இரண்டாயிரத்துக்குப் பிறகு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பெண் கவிஞர்களுள் குட்டிரேவதி முக்கியமானவராக அறியப்படுகிறார். இவரது கவிதைகள் நவீன கவிதையின் எல்லையை விரிவாக்கின; பேசாப் பொருளைப் பேசத் துணிந்தன; அதனால் இவரது கவிதைகள் பொதுவெளியில் பெரிதும் விவாதிக்கப்பட்டன. கவிதைகளைத் தொடர்ந்து ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ‘மீமொழி’, ‘இயக்கம்’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘அழியாச் சொல்’ என்ற நாவலும் வெளியாகியுள்ளது. இவர் ‘பனிக்குடம்’ என்ற சிற்றிதழைச் சிலகாலம் நடத்தினார். பனிக்குடம் மூலமாகச் சில சிரத்தையான நூல்களையும் வெளியிட்டுள்ளார். திரைத்துறை சார்ந்த பங்களிப்பையும் தொடர்ந்து செய்து வருகிறார். சித்த மருத்துவத்தில் ஆய்வுசெய்தவர். இலக்கியத்திலும் கலையிலும் பெண்களுக்கென தனித்த மொழியை உருவாக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
குட்டிரேவதி சிறுகதைகளின் காலகட்டத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். பெண்களின் புறக்கணிக்கப்பட்ட வெளியை உள்முகமாகப் பேசுபவை குட்டிரேவதியின் தொடக்ககாலச் சிறுகதைகள். பெண்கள்தாம் பெரும்பாலும் கதைகளை நகர்த்துகிறார்கள். சிறுகதை வடிவத்தைக் கலைத்துப்போட்டுத் தனக்கென வடிவம் தேடும் முயற்சிகளாக இக்கதைகள் இருக்கின்றன. பெண்ணுடலும் ஆணுடலும் இணையும்போது குறுக்கிடும் தொன்ம நெருக்கடிகள் இவர் கதைகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பெண்ணுடல் இயற்கையின் பேருருவமாகி ஆணின் தீண்டலுக்காகக் காத்திருக்கிறது. கூடிவரும் இருவருக்குமான முயக்கத்தில் அந்தத் தீண்டல் சம்பிரதாயமான இனப்பெருக்கத்தின் தேவைக்கென சுருங்கிப்போகிறது. இவ்விடத்தில் பெண்ணுடல் ஓர் இயந்திரமாகக் கட்டமைக்கப்படுகிறது. வாரிசுகளை உற்பத்தி செய்யும் கேந்திரங்களாக அவை மடைமாற்றம் செய்யப்பட்டன. இந்தப் புள்ளிகளைக் குட்டிரேவதியின் கதைகள் விவாதிக்கின்றன. ‘நிறைய அறைகள் உள்ள வீடு கவிதைத் தொனியிலேயே எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதி எனலாம். உருவகமாகவும் நேரிடையாகவும் உறவுகளைப் பற்றிப் பேசும் சிறுகதைகொண்ட இத்தொகுதி உறவுகளின் கட்டிப்போடும் தன்மையையும் அதை மீற எப்போதும் பெண்களும் ஆண்களும் முயல்வதையும் காடும் கடலும் சூழ்ந்த கதை உலகில் இருந்து சொல்கிறது’ (பக்.72:2017)என்றுகுட்டிரேவதியின் முதல் தொகுப்பை அம்பை மதிப்பிட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும்.
பெண்ணுடல் ரேவதி கதைகளின் கச்சாப்பொருள். இதனை மூலமாகக்கொண்டு புனைகளில் சில புதிய திறப்புகளை உருவாக்க முயன்றிருக்கிறார். பெண்ணுடல்மீது புனையப்பட்டுள்ள தொன்ம மதிப்பீடுகளை மீளுருவாக்கம் செய்வதற்கான ஒரு தளமாகத் தம் கதைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.‘சிதறிக்கிடக்கும் உறுப்புகளை ஒருங்கிணைக்கவும், ஒவ்வோர் உறுப்பின் மீதும் அழுத்தம் தரும் அரசியல் சுமையைக் களைக்கவும் புனைவு ஓர் அகண்ட உலகத்தைத் திறந்து கொடுக்கிறது’ (07:2013)என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். கவிதைகளில் பேச இயலாததைக் கதைகளில் விரிவாகப் பேச முயன்றிருக்கிறார். ஒரு நோக்கத்தை ஏற்கனவே வரித்துக்கொண்டு புனைவுக்குள் நுழைந்திருப்பதால் பாலியல் தொடர்பான கதைகளே தொடக்கத்தில் பிரதான இடம் வகித்திருக்கின்றன. கவிதை மொழியிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ளாததால் இவரெழுதிய பல கதைகள் கவிதையின் பிறிதொரு வடிவங்களாக உள்ளன. புனைவுகளில் உரையாடல்கள் மிகக்குறைவு. ‘பிங்க் வோட்கா’ விதிவிலக்கு. இதனால் சில கதைகள் கட்டுரை மற்றும் பயணக் குறிப்புகளின் உருவங்களாக மாறிவிடுகின்றன.
சுதந்திரத்தை எல்லா வகையிலும் தேடும் பெண்களே ரேவதி கதைகளின் நாயகிகள். ‘கட்டுவிரியன்’ கதையில் வரும் காயாம்பூ ஒடுக்கப்பட்டவளாக இருந்தாலும் அவளுக்கான சுதந்திரத்தைப் பெறுவதில் அவள் சமரசம் செய்துகொள்வதில்லை. ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் குறியீடாகக் காயாம்பூ இருக்கிறாள். இவரது பல புனைவுகளில் இப்பெண் தொடர்ந்து இடம்பெறுகிறாள். ஆண்களினும் தனித்துவமான பெண்களே இவரது கதைகளில் நிரம்பியிருக்கிறார்கள். சம்பிரதாயத்துக்கு ஆண்கதாபாத்திரங்கள் புனைவுகளில் வந்துபோகின்றன. இவர்களுக்கான இடத்தை மறுப்பதினூடாகத் தம் புனைவுகளைப் பெண்களுக்கான பிரதிகளாக மாற்ற முயன்றிருக்கிறார். இத்தன்மை பெண் கதைகளில் எழுதப்படாத விதியாக இருப்பதை உணரலாம்.
யதார்த்தத்திற்கும் மாயத்திற்கும் இடைப்பட்ட வெளியில் குட்டிரேவதியின் கதைகள் இயக்கம் கொள்கின்றன. கவிதையின் வீரியத்துடன் தன் கதைப் பயணத்தைத் தொடங்கியவர், அடுத்தடுத்த தொகுப்புகளில் கதைக்கென ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ளும் பிரக்ஞையுடன் செயல்பட்டிருக்கிறார். கனவை நிஜத்துடன் ஒன்றுகூட்டும் ரசவாதத்தைச் சில புனைவுகளில் செய்து பார்த்திருக்கிறார். ‘விரல்கள்’ அந்த வகையில் சிறப்பாகக் கூடிவந்த கதையாகக் கருதலாம். ஆண் விரல்களின் வெவ்வேறு விதமான தொடுதல்கள் குறித்து குட்டிரேவதி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார். இது, கனவில் தொட்ட விரல்களால் கருவைச் சுமந்த எமிலியின் கதை அன்று. துறவைத் தழுவிக்கொண்ட கிறித்தவப் பெண்களின் அகப்பிரச்சினையைப் பற்றியது. கிறித்தவ மதத்தின் தொன்மை இக்கதைக்குப் பின்னணியாக இயங்கியுள்ளது. ‘எந்த ஆணின் விரலும் உன்னைத் துன்புறுத்தாமல் இருக்கவே நான் உன்னை இங்கு விட்டுப் போகிறேன்’ என்ற அம்மாவின் குரலில் வெளிப்படும் நம்பிக்கையை எமிலியால் காப்பாற்ற முடியவில்லை. இந்தக் கதையில் வரும் எமிலிக்கு மரியாளின் தொன்மம் ஏற்றப்படுகிறது. யதார்த்தத்தில் இப்படியொரு நிகழ்வுக்குக்கிறித்தவச் சமூகம் எவ்வித எதிர்வினையை நல்கும் என்ற கேள்விக்கான விடையும் இக்கதையில் உள்ளது. தொன்ம மதிப்பீட்டிற்கு நிகழ்காலத் தன்மையை அளிக்கும்போது அந்த மதிப்பீடு அடையும் இடம்தான் இக்கதை என்பதாகவும் புரிந்துகொள்ளலாம். குட்டிரேவதியின் சிறுகதையில் தனித்துத் தெரியும் கதைகளுள் ஒன்றாக ‘விரல்கள்’ இருக்கும். சவாலான முயற்சியாக இதனைச் செய்து பார்த்திருக்கிறார். தொன்மத்தில் சாத்தியப்பட்ட ஒன்று தற்காலத்தில் நிஜமாகும்போது அதனை எதிர்கொள்வதிலுள்ள சங்கடமும் அந்நிஜத்தின்மீது எழுப்பப்படும் சந்தேகங்களும் மிக சுவாரஸ்யமானவை.
சிறுமிகள் தொடர்ந்து நெருக்கமான உறவுகளால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதை ரேவதியின் கதைகளில் பரவலாகக் காணமுடிகிறது. வலிந்து திணிக்கப்படுவதாகத் தெரியவில்லை. கள யதார்த்தம் அப்படித்தானே இருக்கிறது என்ற தொனிதான் இக்கதைகளை வாசிக்கும்போது ஏற்படுகிறது. அப்பா-மகள் இடையிலான தொன்ம மதிப்பீடுகளின்மீது தற்காலத்தில் பெரும் விரிசல் விழுந்திருப்பதை இவரது கதைகள் வெவ்வேறு தொனியில் பேசிக்கொண்டே இருக்கின்றன. பெண் உடலுக்கு முன்னால் உறவுகளின் புனித முகமூடிகள் நொடிந்து வீழ்ந்து பல மாமாங்கங்கள் ஆகிவிட்டதை நவீன இலக்கியங்கள்தாம் நினைவூட்டின. ‘விரல்கள்’, ‘ஆண்’ என அடுத்தடுத்த கதைகளில் இப்பிரச்சினைகள் பற்றி எழுதியிருக்கிறார். இளம்வயது பாலியல் சீண்டல்கள் பெண்களின் ஆழ்மனதில் ஓர் ஆறாத வடுவாகத் தங்கிவிடுவதைப் பெண்கள் பலரின் கதைகளில் காண முடிகிறது. ‘ஆண்’ கதையில் வரும் அருணாவிற்கும் இது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கிறது. அவள் கணவனின் விரல் படும்போதெல்லாம் அந்த இளம்வயது சம்பவம் துரத்துகிறது. இறுதியில் பைத்தியமாவதாகக் கதை முடிகிறது. குட்டிரேவதியின் பெரும்பான்மைக் கதைகள் உடலைப் பிரதானப்படுத்தி, அதன்மீது நிகழும் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்துஅவதானித்திருக்கிறது.
‘முழுமதி’, ‘கந்தகப் பூ’, ‘கண்கள்’ ஆகிய மூன்று கதைகளையும் சங்க அகமரபின் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். மரபிலக்கியத்தின் மீதுள்ள குட்டிரேவதியின் ஈடுபாடு இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. சங்க இலக்கியமும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் இவர் கதைகளுக்குள் ஊடாடும்போது புனைவுகள் செவ்வியல் தன்மையை அடைகின்றன. தம் உடலைக் கையாளுவதில் அக்காலத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் இருந்தது. தாம் விரும்பிய ஆடவனுடன் அப்பெண்கள் களவொழுக்கத்தில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு முன்பே உடலிணைதல் ஒழுக்க மீறலாகக் கருதப்படாத காலம் அது. மணச் சடங்குகள் கட்டாயமாக்கப்படாத சூழல் அப்போதிருந்தது. தெய்வம் முன்னின்று இருவரையும் புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக நம்பினர். இதனை இயற்கைப் புணர்ச்சியென்றும் தெய்வப் புணர்ச்சியென்றும் பெயரிட்டு மகிழ்ந்தனர்.
தொல் சமூகத்தில் பெருவிருப்பத்தின் காரணமாக இரு உடல்களும் ஒன்று சேர்ந்ததில் அன்பைத் தவிர வேறெந்த நோக்கமும் பின்புலத்தில் இயங்கவில்லை. பிற்காலத்தில் இத்தன்மை இல்லாமல் போனது. அந்த அகத்திணை மரபின் வழித்தோன்றல்களாக இக்கதைகளின் பெண்கள் விளங்குகின்றனர். காமத்தின்மீது கட்டப்பட்டுள்ள தொல்மதிப்பீடுகளை இப்பெண்கள் சிதைக்க முயலுகின்றனர். தொடர்ந்து தம் கதைகளினூடாக இந்தக் கலகத்தைக் குட்டிரேவதி செய்து வருகிறார். காமத்தின் நெருப்பு தீண்டிய பெண் உடல் வெளிப்படுத்தும் மொழியைக் கதைகளில் பிடிக்கும் முயற்சியாகவும் இக்கதைகளை வாசிக்கலாம். ஔவையார், அள்ளூர் நன்முல்லையார் உள்ளிட்ட சங்கப் பெண் புலவர்கள் வெளிப்படுத்திய உணர்வெழுச்சியை உள்வாங்கிக் கொண்டவர்கள் இக்கதைகளின் பெண்கள். கொடிச்சி, ஆய்ச்சி, உழத்தி, நுளைச்சி, மறத்தி போன்ற சங்ககாலப் பெண்களின் நவீன குரல்களை இவரது கதைகள் எதிரொலிக்கின்றன. காமத்தைக் கடக்கச் சொற்களின்றித் தவிக்கும் தீவிரத் தன்மை சங்கக் கவிதைகளைப் போல இவரது சிறுகதைகளிலும் வெளிப்படுகிறது. தொடர்ந்து இந்த வட்டத்திற்குள்தான் பெரும்பான்மைக் கதைகள் சுற்றி வருகின்றன.
‘தூமலர்’, பெண்கள்மீது இச்சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் மூல வடிவத்தை வேறொரு கோணத்தில் ஆராயும் கதை. ‘கற்பூரம்’, ‘அமிலம்’ ஆகிய இரண்டு கதைகளும் வளர்ந்த பிள்ளைகள் இறுதியில் அம்மாவைப் புறக்கணிக்கும் கதைக்களனை உள்ளடக்கமாகக் கொண்டவை.இக்கதைகளும் உறவுகள்மீது போர்த்தப்பட்டுள்ள புனித பிம்பங்களை அசைத்துப் பார்ப்பவை. ‘கற்பூரம்’ கதையில் வரும் இரயிலில் ஊதுபத்தி விற்கும் அந்த நபரை நானும் சென்னைப் புறநகர் இரயிலில் பலமுறைப் பார்த்திருக்கிறேன். அவர் பேசும் வசனங்கள் அப்படியே இக்கதையில் இடம்பெற்றுள்ளன. அகத்தின் உட்சிடுக்குகளை மொழிப்படுத்திய ரேவதி, புறச்சூழல்கள்மீதும் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன்.
குட்டிரேவதி, கதைகளுக்காகக் காத்திருப்பதில்லை; ஒரு நிகழ்வின்மீது தன் மொழித் திறனை நுட்பமாக நுழைத்துக் கதையாகப் பின்னி அந்த நிகழ்வைப் பத்திரபடுத்திக் கொள்கிறார். கதையை மொழியிலிருந்து விடுவிக்கும் முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கருதுகிறேன். அடுத்து, யதார்த்தத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் கதைமாந்தர்களுக்கே இவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர்கள் தங்களை மீள்கட்டமைத்துக்கொள்ளும் முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்கின்றனர். அந்த முன்னெடுப்பு பெண் உடலைத் தொடர்ந்தே இயங்குகிறது. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குக் காலத்திடம்தான் கைக்கட்டி நிற்க வேண்டும்.
குட்டிரேவதியின் நான்காவது சிறுகதைத் தொகுப்பான ‘இயக்கம்’, அவரது முந்தைய தொகுப்புகளில் இருந்து வேறுபட்டது. தொடக்கத்தில் பெண்ணுடலையும் அது வெளிப்படுத்தும் ரகசிய சமிக்ஞைகளையும் புனைவுகளாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். முந்தைய புனைவுகளின் பாதிப்புகளிலிருந்து தன்னை முற்றாகத் துண்டித்துக்கொண்டு புதிய களங்களில் சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கதைகளுக்கேற்ப மொழியிலும் கூற்றுமுறையிலும் வித்தியாசத்தைக் கூட்டியிருக்கிறார். காதலில் மயங்கி வீட்டைவிட்டு வெளியேறிய மஞ்சுளாவின் கதைதான் ‘ஆறு.’மஞ்சுளாவிற்கு ஐந்து குழந்தைகள்; வேலைக்குச் செல்லாத குடிகார கணவன் என பெண்கள் எதிர்கொள்ளும் புறச்சித்திரங்கள் கதைக்குள் பயணப்பட்டாலும், ஏழுபேரின் பசிக்காக மஞ்சுளா செய்யும் செயல் புதியதாக இருக்கிறது. பண்ணையாரின் முன்பு நிர்வாணமாக நிற்கிறாள்; பண்ணையார் பார்த்துக்கொண்டே இருப்பார். அவருக்கு அவ்வளவுதான் சாத்தியம். மஞ்சுவின் கணவனுக்கும் இது தெரியும். மஞ்சுவிற்கும் தம் குழந்தைகளின் பசிக்கு முன்பாக இச்செயல் குற்றமாகத் தெரியவில்லை. தாலி என்ற ஒன்றைக் கட்டிவிட்டுத் தினந்தோறும் தன் அனுமதியின்றி தன்னைவன் புணர்ந்து கொண்டிருக்கும் கணவனை இவளால் தடுக்க முடியவில்லை. ஏனெனில் அந்த உறவு நிறுவன மயப்படுத்தப்பட்டது. இவளால் அதனைத் தகர்க்க முடியாது. ஆனால் பண்ணையார் வீட்டில் நடப்பது இவள் அனுமதிக்குப் பிறகுதான். இந்தப் புள்ளிதான் கதையின் மையமாக இருக்க வேண்டும். இங்கே காமம் என்பது கிடைக்காதவருக்கு இடப்படும் உணவாக முன்னிறுத்தப்படுகிறது. மனிதர்களுக்குள் இரண்டுவிதமான பசி எப்போது இருந்துகொண்டே இருக்கும். இவ்வுலக இயக்கத்திற்கு இவ்விரு பசிகளுமே ஆதார வித்து. வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகள் நகரம் சார்ந்த இடங்களில் நடைபெறுவதாகவே புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இக்கதையின் களம் கிராமம். ஆனால் கதையின் முடிவு ஏமாற்றமாக இருக்கிறது.
சமகாலத்தை எழுதுவதிலும் குட்டிரேவதி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ‘சுயமுகம்’ என்ற கதை கொரோனா எனும் பெருந்தொற்றினூடாக வெளிப்பட்ட சிலரின் சுயமுகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் இப்பிரச்சினை குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்நோய் புனைவுகளிலும் கலந்து விட்டிருக்கிறது. கொரானாவின் முதல் அலையில் இந்நோய் தாக்கிய மனிதர்கள்மீது சக மனிதர்கள் காட்டிய குரோதம், மனிதர்களின் மற்றொரு முகத்தை நேரடியாகக் காணநேர்ந்தது. இந்த வெறுப்பு மதம் சார்ந்தும் வெளிப்பட்டது. இந்தக் கண்ணியிலிருந்தே இக்கதை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கதையின் முடிவுகூட உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்டதுதான். புனைவுக்கு ஒட்டாமல் இரு கதைகளின் முடிவுகளும் செயற்கையாக இருக்கின்றன. கதையின் முடிவுகளுக்குப் புனைவாசிரியர் சரியான நியாயம் செய்யவில்லை என்ற வாசிப்பிலும் அணுகலாம். ‘இயக்கம்’ சிறுகதை தனித்துத் தெரிந்தாலும் வாசிப்பில் ஒன்றச் செய்யவில்லை. முன்னெடுப்பான உரையாடல்கள் கதைக்கு வெளியே துருத்திக்கொண்டு நிற்கின்றன. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தோற்றம் வாசிப்பில் இக்கதைக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
‘புயல்’, ‘பெருந்திணை’ ஆகிய இரு கதைகளும் தனித்துத் தெரிபவை. இரண்டின் கருப்பொருளும் பெருந்திணைக் காதல்கள்தாம் என்றாலும் ‘புயல்’ சிறுகதை இருளர் சமூகத்தின் பெண்கள் எதிர்கொள்ளும் தொடர் பிரச்சினைகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்ட இருளர் சமூகத்தைச் சார்ந்த மாசி என்ற பெண்ணின் கதை ‘புயல்.’ அறுபத்தைந்து வயதான சுகுமாரன்தான் இவர்களுக்காகக் குரல் கொடுக்கிறார். தவறு செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். மனைவியை இழந்த சுகுமாரனுடன்
எஞ்சிய வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறாள் மாசி. இக்கதையின் முடிவுமீதுகூட விமர்சனம் உண்டு. கடற்கரையில் ஓர் ஆணும் பெண்ணும் நெருக்கமாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுள் ஆண் திருமணமானவர். பொருந்தாதுக் கழிந்துபோன ஒரு காதல் அந்தக் கடற்கரையில் அழகாகக் கூடிவருகிறது. அவர்களது உரையாடலில் அவ்வளவு அந்நியோன்யம். சமூகம் இப்படியிருந்தால் நன்றாக இருக்குமென்ற ஆசைதான் ரேவதியை இப்படியொரு கதையை எழுத தூண்டியிருக்கிறது.கற்பனையும் யதார்த்தமும் இணையும் தருணங்களில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள சமூக ஒழுங்குகள் இரண்டிற்கும் இடையில் ஒரு சுவரை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. சமூக ஒழுங்குகளை உடைப்பது ஆணுக்கு எளிதாகவும் பெண்ணுக்குக் கடினமாகவும் இருப்பதை ரேவதியின் கதைகள் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றன. இவ்விரு கதைகளும் அப்படியொன்றைத்தான் தொனிப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. யதார்த்தத்தில் இப்படியொரு வாழ்க்கை சாத்தியமா என்ற கேள்வியும் இக்கதைகளுக்குள் அடக்கம். ஆனால் மரபு மனம் இக்கதைகளின் பெண்களிருவருமே திருமணமானவர்களாகக் காட்டவில்லை. இதற்கு இன்னும் சில மாமாங்கங்கள் ஆகும்.
அரவாணிகளின் உளவியல் பிரச்சினையை மையப்பொருளாக்கி எழுதப்பட்ட ‘தலை’ என்ற சிறுகதையும் குறிப்பிடத்தக்கவை. ‘என் புருஷன் வேற பொண்ண, வேற அரவாணியக்கூடத் திரும்பிப் பாக்கக்கூடாது. அப்படின்னா அவன் என்ன பொண்ணாவே பாக்கலன்னு தோணிரும். கத்தியால என் கழுத்த வெட்டி சிரமறுத்துக்கனும்னு தோணும்’ என்ற அரவாணி சுதாவின் உரையாடல்தான் இக்கதையை முடித்தும் வைக்கிறது. கூவாகத்தில் நடைபெறும் சடங்கு இக்கதைக்குப் புராணீகத் தன்மையைக் கொடுக்கிறது. தொன்மமும் நடப்பியலும் மோதவிட்டு கதையை முடித்திருக்கிறார். அரவான், அவனை ஏமாற்றிய கண்ணன் என வாசிப்பதற்கும் மேற்கொண்டு உட்செல்வதற்கும் இடம்தரும் கதை. ‘பூநீறு’ ரேவதியின் தொழில் சார்ந்த புனைவு. இதுபோன்ற கதைகளும் தற்போது அதிகளவில் எழுதப்படுகின்றன. பாரம்பரிய மருத்துவத்தின் எழுச்சி பொதுமக்களால் தற்காலத்தில் நன்றாக உள்வாங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் பூநீறின் தன்மைகள் குறித்தும் அதன் மருத்துவப் பயன்கள் குறித்தும் எழுதப்பட்ட கதையாக இதனைக் கருதலாம்.
தொடக்கத்தில் குட்டிரேவதி எழுதிய ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு உருவத்தில் காமம்தான் இயக்கியிருக்கின்றன. இக்கதைகளுக்கு அவர் பயன்படுத்திய மொழி தனித்துவமானது; மொழியுடன் இவர் நிகழ்த்தும் உரையாடல்கள்தாம் கதைகள் என்ற இடத்திலும் குட்டிரேவதியின் கதைகளை நிறுத்தலாம்.கவிதையின் சரடுகளுடன் தொடர்ந்து செல்லும் நீரூற்றைப்போல அவர் மொழியைக் கையாண்டிருக்கிறார். அடுத்தடுத்த வாசிப்புகளிலும் மிச்சமிருக்கும் நுட்பம் இவரது கதைகளில் வெளிப்படுகிறது. நுட்பமாகப் புரிந்துகொள்ளும் வெளியை ஒவ்வொரு கதையும் உருவாக்கிச் செல்கிறது. அனுபவக்குறிப்புகளாகச் சில புனைவுகள் தேங்கிப்போவதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.ஏனெனில் வெறும் மொழிப்புலமையைக் கொண்டு ஒரு காத்திரமான கதையைக் கட்டமைக்க முடியாது. பிற்காலத்தில் புறப்பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அன்பிற்கும் அது உருவாக்கும் அசைவுகளுக்கும் இடையில் புனைவுகளை ஊடாட விட்டிருக்கிறார். முதல் மூன்று தொகுப்புகளில் இந்த வேறுபாட்டை அந்த அளவுக்குப் பார்க்க முடியவில்லை. குட்டிரேவதியின் இந்த வளர்ச்சி கவனத்தில் கொள்ளவேண்டியவை.
பயன்பட்ட நூல்கள்
- அம்பை, உடலெனும் வெளி, கிழக்குப் பதிப்பகம், சென்னை, பதி.2017
- குட்டிரேவதி, நிறையஅறைகள் உள்ள வீடு, பாதரசம் வெளியீடு, சென்னை, பதி.2013
- குட்டிரேவதி, விரல்கள், நற்றிணை பதிப்பகம், சென்னை, பதி.2018
- குட்டிரேவதி, மீமொழி, எழுத்துப் பிரசுரம், சென்னை, பதி. 2020
- குட்டிரேவதி, இயக்கம்,எழுத்துப் பிரசுரம், சென்னை, பதி.2020
- சுப்பிரமணி இரமேஷ், சென்னை பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்