்த சபதத்தை விலக்கி தினமும் மாலை வேளையில் தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
உலகில் எவருமே தமக்கு பகைவர்கள் இருக்கக்கூடாது என அவர் மனம் விரும்பியது. ஆகவே, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு சண்டையிட்டு அன்றுமுதல் பேசாமல் இருந்த துர்கனேவ் என்னும் நண்பருக்கு கடிதம் எழுதி வரவழைத்து நட்பைப் புதுப்பித்துக்கொண்டார்.
ஒருநாள் அவருடைய பண்ணையில் ஒரு வேலைக்காரன் பொய் சொல்லி அவரிடம் அகப்பட்டுக்கொள்கிறான். பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் அவன் மீது சினம் கொள்கிறார். அவனுக்கு சாட்டையடி கொடுக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார். அவன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் மனம் மாறிவிடுகிறது.
அவன் மீது இரக்கம் கொள்கிறார். உடனடியாக தண்டனையை நிறுத்துமாறு வேறொரு ஆளிடம் சொல்லி அனுப்புகிறார். ஆனால் அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடுகிறது. அதைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்துவிடும் டால்ஸ்டாய் அவனை வரவழைத்து அவனிடம் மன்னிப்பு கேட்கிறார். அவனுக்கு அரை பவுன் பரிசாகக் கொடுத்தனுப்புகிறார்.
தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை ஏற்படும் விதத்தில் உயர்தட்டைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் ஒன்றாகத் திரட்டி பாடுபடத் தூண்டினார் டால்ஸ்டாய்.
அது நல்ல பலனைக் கொடுத்தது. எண்ணற்றோர் தத்தம் பகுதிகளில் தொழிலாளிகளுக்காக அல்லும்பகலும் உழைத்து அரசாங்கத்தின் சீற்றத்துக்கு ஆளாயினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. சிலர் நாடு கடத்தப்பட்டனர்.
சிலர் தூக்குத்தண்டனைக்கு ஆளானார்கள். அதன் பிறகே டால்ஸ்டாய் ஊட்டிய புத்துணர்ச்சி மக்களிடையில் தீயெனப் பரவியது. சீற்றத்தில் பொங்கியெழுந்த மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்குவதை அவர் விரும்பவில்லை. அவ்வழி தவறானது என்று வற்புறுத்தினார்.
அகிம்சை வழியில் சமதர்மக் கொள்கையைப் பரப்பவேண்டுமென அவர் விரும்பினார். கொல்லாமை, பிறர்மனை நயவாமை, ஆணையிடாமை, தீங்கு செய்யாமை, பகைவரிடம் வெறுப்பு கொள்ளாமை என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்க்கை நடத்தி வந்தார். 1880 வாக்கில் அவர் நாடறிந்த ஞானியாக உயர்ந்துவிட்டார்.
1881இல் பீட்டர்ஸ்பர்க்கில் ஜார் மன்னரின் தந்தையான இரண்டாவது அலெக்ஸாந்தரை யாரோ கொலை செய்துவிட்டனர். அது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை அறிந்ததும் டால்ஸ்டாய் ஜார் அரசருக்குக் கடிதமெழுதினார்.
கொலை செய்யும் வன்முறை வழியை தான் ஆதரிக்கவில்லை என்றும் புரட்சிக்காரர்களை தூக்கிலிட்டு அவர்கள் எண்ணிக்கையைக் குறைப்பதால் மட்டும் புரட்சியை அடக்கிவிடமுடியாது என்றும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் டால்ஸ்டாய். ஆனால் புரட்சிக்காரர்களை தூக்கிலிட்ட பிறகே அக்கடிதத்துக்கு ஜார் மன்னர் பதில் எழுதினார்.
அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை டால்ஸ்டாய் முன்னெடுப்பதை அறிந்த அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று அரசரிடம் கேட்டுக்கொண்டனர்.
அரசரோ டால்ஸ்டாயை எக்காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக் கூடாது என்றும், தேவையின்றி அவரைக் கைது செய்து அவரை பெரிய வீரராக உருமாற்றிவிடக்கூடாது என்றும் கறாரான குரலில் தெரிவித்தார்.
திடீரென நாடெங்கும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். பட்டினியில் உயிர்துறந்தனர். உடனே ஏழைக்குடியானவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கும் பொருட்டு 246 உணவுக்கூடங்களை உருவாக்க டால்ஸ்டாய் ஏற்பாடு செய்தார். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருமே பஞ்ச நிவாரண வேலையில் ஈடுபட்டனர்.
1900 முதல் அடிக்கடி பொதுமக்கள் கைது செய்யப்படுவதும் காரணமின்றி தண்டிக்கப்படுவதும் நடைபெறத் தொடங்கியது. ‘இன்னும் அமைதியாக இருக்கவேண்டுமா?’ என்ற தலைப்பில் 1908இல் டால்ஸ்டாய் ஒரு விரிவான கட்டுரையை எழுதினார். அரசாங்கத்தின் கட்டளையை மீறி சில பத்திரிகைகள் இக்கட்டுரையை முழு அளவிலும் சில பத்திரிகைகள் அரைகுறையாகவும் வெளியிட்டன. பல பத்திரிகையாசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாட்டிலுள்ள எந்த அமைப்பும் சங்கமும் பள்ளியும் நகரசபையும் டால்ஸ்டாயிடம் எவ்விதமான மரியாதையையும் காட்டக் கூடாது என்று அரசு வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் டால்ஸ்டாய் மனம் தளராது தொடர்ச்சியாக அரசருக்கு சர்வாதிகாரத்தினாலும் கிறித்துவ வைதிகத்தாலும் நாட்டுக்கு ஒருபயனும் விளையாது என்பதை பலமுறை தம் கடிதங்கள் வழியாக தெரிவித்துக்கொண்டே இருந்தார்.
பாமர மக்கள் வாழுமிடத்தில் தாமும் வாழ விரும்பி, அத்தகைய இடம் எங்காகிலும் வாடகைக்குக் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் இறுதிக்காலத்தில் அலைந்தார். அது தொடர்பாக ரோஸ்டோலோன் என்னும் இடத்துக்குச் செல்ல 6.11.1910 அன்று ரயிலில் தன் மகளுடன் புறப்பட்டார்.
அப்போது அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. காய்ச்சல் காரணமாக உடல் அனலாகக் கொதித்தது. அவருடைய பெட்டியில் பயணம் செய்த ஒரு மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு, அவர் பயணத்தைத் தொடர்வது நல்லதல்ல என்று சொல்லி அடுத்து வந்த அஸ்டாபோவா என்னும் கிராமத்து நிலையத்தில் இறக்கிவிட்டார்.
ஸ்டேஷன் மாஸ்டர் உதவியுடன் மருத்துவர் வரவழைக்கப்பட்டார். டால்ஸ்டாயின் மகள் தன் தமையனுக்கு தந்தி அனுப்பினாள். அடுத்த நாள் காலையில் டால்ஸ்டாயின் மனைவியும் அவர் மகனும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாமலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.
டால்ஸ்டாய் இறந்ததும் அவருடைய ஏராளமான சொத்தின் பெரும்பகுதி அவர் எழுதிவைத்த உயிலின்படி குடியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கு வீடும் சில ஏக்கர் நிலங்களும் மட்டுமே எஞ்சின. ரஷ்யாவில் பொதுவுடைமைக் கிளர்ச்சி தொடங்கிய சமயத்தில் டால்ஸ்டாயின் வேலைக்காரர்கள் அவருடைய வீட்டையும் குடும்பத்தினரையும் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றிக் கொடுத்தனர்.
இன்று அவருடைய வீடு பொருட்காட்சியகமாக இருந்து வருகிறது. அவருடைய படிப்பறை அவர் விட்டுச்சென்ற நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவருடைய புத்தக அடுக்கில் புத்தரின் வாழ்க்கை வரலாறும் காந்தியடிகள் பற்றி எழுதப்பட்ட ஒரு நூலும் இருக்கின்றன.
வைதிகக் கிறித்துவமதத்தின் விளைவுகளையும் தேவாலயத்தின் நடவடிக்கைகளையும் டால்ஸ்டாய் தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விமர்சித்து கட்டுரைகள் எழுதிவந்தார். அதன் பொருட்டு, அவரைக் கொல்லப் போவதாக பல அச்சுறுத்தல் கடிதங்கள் வந்தபோது கூட டால்ஸ்டாய் தம் விமர்சனங்களை நிறுத்தவில்லை.
இதனால் வெறுப்படைந்த தலைமை மதகுரு 22.02.1901 அன்று அவரை மதத்திலிருந்து விலக்கி வைக்கும் ஆணையைப் பிறப்பித்தார். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் அவர் உலகத்தலைவர்கள் அனைவரோடும் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். இந்தியாவில் உள்ள சில முக்கிய சங்கங்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.
சென்னை தாம்ஸன் அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்த ஆர்யா பத்திரிகைக்கு அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். அவர் எழுதிய ‘இந்தியனின் கடமை’ கட்டுரை துண்டுப்பிரசுரமாக அக்காலத்தில் வெளியிடப்பட்டு அக்காலத்தில் எண்ணற்றோரால் வாசிக்கப்பட்டது.
காந்தியடிகள் அப்போது தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்தார். அப்போதே அவர் டால்ஸ்டாயின் செயல்பாடுகளை அறிந்துவைத்திருந்தார். கடிதங்கள் வழியாக இருவரும் உரையாடி கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். டால்ஸ்டாயின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் 1904இல் டர்பனுக்கு அருகில் பீனிக்ஸில் உருவாக்கிய ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்றே பெயர் சூட்டினார்.
டால்ஸ்டாய் இறக்கும் வரை காந்தியடிகள் அவருடன் கடிதத் தொடர்பில் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய அகிம்சை வழியிலான சத்தியாக்கிரகப் போரின் புதுமையால் ஈர்க்கப்பட்டிருந்தார் டால்ஸ்டாய். உலக வரலாற்றிலேயே சிறந்ததொரு போர்முறை என சத்தியாக்கிரக வழிமுறையை அவர் மனம்திறந்து பாராட்டினார்.
ஆக்கூரார் எழுதியிருப்பது டால்ஸ்டாயின் சுயசரிதை மட்டுமல்ல; காந்தியப்பார்வையில் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மதிப்பிட்டு நமக்கு எந்த அளவுக்கு நெருக்கமானவராக அவர் இருக்கிறார் என்பதைக் கண்டு நிறுவும் ஒரு முயற்சி என்றே சொல்ல வேண்டும்.
காந்தியடிகளின் மதிப்பில் உயர்ந்த ஒருவரை நம் மக்களுக்கு உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற அவருடைய வேட்கை வணக்கத்துக்குரியது. இன்றளவும் கூட டால்ஸ்டாயின் இலக்கிய முகம் மட்டுமே மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டுவரும் சூழலில் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் முன்னேற்றம் சார்ந்த டால்ஸ்டாயின் போர்முகத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்கூர் அனந்தாச்சாரியாரின் முயற்சி போற்றுதலுக்குரியது.
- பாவண்ணன்