இலக்கிய வானத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனப் பரந்துபட்ட தளத்தில் ஒளி பாய்ச்சி வருகின்ற எழுத்தாளர் சூர்யகாந்தனின் சமீபத்திய நூல்களில் ஒன்றான “பயணங்கள்” சிறுகதைத் தொகுதி மனிதன், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கின்ற பல்வேறு வகையான அனுபவங்களை மிக அழகாகவும், நுட்பமான பார்வையோடும் கொண்டு விளங்குகின்றது.

கால்நடைப் பயணத்திலிருந்து கட்டை வண்டி, சவாரி வண்டி, பயணம், பஸ் பயணம், ரயில் பயணம், விமானப் பயணம் வரையிலுமே மனிதர்களே மையப் பொருட்களாய் இருக்கின்றனர். இரவு பகல் பேதமின்றி இந்தப் பயணங்கள் ஓய்வொழிச்சல் இல்லாமல் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.

இந்தத் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் தரமாக அணிவகுக்கின்றன. முதல் கதையான பயணங்களில் வருகின்ற ரஹ்மானின் மனைவி, மகள் பணத்தாசை கொண்டு பகட்டான வாழ்க்கை முறையால் அவஸ்தைப்படுவதை நேரிடையாகச் சந்திக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது கதையான “எதிரெதிர்க் குணங்கள்”

இந்தக் கதையைப் படிக்கும், அன்னூரிலிருந்து 45 சி பேருந்தில் ஏறி காந்திபுரம் வரை பயணித்த உணர்வே ஏற்படுகின்றது. நகர்ப்புறப் பேருந்துகளில் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஏறுவதும் சன்னல் வழியாகத் துண்டுத்துணிகளைப் போட்டு இடம்பிடிப்பதும் அது கிடைக்காத போது எழும் மன உளைச்சல்களும் கோபம் தணியும் போது உண்மைத் தன்மையை உணர்ந்து வருந்துவதும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள். இதனை ஒரு முதியவரையும் இளையவரையும் இணைத்துக் காட்டி இறுதியில் சண்டை நீங்கி அப்பாவும் மகனும் போல உறவாடிப் பிரியும் காட்சி கிராமத்து மக்களின் கள்ளமில்லா உள்ளத்தை வெளிக் காட்டுகிறது.

மூன்றாவது கதையான சில நெஞ்சங்களில் சில கௌரவங்கள்

இது,

உக்கடத்திலிருந்து கந்தே கவுண்டன் சாவடி வரையிலும் செல்லும் பேருந்தில் பயணித்த பயணிகளின் உரையாடல்கள் வழி காலையிலும் மாலையிலும் பேருந்தில் ஏறினால் கூட்டம் மிகுதியாக இருக்கும். நிற்பதற்குக்கூட இடம் கிடைக்காது. அதனால் மதிய வேளையில் தான் பேருந்திற்கு வரவேண்டும் என்பதைக் கூறுகிறது. மேலும் போலி கௌரவங்கள் எவ்வாறெல்லாம் வெளிப் படுகின்றன என்பதை,

அந்தப் பேருந்தில், டிக்கெட்டே வாங்காது தன் மகளுடன் பயணம் செய்த போது, தான் வாங்க மறந்ததை ஒப்புக்கொண்டால் நடத்துநரும் பேருந்தில் உள்ளவர்களும் கேவலமாக நினைப்பார்களென்று வாங்கியதாகவே நடத்துநரிடம் வாதிடும் பெண் மணியின் மனநிலையைக் காண்கிறோம். நடத்துநர் எவ்வளவு போராடியும் வாங்கியதாகவே சாதிக்க, இல்லையென மறுத்த நடத்துநரோ, நானாவது அதற்குரிய காசைப் போட்டுக் கொள்ளுகிறேன். இந்தா பிடி 2 டிக்கெட்டை. செக்கிங் வந்தால் நான் தான் மாட்டுவேன் எனக் கூறி டிக்கெட்டைக் கொடுத்த பின் வேண்டா வெறுப்பாக அவள் காசைக் கொடுக்கிறாள். ஆனால் அடுத்த நிறுத்தத்திலேயே செக்கிங் வந்து டிக்கெட்டைக் கேட்க அந்தப் பெண் 2 டிக்கெட்டுகளைக் கொடுத்துவிட்டு இறங்கிச் செல்லும் போது “ஏம்மா நீ அந்தக் கண்டக்டர் கிட்டே டிக்கெட் வாங்கீட்டே பொய் சொன்னே, நீ வாங்கியிருந்தா நான் அப்பவே அங்கேயே வாதாடியிருப்பே! ஆனா நீ வாங்காததாலே தான் நான் அமைதியா இருந்திட்டே” என மகள் கேட்க,

கவனக் குறைவால் வாங்க மறந்திட்டேன். திடுதிப்னு அவங்க கேட்டப்பத்தான் ஞாபகம் வந்தது! அத்தனை பேருக்குள்ளே திருதிருன்று முழிச்சிட்டிருந்தா கேவலமில்லெ! அதுக்குத்தான் அப்படிப் பேசினேன்! என்று நியாயப்படுத்திப் பேசியதை மகள் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த மாதிரி போலி கௌரவங்கள் நியாயமான நேர்மையான நடத்துநர்களின் வாழ்க்கையையே சீர்குலைக்கும். இளைய தலைமுறையாவது உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்னும் ஒழுக்கத்தைக் கற்பிக்கிறது இந்தக் கதை.

நான்காவது கதையான “இழப்புகள்”

கோபால் என்ற பாத்திரப் படைப்பின் வழி பேராசை பெரு நஷ்டம், மனித மனம் ஒரு குரங்கு, தன்வினை தன்னைச் சுடும் என்ற நியதிகளைச் சுட்டிக் காட்டி மணிப் பர்ஸை இழந்தவருடைய மனதின் வலி என்ன என்பதைத் தானும் உணர்ந்த தன்மையைக் காட்டிப் பிறருடைய பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்படக்கூடாது என்பதை வலி யுறுத்துவதாக அமைந்துள்ளது இக்கதை.

ஐந்தாவது கதையான “ஒரு பகல் நேரப் பஸ் ஸ்டாண்டில்”

ஓர் உச்சி மதியத்தில் ஒரு விவசாயி பேருந்துக் காகப் பட்டபாடு ஆம், ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே சோமனூரிலிருந்து புறப்பட்டு பூலுவபட்டி சந்தையில் தம் மஞ்சிக்கயிறு வகை யறாக்களை விற்றுவிட்டுக் கிடைத்த பணத்துக்கு விதை உளுந்து 20 லிட்டர் வாங்கி கோணிச்சாக்கில் கட்டிக்கொண்டு கிடைத்த பேருந்தில் தொத்திக் கொண்டு பேரூர் செட்டிபாளையம் வந்திறங்கி கோயமுத்தூர் வர பேருந்துக்காகக் காத்துக் காத்து நின்று வந்த பேருந்துகள் அனைத்தும் ஏற முடியாமல், நிறுத்தாமல் போக மனம் நொந்த காத்தமுத்து என்னும் விவசாயியின் கதை.

சிறிய சிறிய மூட்டைகளைத் தோளில் சுமந்து கொண்டு பேருந்தில் ஏற முடியாமல் தவிக்கும் தவிப்பு, எப்படியோ முட்டி மோதி ஏறினாலும் நடத்துநரின் அதிகாரப் பேச்சினால் ஏச்சினால் மனம் நொந்து பயணிக்கிற ஏழை மக்களின் நிலையை இக்கதை கண்ணாடி போல் காட்டு கின்றது.

இந்த அவல நிலை இனி மேலாவது நீங்கட்டும்!

ஆறாவது கதையான சில நியாயங்கள் - உண்மையின் உரைகல்

இரயிலில் டிக்கெட் பரிசோதகரின் அறியாமை, கண்டிப்புத்திறன், உண்மையை உணராத பிடிவாதத் தன்மை மன்னார் போன்ற கூலித் தொழிலாளர் களின் எதார்த்தமான சொற்களால் சுவடு தெரியாமல் அகல்வது நாள்தோறும் இரயில் நிலையங்களில் நாம் காணும் காட்சியே!

ஏழாவது கதையான ஒரு இரவும் ஒவ்வொரு இரவும்

குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு தம் குழந்தைகள் நலனுக்காக ஓடாக உழைத்துத் தேய்ந்த பெண்ணை அவர் கணவன் குடித்துவிட்டு அடித்துத் துன்புறுத்துவதும் அவள் உருக்குலைந்து போவதும் நாள்தோறும் அக்குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள். என்றாலும் காவல்துறையினர் தம் வீட்டருகே வந்த போது கணவனைக் காட்டிக் கொடுக்காது காப்பாற்றி, கஞ்சி காய்ச்சும் அப்பெண்ணின் பெருமைக்கு நிகருமுண்டோ?

கள்ளானாலும் கணவன்!

ஃபுல்லானாலும் புருஷன்!

எட்டாவது கதையான “இரு கிராக்கி ஒரு கிழிசல்”

சென்னை ரிக்ஷாக்கார முனியனைப் போன்ற பேராசை பிடித்த ஏமாற்றுக்காரர்களுக்கு கொங்கு நாட்டுத் தம்பதியர் தந்த கிழிசல் நோட்டு ஒரு படிப்பினை.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”

ஒன்பதாவது கதையான “ஊர்ப்புறத்தில்”

படிக்காத பாமரனாக வரும் மருதப்பனின் பேச்சும் செயலும் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த ராமசாமிக்கு மருந்தாய் அமைந்து வயிற்று வலி போனது. ஆனால் இச்சிறுகதை களைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் சிரித்துச் சிரித்து வயிற்று வலி வரும்!

“இங்கிலிபீச்சு, எல்லாப் பாஷையிலேயும் எழுதறபேனா, சேட்டு ஐஸ், கெவர்மெண்டுக்கு ரெண்டு திக்கிட்டு குடு” அப்பப்பா இந்தச் சொற் களுக்கு எந்த அகராதியிலும் பொருள் காண இயலாது! இராமசாமியைத் தவிர!

பத்தாவது கதை ஈரத்துக்கு நிறமில்லை

குற்றால அருவியில் குளிக்கச் சென்ற கோவை நண்பர்கள் சங்கர் பாலு இருவரும் கருணை உள்ளங் கொண்டு உதவிய செயலுக்குச் சிறுவனிடமிருந்து கிடைத்த பரிசோ ஏமாற்று வித்தை.

மக்களே போல்வர் கயவர்!

வள்ளுவப் பெருந்தகையின் வியப்பும் வினாவும் நம்மையும் உணர வைக்கிறது.

விழிப்போடு இருப்பது நம் கடமை என உணர்த்துகிறது இக்கதை.

பதினொன்றாம் கதை பதிலடிகள்

குப்புசாமி என்னும் பாத்திரப் படைப்பின் வழி ஒரு ஆண்மகன் எவ்வாறு வாழ வேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவதாக அமைந்து உள்ளது இச்சிறுகதை.

குப்புசாமி புறத்தே ஊனமுள்ளவன். ஆனால் அகத்தே ஆண்மையுள்ளவன். தன்மானமுள்ள இவன்தான் உண்மையான வீரம்மிக்க ஆண்மகன். அவன் மாமனார் மற்றும் அவன் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்கள் அனைவரும் கோழைகள். மாமனார் வீட்டில் கொடுக்கும் நகைகளையும் பணத்தையும் பெற்றுப் பெருமை பேசி வாழும் மருமகன்களுக்கெல்லாம் இக்கதை ஒரு சாட்டையடி!

பன்னிரண்டாம் கதை “படிப்பு” என்னும் தலைப்பிலானது. இதிலே. முனிசிபாலிட்டியில் குப்பை அள்ளிக் கொட்டும் பணியாளரான மாரி தன் மகளைத் தான் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை, பேத்தியை யாவது நல்ல ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமென்ற தன் கனவை நனவாக்கினான். பெற்றோர்கள் பட்டதாரிகளாக இருந்தால் தான் மிகப்பெரிய ஆங்கிலப் பள்ளியில் இடம் கிடைக்கும் என்றாலும் மாரியோ தன் அதிகாரி ஒருவரின் உதவியால் பள்ளியில் இடம்பிடித்துவிட்டான்.

பேத்தி விமலா படித்து மிகப்பெரிய பணியில் அமர்ந்து வாழவேண்டுமென நினைத்த தாத்தா, அவளுக்காக ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸை வாங்க அலைந்ததைப் படிக்கும் போது ஒவ்வொரு தாத்தாவும் தம் பேத்திகளுக்காக அலைவதைக் கண்முன்னே நிறுத்துகிறார் ஆசிரியர்.

மேலும் முதல்நாள் கிடைக்கவில்லையென்றாலும் அடுத்த நாள் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்னரே அவளிடம் சேர்த்தபோது, அரைக்கால் டவுசரும் காக்கி நிறச் சட்டையும் அணிந்திருந்த அந்த வயோதிகரை, வகுப்பறையில் நின்று கொண்டே தன் தாத்தா இல்லையெனச் சொல்லும் பேத்தியை என்னவென்று சொல்ல!

தன் வாழ்க்கையே பேத்திக்காக எனக் கனவு கண்டு ஓடாய் உழைத்து மாதமொரு முறை சரியான நேரத்தில் படிப்பதற்காகப் பள்ளிக்குப் பணம் கட்டிப் பெருமை கொள்ளும் ஏழைத் தாத்தாவின் (மாரியின்) அவலநிலை வேறு எந்தத் தாத்தாவுக்கும் வரக்கூடாது.

புறத்தோற்றத்தை வைத்து மட்டுமே பிறரை மதிப்பீடு செய்யும் குணம் இளைய தலைமுறை யிடம் மாற வேண்டும். உண்மையன்பினை உணர வேண்டும் என்பதை மிக அழகாக சித்திரித்து உள்ளார் ஆசிரியர் சூர்யகாந்தன் அவர்கள்.

படிப்பு! வாழ்க்கைப் படிப்பு!

மொத்தத்தில் “பயணங்கள்” ஊர்தோறும்

உள்ளங்கள் தோறும் பயணிக்க வேண்டும்!

உலகம் நலம் பெற வேண்டும்.

பயணங்கள்

ஆசிரியர் : சூர்யகாந்தன்

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.40.00

Pin It