டுனிசியா மக்கள் தாங்கள் செய்த புரட்சிக்கு வைத்த பெயர் மல்லிகைப் புரட்சி. இந்தப் புரட்சியின் வாசம் அரபுலகமெங்கும் வீசிக்கொண்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு, ஜனநாயகமின்மை என்று அரபுலக மக்கள் போராடு வதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. இப்போதைய அரபுலக சர்வாதிகாரிகளில் பலர் முன்பு ஏகாதிபத்தியங்களிடமிருந்து தங்கள் நாட்டைக் காத்து, தங்கள் மக்களுக்கு நல்வாழ்வை அருளுவதற்கே பூமியில் அவதாரம் செய்தவர்கள். கேள்விக்கிடமற்ற அதிகாரத்தைப் பெற்றபோது சர்வாதிகாரிகளும், மன்னர்களும் நாட்டையும், நாட்டு மக்களையும் விற்றாவது சுகபோக வாழ்விலும், அதிகாரத்திலும் தொடர்ந்திருக்கத் திருவுள்ளம் கொண்டார்கள்.

எகிப்திலிருந்து அதிபர் முபரக் விரட்டியடிக்கப் பட்டபோதுகூட தம் மக்கள் ஏகாதிபத்திய சக்தி களுக்குப் பலியாகி விட்டார்களே என்று வருத்தத் தோடுதான் வெளியேறினார். இப்போது லிபியாவின் அதிபர் கடாபியும் பெரும் இரத்த ஆற்றை ஓட விட்டாவது ஏகாதிபத்தியங்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவேன் என்று ஒருபுறம் சவால் விடுகின்றார். மறுபுறம் அல்கெய்த உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் மக்களுக்குக் காப்பியில் போதை மருந்து கலந்து கொடுத்துவிட்டார்கள் என்று சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்கிறார். பஹ்ரைன், ஏமன் நாட்டு மன்னர்களுக்குத் தூக்கம் போய் இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. என்ன செய்தாலும் இந்தப் போராட்டக்காரர்கள் ஏமாற மாட்டேன் என்கிறார்களே என்று அந்த மன்னர் களுக்கு வருத்தம். அரேபியாவின் மன்னர் நூறு கதவுகளுக்கு அந்தப் பக்கம் பாதுகாப்பாக இருந்தும், அவருக்கு தூக்கம் வரமாட்டேன் என்கிறது. ஒரு புறம் இந்தக் கொடுங்கோல் மன்னர்கள், சர்வாதிகாரிகளின் செயல்பாடுகள் இப்படி இருக்கின்றன என்றால், மறுபுறம் அமெரிக்கா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மண்டையை உடைத்துத் திட்டம் தீட்டுகிறது.

எகிப்து, பஹ்ரைன், ஏமன் என்று வரும் போதெல்லாம் அமெரிக்கா சற்று மென்மையாக நடந்துகொள்கிறது. லிபியா என்று வரும்போது அமெரிக்காவுக்குக் கோபம் மிகுந்து கண்கள் சிவந்துவிடுகிறது. உடனே மனித உரிமையையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட என்ன விலையும் கொடுக்கத் தயார் என்று அறிக்கை வெளியிடு கின்றது. கடாபி தன் நாட்டு மக்கள் மீது விமானங் களை ஏவிக் குண்டு வீசுவதைக் கண்டு கொதிப் படைந்துள்ளது. ஆனால் ஈழத்தில் இராஜபக்சே மக்கள் மீது விமானங்களிலிருந்து குண்டு போட்ட போது அமெரிக்காவின் ஜனநாயக உள்ளம் ஏனோ கொதிப் படையவில்லை. மாப்பிள்ளை செத்தாலென்ன, பெண் செத்தாலென்ன மாலை பணம் வந்தால் சரி என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இது போலத்தான் அமெரிக்காவும் யோசித்துக் கொண்டு இருக்கிறது. சர்வாதிகாரிகள், மன்னர்கள் இருந்தாலென்ன, இல்லையானால் என்ன அமெரிக்காவின் நலன்கள் (எண்ணெய் வர்த்தகத்தின் மீதான ஆதிக்கம்) பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதிலே வெள்ளை மாளிகைக்குக் கவலை. அந்தக் கவலை அமெரிக்கா ஆட்சியாளர்களைப் பல வகைகளில் யோசிக்க வைக்கிறது; பேச வைக்கிறது.

தனது உறுதியான ஆதரவாளரான எகிப்து அதிபரைக் காப்பாற்ற முடியாமல் போனது அமெரிக்காவிற்கு வருத்தம். அதனால் ஒரு காலத்தில் தனது உறுதியான எதிரியாக இருந்த கடாபி மீது கோபத்தைக் காட்டுகிறது. டுனிசியா இலாபமும், நட்டமும் இல்லை என்ற நிலையில் அதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லை. ஏமன், பஹ்ரைன் மன்னர்கள் அமெரிக்காவின் நல்ல நண்பர்கள். நல்ல நண்பர்களுக்கு வந்த ஆபத்து தனக்கே வந்தது போன்று எண்ணி வருந்திக் கொண்டு இருக்கிறது அமெரிக்கா. அங்குள்ள போராட்டக் காரர்களை நிதானமாக நடந்து கொள்ள அறிவுரை கூறியிருக்கின்றது.

உலக ஊடகங்களும், உள்நாட்டு ஊடகங்களும் இந்தப் புரட்சி டிவிட்டராலும், பேஸ்புக்குகளாலும் நடந்தது என்கிற மாதிரி செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது. டுனிசியா, எகிப்து, ஏமன், பஹ்ரைன் போன்ற நாடுகளில் சிறிதளவும் பேச்சு, எழுத்து சுதந்திரமில்லை. போராட்டங்கள் வெடித்த போது, அங்கு நடந்தவற்றை வெளியில் சொல் வதற்கான வழிகள் முடக்கப்பட்டன. அந்த வேளையில் இணையப் பக்கங்களில் எழுதும் தன்னார்வலர்களின் முன்முயற்சியாலேயே செய்திகள் வெளியுலகிற்குத் தெரிந்தன. படித்த நடுத்தர வர்க்க மக்கள் ஏழை எளிய மக்களுடன் இணைந்து வீதிகளில் இறங்கி விட்டனர். போராட்டங்கள் மிக வலுவடைந்துவிட்டன. இன்று இந்த நாடுகளில் உள்ள மக்கள் தங்களுக்கு ஐரோப்பிய மாதிரியிலான ஜனநாயகம், சுதந்திரம், தேர்தல் அமைப்பு முறை, அரசியல் யாப்பு ஆகியவை எல்லாம் வேண்டும் என்று கேட்கின்றனர் என்று செய்திகள் சொல்லு கின்றன. மக்களுடைய விருப்பங்கள் நியாயமானதே. அவர்கள் வெற்றியடைய வேண்டும்.

இதற்கிடையில் லிபியாவில் அமெரிக்கா தன் காலைப் பதித்துக்கொள்ள வேண்டும் என்று தகிடு தத்தம் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. அமெரிக்கா லிபியாவின் போராட்டக்காரர்களுக்கு ஆயுதம் கொடுக்க முன்வந்தது. அவர்கள் வாங்க மறுத்து விட்டனர். தென் அமெரிக்க நாட்டுத் தலைவர்கள் லிபியாவின் அதிபருக்கும், போராட்டக்காரர் களுக்கும் சமாதானம் செய்ய முன்முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் கடாபி ஒரு காலத்தில் நல்ல ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தாராம். ஆனால் இன்று சொந்த நாட்டின் செல்வத்தைத் தன் செல்வமாக்கிக்கொண்டு இருக்கும் கடாபி சமாதானம் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. மக்கள் குரலுக்குச் செவி சாய்க்க விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் மோதிப் பார்த்து விடலாம் என்ற வகையில் போராட்டக்காரர்கள் மீது - தன் சொந்த நாட்டு மக்கள் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

நம் தோழர்களில் சிலர் கொடுங்கோலர்களை விரட்டிவிடும் அரபு மக்கள் ஏகாதிபத்தியங்களைத் தடுத்து நிறுத்துவார்களா? என்று கேள்வி கேட் கிறார்கள். அரபு மக்கள்தாம் கடந்த காலங்களில் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடியிருக் கின்றார்கள். இப்போதும் அவர்கள்தாம் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களால்தான் அதைச் செய்ய முடியும். கொடுங்கோலர்களால் ஏகாதிபத்தியத்தைத் தடுத்து நிறுத்திவிட முடியுமா...? வேறு சிலர் இப்போது நடக்கும் போராட்டத்தில் ஏற்படும் மாற்றம் வெறும் ஆள் மாற்றமாகத்தான் இருக்கும் என்று ஆரூடம் கூறுகின்றார்கள். அடிப்படையில் ஒரு சமூக மாற்றமாக - ஏகாதிபத்திய, உள்நாட்டு சுரண்டல்களை ஒழிக்கும் சமூக மாற்றமாக இராது என்பது அவர்கள் வாதம். இந்த வாதத்தில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. ஆனால் கொடுங்கோல் மன்னர்களையும், சர்வாதிகாரிகளையும் உலகில் இல்லாதொழிக்கும் போராட்டம் உடனே முடிந்து போய்விடாது. இது நல்வாழ்விற்கான போராட்டத்தின் தொடக்கம். அதனால் அரபுலகில் போராட்டத் தீயை மூட்டியுள்ள நம் சோதரர்களுடன் இணைந்து நிற்போம். நம் இதயங்களை அவர்களின் இதயங் களின் அருகில் வைப்போம்.

Pin It