திருச்சி காவிரியாற்றில் ‘வேத பார்ப்பனர்கள்’ 25 அடி ஆழத்துக்கு குழி தோண்டி, தண்ணீரில் அமர்ந்துகொண்டு யாகம் நடத்தியிருக்கிறார்கள்.

கருநாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்கு இந்த யாகமாம்.

கருநாடக அணையில் நீர் வழிந்தால், வேறு வழியின்றி தமிழகத்துக்கு திருப்பி விடப்படுமல்லவா? ‘பாரதிய கிசான் சங்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த யாகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.வி.இராமலிங்கம், சிவபதி ஆகியோரும் கலந்து கொண்டார்களாம். தமிழகத்துக்கு நடுவர்மன்ற தீர்ப்பின்படி வழங்கப்பட வேண்டிய நீரை, முறையாக வழங்க கருநாடக அரசு மறுத்து வருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும், அப்போதுதான் தீர்ப்பு சட்டப்படியான ஆவணமாகும் என்று தமிழக அரசும் தமிழக மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது.

அரசியல் ரீதியாகப் போராடுவதைவிட யாகங்களுக்குத்தான் வலிமை அதிகம் என்ற வேதகால பார்ப்பனியத்தை இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வேதப் பார்ப்பனர்கள் ஓதும் வேதங்களுக்கு அவ்வளவு சக்தி உண்டு என்று நம்பும் ‘மனுதர்ம’ சிந்தனைதான் இதற்குக் காரணம்.

“அந்தந்த தேவர்களுக்கு ஹோமம் செய்யும்போது, அந்தந்தத் தேவர்களை தியானம் செய்ய வேண்டியது. கிழக்கு திசையில் இந்திரனுக்கும், தெற்கு திசையில் எமனுக்கும், மேற்கு திசையில் வருணனுக்கும், வடக்கு திசையில் சோமனுக்கும் வரிசையாய் பூமியில் பலி வைக்க வேண்டும்” என்று மனுதர்மம் 3வது அத்தியாயம்; 87வது சுலோகம் கூறுகிறது.

அரசியல் சட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்று பதவிக்கு வந்த அமைச்சர்கள், கைகட்டி நிற்கிறார்கள். ஆனால், வேதப் பார்ப்பனர்களோ வருண பகவான் தங்களின் வேத கூச்சலுக்கு மட்டுமே செவிமடுத்து செயல்படுவான் என்று யாகம் நடத்தும் இழிநிலைதான் நாட்டில் இப்போதும் உள்ளது.

Comments

1 comment

1
அஞ்ஞானி
இந்த வேத பார்ப்பனர்கள் ஜூன் மாதம் மழை கொண்டு வரும் பருவக் காற்றை நம்பி வருண ஜபம் செய்கின்றனர். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக மழை பெய்து விட்டால் நாங்கள் தான் வருண பகவானுக்கு செல் போன் வழியாகப் பேசி மழை கொண்டு வந்தோம் என்று மாங்கா மடையர்களை நம்ப வைப்பார்கள். இவர்கள் ஏப்ரல் மாதத்திலோ மே மாதத்திலோ ஜபம் செய்ய வேண்டியது தானே? செய்ய மாட்டார்கள்.பருவ மழை ஆரம்பிக்காது அல்லவா. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் உட்கார்ந்து ஜபம் செய்து மழை கொண்டு வந்து பாலைவனங்களை சோலை வனங்களாக மாற்றலாமே. பாலைவனத்தில் ஒரு நாள் உட்கார்ந்தாலே காய்ந்து கருவாடு ஆகி விடுவார்கள்.இன்னும் மக்களை மூட நம்பிக்கையின் பக்கமே கொண்டு செல்ல அரசும் துணை போகிறதே.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.