தமிழிலக்கியப் பரப்பில் ஆழங்கால்பட்டவரும், கவிதை, நாடகம், சிறுகதை, மேடைப் பேச்சு, தமிழாய்வு எனத் தமிழின் எல்லா நிலைகளிலும் தம் இருப்பை அழுத்தமாக நிரூபித்தவருமான கலைமாமணி பேரா. கரு. நாகராசன் அவர்கள். அண்மையில் எழுதி வெளியிட்ட படைப்பே இராமானுச மாமுனிவர் காவியம்.

karu nagarasan bookபேரா. கரு. நாகராசன் அவர்கள் தாம் எதற்காக இராமானுஜர் மீது காவியம் படைக்க வேண்டுமென்ற காரணத்தை வெளிப்படுத்துகையில், “மானுடப் பிறவியைக் கடக்கும் பக்திப் பாலம் அமைத்திட்ட அற்புதர். பேதமில்லாமல், எல்லா உயிர்களிலும் பகவானைக் கண்ட மனிதாபிமானி மகான் இராமானுசர்" (ப.15) என்கிறார்.

இக்காவியம் திருப்பெரும்புதூர் காண்டம், திருக்கச்சிக் காண்டம், திருவரங்கக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் தொண்டை மண்டலப் படலம் தொடங்கி உடையவர் திருநாடு அடைந்த படலம் ஈறாக 53 படலங்களால் ஆகியுள்ளது.

காவியம் படைக்கும்போது எழும் இடர்ப்பாடுகள் ஏராளம். வரலாற்றை மாற்றி விடுதல் கூடாது; அதே வேளையில் கவித்துவம் சிதையவும் கூடாது என்கிற கடப்பாடு படைப்பாளனுக்கு கடிவாளமிட்டு விடுகிறது. எனவே, தண்டவாளத் தடமென மிகாமலும் குறையாமலும் பயணிக்க வேண்டிய கட்டாயமும் படைப்பாளருக்கு இருப்பதால் நேரும் இன்னல்கள் சொல்லி மாளாதவை.

சமகால வரலாற்றையே திரித்தும் மறுத்தும் தம் கருத்துகளை உட்செலுத்தியும் படைக்கின்ற இன்றைய சூழலில், ஆயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றைப் படைப்பதில் நேருகின்ற சவால்கள் சொல்லில் அடங்காதவை. தகவல் திரட்டல் - அதன் உண்மைநிலை - சரிபார்த்தல் என இடர்ப்பாடுகள் மிகுந்திருக்கும். அத்தகைய சவால்களையெல்லாம் நுட்பமாகக் கையாண்டு படைக்கப்பட்ட காவியமே இராமானுச காவியமாகும்.

இந்த நூல் இராமானுசர் பயணம் செய்த இடங்களில் எல்லாம் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. இராமானுச முனிவரின் கண்களால் ஆயிரமாண்டுகளுக்கு முன்னிருந்த சமூகத்தை படம்பிடித்துக் காட்டி வியப்பிலாழ்த்துகிறது

சமூக நலனில் பெரிதும் அக்கறையுடைய பெரியார்கள் எல்லா மதத்திலும் உள்ளனர். அவர்களின் குறிக்கோள் - நோக்கம் யாவும் சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்கள் மேன்மையடைய வேண்டும் - பொது நீரோட்டத்தில் கலக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. மதம்சார்ந்த யாவும் தற்காலத்தில் ஏராளமான வாத - பிரதிவாதங்களுக்கு அடித்தளமிடுகின்றது. அதனால் எழுகின்ற காழ்ப்பும் சச்சரவுகளும் நாளுக்குநாள் கூடித் தழைக்கின்றது. சமத்துவத்தைப் பேண வேண்டுமென்று விரும்பி அதுகுறித்துப் பேசுவோரை வரவேற்பதற்கோ அவர்களுக்குரிய இடத்தை வழங்கவோ இச்சமூகம் தயாராக இல்லை. எனவேதான் இராமானுசர் போன்ற சமூகப் பெரியோர்களின் வாழ்வும் பணிகளும் இளையோரிடம் சென்று சேரவேயில்லை. ஆனால், அத்தகைய பெரியோர்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஏங்கித் திரியாமல் தங்களின் செயல்பாடுகளை ஒருபோதும் சுருக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து செயலாற்றினர். அவ்வாறு செயலாற்றியவர்களில் இராமானுசர் குறிக்கத்தக்கவர்.

வைதீகக் குடும்பத்தில் பிறந்து சமூக - சாதிய வேறுபாடுகள் இறுகியிருந்த காலத்தில் அதற்கெதிரான நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர். புத்த பெருமானுக்கும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் இடைப்பட்ட காலத்தில் சமூக மாற்றத்திற்கான அடிச்சுவட்டை சமூகத்திற்கு உருவாக்கி அளித்தவர் இராமானுசர்.

சனாதானம் குறித்த எதிர் கருத்துகள் சமகாலத்தில் வலுத்துள்ளன. அதனை எதிர்ப்போர் தொகையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் இதுபோன்ற ஆதரவு சூழல்கள் வாய்த்திராத காலத்தில் - அதுகுறித்து பேசவும் பயப்பட்ட காலத்தில் அதனைச் செயல்படுத்திய இராமானுசரின் செய்கைகள் வியக்கவைக்கின்றன. அதனை இந்நூல் சுவைபட எடுத்துரைக்கிறது. காலத்தால் பெருமளவு நினைக்கப்படாத கருத்தூன்றிப் படிக்கப்படாத இராமானுசரின் வாழ்வியல் சித்திரத்தை முழுமையாகத் தாங்கியுள்ளது இக்காவியம்.

விரும்புகின்ற அடியாரின் உள்ளமெலாம் கோயிலென

இருக்கின்ற இறைவனையே தொழுவதிலும் வேற்றுமையா!

ஒரு பிள்ளை கோயிலுக்குள்; மறுபிள்ளை வீதியிலே.

இருவேறு நிலைமையிதை ஏற்கின்ற தெய்வமுண்டோ?

என்கிற பகுத்தறிவுக் கேள்வியை முன்வைத்த இராமானுசரின் உள்ளக் கிடக்கையை அதே பாய்ச்சலுடன் முன்வைக்கப்பட்டுள்ளதை இக்காவியத்தின் பல பாடல்களில் காணமுடிகின்றது. மரபு வழியில் பா புனைய விரும்புவோருக்கும் இந்நூல் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். கருத்தைப் போன்றே இந்த நூலாசிரியரின் நடையும் ஆற்றொழுக்கெனப் பாய்கிறது.

பெரியார், அம்பேத்கர் போன்றோர் அரசியல் தளத்தில் நின்று முன்னெடுத்த சீர்திருத்தங்களை ஆன்மீகத் தளத்தில் நிகழ்த்தியவர் இராமானுசர். இராமானுசர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகள் படைக்கப்பட்டிருப்பினும் இராமானுச மாமுனிவர் காவியம் தனித்து மின்னித் துலங்குகிறது.

ஆற்றொழுக்காகக் கையாண்டுள்ள இந்தக் காவியத்தின் போக்கு - அதன் உவமை - சொல்லாட்சி என எல்லா நிலைகளிலும் செம்மாந்து நிற்கின்றது. மறுபுறம், பாடலுக்கு இடப்பட்டுள்ள தலைப்புகள் கவி நயத்துடன் திகழ்கின்றன. காவியத்தின் போக்கினை அந்தத் தலைப்புகளைக் கொண்டே உள்வாங்கிட ஏதுவாயமைகின்றன. இக்காவியத்தில் நான்குசீர் விருத்தம், அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம், எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம், எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம் போன்ற விருத்தப்பாவின் வடிவங்களை உரியவாறு கையாண்டுள்ளார்.

பொருள் புரியாத பழஞ்சொற்களைக் கையாண்டு படிப்போர்க்கு மிரட்சியளிக்கின்ற சூழலில் எளிய சொற்களால் நிறைவான கவித்துவ அனுபவத்துக்குள் ஆழ்த்துகிறார் படைப்பாளர். தொட்ட இடமெல்லாம் தித்திக்கின்ற சர்க்கரைப் பொங்கலென ஒவ்வொரு வரியிலும் கவித்துவமும் பொங்கி வழிகின்றது.

சமகாலத்தில் தமிழ் யாப்பியலின் நுட்பமறிந்து புனைபவர்கள் அருகி விட்டனர். அந்த வகையில் பேரா. கரு. நாகராசன் அவர்கள் தமிழுலகின் தற்கால பெரும் பேறெனலாம். இக்காவியத்தைப் பெருங்கொடையெனலாம்..

- ஜே.ஜெகத்ரட்சகன், துணைப் பேராசிரியர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

Pin It