பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான ‘சிறுபாணாற்றுப்படை’ வாயிலாக அறியப்படும் தமிழர் பண்பாட்டினை இக்கட்டுரை காணவிழைகிறது. தற்கால மரபிற்கேற்ப தமிழர்தம் பண்டைய வாழ்வு முறையைப் பல கோ™ங்களில் மாற்றிச் சிந்திக்கவும் ஆங்காங்கே களம் காணப்படுகிறது. கலைஞர் களாகிய வெகுசனப் பண்பாடும் மன்னர்களாகிய உயர்சனப் பண்பாடும் கைகோத்துச் செல்லும் போக்கு வியக்கத்தக்கது.

‘சிறுபாணாற்றுப்படை’ 269 வரிகளைக் கொண்ட இடைப்பட்ட பாடலாகும். வரலாற்றுக் கருவூலமாகவும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் சிறப்பாக வெகுமக்கள் பண்பாட்டுப் பேழையாகவும் இவ்விலக்கியம் காணப்படுகிறது. ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் என்ற சிற்றரசனைப் பற்றிப் பாடப்பட்டுள்ளது இந்நூல். ஓய்மாநாட்டின் சிற்றரசன் என்ற செய்தியாலும் அவன் ஆட்சிச் சிறப்பாலும் பண்பாட்டுச் சிறப்பாலும் பெரும் பேரரசன் என்பதும் பெறப்படுகிறது.

இந்நூலாசிரியர் ‘நல்லூர் நத்தத்தனாரின்’ கோணம் மிகவும் மாறுபட்டு ‘நல்லியக்கோடனை’ பாட்டுடைத் தலைவனாக்கி, சேர சோழ பாண்டிய மூவேந்தர்களையும், பாரி முதலிய கடையெழு வள்ளல்களையும் துணைத் தலைவர்களாக்கியுள்ளது வித்தியாசமானது. தமிழக அரசியலில் ஒளிவட்ட மிட்டுக் காட்டப்படாத ஓய்மா நாட்டையும், நல்லியக் கோடனையும் புகழ்ந்து பாடியுள்ள பல்சுவை மிகுந்த நூல் சிறுபாணாற்றுப்படையாகும். இந்நூல்வழி தமிழர் பண்பாட்டை மிகத் தெளிவாக அறிய இயலுகிறது. மண்ணை ஆண்ட மன்னர்கள் புகழை விரும்பிப் பழியை (இழிவை) வெறுத்தார்கள். எவையெல்லாம் வாழ்க்கையில் புகழ்தரும் நெறிகள் என வகுத்தறிந்து அவற்றையே விரும்பினார்கள்.

ஒருவர் (ஒரு கூட்டம்) மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே தமிழர் பண்பாடாக இந்நூல்வழி பெறப்படுகிறது. இப்பண்பு வெளிப்பாட்டின் மொத்த வடிவமே ‘ஆற்றுப்படை’ என்ற தமிழிலக்கிய வகையாகும். ‘சிறுபாண்’ கொண்டு இசைப்பவன் சிறுபாணன். இசைக்கருவியை இசைத்துக்கொண்டே பாடுபவன் சிறுபாணன். இதனை, “பொன்வார்ந்தன்ன புரியடங்கு நரம்பி / னின்குரற் சீறியாழ் இடவயின் தழீஇ” (34, 35) என்பதனால் அறியலாம்.

கடையெழுவள்ளல்களாகிய பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகிய குறுநில மன்னர்களின் ஈகைச் சிறப்பினையும் இந்நூலாசிரியர் நல்லூர் நத்தத்தனார் 29 வரிகளில் (சிறுபாணாற்றுப் படை 84 - 113) எடுத்துக் கூறியுள்ளார். இவர்களைப் பற்றியெல்லாம் சிறப்பித்துவிட்டு அவர்கள் அனை வரையும் விட மேலாக ‘நல்லியக்கோடன்’ சிறந்த ஈகைப்பண்பு மிக்கவன் என்று உயர்த்திக் கூறி யுள்ளார். இவனுடைய ஈகைச்சிறப்பை மிகுத்துக் கூறுவதற்காக அவன் காலத்தைச் சார்ந்த மற்ற மன்னர்களையும் அவர்தம் சிறப்புக்களையும், அவர் தம் நாட்டு வளங்களையும் கூறி ஆசிரியர் அவர்தம் அறிவுத்திறத்தையும், வரலாற்று நோக்கையும், ஒப்பியல் அணுகுமுறையையும் அழகுறப் புலப்படுத்தியுள்ளார். கடையெழு வள்ளல்களின் ஈகைத்திறத்தை மிகுத்துச் சுட்டிவிட்டு அவர்கள் எழுவரின் ஒட்டுமொத்த முழுவடிவாக நல்லியக்கோடன் பெருத்த ஈகைத் திறம் உடையவனாக விளங்குகிறான் எனச் சிறப் பிக்கிறார். “பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழைத் தடக்கைப் / பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை / நல்லியக் கோடனை” என்று நல்லியக்கோடன் சிறப்பிக்கப்படுகிறான்.

இசைக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை போன்ற பல்வேறு கலைகளைப் பற்றியும் கலைஞர்களைப் பற்றியும் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. கலைஞர்களையும் மன்னர்களையும் இணைக்கும் இலக்கியமே ஆற்றுப்படை இலக்கியம். மக்களையும் மன்னர்களையும் இணைக்கும் ஒரு குடியரசு ஊடகமாகவே திகழ்கின்றன இவ்விலக் கியங்கள். மன்னர்களும் பல்வேறு கலைகளை ஆதரித்து ஊக்குவித்து, பொழுதுபோக்கி மகிழ்ந்தனர். “ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற்” (70), “பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை” (125), “வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த” (136), “அமிழ்து பொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற் / பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்விக் / கூடுகொ ளின்னியங் குரல்குர லாக / நூனெறி மரபிற் பண்ணி யானாது” (227 - 230), “கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி / யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு / மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்” (257-259) ஆகிய வரிகள் ஓவியம் பற்றியும், ஓவியர்குடி என்று ஒரு குடியே இருந்தது பற்றியும் (122), பல இசைக்கருவிகளை இசைத்தல் பற்றியும், கிணை, பறை பற்றியும், நரம்புக் கருவிகள் இசைத்தல் பற்றியும், பாடல் கலை பற்றியும், தேர்கள் செய்கிற தச்சர்கள் பற்றியும், அதையோட்டும் பாகர்கள் பற்றியும், பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

கலைஞர்கள் ஒருங்கிணைந்து பெரிய குடும்பமாக, சுற்றங்களோடு சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து தம் திறமையை வெளிப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இடம் பெயரும் குழுக்களாக, இனக்குழுக்களாக, ஆதரவு தரும் நல்லுள்ளம் கொண்ட மன்னர்களை அடையாளம் கண்டு பலகாத தூரம் பயணம் செய்யும் ‘பயணிகள்’ அக்காலக் கலைஞர்கள். கூட்டமாகவே வறுமையையும் வளமையையும் அனுபவித்தார்கள். இதனை, இரும்பே ரொக்கலோ டொருங்குடன் மிசையு / மழிபசி வருத்தம் வீடப்பொழிகவுட் (139-140), நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த / மகாஅ ரன்ன மந்தி மடவோர் / நகாஅ ரன்ன நளிநீர் முத்தம் / வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித் / தோள்புற மறைக்கு நல்கூர் நுசுப்பி / னுளரிய லைம்பா லுமட்டியர் ஈன்ற / கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும் (55-61) என்ற வரிகள் உரைக்கின்றன. மேலும் விலங்குகளிடம் அன்புடையவர்களாக அவற்றைப் பேணி வளர்த்து வந்தனர். குட்டிக் குரங்குகளின் சுட்டித்தனங்களுடன் அவற்றை அழகுபடுத்தி மகிழ்ந்தனர்.

மன்னர்கள் தங்கள் ஆட்சி எல்லையை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும், ஆட்சியைக் காப்பதில் கவனம் செலுத்தியும் வந்தனர். அறிவுடன், அன்புடன் அரசு நடத்தி வந்தனர். வீரத்திலும், கொடையிலும் சிறந்துவிளங்கினர் என்பதனைக் கீழ்க்காணும் வரிகள் நன்கு விளக்கும்.

“நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய” (82), “பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண” (87), “பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி” (91), “கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்” (95), “ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்” (99), “வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே” (103), “நளிமலை நாட னள்ளியு நளிசினை” (107), “காரிக் குதிரைக் காரியொடு மலைந்த” (110), “வோரிக் குதிரை யோரியு மெனவாங்” (111), “உறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்” (122), “ஆனா விருப்பின் தானின்றூட்டி” (245) , விழாக்கள் அடிக்கடி நடை பெற்றன. மக்களை மகிழ்விக்கவும், இணைக்கவும், ஒன்றுபடுத்தவும் விழாக்கள் கொண்டாடப்பட்டன. இறைநம்பிக்கையுடைவர்களாகவும் மக்கள் வாழ்ந்தனர். இதனை, “நீறாடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்” (201), தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே” என்ற வரிகளால் அறியலாம்.

மன்னர்களின் வெற்றியும் விழாக்களாகக் கொண்டாடப்பட்டன. மன்னர்கள் அறவழியில் வாழ்வியல், விழுமியங்களோடு, குறிக்கோள்களோடு வாழ்ந்தனர். இதனை, “செய்ந்நன்றியறிதலுஞ் சிற்றினமின்மையு / மின்முகமுடையமையு மினிய னாதலுஞ்..... / வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்” (207-217) ஆகிய வரிகள் மன்னர்தம் மாட்சி கூறுவன.

பெண்கள் தங்கள் இல்லத்து ‘அரசி’களாக விளங்கினர். பெண்கள் நன்கு மதிக்கப்பட்டனர். தற்காலப் பெண்கள் நிலையைவிட அக்காலப் பெண்கள் சுதந்திரமாகவும், மேன்மையுடனும் காணப் பட்டனர். ஆண்களும், பெண்களும் பல்வேறு வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களை அணிந்திருந்தனர். அழகான ஆடைகள் அணிந்து இருந்தனர். இதனை “காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்” (236) என்ற வரி கூறுகிறது. நல்ல உணவுகளைச் சமைத்து உண்டனர். சமையல் வல்லவர்களாக விளங்கினர். இதனை, “பூவிரி கச்சைப் புகழோன் தன்முன் / பினவரை மார்பன் பயந்த நுண்பொருட் / பனுவலின் வழாஅப் பல்வேறடிசில் (239-241) என்ற பகுதி வாயிலாக அறியலாம். இங்கே ‘பீமன் பற்றிய புராணச் செய்தியும் இடம் பெறுகிறது.

வஞ்சி (50), மதுரை (65), உறந்தை (83), நன்மாவிலங்கை (120, வேலூர் (173), ஆமூர் (188), மூதூர் (201) ஆகிய ஊர்கள் மக்கள் வாழுமிடங் களாகக் குறிக்கப்பட்டு ஒவ்வொரு ஊரும் வாழ்வு முறையில் தனித்தன்மையுடையதாய், விருந்தோம் பலும், ஈகைப்பண்பும்மிக்க மக்கள் நிறைந்ததாய்க் காணப்பட்டன. உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடு இன்றி ‘கொடுப்பவர்’, கொடுக்கப்பட்டவர் ‘புரவலர்’, ‘கலைஞர்’ என்ற நிலையே காணப்பட்டது. ஈத்துவக்கும் இன்பம் மிகச் சிறப்பானதாகக் கருதப்பட்டது. மன்னரும், மக்களும், கலைஞர்களும் - அனைவருமே ஈகைத் திறம் கொண்டு அதில் மகிழ்வு கண்டவர்களாகவே வாழ்ந்தனர். வாழ்வியல் நெறிகளை வளர்த்து அன்பும் ஒருமைப் பாங்கும் கொண்டு கலைகளில் வல்லவர்களாக, இயற்கையோடியைந்து வாழ்ந்தவர்களாக, தமிழ் மரபு காத்தவர்களாக சுற்றத்துடன் விருந்தோம்பி விலங்கினங்களையும், தாவரங்களையும் நேசிப் பவர்களாக, உழைத்து, அழகுபடுத்திச் செம்மையான செம்மாந்த வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

Pin It