11-6-2022 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு. இரா.பூரணலிங்கம் அவர்களின் ‘வாழ்வில் வளம் பெற வள்ளுவம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தோரை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனப் பொதுமேலாளர் தி.ரத்தினசபாபதி அவர்கள் வரவேற்றார்.

இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய மாண்பமை நீதியரசர் ஆர்.மகாதேவன் அவர்கள் நூலை வெளியிட்டார். முதல் பிரதியை எம்.ராஜாராம் ஐஏஎஸ் (ஓய்வு) அவர்கள் பெற்றுக் கொண்டார். முனைவர் மு.ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறினார்.

poranalingam book releaseநீதியரசர் ஆர். மகாதேவன் அவர்கள் ஆற்றிய உரை

நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீட்டு விழாவில் ஆகச் சிறந்த ஆளுமைகளும் அறிஞர்களும் கூடியிருக்கக்கூடிய இந்த நாளில் கலந்து கொள்வதில் ஆகப்பெரும் மகிழ்ச்சி எனக்கு.

வள்ளுவத்தைப் பற்றிய இந்த நூல் ஒரு அரசு அதிகாரியாக மாநில மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றி பல்வேறு நிறுவனங்களில் மூத்த அலுவலராகவும் பணியாற்றி தனக்குக் கிடைத்த அனுபவத்தை திருக்குறளின் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் திரு.பூரணலிங்கம் அவர்கள். இந்த முயற்சியை சாத்தியப்படுத்தியுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன் அவர்களோடும் முதல் நூலைப் பெற்றுக்கொண்ட திரு. ராஜாராம் அவர்களோடும் திரு ஆறுமுகம் அவர்களோடும் வரவேற்புரை நல்கிய பொதுமேலாளர் ரத்தினசபாபதி அவர்களோடும் இந்த விழாவிலே கலந்து கொள்வது உண்மையிலேயே மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கிறது.

அரசுப்பணியிலே இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தான் வகித்த பதவிகளின் அடிப்படையில் தான் அடைந்த அனுபவங்களை எந்தவிதத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பதற்கு இந்த நூல் விடைதரும். டேவிட் டீன் ஷல்மன் எழுதிய ‘தமிழ் எ பயாக்ரபி’ எனும் நூலைப் படித்தபோது அதில் தமிழைப்பற்றி, தமிழ் மொழியைப் பற்றி, தமிழ் மொழியிலே இதுவரை வந்திருக்கக்கூடிய இலக்கியங்களைப் பற்றி, திருக்குறளைப் பற்றி எழுதப்பட்டிருந்த விஷயங்களில் எல்லாம் தனது கவனத்தை செலுத்தியதால் அதனால் ஈர்க்கப்பட்ட திரு பூரணலிங்கம் அவர்கள் திருக்குறளைக் கையிலெடுத்து தன் வாழ்க்கையைத் தான் வகித்த பதவிகள் சார்ந்து அவற்றை இணைத்துப் பதிவு செய்திருக்கிறார்.

ஏன் திருக்குறளைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினால் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து நின்று கால வெள்ளத்தால் அழியப்படாத பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டியது திருக்குறள்.

தமிழிலே எழுதப்பட்டிருந்தாலும் இந்த உலகத்திலுள்ள அனைத்து நாடு சார்ந்த மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியதான ஒரு படைப்பு திருக்குறள். தான் சார்ந்த நாடு, மொழி, மக்கள், இறை, சமயம், சமூகம் போன்ற எந்தக் குறிப்புகளையும் தராமல் உலகத்திலே இருக்கக்கூடிய அத்தனை மாந்தருக்குமே பொருந்தக் கூடியதாக வந்திருக்கக்கூடிய படைப்பு என்று கொண்டால் உலகத்தின் முதல் படைப்பு திருக்குறள் என்றுதான் நாம் பதிவு செய்ய வேண்டும். (கைதட்டல்)

இப்படித் தனக்கான, தான் சார்ந்த அடையாளங்கள் எதுவுமே இல்லாமல் அணுக்கதிர் தத்துவத்தால் இயங்கக்கூடிய இந்த உலகம் சார்ந்த விஷயங்களைக் கையிலெடுத்து மாந்தர்களுடைய மனமாச்சரியத்தை அகற்றி, மனிதர்கள் இப்படித்தான் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற வகைமுறைகளைத் தந்து, இறையைப் பற்றி, நாட்டைப் பற்றி, மன்னனைப் பற்றி, அமைச்சைப் பற்றி, ஒரு நாடு எந்த விதத்திலே தனது மக்களை கண்காணிக்க வேண்டும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும், பராமரிக்கவேண்டும் என்பனவற்றைப் பற்றி, ஒரு அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி, வரிகள் விதிக்கப்பட்டு ஒரு நாட்டினுடைய ஆட்சிமுறை எப்படி செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி, ஒரு நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அனைத்துக் கூறுகளைப் பற்றி...

தனிமனிதன் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், அவனுக்கான இல்வாழ்க்கை எந்தவிதத்திலே சிறக்க வேண்டும், அவனுடைய மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும், மக்களைப் பெற்றவர்கள் அவர்களுக்கான பணியாகக் கருத வேண்டியவை எவை? முறையாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய பணிகள் என்ன? சமுதாயம் சார்ந்த விஷயங்களிலே மனிதர்களுடைய மனம் எந்த விதத்திலே செல்ல வேண்டும்? சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன? நட்பு என்றால் என்ன? எது ஒழுக்கம் என்று அறியப்படும்? அறச்சிந்தனை என்றால் என்ன? அறத்தை ஒழுகக்கூடிய வாழ்க்கையைப் பற்றி இந்த மண் எப்படிப்பட்ட சித்தாந்தங்களைத் தந்திருக்கிறது?

அவற்றிற்கான கூறுகளையெல்லாம் உள்ளடக்கி திருக்குறள் தந்திருப்பதுபோல மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்திருக்கக்கூடிய ஒரு படைப்பு உலகில் இல்லை என்று சொல்லிவிடலாம். அதனால் அந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பூரணலிங்கம் அவர்கள் தனது வாழ்க்கைப் பயணத்திலே ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நூறு திருக்குறள் பாக்களின் மூலமாக நமக்கு இந்த நூலாக மாற்றித் தந்திருக்கிறார்.

திருக்குறள் உரைகள், திருக்குறள் சார்ந்த கதைகளையொட்டிய நூல்கள் என்று நூற்றுக்கணக்கிலே இருக்கின்றன. நானூறுக்கும் மேற்பட்ட உரைகள் வந்திருக்கின்றன. நறிக்குறவர்கள் பேசக்கூடிய வக்ஃபோலி என்ற மொழியில்கூட திருக்குறள் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அரபு மொழியிலே அதனை அற்புதமாக மொழிமாற்றம் செய்த திரு அசோக் இங்கு வந்திருக்கிறார். அற்புதமான மொழிமாற்ற சூழ்ந்த உரைகள் திருக்குறளுக்காக வந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட இந்த திருக்குறளை ஆட்சிபீடத்திலே இருந்த காரணத்தால், ஆட்சி புரியக் கூடியவர்களோடு இணைந்து பயணித்த காரணத்தினாலும் தனக்கே உரித்தான சுதந்திரத்தைக் கையிலெடுத்து தான் பணியாற்றிய பல்வேறு துறைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூறு குறட்பாக்களைத் தேர்வு செய்து இந்த நூலைத் தந்திருக்கிறார்.

அவருடைய முன்னுரையிலே தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் திருக்குறளையும் நீண்ட நாட்களாக நான் படித்தவனில்லை. சமீபத்திலே நான் படித்துப் பார்த்த ‘தமிழ் எ பயாக்ரபி’ எனும் நூலால் தாக்கம் ஏற்பட்டு திருக்குறளைக் கற்று எந்த அளவுக்கு மானுட வாழ்க்கையில் திருக்குறளின் தாக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தினால் இந்த நூலை நான் வடித்திருக்கிறேன் என்று அவர் பதிவு செய்திருக்கிறார்.

இது அவருக்கு மட்டுமல்ல, திருக்குறளைப் படித்துப் பார்த்த உலகம் சார்ந்த அத்தனை விதமான அறிஞர்களுக்கும் ஒரே விதத்திலே தோன்றிய ஓர் உணர்வுதான். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு திருக்குறள். (கைதட்டல்)

ஒரு காலட்டத்திலே மன்னர்கள் நாட்டை ஆண்டுவந்த காரணத்தினால் மன்னர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்? மன்னர்கள் என்றால் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறவர்கள் என்று நாம் பொருள்படுத்திக் கொள்ளலாம்.

ஆட்சியிலே இருக்கிறவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்க வேண்டும்? அரசை செலுத்தக்கூடியவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? என்பதிலிருந்து துவங்கி வரி விதித்தல், விதிக்கப்பட்ட வரியை முறையாக ஈட்டுதல், ஈட்டிய வரியை பகுத்துண்டு பலவழிகளில் பயன்படும் வகையில் அதனைப் பிரித்து செயல்படுத்துதல் என்று ஒரு ஆட்சி நல்லமுறையிலே நடைபெற வேண்டும். அந்த ஆட்சியை நடத்தக் கூடியவர்களுக்கு உடனிருப்பவர்கள் நல்லவர்களாக, அறிவு சார்ந்தவர்களாக இருந்தால் அந்த ஆட்சி சிறந்த முறையிலே நடைபெறும். நல்ல ஆட்சி நடைபெறக்கூடிய ஒரு நாட்டில் வாழக்கூடிய மக்கள் அறச்சிந்தனை உடையவர்களாக வாழ்வார்களேயானால் அந்த மண் சார்ந்த விஷயங்கள் தானாகவே நல்லனவற்றை நாடிச் செல்லும்.

அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழக்கூடிய மக்கள் அவர்கள் சார்ந்த உறவினர்கள் எந்தவிதத்திலே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள், அவர்களுடைய அன்பு சார்ந்த, அறம் சார்ந்த வாழ்க்கை எந்தவிதத்திலெல்லாம் செல்லும் என்பனவற்றையும் பதிவு செய்துள்ளது. இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தால் மனிதனுக்கு இறை என்கிற அடையாளம் தேவையில்லை. இறைவனைத் தாண்டிய ஒன்று இருக்குமானால் அது நல்ல வாழ்க்கையை வாழக்கூடிய மனிதர்கள்தான் என்று திருக்குறளிலே பதிவு செய்ததை உணர்ந்து இந்த நூலினுடைய பகுதிகளை அவர் வகுத்திருக்கிறார்.

அந்தக் காலகட்டத்திலே நாட்டை ஆளக்கூடிய மன்னனுக்கு அறிவுரை சொல்ல வேண்டுமானால் அதற்குரிய மனத்திண்மை உள்ள அமைச்சர்கள் உடன் இருத்தல் வேண்டும்.

இவர் நூலின் முதலாவது எடுத்துக் கொண்ட முதல் தலைப்பே ஒரு மன்னன் எதைச் செய்யவேண்டும்? எதைச் செய்யக்கூடாது? என்ற கருத்து பொதிந்த தலைப்பாக அவர் கையாண்டிருக்கிறார்.

ஒரு சங்ககால புறநானூற்றுப் பாடலைச் சொன்னால் அதிலிருந்து இந்தத் திருக்குறளின் தன்மை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அறச்சிந்தனையில் வாழக் கூடிய ஒரு மன்னன் தன் மக்களுக்கு மட்டுமல்ல, தன்னுடைய நாட்டிற்கும் தன்னுடைய சந்ததியினருக்கும் சேர்த்து மிகப் பெரிய நல்லனவற்றைச் செய்வான் என்பதாக அந்த சங்ககாலப் புலவன் பதிவு செய்கிறான்.

உன்னுடைய வாழ்க்கையிலே நீ சந்திக்கக் கூடியவர்களைப் பற்றி யாரேனும் ஒருவர் ஏதேனும் கூறினால் அதனை அந்த விதத்திலேயே எடுத்துக் கொள்ள வேண்டாம். அதில் இருக்கக்கூடிய உண்மைத் தன்மையை உணர்ந்து, அந்தக் கருத்துகள் எந்த விதத்திலே இருக்கின்றன என்று ஆராய்ந்து தெளிந்து. யாருக்கு எதிராக ஒரு கருத்து சொல்லப்படுகிறதோ அந்தக் கருத்தைக் கூறியவர்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனையைத் தந்து, தண்டனையைப் பெற்றுவிட்ட அந்த மனிதன் தன் தவறை உணர்ந்து உன் எதிரிலே வந்து நின்றால், வழங்க வேண்டிய தண்டனையைக் குறைத்து அன்பு செலுத்தக் கூடியவனாக நீ இருத்தல் வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்த ஒரு புறநானூற்றுப் பாடல் ஊண்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாடியது.

திருக்குறளைப் பற்றிப் பேசுகையிலே பழந்தமிழ் இலக்கியங்கள் சார்ந்த கருத்துகளையும் நாம் பதிவு செய்துதான் ஆக வேண்டும்.

அந்தப் பாடல்

வழிபடுவோரை வல் அறிதீயே;

பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;

நீ மெய் கண்ட தீமை காணின்;

ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி;

வந்து, அடி பொருந்தி,

முந்தை நிற்பின்,

தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே

என்று சொல்லிவிட்டு,

நெய்தலங்கானல் நெடியோய்!

எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!

என்று முடிப்பார் அந்தப் புலவர். இந்தப் பாடலின் பொருள்,

பிறர் மீது சொல்லப்பட்ட பழியை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாதே, யார் யாரைப் பற்றி என்ன சொன்னாலும் அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து அதற்குரிய செயலை நீ செய்தல் வேண்டும். குறையிருப்பின் தண்டனையும் அதனை உணர்ந்துவிட்டால் தண்டனையைக் குறைத்தலையும் செய்யும் நடுநிலைமையான தன்மை உனக்கு இருத்தல் வேண்டும் என்பதாக அந்தப் பாடல் அமைகிறது.

இந்தப்பாடலை வைத்து திருக்குறளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மன்னன் பிறர் சொல்லக்கூடியவற்றைக் கேட்டுவிட்டு அந்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுத்திடல் கூடாது. ஆராய்ந்து பார்த்து தவறு இருப்பின் அதற்குரிய தண்டனையை வழங்கி அந்தத் தண்டனைக்கு உரியவன் செய்த தவறை உணர்ந்து திருந்துகையிலே தண்டனையைக் குறைத்து அவன் திருந்தி வாழ்தலுக்குரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தல் வேண்டும் என்பதாக முடியும் இந்தப் பாடல்.

மனிதர்களுடைய வாழ்க்கையை உணர்ந்துவிட்ட ஒரு மன்னனுக்கு எப்படிப்பட்ட மனிதர்கள் வேண்டுமானாலும் உன் எதிரிலே வரலாம்.

சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,

கூனும், குறளும், ஊமும், செவிடும், மாவும்,

மருளும் உளப்பட வாழ்நர்க்கு எண்பேர் எச்சம்

என்றிவை எல்லாம் பேதைமை அல்லது                                          ஊதியம் இல் என

முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்

அதனால், அறனும் பொருளும் இன்பமும்                                     மூன்றும்

ஆற்றும், பெரும! நின் செல்வம், ஆற்றாமை                               நின் போற்றா மையே!

என்பது அடுத்த பாடல்.

justice mahadevanஎட்டுவிதமான குறைகளைக் கொண்டவர்கள் மனிதர்கள். ஈட்டிவைத்த செல்வங்கள் காணாமல் போகும். எழுப்பிவிட்ட மாட மாளிகைகள் நிலைநிறுத்தக் கூடியவை அல்ல. உங்களால் சாதிக்க முடியும் என்றும் அல்லது சாதித்துவிட்டதாக நினைத்தவையும் எல்லாம் ஒரு காலட்டத்திலே அழிந்துபோகும்.

மனிதர்களாகப் பிறந்தவர்கள் எட்டுவிதமான குறைகளைக் கொண்டவர்களாக இருக்கக் கூடியவர்கள்தான். அப்படிப்பட்டவர்களை நோக்கி கருணை பொங்கும் உள்ளத்தோடு உன்னிடம் இருக்கக்கூடிய, முறையாக ஈட்டிய செல்வங்களை அவர்களுக்கு வகுத்துக் கொடுத்து உன் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியானவர்களாக அவர்கள் வாழக்கூடிய வழிமுறையை நீ தருதல் வேண்டும் என்று அந்தப் பாடல் பொருள் தரும்.

இந்தப் பாடலையொட்டி மனிதர்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரு அரசு இப்படித்தான் தனக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதைப் பதிவு செய்து தனது அடுத்த கட்டுரையை இந்த உதாரணங்களின் மூலமாக வடித்திருக்கிறார் திரு பூரணலிங்கம் அவர்கள்.

சமுதாயத்தின் மீது சிறந்த சிந்தனை உள்ள ஒருவரால் மட்டுமே இந்த விதத்தில் பார்க்க முடியும் (கைதட்டல்).

அரசுக் கட்டிலிலே வந்து அமரக் கூடியவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கம்பன் ஒரு பாடலிலே சொல்வான்.

அரசனுக்கு அமையக்கூடிய அமைச்சன் அனைத்தும் அறிந்தவனாகவும் சிறந்தவனாகவும் இருத்தல் வேண்டும். எப்படியென்று அந்தப்பாடல் கூறும்.

‘உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும்

இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்

சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும்

அமைச்சர் சொல் வழி ஆற்றுதல் ஆற்றலே.

உமைக்கு நாதனாகிய சிவபெருமானுக்கும் மிக உயரத்திலே பறக்கும் உன்னதத் தன்மையுடைய கருடனை வாகனமாகக் கொண்ட விஷ்ணுவிற்கும் நான்கு தலைகளைக் கொண்டதால் எட்டு கண்களுடைய பிரம்மனுக்கும் உடனிருந்து தோள்வலி தாங்கிய தன்மை உடையவர்களாகவே இருந்தாலும், அத்தகைய சிறப்புமிக்க தன்மையை உடைய ஒரு மன்னன் இருந்தாலும் அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே என்று முடியும் அந்தப் பாடல்.

நல்லனவற்றை இதுதான் என்று சொல்லி அந்த வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து அந்த அரசாட்சி சிறந்த முறையிலே நடைபெறுவதற்குரிய வழிகளை சொல்லக்கூடிய அமைச்சனின் உதவி எந்தப் பெரிய மன்னனுக்கும் தேவை, ஆட்சி செலுத்துபவர்களுக்கும் தேவை என்பதாக முடியும் அந்தப் பாடல்.

ஒரு நாடு எப்படி துலங்கவேண்டும், ஒரு மன்னன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கான பாடல்.

இந்தப் பாடல் சார்ந்த திருக்குறளை அற்புதமான கட்டுரையாக இந்த இடத்திலே யாத்துத் தந்திருக்கிறார் திரு பூரணலிங்கம் அவர்கள்.

திருக்குறளின் மேன்மையே மனிதர்களை பயமுறுத்தும் எந்தவிதமான முயற்சியையும் நீங்கள் காண முடியாது என்பதுதான். மனிதர்கள் தங்களை உணர்ந்து, தங்களின் வாழ்க்கையின் தன்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று வாழுகின்ற வாழ்க்கை அறச்சிந்தனை மிக்கதாக மாறுமானால் இறைவனையே கண்டுவிட முடியும் என்பதாகப் பதிவு செய்து, இதுதான் இறை என்று சொல்லாமல் இறைத்தன்மை என்றால் என்ன என்று சுட்டிக்காட்டிய அற்புதத்தை நிகழ்த்தியது திருக்குறள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்

அவன், யார் தெய்வம் என்று சொல்லவில்லை. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று கூறி அந்த தெய்வத்து இணையான வாழ்வை உங்களால் வாழமுடியும் என்று காட்டிவிடுகிறார்.

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

என்றும் அடுத்து சொன்னான்.

இறைவனாலேயே முடியாத விஷயமாக இருக்கட்டும், நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், இறையைக் காட்டிலும் சிறந்தவர்களாக நீங்கள் மாறுவீர்கள் என்று அடுத்த குறளைத் தந்தார் வள்ளுவர்.

இவன் இறையைக் கண்டு பயந்தவனில்லை. வாழ்க்கையில் மனிதர்கள் தங்களை உணர்தல் வேண்டும். சக மனிதர்களை நேசித்தல் வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தக்கூடிய வகையில் ஒரு மனிதன் மாறிவிட்டால் அந்த வாழ்க்கைதான் வாழ்வதற்கான உண்மையான தன்மையுடையது என்பதாகப் பதிவு செய்தது திருக்குறள்.

அதனால்தான்,

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்

பரந்து கெடுக உலகியற்றியான்

என்ற குறளை வள்ளுவன் வடித்தான்.

எந்த ஒரு தனிமனிதன் தன் வாழ்க்கையை நடத்தமுடியாத நிலைமைக்குச் சென்று இரந்துதான் தன் வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிறதோ அந்த நேரத்திலே இவ்வுலகத்தைப் படைத்தவனாக அறியப்படக்கூடிய இறைவனே நீ ஒழிந்து போ என்று இறைவனுக்கு சாபமிட்டு மனிதத் தன்மையை உயர்த்திக் காட்டியவன் வள்ளுவன்.

இதனை அற்புதமான ஒரு கட்டுரையின் மூலமாக மாறுபட்ட தன் பணி சார்ந்த விஷயமாக மாற்றிக் காட்டியிருக்கிறார் திரு பூரணலிங்கம் அவர்கள். (கைதட்டல்)

வாழ்க்கை மனிதர்களை ஒரேவிதத்திலே எடுத்துச் செல்வதில்லை. உறவுகளும் உதவிகளும் உங்களை நாடி வரலாம். தேடி வரலாம். உங்களை விட்டுச் செல்லலாம்.

வள்ளுவன் சொல்லுவான்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

இந்தக் குறளுக்கு இணையான ஒரு சங்கப்பாடல் ஒன்றிருக்கிறது,

பல வரிகளில் பல பக்கங்களில் விளக்கம் தந்து வாழ்க்கையை உங்களுக்கு விளக்குவதற்கான புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதைக் காட்டிலும் இரண்டு வரிகளிலே உங்களுக்கு உங்களைக் காட்டிக் கொடுத்த ஒப்பற்ற படைப்பு திருக்குறள்.

அதனால் ஈர்க்கப்பட்டதால் இவர் நன்றியறிதலை இந்த நூலிலே ஒரு அற்புதமான கட்டுரையாக வடித்துக் காட்டியிருக்கிறார். அந்த சங்கப்பாடல் விளக்கம் இதுதான்.

நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பாலைத் தரக்கூடிய பசுவின் மடியை அறுத்து எறியலாம். கொடும் பாதகமான அந்த செயலுக்கு இயற்கை உங்களுக்கு மன்னிப்பை அளிக்கிறது. கர்ப்பிணியான ஒரு பெண்ணின் கருவைக் கலைத்து விடமுடியும் ஒருவனால். அந்த பாதகச் செயலுக்கும் இயற்கை உங்களுக்கு மன்னிப்பை வழங்குகிறது. கற்றறிந்த சான்றோரை, வாழ்க்கை என்னவென்பதை உணர்த்தி அந்த வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொன்ன மக்களை, அறிவில் சிறந்தவர்களை நீங்கள் அழிக்கலாம். அதற்கும் இயற்கை உங்களுக்கு விடுதலை தருகிறது. ஆனால் உள்ளன்போடு ஒருவன் செய்த நன்றியை மறந்தால் இந்த நிலமே இரண்டாகப் பிளந்து நிற்பினும் அவர்களுக்கு வாழ்க்கையில் உய்வு கிடையாது என்ற அற்புதமான சங்கப்பாடல்.

‘ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,

மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,

................. தப்பிய கொடுமையோர்க்கும்,

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள’ என,

‘நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என,

அறம் பாடின்றே

என்பது அந்தப் பாடல்.

உலகத்தின் இலக்கியங்கள் பல. லத்தீன் அமெரிக்கப் படைப்புகளை நீங்கள் எடுத்துப் பார்த்தால் இலக்கியத்தின் போக்கு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். பின்நவீனத்துவவாதிகள் ஏராளமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள். ஃபூக்கோவை, நீட்சேவை நீங்கள் வாசித்துப் பார்த்தால், அந்த காலகட்டத்திலே வலதுசாரி சிந்தனையாளராக அறியப்பட்ட மார்ட்டின் ஹைடேக்கரின் படைப்புகளை நீங்கள் படித்துப் பார்த்தால் சார்த்தரின் படைப்புகளின் தாக்கங்களை எடுத்துப் பார்த்தால் புரியும், தி கிளீன் வெல் லைட்டட் ப்ளேஸ் (A Clean Well Lighted Place) என்ற எர்னஸ்ட் ஹெமிங்வேயின் படைப்பிலே இருக்கும் வெறுமை எனும் அம்சத்தை எடுத்துப் பார்த்தால் பலவிதமாகச் செல்லும் ஒரு பாடலிலே

“Our nada who art in nada, nada be thy name thy kingdom nada thy will be nada in nada as it is in nada. Give us this nada our daily nada and nada us our nada as we nada our nadas and nada us not into nada but deliver us from nada; pues nada. என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போய்

Hail nothing full of nothing, nothing is with thee என்று முடியும்.

இதனுடைய உள்ளர்த்தம் என்ன?

அந்தக் காலகட்டத்திலே பலரும் சொல்லிப் பார்த்த, தமிழிலக்கியங்களை வடித்துக்காட்டிய பலரது சாராம்சத்தை உள்வாங்கிய வள்ளலார் சொன்னார்,

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று

என்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல

வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து

சும்மா இருக்கும் சுகம்

என்று சொல்லிப் பார்த்தார்.

வாழ்க்கையை உணரக் கூடியவர்கள், தன்னை உணரக் கூடியவர்கள், தங்கள் வாழ்க்கையின் போக்கை உணரக் கூடியவர்கள், உணர வேண்டிய விதத்திலே உணர்ந்து விட்டால் தன்னை உணர்ந்தவர்கள், தன்னிலிருந்து விலகி இறை எனும் ஆனந்தத்தை அடையமுடியும் என்பதை வலியுறுத்தியது உலகப் படைப்புகளிலேயே திருக்குறள் மட்டும்தான். (கைதட்டல்)

திருக்குறளை உள்வாங்கிய காரணத்தினால் பூரணலிங்கம் அவர்கள் நூறு தலைப்புகளை கையிலெடுத்து அறம், பொருள் இரண்டிலும் குறட்பாக்களைக் கையிலெடுத்து நூறு தலைப்புகளிலே ஏதோ பொத்தாம் பொதுவாக சில கதைகளைச் சொல்லிவிட்டு அனுபவங்களைச் சொல்லிவிடலாம் என்ற சிந்தனை இல்லாமல் ஒரு பொறுப்பு மிக்க அதிகாரியாக வாழ்ந்த காரணத்தினால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிகாரம் என்பது அனுபவிப்பதற்கான ஒன்று அல்ல. அதிகாரம் என்பது தான் வாழ்கின்ற வாழ்க்கையையும் மண் சார்ந்த சூழலையும் நேர்ப்படுத்திப் பார்த்தல். அந்தப் பார்வையை தன்னுடைய உள்ளத்திலே இருத்திய காரணத்தினால் அற்புதமான நூறு குறட்பாக்களைத் தேர்வு செய்து அதன் மூலம் தனது மனதை வெளிப்படுத்தி தமிழுக்கும் தமிழ்ப் படைப்புலகத்திற்கும் இந்த மண் சார்ந்த வாழ்க்கைக்கும் தனக்கான நியாயப்பாட்டைப் பதிவு செய்திருக்கிறார் திரு, பூரணலிங்கம் அவர்கள்.

திரு. பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் இந்த மண்ணை மண்ணின் சிறப்பை தொல்லியல் நோக்கில் அற்புதமான ஒரு புத்தகத்தைத் தந்தார். அந்தப் புத்தகத்திலே அவர் கையாண்ட விஷயங்கள் இன்றைக்கும் எத்தியோப்பியாவிலே நீங்கள் பயணப்பட்டால், ஆப்கானிஸ்தானின் ஒரு மூலையிலே இருக்கக்கூடிய ஒரு குக்கிராமத்திற்கு சென்று பார்த்தால், மனித இனம் ஒன்றுபட்ட சிந்தனையையும் ஒரு வாழ்க்கையையும் ஒரு காலகட்டத்திலே கொண்டிருக்கிறது என்பதை அந்த நூலிலே பதிவு செய்திருப்பார்.

அவர் தனக்கான முன்னுரையிலே ‘வாழ்வில் வளம் பெற வள்ளுவம்' எனும் இந்நூல் எந்தவிதத்திலே சிறந்ததாக மாறியிருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார்,

‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று சொல்லிப் பார்த்தது இந்த மண்தான்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்லிப் பார்க்கக்கூடிய பரந்த தன்மை இம்மண்ணைச் சார்ந்தவனுக்குத்தான் இருந்திருக்கிறது.

யார் வேண்டுமானாலும் எந்த விதத்திலேனும் எந்த வாழ்க்கையை வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம். ஆனால் வாழ்க்கையை வாழ்வதற்கு அன்பு நிறைந்த மனமும் அதற்கான சிந்தனைப் போக்கும் தேவை என்பதை, அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்று வள்ளுவன் சொல்லிப் பார்த்ததை அழகான விளக்கங்களோடு இந்த நூலிலே திரு பூரணலிங்கம் அவர்கள் தந்திருக்கிறார்.

நல்ல நூலைப் படிப்பது என்பது படித்து முடித்த பின் அந்த நூல் நமக்குள் எந்தவிதத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஒட்டித்தான் அமையும். எந்த நோக்கமும் இல்லாமல், தனக்கான இருப்பை முன்னிறுத்த வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல், வள்ளுவத்தை உணர்ந்து பார்த்த காரணத்தினால் வள்ளுவத்தின் போக்கு மானுடத்தைத் தவிர, வேறு எந்தத் திசையிலும் இல்லை என்பதையும் உணர்ந்துவிட்ட காரணத்தினால் ‘வாழ்வில் வளம் பெற வள்ளுவம்’ எனும் இந்த நூல் உதித்திருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும் திரு பூரணலிங்கம் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்தைப் பதிவு செய்து இந்த நல்லதோர் வாய்ப்புக்கு நன்றி கூறுகிறேன், வணக்கம்.

- நீதியரசர் ஆர்.மகாதேவன்

எழுத்தாக்கம்: ஜி.சரவணன்

Pin It