உள்ளங்கையில் உலகம் என்பது மிகைப்படுத்தப் பட்டதன்று; உண்மையே! தற்போது வந்து உலகையே ஆட்டிப்படைத்து அச்சுறுத்திய - அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாத் தொற்றே நல்ல சான்று. போக்குவரத்து வசதி, தகவல் தொழில் நுட்பம் போன்றவற்றால் உலகம் சுருங்கிவிட்டது.

உள்ளங்கையில் உலகம் நல்லவற்றுக்காக இருந்தால் பாராட்டலாம். ஆனால் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்னும் உள்ளங்கையில் உலகக் கொள்கைகள் பெரும் நிறுவனங்களின் சுரண்டலுக்கும் அவற்றுக்குத் துணைபோகும் ஏகாதிபத் தியத்திற்கும் மக்களிடம் பதற்றத்தை உருவாக்கி அறுவடை செய்வதற்குமே பயன்படுகின்றன.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனார், எல்லாம் நம் ஊர்; அனைவரும் நம் உறவினர் (யாதும் ஊரே; யாவரும் கேளிர் (புறம்.192) என எவ்வளவு பரந்துபட்டுச் சிந்தித்துள்ளார்!

வயிற்றுக்குள் இருப்பதெல்லாம் கொழுப்பு என நினைக்கும் பிற்போக்குவாதிகள், வலதுசாரிகள் தான் மக்களை நிறத்தாலும் மதத்தாலும் இனத்தாலும் மொழியாலும் பிரித்துப் பார்ப்பார்கள். மக்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களாயினும் பிறப்பால் ஒன்றுபட்டவையே என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பொது மறையைத் தந்தருளிய திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக்.972) என்று கூறிவிட்டார்.

ki arangan book on noam chomskeyயாதும் ஊரே; யாவரும் கேளிர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் கோட்பாடுகள் நடைமுறைக்குப் பயன்படுமா? என்று எண்ணலாம். இவ்வாறு எண்ணித்தானே உலகம் முழுவதையும் தங்கள் காலனி நாடுகளாக்கி மக்களையும் இயற்கை வளங்களையும் அந்நியர்கள் சுரண்டினார்கள்; சுரண்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கோட்பாடுகள் எதிர்மறையான செயல்பாடுகளுக்கே பயன்படும் என்றால் ஆக்க முறைக்கா பயன்படாமல் போகும்?

மேற்குறிப்பிட்டவை போலத் தீதும் நன்றும் பிறர் தர வாரா (புறம்.192) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறம்.18) என்பவை எல்லாம் தமிழர்தம் பொதுமைச் சிந்தனைகள். இப்படிப்பட்ட சிந்தனைகள் உலகம் முழுவதிலும் பேசப்படும் மொழிகளிலும் காணப்படலாம். ஆனால் மூவா­யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்தம் சிந்தனை தற்போதும் உலக அளவில் பேசப்படுகிறது. தமிழுக்கு எதிரானவர் கூடப் பேசுகின்றார்கள்!

வாழும் வாழ்க்கை, பேசும் மொழி போன்றவற்றைப் பற்றிப் பொதுமையாகச் சிந்திப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. காரணம் இவை உலகம், மக்களோடு தொடர்புடையன. எனவேதான், மாமேதை கார்ல் மார்க்ஸ் பொருளாதாரம், உலக மக்களின் பொதுவுடைமை எனச் சிந்தித்து நிலை நாட்டினார். இவ்வாறே மொழி என்பதும் உலகப் பொதுவுடைமையே. இதனால்தான் உலக மொழிகளுக்கு எல்லாம் ஒரே இலக்கணக் கோட்பாட்டை மொழியியல் அறிஞர்களால் உருவாக்க முடிகின்றது.

பல ஆயிரம் ஆண்டு கால மானுட வளர்ச்சியில் அறிவியல் வளர்ந்து ஏற்பட்டுள்ள மாற்றம் பல வகையில் வெளிப்படுகின்றது. தொழிற் புரட்சியால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன; சுற்றுச் சூழல் ஓசோன் படலத்தை ஓட்டைபோடும் அளவிற்குக் கெட்டுள்ளது.

ஓசோன் படல ஓட்டையை அடைக்கத் தொழிற்சாலை, போக்குவரத்துச் சாதன நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும். ஓட்டையைக் கண்டுபிடிக்கின்றார்கள். அடைக்க ஆகவேண்டியதைச் செய்யாமல் இருக்கப் போட்டி போடுகின்றார்கள். உலக நாடுகள் எப்போது யானைக்குக் கோமணம் கட்டப் போகின்றனவோ தெரியவில்லை.

டார்வினின் உயிரினத் தோற்றம் வளர்ச்சி பற்றிய சிந்தனை, உலகைப் புரிந்து கொள்ள ஆகச் சிறந்த ஒரு கோட்பாடாகும். காலங்காலமாகப் பகுத்தறிவுக்கு ஒவ்வாமல் கூறப்பட்டு வந்த மதக் கோட்பாடுகளுக்கு மரண அடி கொடுத்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த அணு ஆற்றல் கோட்பாடு பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்கான கதைதான். தம் கண்டுபிடிப்புக்காக வருந்தியவர் அந்த மாமேதை. இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வீச்சால் ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷீமா என்னும் இரண்டு நகரங்கள் அழிந்து நரகமாகி விட்டன. அணுக் கதிர்வீச்சால் தற்போதும் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றார்களாம்.

அணு ஆயுத உற்பத்தி தற்போதும் உலகை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. பெரியநாடு, சிறிய நாடு என்னும் வேறுபாடு இல்லாமல் அணுகுண்டுகளை உற்பத்தி செய்து அடுக்கி வைத்திருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் ஏதாவது ஒரு குரங்கு அணுகுண்டுக் கொள்ளியை எடுத்து உலகப் பூப்பந்தைச் சொறிந்து பார்க்கும்.

கண்டுபிடிப்பு, கோட்பாடுகள் ஆக்கத்திற்குப் பயன்படுபவையாக இருக்க வேண்டும். மானுடத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் சிந்தித்திருந்தாலும் உலகம் முழுவதும் போற்றக் கூடியவராக மாமேதை கார்ல் மார்க்ஸ் திகழ்கின்றார்.

பொதுவுடைமைக் கோட்பாடு வளர்ந்ததைப் போன்று மொழியியல் கோட்பாட்டின் வளர்ச்சியும் மானுடத்தின் பரவலை - வளர்ச்சியைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றது. குறிப்பாக 18,19ஆம் நூற்றாண்டுகளில் மொழிகள் பற்றிய ஆய்வு ஒரு புதிய பாதையில் நகர்கின்றது. அதாவது தனி மொழிக்கு இலக்கணம் எழுதும் நிலை மாறி உலக மொழிகளுக்கு எல்லாம் சேர்த்துப் பொதுவான இலக்கணம் எழுதும் முறை வளர்ச்சி அடைகின்றது. மறைந்து கிடந்த உண்மைகள் எல்லாம் வெளிப்படத் தொடங்கின. ஓர் இனம் எங்கிருந்து இடம் பெயர்ந்து வந்தது என்பதைத் துல்லியமாக அறிய ஒப்பியன் மொழியியல் (comparative Linguistics) பெரிதும் துணைபுரிகின்றது.

பிற அறிவியல் துறைகளைப் போன்று அறிவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மொழியியலும் இரண்டு, மூன்று நூற்றாண்டு வரலாற்றை உடையது. வரலாற்று மொழியியல், ஒப்பியன் மொழியியல் என்னும் தொடக்கக் கால மொழியியல் மேலும் கோட்பாட்டு அடிப்படையில் விளக்க மொழியியல் (Descriptive Lin­guistics) அமைப்பு மொழியியல் (Structural Linguistis) சமுதாய மொழியியல் (Socio - Linguistics) எனப் பல்வேறு கிளைகளாகவும் பிரிந்து வளர்ந்துள்ளது.

இவ்வாறு வளர்ந்துள்ளமை போன்று இலண்டன் மொழியியல் கோட்பாடு, அமெரிக்க மொழி­யியல் கோட்பாடு என நாடு சார்ந்தும் மொழியியல் கோட்பாடுகள் அறியப்பட்டன. எந்த வகை மொழியியல் கோட்பாடாக இருந்தாலும் அது உலக மொழிகள் எல்லாவற்றுக்கும் பொதுவாகவே அமைந்தது.

ஒப்பியன் மொழியியல் ஆய்வில் வில்லியம் ஜோன்ஸ் (1788) ஆய்வின் வழி வெளிப்பட்டவையே இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம், இந்தோ - ஆரிய மொழிக் குடும்பம். இவைபோன்றே திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெல் (1856) ஆய்வும் இந்திய, உலக அளவில் புகழ்பெற்ற ஆய்வாகும்.

கார்ல் மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தம் போன்று மொழியியல் ஆய்வில் ஒரு புரட்சியைச் செய்தது. நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) என்னும் மொழியியல் அறிஞர் உருவாக்கிய மாற்றிலக்கணம் (Tran­formational Grammar) உலகம் சில ஆயிரம் ஆண்டுகளாக வகுத்திருந்த இலக்கணப் பார்வையையே அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.

F.W. எல்லிஸ் திராவிட மொழிக் குடும்பக் கோட்பாட்டைக் கால்டுவெல் வளர்த்தெடுத்து ஒரு புரிதலை ஏற்படுத்தியதைப் போன்று தம் பேராசிரியர் ஹாரிஸின் (Zellig S.Harris) கோட்பாட்டை மேலும் ஆழமாக ஆராய்ந்து மாற்றிலக்கணக் கோட்பாடு என்று நோம் சோம்ஸ்கி மொழியியல் புரட்சி செய்துள்ளார்.

சோம்ஸ்கியின் Syntactic Structures (1957), Aspects of the Theory of Syntax  (1965) என்னும் ஆய்வு நூல்களும் பல கட்டுரைகளும் உலகம் முழுவதிலும் மொழியியல் ஆய்வில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. மாற்றிலக்கணக் கோட்பாட்டு அடிப்படையில் உலக மொழிகளில் வெளி வந்துள்ள ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் கணக்கில் அடங்கா!

தமிழகத்தில் 1960களில் மொழியியல் ஆய்வு வளர்ந்தபோது தமிழ் மொழியியலின் தந்தை தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் மற்றும் பேராசிரியர்கள் ச.அகத்தியலிங்கம், முத்துச்சண்முகன், செ.வை.சண்முகம் போன்றோர் மாற்றிலக்கணக் கோட்பாட்டைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அடுத்த தலைமுறையைச் சார்ந்த பொற்கோ, ஆர்.கோதண்டராமன், கி.அரங்கன், சு.இராசாராம் போன்றோர் முறையாகப் பயின்று மாற்றிலக்கணத்தைத் தமிழில் வளர்த்தெடுத்தார்கள்.

இக்கட்டுரை பேராசிரியர் கி.அரங்கன் எழுதி வெளிவந்துள்ள நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம் (2021) என்னும் நூலை மதிப்பீடு செய்வதாக அமைகின்றது. அடையாளம் பதிப்பகம் இந்நூலை வெளி­யிட்டுள்ளது.

பேரா.கி.அரங்கன்

ஆயிரம் பிறை காணும் பேராசிரியர் கி.அரங்கன் (1942) தற்போது வரை தமிழ் மொழியியல் தமிழியல் களம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். 1980களில் நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்காலிகப் பணியில் இருந்த போது மொழியியல் பேராசிரியராகப் பணியில் இருந்தார். பேராசிரியர் இராம சுந்தரம் அவர்களின் நெருங்கிய நண்பர். ‘என்ன போஸ் எப்படி இருக்கீங்க?’ இந்த நான்கு சொற்களும் மெல்லப் புன்னகையுடன் மேல் முன்பல் தெரிய வெளிப்படும். மற்றபடி அதிகத் தொடர்பு இல்லை. ஆனால் பேராசிரியரின் நூல்கள், கட்டுரைகள் தொடர்பில் இருக்கும் தொடரியல்: மாற்றிலக்கண அணுகுமுறை (1985) குறிப்பிடத்தக்க நூலாகும். மொழி முகங்கள் (2003) பேராசிரியரின் மணிவிழா மலர், அவர்களைப் பற்றிக் காலங்கள் உள்ளவரை பேசிக் கொண்டிருக்கும். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை மொழியியல் விதிகளைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். Toward Formulating Formal Phonological Rules of Tol Ka:ppiyam Eluttatika:ram (2012).  இந்நூல் தமிழ்மொழியில் தொல்காப்பியரின் எழுத்திலக்கணக் கோட்பாட்டைப் படித்து அறிய முடியாதோருக்குப் பெரிதும் பயன்படும். மொழியியல் விளக்கும் மொழிப் பொதுமையை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் விளக்கியுள்ளமை புரியும்.

இவை எல்லாவற்றையும் விட இருபதாம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த சிந்தனையாளர் மொழியியல் பேராசிரியர் நோம் சோம்ஸ்கியிடம் கி.அரங்கன் பயின்றவர் என்பதே குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும் மோரிஸ் ஹாலே, பால் கிப்பார்ஸ்கி, ஜான் ராபர்ட் ராஸ், பேர்ல் மட்டர் (ப. XII) போன்ற பல மொழியியல் அறிஞர்களிடம் கற்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

கவிஞர் வாலியிடம் இவ்வாறு புனைபெயர் வைத்துக் கொண்டமைக்கான காரணத்தைக் கேட்டபோது ‘எதிரில் இருப்பவரின் அறிவும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக’ என்றாராம். ‘அவ்வாறு பெரிய அறிவாளியாகத் தெரியவில்லையே?’ வினாத் தொடுத்தவருக்கு உடனே. ‘உங்களைப் போன்றவர்கள்தானே எதிரில் வருகின்றார்கள்’ என்றாராம் கவிஞர் வாலி. எப்போதோ படித்தது தற்போது நினைவுக்கு வருகின்றது.

நாம் எழுதக் கூடிய நுவல்பொருள் முக்கியமானதாக இருந்தாலும் அதற்கான கோட்பாட்டு அணுகுமுறை அதனைவிட முக்கியமானதாகும். எழுபதுகளில் முதுகலை பயிலும்போது பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோரின் இலக்கிய ஆய்வுகள் கவனத்தை ஈர்க்கும் இவர்களின் நெறியாளர்கள் மேலைநாட்டு ஆய்வாளர்கள். ஆய்வு அணுகு முறைதான் காரணம். இவ்வகையான இலக்கிய ஆய்வுகள் தமிழகத்திலும் பிறகு வரத் தொடங்கி விட்டன. பேராசிரியர் கி.அரங்கன் அவர்களின் பரந்துபட்ட ஆழமான மொழியியல் சிந்தனைக்குக் காரணம் நோம் சோம்ஸ்கியிடம் பயின்றமையே.

திராவிட மொழியியல் ஆய்விலும் இதனை அறியலாம். டி.பர்ரோ, எம்.பி.எமனோ போன்ற மேலை நாட்டு அறிஞர்களிடம் பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் பி.எச்.கிருட்டினமூர்த்தி, பி.எஸ்.சுப்பிரமணியம் போன்றோரின் திராவிட மொழியியல் ஆய்வுகள் தமிழ் மொழியியல் ஆய்வுக்கும் பெரிதும் பயன்படுகின்றன. ஆய்வுத் தரவுகளைவிட ஆய்வு நெறிமுறை ஆய்வை மேம்படுத்த உதவும்.

பேராசிரியர் கி.அரங்கன் அவர்களைப் போன்று பேராசிரியர் சு.இராசாராம் (1942) எழுதியுள்ள நோம் சோம்ஸ்கி (2019) என்னும் நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். காலச்சுவடு பதிப்பகம்வழி வெளிவந்துள்ளது. இவர் டேவிட் வில்கின்ஸ் என்னும் மாற்றிலக்கண மொழியியல் பேராசிரியரிடம் பயிற்சி பெற்றவர்.

பேராசிரியர் நோம் சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாட்டைப் பற்றி நிறைய நூல்களும் கட்டுரைகளும் வந்து கொண்டிருக்கின்றன. அவரைப் பற்றி பேராசிரியர்கள் கி.அரங்கன், சு.இராசாராம், செ.சண்முகம் (சாம்ஸ்கியின் புது மாற்றிலக்கணம், 1998) போன்றோர் எழுதியுள்ள நூல்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

நோம் சோம்ஸ்கி நவீன மொழியலுக்கு ஓர் அறிமுகம் என்னும் பேராசிரியர் கி. அரங்கன் அவர்களின் நூல் பொது மொழியியல், மாற்றிலக்கணக் கோட்பாட்டின் வரலாற்றைத் தெளிவாகவும் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையிலும் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

மொழியியல் வளர்ச்சி

காலங்காலமாக அவரவர் மொழிக்கு அவரவர் இலக்கணம் எழுதிய முறை மாறி, உலக மொழிகள் அனைத்திற்கு ஒரே இலக்கணத்தை வரையறை செய்வது வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்றாகும். மொழியியல் வளர்ச்சிக்கு வடமொழி இலக்கணங்களின் பங்கை மொழியியல் அறிஞர்கள் நன்றியுடன் குறிப்பிடுகின்றனர் (புளும் பீல்டு, ஜான் லைன்ஸ், நோம் சோம்ஸ்கி).

காலங்காலமாகவே குறிப்பாக வடமொழிகளைப் பேசுவோர் சமக்கிருதமே உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி என்றார்கள். மக்களின் பேச்சு மொழியாக இல்லாமையாலேயே கிரேக்கம், இலத்தின், ஹீப்ரு போன்ற மொழிகள் வழக்கிழந்தன. சமக்கிருதமும் இந்தச் செவ்வியல் மொழிகளும் மக்களைப் பாட மறந்து இறைவனையும் மன்னர்களையும் புராண இதிகாசங்களையும் பாடின. வழக்கொழிய இவையே காரணம். செத்தவனை எழுப்ப வைக்கோலைப் போட்டுக் கொளுத்துவது போல வடமொழியை வளர்க்க ஒன்றிய அரசு பல நூறு கோடிகளைச் செலவு செய்கின்றது. ஆன்மீகத்தை வளர்க்கச் சிலைகளை வைப்பது, கோயிலைப் புதுப்பிப்பது போன்றவையும் இவ்வகையைச் சார்ந்த செலவினங்களே. நாட்டின் வளர்ச்சிக்குச் செலவு செய்யலாம். நிலம் கொடுத்து, கோயில் கட்டிக் கொடுத்து மக்களைப் பண்ணை அடிமையாக முடியாட்சிக் காலத்தில் மாற்றி இருந்தார்கள். அந்தக் காலத்தோடு முடியாமல் ஆன்மீக நடைமுறைகள் தொடர்கின்றன. மக்கள்தான் பாவம். பட்டுச் சேலையைக் கொடுத்துவிட்டுத் தடுக்கைத் தூக்கிக் கொண்டு அலைகின்றார்கள். மறுபிறவியிலாவது சொர்க்கம், கைலாசம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன்!. மொழியை வைத்து வெறுப்பு அரசியல் செய்வது காலங்காலமாகவே நிகழ்கின்றது.

அரசியலாக மொழியை வைத்துப் பேசுவோருக்கு வேண்டுமானால் மொழி சோறு போடலாம். உழைக்கும் மக்கள் உழைத்தால்தான் சோறு கிடைக்கும். இந்தி படித்தால் இந்தியா முழுவதும் வேலைக்குப் போகலாம் என்கிறார்கள். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளைப் பேசாமலேயே வடமாநில மக்கள் தென்னாட்டில் கடுமையாக உழைத்துப் பிழைக்கின்றார்கள்.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கின்றார்கள். ஒரு வகையில் உண்மைதான். இந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்டோருக்குத் தென்னாட்டுப் பகுதியில் நிறைய வேலை கிடைக்கின்றது. பானிபூரி விற்பது, உணவகம் - வணிக வளாகங்களில் வேலை செய்வது, கட்டடங்கள் கட்டுவது, சுமை தூக்குவது, சாலை அமைப்பது - சுத்தம் செய்வது, காவலாளியாக இருப்பது என அனைத்து வேலைகளையும் இந்தி படித்தவர்கள்தான் செய்கின்றார்கள் என்று ஊடகவியலாளர்கள் கிண்டல் செய்கின்றார்கள். தொழில் செய்வது குற்றமன்று. அந்த அளவு மக்களுக்குப் பகுத்தறிவை வளர விடாமல் மதக்குப்பையை உடம்பு முழுவதும் பூசிவிட்டு வயிற்றுக்காக அலைய விடுகின்றார்கள். இந்தியை விடச் சைகை மொழியே கைக்கொடுக்கின்றது.

தமிழ் நாட்டில் வாழும் சிலரும் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்கு இந்தி தெரியுமா என்றால் முழிப்பார்கள். மூலக் கோளாறா அல்லது மூளைக் கோளாறா தெரியவில்லை. அவர்களுக்குத் தமிழ்தான் கைக் கொடுகின்றது. ஆங்கிலம் பணி கொடுகின்றது.

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே அது சோறு போடவில்லை. பிறருக்குச் சோறு போட்டு விடுமா? பிறந்த நாடே சோறு போடவில்லை. தெற்கு வடக்கு என்னும் வேறுபாடு இல்லாமல் உலகம் முழுவதும் வாழ்வாதாரம் தேடி இந்தியர் கலைந்து கிடக்கிறார்கள். இந்தியர்களுக்கு ஆங்கிலம் தான் சோறு போடுகின்றது. குறிப்பாகத் தகவல் தொழில் நுட்பத்துறைகளில் உலகம் முழுவதும் பணியாற்றுகின்றார்கள். இந்தி, சமக்கிருதம் அல்லது வேறு எந்த இந்திய மொழிகளைப் படித்தாலும் வாய்ப்புக் கிடைக்குமா? எனவே, முதலில் வடக்கே உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; உணவு கொடுப்பது மொழியன்று. உழைப்பு. ஆளும் வர்க்கம் அதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இந்தியாவில் வடமொழி இலக்கண மரபு, திராவிடமொழி இலக்கண மரபு என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் தனித்தனிக் குடும்ப மொழிகளாக இருப்பதால் இவ்வாறே இருக்க முடியும். பேராசிரியர் கி.அரங்கன் இவ்விரு மரபிலக்கண மரபைப் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகின்றார். வேதங்களின் தூய்மை காக்கப்பட்ட வேண்டும் என்பதில் பாணினியின் இலக்கணம் கவனம் செலுத்தியது; ஆனால் தொல்காப்பியம் தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களின் தூய்மை காக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது. ஒன்றிற்கு மதத்தூய்மையும் இன்னொன்றிற்கு இலக்கியத் தூய்மையும் குறிக்கோளாக அமைந்திருந்தன. (ப.14)

பாணினியின் அஷ்டாத்தியாயி போன்ற வடமொழி இலக்கண நூல்கள் வேதத்தின் ஒலிப்பு மாறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தன. காலவோட்டத்தில் மக்களும் கலப்பில்லாமல் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்று அரசியல் செய்கின்றார்கள். ஆடு, மாடு போன்ற விலங்கினங்களில் கலப்பினத்தை இறக்குமதி செய்கின்றார்கள். காலங்காலமாகப் பலமொழிகளைப் பேசும் மக்கள் இருக்கக் கூடிய நாட்டை இந்தி மொழியைப் பேசுவோராக இந்தியா மாறவேண்டும் என்பது எந்தச் சித்தாந்தமோ தெரியவில்லை? வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பெருமிதமாக இருக்கும்.

திராவிட மாடல் இந்தியாவில் அந்நியரால் புகுத்தப்பட்டது என்பார்கள். இந்து, இந்தியா, இந்துத்வா என்பவை கட்டமைக்கப்படவும் அந்நியரே மூலகாரணம் என்பதை மறந்து விடவேண்டாம்.

அந்நியர்களின் ஆதிக்கத்தால் காலனி நாடுகள் சுரண்டப்பட்டன என்பது உண்மையாக இருந்தாலும் முடியாட்சிக் காலத்தில் மக்களைச் சுரண்டி மதம் வளர்த்ததும் உண்மைதான். இப்போது மதக் கலவரங்களைத் தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் உண்மைதான். பல குழப்பங்களுக்கு அந்நியர்தான் தெளிவைக் கொடுத்தார்கள். தொடக்கத்தில் வடமொழியை அறிந்த அளவிற்கு அந்நியர்கள் தமிழ் போன்ற திராவிட மொழிகளை அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர்களோடு இணக்கமாக இருந்தவர்கள் பார்ப்பனர்களே!

தொல்காப்பிய இலக்கண மரபு திராவிட மொழிகள் அனைத்திற்குமானதாகும். தொல்காப்பியத்தில் இடைச் செருகல் நிறைய இருப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். தெய்வம் பற்றிய கருத்தை வைத்துக்கொண்டு பார்த்தால் தொல்காப்பியம் மட்டுமல்லாமல் சங்க இலக்கியங்களிலும் அது திணிக்கப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. பிற்கால ஆரிய மயத்தின் தொடக்கத்தைப் பழந்தமிழில் அறியலாம். பழந்தமிழரின் வழிபாட்டு முறையில் குறிப்பிடத்தக்கது நடுகல் வழிபாடாகும். சங்க இலக்கியங்களில் குறிக்கப்படும் நடுகல் வழிபாட்டு முறைக்கு அகழாய்வில் சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால் பெருந்தெய்வம் தொடர்பான உருவ வழிபாட்டிற்கு அகழாய்வில் இன்றுவரை ஒரு துரும்புகூடச் சான்றாகக் கிடைக்கவில்லை.

மொழியியல் வளர்ச்சிக்கு வடமொழியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ள எழுத்து, சொல் அமைப்பிலேயே தொடக்க கால மொழி­யியலும் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். பெரும்பாலான உலகச் செவ்வியல் இலக்கண நூல்கள் சொல்லுக்குப் பொருள் கூறுவதையே இலக்கணமாகக் கொண்டிருந்தன. இக்கால விளக்க மொழியியல் (De­scriprive Linguistics) அமைப்பு மொழியியல் (Struectural Linguistis) மொழியியல் விளக்கும் முறையிலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் விளக்கி உள்ளது.

நோம் சோம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாட்டிற்கு முன்னர் நிகழ்ந்த மொழியியல் ஆய்வுகளைப் பேராசிரியர் கி.அரங்கன் மூன்று பெரும் பிரிவில் இனம் காண்கின்றார்.

அ.மொழியியலில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிப்பது; ஆ.மொழிகளுக்கு இடையிலான உறவை விவரிப்பது; இ.மொழிகளை அவற்றின் அமைப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துவது (ப.2).

நோம் சோம்ஸ்கியின் மொழியியல் பார்வை, சூழலுக்கு ஏற்ப மொழியைப் பயன்படுத்தும் மானுட உளவியலையும் கணக்கற்ற வாக்கியங்களை உருவாக்க இடங்கொடுக்கும் மொழியையும் அடிப்படையாகக் கொண்டது. தொடக்ககால மொழியியல் விளக்கிய புதை நிலை அமைப்பு (Deep Structure), புறநிலை அமைப்பு (Surface Structure) என்னும் மொழிப் பயன்பாட்டு நிலைகள் நோம் சோம்ஸ்கியால் மொழித்திறன் (Competence) செயல்திறன் (Perfor­mance) எனப் பார்க்கப்பட்டன.

நோம் சோம்ஸ்கியின் ஆக்க முறை இலக்கணத்தைப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஒரு சான்றுடன் விளக்குகின்றார். ஒன்று முதல் ஒன்பது வரை பெருக்கல் வாய்பாட்டை உணர்ந்தபின் கோடிகோடி போன்ற பெரிய எண்களையும் பெருக்கி விடுகிறார்கள் அல்லவா? இந்த வகையில் மொழி இலக்கணமும் எல்லையற்ற வாக்கியங்களைப் பிறப்பிப்பதற்கு உதவுகிறது. இந்தக் கருத்தில் தான் இலக்கணத்தையே வாக்கியங்களை பிறப்பிக்கும் இலக்கணம் (Generative Grammar) என்று கூறுகின்றனர் (மாற்றிலக்கணம், ப.44)

சில விதிகளை வைத்துக்கொண்டு வரம்பற்ற வாக்கியங்களின் அமைப்பை விளக்குகின்ற ஒன்றே ஆக்க முறை இலக்கணம் எனப்படும். அதாவது சில விதிகளை வைத்துக் கொண்டு எண்ணிறந்த வாக்கியங்களை ஓர் இலக்கணம் உருவாக்க முடியும் என்றால் அது ஆக்கமுறை இலக்கணம் ஆகும். (இக்கால மொழியியல். ப.163) எனப் பேராசிரியர் கு.பரமசிவம் கூறுவதும் நினைக்கத்தக்கது.

இவ்வகையான ஆளுமை மொழிக்கும் அம்மொழியைப் பேசுவோருக்கும் இடையே இருப்பதால் தான் மக்களால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடிகின்றது. ஒரு மொழியில் எழுதப்பட்ட அறிவியல், வரலாறு, மொழியியல் போன்றவற்றைப் புரிந்து கொண்டு ஒருவரால் தம் மொழியில் எழுத முடிகின்றது. ஒரு நிலப்பகுதியில் வாழ்பவரால் இன்னொரு நிலப்பகுதியைக் களமாகக் கொண்டு இலக்கியம் படைக்க முடிகின்றது.

மொழியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள மாற்றிலக்கண முறை ஒரு புரட்சிகரமான பார்வையாக இருக்கிறது. அவருக்கு முன்னர் இருந்த பார்வை மொழியையும் பேசும் மக்கள் இனக் குழுவையும் புரிந்து கொள்ள உதவியது.

இரண்டாவதாகப் பேராசிரியர் கி. அரங்கன் மொழிகளுக்கிடையே உள்ள உறவை விளக்குகின்றார். வரலாற்று மொழியியல் (Historical Linguistics) ஒரு மொழியில் காலந்தோறும் ஏற்படும் மாற்றத்தை விளக்கும். ஒரு மொழி தேவை கருதிச் சொற்களை இன்னொரு மொழியில் கடன் பெறுவது இயல்பு. சங்க இலக்கியங்களில் வடசொற்கள் காணப்படுவதைப் போன்று ஆரியரின் வேதத்திலும் திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன.

பேச்சு வழக்கற்ற வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளில் தாமாகப் பரவுவதற்கு வாய்ப்பில்லை. பார்ப்பனர்களே அவற்றைத் திராவிட மொழிகளில் புகுத்தினார்கள்; புகுத்தி விட்டு இலக்கணக் கொத்து என்னும் சொல்லிக்கண நூலை 17ஆம் நூற்றாண்டில் எழுதிய சாமிநாத தேசிகர், இப்படி ஒரு வினா எழுப்புகின்றார். அன்றியும் தமிழ்நூற்கு அளவிலை; அவற்றுள் ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ? (இல.கொத்.7:25-26).

வழக்கிழந்த மொழிகளைத் தவிர, வாழும் தமிழ் போன்ற மொழிகளில் கடன் பெற்ற சொல் புழக்கத்தில் இருக்கும். மொழியில் காணப்படும் ஆக்கம், மாற்றம், இழப்பு போன்றவற்றை எல்லாம் வரலாற்று மொழியியல் விளக்கும். தமிழ் மொழி வரலாற்றில் இவற்றை எல்லாம் அறியலாம்.

ஒப்பியன் மொழியியல் (Comparative Linguistics) என்பதும் தொடக்க கால மொழியியல் ஆய்வில் குறிப்பிடத் தக்கதாகும். இதுவும் உலகில் ஒரு புரட்சியைச் செய்துள்ளது. சிலர் ஒப்பியன் மொழியியல் ஆய்வு குழப்பத்தை விளைவித்ததாகக் குற்றம் சாட்டுகின்றார்கள்.

காலங்காலமாகப் பரப்பிய பொய்யும் புனைந்துரையும் உண்மையின் ஒளிபடும் போது மறையும். எந்த விதமான அறிவியல் பார்வையும் இல்லாத வெளிநாட்டு, உள்நாட்டுக் கும்பல் சமக்கிருதமே திராவிட மொழிகளுக்கும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய்மொழி என்றது. இந்தியாவில் திராவிட மொழிகள் தனிக் குடும்பம் (F.W.Ellis, 1816, Robert Caldwell, 1856)  சமக்கிருதம் மற்றுமுள்ள இந்தோ-ஆரிய மொழிகள் இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை (1788) என்று கூறியபோது ஆதாரத்துடன் மறுக்காமல் ஆவேசத்துடன் மறுக்கிறார்கள். திராவிட மொழிக் குடும்பம், ஆரியமொழிக் குடும்பம் பிரிவினையை ஏற்படுத்தும் என்கிறார்கள். அந்தந்தச் சாதிக்கான உரிமையைக் கொடு என்பது பிரிவினைவாதமா? ஒரு குளத்தில் ஒரு வரால் மீனாக எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு முழுங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்பவை எல்லாம் இனிக்கவா செய்யும்?

இவற்றுக்காக மட்டும் அந்நிய நாட்டினரை வெறுப்பவர்கள் வெறுக்கவில்லை; கல்வியைக் கொடுத்தார்கள்; மருத்துவத்தைக் கொடுத்தார்கள்; வேலை வாய்ப்பைக் கொடுத்தார்கள். மூடநம்பிக்கையை அழித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அவர்கள் மட்டும் பெற்றுக் கொண்டிருந்தார்கள். பிரமனின் பாதத்தில் பிறந்தவர்களும் வாய்ப்பு வசதிகளைப் பெறும்போது அவர்களுக்கு அந்நியர் மீதும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் மீதும் வெறுப்பு வருவது இயல்புதானே.

அந்நியர் அறிமுகப் படுத்திய மெக்காலே கல்வியை முழுவதுமாகக் கைப்பற்றிக் கொண்டார்கள்; உடைகளைக் களைந்து விட்டு அவர்கள் பாணியில் அணியத் தொடங்கினார்கள்; குடிக்கும் காபி கூட அந்நியர் அறிமுகப்படுத்தியதே. சனாதனம் அந்நியரால் கெட்டுவிட்டது என்பது தான் அவர்கள் அவர்களை வெறுப்பதற்கு அடிப்படைக் காரணம்.

அலோபதி மருத்துவமுறை என்னும் மேலை நாட்டு மருத்துவ முறையைப் படித்துக் கொண்டும் மருத்துவம் செய்து கொண்டும் இருக்கும் நிலையில் மருத்துவ மாணவர்கள் ‘சரகாசபதம்' என்னும் காலத்துக்கு ஒவ்வா பிற்போக்குத்தனம் நிறைந்த உறுதி மொழியை ஏற்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். மதம் ஆட்சி செய்தால் மடமைக்குத்தான் முதன்மை கொடுக்கப்படும்.

ஒன்றிய ஆளும் வர்க்கம் திராவிட மொழிக் குடும்ப வரலாற்றை மறைக்க முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே மறைக்கப் பார்க்கிறது. திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுப்பதைப்போலப் பதவிகள்; குறிப்பாகத் தொல்லியல் துறைப் பதவிகள் சிலரிடம் மாட்டிக் கொள்ளும் போது வரலாறு வழி பிதுங்கிப் போகிறது.

மூன்றாவதாகப் பேராசிரியர் கி.அரங்கன் குறிப்பிடும் வகைப்பாட்டியல் பகுப்பு (Typological Classification) வழியாக வேறுபட்ட குடும்ப மொழிகளையும் ஆராயலாம். வேர்ச்சொல்லுடன் ஒட்டுகள் (Affixes) சேரும் முறை, வாக்கிய அமைப்புப் போன்றவற்றில் வேறுபட்டாலும் ஒற்றுமை இருக்கும். நோம் சோம்ஸ்கியின் மாற்றிலக்கணம் ஒருமொழியில் காணப்படும் தொடர்கள் எப்படி எல்லாம் புதை நிலையில் இருந்து புறநிலைக்கு மாறும் என்பதை விளக்கும். தொடக்க கால மொழியியல் கோட்பாடுகள் முறையாக இவற்றை விளக்கவில்லை. இருப்பினும் சோம்ஸ்கிக்கு முன்னிருந்த கோட்பாடுகளே மொழிகளைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவின என்பதைப் பேராசிரியர் கி. அரங்கன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

அமைப்பு மொழியியல் கோட்பாடு மொழிகளை விவரிப்பதில் பெரும்பங்கு ஆற்றியது. மொழிகளின் ஒலியனியல் அமைப்பையும் உருபனியல் அமைப்பையும் விவரிப்பதில் அமைப்பு மொழியியல் பெருமளவு வெற்றிபெற்றது. தொடரியல் அமைப்பை (syntactic structure) விவரிக்கும்போது தான் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன (ப.22). தொடரியல் தொடர்பாக முழுமை பெறாத கோட்பாட்டை சோம்ஸ்கி நிறைவு செய்து ஒரு மாபெரும் மொழிப் புரட்சியைச் செய்கின்றார். அதாவது அமைப்பு மொழியியல் விளக்கும் தொடரியல் பற்றிய அண்மை உறுப்புப் பகுப்பு நிலை (IC.Analysis) முழுமையாக வாக்கியத்தை விளக்கப் பயன்படவில்லை என்று நிறுவினார். ஒலி (Phone), ஒலியன் (Phoneme), மாற்றொலி (Allophone) என்பவை எழுத்தியல் (Phonology) பகுதியின் அடிப்படைக் கூறுகள். மேலும் வேற்றுநிலை வழக்கு (Contrasitive Distribution) துணைநிலை வழக்கு (Complementary Distribution) என்னும் ஒலியனியல் கோட்பாடுகள் ஒலியனையும் மாற்றொலிகளையும் அறிய-புரிந்து கொள்ள உதவும். மரபிலக்கணங்களில் குறிப்பு உள்ளதே தவிர, தெளிவாக விளக்கப்படவில்லை.

உருவு (Morph), உருபன் (Morpheme), மாற்றுருபு (Allo - Morph) என்பவை சொல்லியல் (Morpholo­gy) பகுதியின் அடிப்படைக் கூறுகள். இவற்றைப் புரிந்துகொள்ள விளக்க, அமைப்பு மொழியியல் கோட்பாடுகள் பெருந்துணை புரியும்.

தொல்காப்பியம் போன்ற மரபிலக்கணங்கள் சொல்லியலையும் தொடரியலையும் சொல்லதிகாரத்திலேயே விளக்கும். மொழியியலில் வாக்கியங்களில் காணப்படும் சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை அண்மை உறுப்புப் பகுப்பு நிலை (Immediate Constituent Analysis)  என்னும் கோட்பாட்டு வழி விளக்கும்.

எட்வேர்டு சபீர் (Edward sapir), லெனார்டு புளும்பீல்டு (Leaonard Bloomf ield), சார்லஸ் எப்.ஹாக்கெட் (C.F.Hockett, 1958), கிளீசன் (Gleason, 1955) எனப் பல மொழியியல் அறிஞர்கள் மொழியியல் வழி மொழியைப் புரிந்து கொள்ளப் பெரும் பங்காற்றி உள்ளார்கள்.

விளக்க, அமைப்பு மொழியியல் விளக்கும் பல கோட்பாடுகள் மரபிலக்கணங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. மாற்றிலக்கணக் கூறுகளும் ஆங்காங்கே மரபிலக்கணங்களில் தலைகாட்டும். முறையாக தொடர்ச்சியாக விளக்கப்படவில்லை. இனி, நோம் சோம்ஸ்கி மொழி விளக்கத்தில் செய்துள்ள புரட்சியைப் பேராசிரியர் கி.அரங்கன் ‘நோம் சோம்ஸ்கி: நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்' என்னும் நூலில் விளக்குவதை அறியலாம்.

(தொடரும்)

- ச. சுபாஷ் சந்திரபோஸ், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர், இலக்கணவியல் ஆய்வாளர், எழுத்தாளர்.

Pin It